எழு தமிழர் விடுதலை.

“உலகத்தின் மிகக்கொடிய குற்றங்களை நீதிபதிகள் ஆதரித்துள்ளனர். ஆகவே, இருதரப்பு வழக்கையும் நீதிபதிகள் விசாரித்தறிகிறார்கள் என்பதால் உண்மை தான் வெளிப்படும் என்று எண்ணிவிடாதீர்கள்.”
–லெனின்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், பேரறிவாளன் ஆகிய 7 நிரபராதி தமிழர்கள் 28 ஆண்டுகளாக அநீதியாக சிறையில் வாடி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் ராஜீவ் கொலை வழக்கில் தடா சட்டம் பொருந்தாது என தெளிவாக தீர்ப்பளித்த அதேநேரம் தடா சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி பதிவு செய்த வாக்குமூலங்களை ஏற்று தண்டனை வழங்கியது மிகப்பெரிய அநீதியாகும்.

பேரறிவாளன் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்ய தவறிவிட்டதாகவும் அவர் ராஜீவ் கொலை குறித்து முன்கூட்டியே ஏதும் தெரியாது என்று சொன்னதை நான் பதிவு செய்ய தவறிவிட்டதாகவும் அந்த தவறுக்கு முழு பொறுப்பாளி தானே எனவும் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டு அதனை உச்ச நீதிமன்றத்தில் பிரமான பத்திரமாக தாக்கல் செய்தது நீதித்துறை வரலாற்றில் எடுத்துக்காட்டுகளே இல்லாத நிகழ்வு. இறுதி தீர்ப்புக்கு பிறகு எழும் புதிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கை மீளாய்வு செய்யும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ளது போன்ற சட்டங்கள் இங்கு இல்லை என்பதால் பேரறிவாளனுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.

எழுவரில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவரையும் உச்ச நீதிமன்ற மூவர் அமர்வில் ஒருவரான நீதிபதி வாத்வா அவர்களை நிரபராதிகள் என விடுதலை செய்து விட்டார். எழுவருக்கும் தண்டனை அளித்த உச்ச நீதிமன்ற மூவர் அமர்வுக்கு தலைமை வகித்த நீதிபதி கே.டி. தாமஸ் தீர்ப்பு குறையுடையது; மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் சிபிஐ விசாரணையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியும் வருகிறார். எனவே தான் இந்த ஏழு நிரபராதித் தமிழர்களும் சட்ட நீதிக்கு எதிராக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறோம்.

ராஜீவ் கொலையில் உள்ள பன்னாட்டு சதிகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் சுப்பிரமணியசாமி, சந்திராசாமி ஆகியோரை சந்தேக நபர்களாக அறிவித்து விசாரிக்கப்படவேண்டும் எனக்கூறியது. அதேபோன்று இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு யாரால் தயாரிக்கப்பட்டது என்பதும் இந்நாள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவற்றை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணைக் குழு (MDMA) 20 ஆண்டுகளாக எதனையும் கண்டுபிடிக்காத நிலையில் இதுகுறித்து பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இத்தகைய குளறுபடிகள் உள்ள வழக்கில் நெடுங்கால சட்ட போராட்டங்களின் நீட்சியில் ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 6, 2018 அன்று தீர்ப்பளித்தது. தமிழக மக்களின் உணர்வுபூர்வ கோரிக்கையான எழுவர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை தீர்மான வடிவம் தந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் பன்வாரிலால் புரோகித் இந்நாள் வரை கோப்பில் கையெழுத்திடவில்லை.

150 நாட்கள் கடந்துவிட்டபோதும் ஆளுநர் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் நெடுங்கால கோரிக்கை, மக்கள் பிரதிநிதிகளான அமைச்சரவை தீர்மானம் ஆகியவற்றிற்கு ஆளுநர் தரப்பில் மௌனமே பதிலாக கிடைக்கிறது. அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று இசைவு தெரிவிக்க வேண்டியதே அரசியல் சாசனம் உறுப்பு 161ன்படி ஆளுநரின் கடமை. ஆனால், சட்டத்துக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தன் பணியை செய்ய வேண்டிய ஆளுநருக்கு எது தடையாக உள்ளது?

தேசிய கட்சிகளின் அநீதிகளுக்கு எதிராக போராடும் தமிழர்கள் மீதான வன்மத்தினால் சட்ட நியதிகளுக்கு புறம்பாக ஏழுவர் விடுதலை மறுக்கப்பட்டு வருகிறது என்பதையே மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் இத்தகைய அநீதியான போக்கு நமக்கு உணர்த்துகிறது. இதில் காங்கிரசு, பாஜக என பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு கட்சிகளுமே எழுவர் விடுதலை விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடு ஒன்றே.

நியாயமற்ற தீர்ப்பெனினும் நீதிமன்றங்கள் சொல்லியபடியே தான் எழுவரும் 28 ஆண்டுகளாக சிறையில் அடைந்துகிடக்கிறார்கள். அதே நீதிமன்றம்தான் இப்போது சொல்கிறது, “இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று. ஆனால் நீதியை, சட்டத்தை நிலைநாட்டுவதாக மார்தட்டிக்கொள்ளும் அரசுகள் எழுவர் விடுதலையில் தன் கண்களை இறுக மூடிக்கொண்டிருக்கிறது. ஆளுநரின் தன்னிச்சை போக்கை தட்டிக்கேட்க வேண்டிய மாநில அரசு முதுகெலும்பற்று கிடக்கிறது.

எழுவர் விடுதலையில் நாம் கேட்பது கருணையோ பிச்சையோ அல்ல மறுக்கப்படும் நீதியை தான். நிரபராதியான பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாவும் விடுதலை கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு தமிழகம் முழுவதும் நீதி கேட்டு அறப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஏழு தமிழர்களின் வாழ்வில் ஏற்கனவே கடந்துவிட்ட நீதிமறுக்கப்பட்ட துயர்மிகுந்த 28 ஆண்டுகளே ஏற்புடையதல்ல என்ற நிலையில் ஆளுநர் இனியும் காலம் தாழ்த்துவது மானுட விழுமியங்களை அழித்தொழிப்பதற்கு சான்றாகும்.

எனவே மாணவர் சமூகம் நாம் கிளர்ந்தெழுவோம். சட்டமும் நீதியும் சாத்தியப்படுத்தாத எழுவர் விடுதலையை எழுச்சிமிக்க மாணவர்களின் அறவழி போராட்டத்தின் மூலம் வென்றெடுக்க ஆயத்தமாவோம். தோழர். செங்கொடி உயிர் தியாகத்திற்கு நியாயம் சேர்ப்போம். சாமானிய மனிதர்களின் நீதிக்காக மாணவர் சமூகமே திரண்டெழு!

ஆளுநரே! ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று கையெழுத்திடு அல்லது பதவி விலகு.

#28YearsEnoughGovernor
#WeNeedGovernorSign
#GovernorSignOrResign
#StudentsFor7Tamils

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here