என்று தணியும் இந்த கொரோனா கொடுமை?- அ.லோகசங்கர்.

மத்தியில் அமர்ந்துள்ள மோடி (மஸ்தான்) அரசும், மாநிலத்திலுள்ள சவலப்பாடிகள் அரசும் கொரானாவுக்கு எதிராக ஒரே மாதிரியாக வினையாற்றி உள்ளன. கொரானா தொற்று ஆங்காங்கே ஒன்றிரண்டு என வெளிப்பட்ட போது ஊரடங்கு அறிவித்து எல்லாவற்றையும் முடக்கியவர்கள், அடுத்தடுத்து ஊரடங்கை நீட்டித்தவர்கள் இன்று கொரோனா தொற்று பல மடங்கு பெருகி, அடக்கமுடியாத பூதமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஊரடங்கை தளர்த்திக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது!
இன்றும் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோய் குறித்து ஆரம்பத்தில் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்த போது, அமெரிக்க டிரம்ப்” அச்சப்பட எதுவுமில்லை “என்று உளறி கொட்டினார்.இந்திய துணைக்கண்டத்தின் சங்கிகளும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டிக் கொண்டார்கள். மாட்டு மூத்திரம் ( கோமியம்) என்கின்ற சர்வரோக நிவாரணி தங்களிடம் இருப்பதாக மார்தட்டிக் கொண்டார்கள். கை தட்டி எழுப்புகின்ற சத்தத்தின் மூலமும், டார்ச் அடித்து உருவாக்குகின்ற வெளிச்சத்தின் மூலமும் கோரானா வைரசை வீழ்த்தும் போரில் அணிவகுக்கும் படி மோடியும் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலேயே கொரோனா குறித்த அறிகுறிகள் தென்படத் தொடங்கியபோதும், எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற் கொள்ள முன்வராத மத்திய-மாநில அரசுகள், காலம் கடந்த பிறகு, உலகெங்கும் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு அறிவித்த போது, தன் பங்கிற்கு தான்தோன்றித்தனமாக ஊரடங்கை அறிவித்தன. மக்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வதற்கு சிறிதும் அவகாசம் அளிக்காது, மக்கள் அனைவரையும் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் அடைத்தனர்.
எல்லாவிதமான போக்கும்வரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன. அனைத்து ஆலைகளும் முடக்கப்பட்டன. எல்லா நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டன. மக்களின் நகர்வு முற்றிலும் தடை செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலும் மாவட்டங்களுக்கு இடையிலும் மக்களால் தாண்ட முடியாத-மக்கள் தாண்டக்கூடாத தடுப்பரண்கள் எழுப்பப்பட்டன.

ஊரடங்கு என்ற பெயரில் ஊரையே தத்தம் வீடுகளில் அடங்கச் சொல்லி ஆணையிட்ட கோமான்களுக்கு(கோமாளிகளுக்கு) , பசிப்பிணியை அடங்கச் சொல்லி ஆணையிடும் வல்லமை தங்களுக்கு இல்லை என்ற அறிவு கொஞ்சமும் இருந்ததாக தெரியவில்லை. வேலையின்றி ,வருவாய் இன்றி வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகள் அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத-அக்கறைப்படாத அரசுகள், அடைபட்டுள்ள மக்கள் மீதான கண்காணிப்பை ராப்பகலாக தீவிரப்படுத்தின. அரசு எந்திரத்தின் அனைத்து பிரிவுகளும் அவற்றின் வழக்கமான பணிகளிலிருந்து விலக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் முடுக்கிவிடப்பட்டன. தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காகக்கூட மக்கள் வெளியே செல்வது தடைசெய்யப்பட்டது. செல்கின்ற மக்கள் விதவிதமாக இம்சிக்கப்பட்டனர்- இழிவுபடுத்தப்பட்டனர்.
“தனித்திரு !விழித்திரு!! வீட்டில் இரு!!!”என ஆளும் அரசுகள் முழங்கிய போது, இடதுசாரிகள் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தன. தத்தம் குடியிருப்புகளிலோ அல்லது தத்தம் அலுவலகங்களிலோ கோரானாவுக்கு பயந்து அடைபட்டுக் கொண்ட இந்த எதிர்கட்சிகள்,”மக்களுக்கு நிவாரண தொகை வழங்குங்கள்!” என்கின்ற கோரிக்கையோடு தங்களது வரலாற்றுக் கடமையை முடித்துக் கொண்டன.”இருந்தால் புசித்திரு !இல்லையேல் பசித்திரு !”என மக்களை வீடுகளுக்குள் அடைத்த அரக்கர்கள் கூச்சநாச்சமின்றி கண்காணித்து திரிகின்றனர்.
வேலை தேடி -வருவாய் தேடி -பிழைப்பு தேடி மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி யாதொரு அறிதலும் புரிதலும் இல்லாத மத்திய -மாநில அரசுகள், இந்த லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை நிர்க்கதிக்கு தள்ளின. இவர்கள் குறித்து , இத்தொழிலாளர்களை வேலை வாங்கிய நிறுவனங்கள் பேச மறுத்து ,மௌனம் காத்தன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் மத்திய அரசும் கள்ள மௌனம் காத்தன.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது சொந்த மண்ணை தேடியும், வாழ ஒரிடம் தேடியும் லட்சக்கணக்கான மக்கள் எந்த ஒரு வசதியும் உத்திரவாதமும் இன்றி அலைக்கழிக்கப்பட்டதைப்போலவே, சொந்த நாட்டு மக்கள் சொந்த ஊரை நோக்கி, வரலாற்றில் முதல் முறையாக துரத்தப்பட்டனர். “திரைகடல் ஓடி திரவியம் தேடு!” என்பதற்கு ஒப்ப வெளிநாடுகளுக்கு பிழைக்கப் போனவர்கள் தாய்நாட்டுக்கு -தாய் மண்ணுக்கு திரும்ப வருவதற்காக-துரத்தப்படுவதற்காக விமானங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். சொந்த மண்ணை விட்டு, சொந்த ஊரைவிட்டு பஞ்சம் பிழைப்பதற்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் அடுத்த மாவட்டத்திற்கு -அடுத்த மாநிலத்திற்கு- அடுத்த நாட்டிற்கு சென்றவர்கள் பிழைப்பையும் வருவாயையும் இழந்து, திரும்பி வருகின்றனர். நிலைமை அடுத்த சில வாரங்களில் அல்லது அடுத்த சில மாதங்களில் சீரடையும் என்பதற்கான நம்பிக்கை ஊட்டும் அறிகுறிகள் எதுவும் இல்லை.
கொரோனா தனது கோரப்பிடியை இன்னும் தளர்த்திக் கொள்ளாத நிலையில், ஊரடங்கை தளர்த்தியுள்ள இந்த அதிமேதாவிகள், கொரோனாவை எதிர்கொள்ள எப்படியெல்லாம் தயாரானார்கள் என்பது கேலிக்கூத்தாகவே உள்ளது.
கொரோனா என்னும் கொடிய தொற்று நோய்க்கு ஆளானவுடன், தொற்று நோய் பற்றி தெரிய வந்தவுடன், அதனை எதிர்கொள்வதற்கு தேவையான சட்டத்தையோ திட்டத்தையோ உருவாக்க மத்திய -மாநில அரசுகள் முன்வரவில்லை. ஆங்கிலேயர்கள் 1897 ஆம் ஆண்டு உருவாக்கிய தொற்றுநோய் சட்டத்தையே தூசி தட்டி கையில் எடுத்துக் கொண்டனர். நாடு முழுக்க மக்களுக்கு, அப்படி இப்படி என்றோ, அவ்வளவு இவ்வளவு என்றோ சொல்ல முடியாத அளவுக்கு இடர்களை உருவாக்குகின்ற கொரோனாவை எதிர்கொள்ள கூடுதலாக 2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மை சட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டனர். 1897 ஆம் ஆண்டின் ஆங்கிலேய சட்டம் “தொற்று நோய் பரவலைத் தடுக்க அரசுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழங்கியுள்ள கூடுதல் அதிகாரம் “போதும் என கருதினர். கொரோனாவை ஒரு பேரிடர் ஆகவே எடுத்துக்கொண்டனர்.

இயற்கை பேரிடர்களின்பொழுது,
மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவது,
பாதுகாப்பான இடத்தில் ஒன்றாக தங்க வைப்பது,
குறித்த காலத்தில் பேரிடர் விலகியவுடன் (பேரிடர் எதுவும் நீண்டகாலத்திற்கு தொடர்வதில்லை)சொந்த பகுதிக்கு அவர்களை திரும்ப அனுப்புவது,
பேரிடரால் உருவான பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவது,
குடியிருக்கவும் தொழில் செய்து வருவாய் ஈட்டவும் அவசியமான உதவிகள் வழங்குவது
ஆகியவையேபேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி மக்களுக்கு கிடைக்கக்கூடியவை. இயற்கை பேரிடருக் குரிய எந்த குணாம்சமும் கொரோனாவிற்கு கிடையாது. மாறாக கொரோனா, இயற்கை பேரிடர்களுக்கு நேர் எதிரான குணாம்சங்களை கொண்டவை.
கொரோனா தொற்று நுழையமுடியாத பாதுகாப்பான இடமென்று ஒன்று இல்லை
மக்கள் ஒன்று கூடுவதே ஆபத்தானதாக மாறி, தனித்திருப்பதே தர்மமாகிப் போகிறது.
மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவது ஆபத்தின் அறிகுறியாக அடையாளம் காணப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர்கள்/ பகுதிகள் மட்டும ல்லாது , சுற்றியுள்ள அருகாமை பகுதிகள் அனைத்தும் முடக்கப்படுவது தேவையாகிறது.
பேரிடர் காலங்களில் போல நிவாரணப் பொருட்களையும், நிவாரணத் தொகையையும் வழங்குவதே சிக்கல் நிறைந்ததாக உள்ளது.
அப்படியிருந்தும் இந்த அரசுகள் கோரானாவையும் பேரிடர் என அறிவித்துள்ளது மாபெரும் மோசடியாகும்.
கோரானா தொற்றை எதிர்கொள்வதற்கான எந்த ஒரு ஆக்கபூர்வமான செயலையும் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் செய்வதற்கு வழிவகை இல்லை.பாதுகாப்பு இடங்களை உருவாக்குவதோ, குடியிருப்புகளை உருவாக்குவதோ, சாலை வசதிகளை பெருக்குவதோ கோரானாவுக்கு தேவையில்லை. ஆனால் இந்த மத்திய -மாநில அரசுகள், இதுகுறித்து எந்த கவலையும் இல்லாமல், கிடைக்கின்ற நிதியைக் கொண்டு , கோரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவசியப்படும் என்ற பெயரில் மருத்துவப்படுக்கை வசதிகளை எண்ணிக்கையில் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஓடாமல் நிறுத்தப்பட்ட ரயில் பெட்டிகளை கூட வார்டுகளாக உருமாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை பகிரங்கப்படுத்தி சமூகத்தின் முன்னால் கூனிக்குறுகி அவமானப்பட்டு வாழும் நிலைக்கு தள்ளுகின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் அறிவியலின் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு இடைவிடாது கண்காணிக்கின்றன. மணல் கடத்தலையோ, மரக்கடத்தலையோ தடுக்க நாளதுதேதி வரை பயன்படுத்தப்படாத உலங்குவானூர்தி(Drone) யை மக்களை கண்காணிக்க பயன்படுத்தினர். கண்காணிப்பு என்ற பெயரில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எந்தவித சுதந்திரமும் இல்லாத நிலையை ஏற்படுத்துகின்றனர். அடிப்படை மனித உரிமைகள் கூட-அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன (இது பற்றி மனித உரிமை ஆர்வலர்கள் ஏனோ மெளனம் சாதிக்கின்றனர்). ராஜஸ்தான் ,பஞ்சாப், டெல்லி மாநில அரசுகள் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளன. கர்நாடக அரசு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை , கர்நாடக அரசு உருவாக்கியுள்ள Corona Watch என்னும் செயலி மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை (இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரையிலான தூங்கும் நேரம் தவிர) ஜியோ டேக் செய்து செல்பி படம் எடுத்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது பங்கிற்கு ஆரோக்கியா சேது (Aarogya Setu) என்னும் செயலியை உருவாக்கி அதன்மூலம் செல்போனை பயன்படுத்தும் நபருக்கு ஆறு அடி தொலைவில் கொரானா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் வரும்போது எச்சரிக்கிறது.
இது போன்று பல வகைகளிலும் மக்கள் கண்காணிக்க படுவதை உலக சுகாதார நிறுவனம் (WHO) நியாயப்படுத்துகிறது. அதற்குபொது சுகாதார நெருக்கடியை காரணமாக கூறுகிறது. பொதுசுகாதார கண்காணிப்பை வலியுறுத்தி தனி நபர் உரிமைகளை பறிக்கிறது. தொற்றுநோயைக் காரணம் காட்டி மக்களை கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்துவதை உலக சுகாதார நிறுவனம் சட்டபூர்வ செயலாகவே மாற்றியுள்ளது.
மத்திய மாநில அரசுகளால் கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக எதுவும் செலவழிக்கப்படவில்லை. மாறாக தொற்றுநோய் வந்தால் சிகிச்சை அளிக்க வசதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சுகாதார வசதிகளைப் பெருக்கி நோய் வராமல் தடுக்கின்ற “வருமுன் காக்கும்” செயலைச் செய்வதற்கு அவசியமான துணிச்சலும் நேர்மையுமற்ற இவர்கள், நோயை வர விட்டுவிட்டு ,நோயை தொற்ற விட்டு விட்டு மருத்துவ வசதிகள் வழங்குவதை பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள். ” நோய் வராமல் தடுக்க ஒரே வழி தனித்திருங்கள்! வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடங்கள்!” என்பதையே கிளி பிள்ளையைப் போல திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
கொரோனாவை எதிர்கொள்வதற்கு என்று ஒரு அவசர சட்டத்தை உருவாக்கவும் ,ஒரு அவசரகால நிதி ஒதுக்கீட்டை செய்யவும் இந்த அரசுகள் தயாராக இல்லை. இது குறித்து ஆளுவோரும் பேசவில்லை ஆளத்துடிப்போரும் பேசவில்லை.
முன் தயாரிப்பு செய்துகொள்ள மக்களுக்கு போதிய கால அவகாசம் எதுவும் வழங்காமல் திடுதிப்பென ஊரடங்கை அறிவித்ததன் மூலம் ஆட்சியாளர்கள் புனித கடமையை நிறைவேற்றி விட்டதாக புளகாங்கிதம் அடைந்து கொண்டனர். ஆனால் வீடுகளிலே அடைக்கப் பட்டதன் காரணமாக மக்கள் வேலையை இழந்தனர்; கூலியை இழந்தனர்; அத்தியாவசியமான பொருட்களை வாங்கும் வாய்ப்பை இழந்தனர்; உற்பத்திப் பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை இழந்தனர். வணிகமும் வர்த்தகமும் சிதைந்து போனதால், பொருள்களின் பரிவர்த்தனைகள் முடங்கிப் போனது; ஊரடங்கு காரணமாக வேலை செய்யும் வாய்ப்பை இழந்த உழைப்பாளிகளின் கூலி காற்றில் கரைந்து போனது.
உயிர் பயத்தை ஊட்டி வீடுகளுக்குள்ளேயே மக்களை முடங்கச் செய்த ஆட்சியாளர்களுக்கு வயிற்றுப்பசி கிடையாது மூட்டுப்பசிதான் உண்டு ஆதலால் மக்களின் வயிற்றுப் பசி பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை.நம்முடைய மூதாட்டி அவ்வையாரையே பாடாய்ப்படுத்திய ஒரு சாண் வயிற்றுப் பிரச்சனை இவர்களுக்கு ஏனோ புரியவில்லை. குடும்ப அட்டைகள் (ரேசன் கார்டுகள்) மூலம் அரைவயிற்றுக்கு கஞ்சியை ஊற்றினால் போதும் என அரசு நினைக்கிறது. தினக்கூலி முதல் தொழில் முனைவோர் வரை, விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை, ஊரடங்கு காரணமாக வருவாயை இழந்துள்ள ஒவ்வொருவருக்கும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய போதுமான நிதி உதவி வழங்குவது மட்டுமே உரிய பரிகாரமாக இருக்க முடியும். ஏற்கனவே மக்களுக்காக நியாயமாக சிந்தித்த வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்ததைப்போல உயர் வருவாய் பிரிவினருக்கு வருமான வரியை கூடுதலாக விதிப்பதன் மூலம் அரசால் இந்த நிதியை திரட்டிக் கொள்ள முடியும். ஆனால் தங்களின் பொறுப்பை தட்டிக் கழிக்க விரும்பும் மத்திய -மாநில அரசுகள் ஒட்டுமொத்த பொருளாதார சுமையையும் மக்கள் மீது சுமத்தவே விரும்புகின்றன. உலகச் சந்தையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் பெட்ரோல் டீசலுக்கு இப்போதும் விலையை ஏற்றி இருப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
ஊரடங்கை தளர்வு செய்வது என்ற பெயரில், பாதி எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகளை நடத்தக் கூறுவது, ஆலை நிர்வாகங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தொழிலாளர்களை கையாள்வதற்கான முழு சுதந்திரத்தை வழங்குகின்ற தந்திரமாகவே இருக்கிறது. அதிகபட்ச லாபத்தை விரும்பும் நிர்வாகங்கள் அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களை நீக்கிவிட்டு குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பைத் தருகிறது. தொழிலாளர்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து அவர்களிடையே போட்டியையும் பொறாமையையும் விதைக்கிறது. குறைந்தபட்ச தொழிலாளர்களை கொண்டு செயல்படுகின்ற சிறு தொழிற்சாலைகள் பாதி எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கவே முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.
மாவட்ட மாநில எல்லைகளில் எழுப்பப்பட்டுள்ள தடுப்பரண்கள் அகற்றப்படாத நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப் படுத்துவது என்பது பகல் கனவாக மட்டுமே இருக்க முடியும். ஆலைகளை திறந்து உற்பத்தி செய்த பொருட்களை அதற்குரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல வாய்ப்பும் வசதியும் ஏற்படுத்தப்படாதவரை, ஆலைகளை திறக்க சொல்வதில் அர்த்தமேயில்லை.
“முதல் கோணல் முற்றும் கோணல் “என்பதைப்போல், கொரோனாவை துவக்கத்திலேயே எதிர்கொள்வதில் சுணக்கம் காட்டிய மத்திய- மாநில அரசுகள், இப்போதும் ஊரடங்குக்கு பிந்தைய சூழலையும் பொது அறிவுக்கு பொருந்தாத விதத்தில் ஏனோதானோ என கையாளுகின்றன.
அரசுகள் என்ன செய்தாலும் அதை வேடிக்கை பார்க்கின்ற நடைப்பிணங்களாக நாம் இருப்பதும், அதே அரசுகளின் மெத்தனத்தால் நாம் நிஜ பிணங்களாக மாறுவதும் இந்த அரசுகளுக்கு எந்த வித்தியாசத்தையும் உருவாக்கப் போவதில்லை.
கேளுங்கள் தரப்படும்!
கோரானா தொற்றுநோயை எதிர்கொள்ள சிறப்பு அவசர சட்டங்களை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் மீதான பொது சுகாதார கண்காணிப்புக்கென தெளிவான வரையறைகளும் விதிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு என்ற பெயரிலான அத்துமீறல்களுக்கு கடும் தண்டனைகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
கொரானா தொற்று நோயை எதிர்கொள்ள அவசரகால சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
கொரானோ தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு எடுக்கப்படுகின்ற ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய போதுமான நிவாரணத்தொகை வழங்கப்படவேண்டும்.
தட்டினால் மட்டுமே திறக்கப்படும்!!

அ.லோகசங்கர்.
சிந்தனைப்பள்ளி.