எதிர்காலத்தின் ஒரே நம்பிக்கை “கம்யூனிசம்”.- அஸ்வினி கலைச்செல்வன்

கம்யூனிசம் உணர்வு சார்ந்தது. கொள்கையை உள்வாங்கி தத்துவார்த்த அடிப்படையில் தான் செயல்பட வேண்டும் என்பதெல்லாம் வேறு…

இன்றைய கம்யூனிச தலைவர்களாக அறியப்படும் பலரும் கொள்கை சார் போராளிகள் அல்லர். போராட்டங்களின் அடிப்படையில் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பி வெற்றி பெற முயன்றவர்களே.

தொழிலாளர்களின் ஒற்றுமை எவ்வளவு வலுவாக அமைகிறதோ அவ்வளவு வலுவான பொருளாதார கட்டமைப்பின் கீழ் நாட்டின் வளர்ச்சி அமையும். இதை யாராலும் ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனெனில் வளமையான பொருளாதாரம் தான் வளர்ச்சியின் அடிப்படை. தனிமனித வாழ்வும் வீழ்வும் அதனை பொருத்ததே.

வறுமையில்லா வீடும் நாடும் வளர்ச்சியின் முதற்படி. இதற்கு எதிரான குரலெழுப்பும் கூட்டங்கள் பெரும்பாலும் ஆளும் அதிகார வர்க்கத்தின் சூட்சமமே. உழைப்பு சுரண்டலுக்கு எதிரான போர்க்குரல்களை அடக்க முயலும் கூட்டத்தின் நோக்கம் மிக முக்கியமானது. பல தொழிலாளர் குடும்பங்கள் வேறு வழியின்றி பிழைப்புக்காக இப்பொழுதும் நான்கு மடங்கு வேலைப்பளுவை சுமக்கிறார்கள். பல தொழிற்துறை நிறுவனங்கள் மூலம் “நவீன முறையில் உழைப்பு சுரண்டலை” அதிகார வர்க்கம் தொடர்ந்து மறைமுகமாகவும் நேரிடையாகவும் நடத்தி வருகிறது.

மேலைநாட்டு கலாச்சார மோகம் அதிகரித்துள்ள நிலையில் கொத்தடிமைகளாக வாழும் மக்கள் தன்னிலை மறந்து பொருளாதார பொருளீட்டு அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து உழைக்கிறார்கள் என்பதே உண்மை.

உற்பத்தி திறனுள்ள மூலதனம் பெரும்பாலும் முதலாளிக்கு லாபத்தை தருவதாக தான் அமையும். மூலதனம் எவ்வளவு வளருகிறதோ அவ்வளவு சுரண்டலை சந்தித்தாக வேண்டிய நிலை ஏற்படும் என்பதும் அறிய வேண்டியதே.
ஒரு தொழிலாளியின் வேலை நேரமும் ,உழைப்பும் , அதற்கான ஊதியமும் எப்படியானது என்பதை பொருத்தே வேலையின்மை எனும் பெரும் பிரச்சனையை தீர்க்க முடியும்.

8 மணிநேர வேலையும் அதற்கேற்ற ஊதியமும் தொழிலாளர்களின் தேவையை நிச்சயமாக அதிகப்படுத்தும். ஒரு சமுகத்தின் ஆளும் அதிகார வர்க்கம் இதை நன்றாக அறிந்தும் அதை செயல்படுத்தாமல் இருப்பதே போராட்டங்களுக்கு வழிவகை செய்கிறது.

இயந்திரமயமாக்கப்பட்ட நவீன உலகில் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் வேலை நேரத்தை அதிகப்படுத்தி , ஊதியக்குறைப்பானது அதிகார உழைப்பு சுரண்டல் என்பதை எத்தனை பேர் அறிவார்கள் ?
இயந்திரத்தை இயக்குவதற்கான செலவீனங்களும் தொழிலாளர்கள் மீது மறைமுகமாக சுமத்தப்படுகிறது என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.
இதை அறிந்திருந்தும் தொழிலாளியின் தேவைகளும் குடும்பச்சூழல்களும் தொழிலாளி தன்னை முதலாளியிடம் விற்றுக்கொள்ளும் பணத் தொகையாகிய பெயரளவு கூலியுடன் (நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்) கூடிய அடிமை வாழ்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் பிடியில் வைத்திருப்பதும் அதிகார தந்திரம் தான்.

அநீதியை கண்டு கோபங்கொள்ளும் நீயும் கம்யூனிச போராளிதான். இந்த கூற்றுக்கு முற்றிலும் உடன்பட்டு வரும் உணர்வுடைய யாரும் அவர்களையும் அறியாமல் கம்யூனிசவாதிகள் தான்.

கம்யூனிச உணர்வு விதைக்கப்படுவதில்லை விளையும் குருதியோட்டம். மீண்டும் மீண்டும் கம்யூனிசத்திற்கான உணர்வை அதிகார வர்க்கங்களே தூண்டுகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சியும் வெற்றியும் தொழிலாளர்களின் ஒற்றுமை சார்ந்ததே. கம்யூனிசம் உலகின் நம்பிக்கை.

அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here