எண்ணெய் வீழ்ச்சியும் வளைகுடா வாழ் இந்தியர்களின் துயரமும் – சியாம்சுந்தர்.

கடந்த வாரம் துபாய் மாநகரில் கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜாய் அரக்கல் அவர்களின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவமாக அமைந்துள்ளது. அவர் இன்னோவா என்கின்ற துபாயின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார். எண்ணெய் சுத்திகரிப்பு மட்டுமன்றி தொலைதொடர்பு மற்றும் பல்வேறு துறைகளில் தமது தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் .

அமீரக நாட்டில் பிரபலமானவர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் விசாவை பெற்ற இரண்டாவது இந்தியர் இவர். அமீரக நாடுகளில் வெளிநாட்டவர் யாருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதில்லை. ஆனால், திறமையானவர்கள் தங்கள் நாட்டினை விட்டு செல்ல கூடாது என்ற நோக்கில் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகின்ற கோல்டன் விசாவை நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளவர்களுக்கு மட்டும் வழங்குகிறது, துபாய். இந்த பெருமைமிகு விசாவை ஜாய் அரக்கலுக்கு வழங்கி உள்ளது, துபாய் அரசு.

ஜாய் அரக்கல் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ள மனத்தவடி என்ற ஊரை சேர்ந்தவர். இவர் 2018 ஆம் ஆண்டிற்கான துபாயில் சிறந்த தொழிலதிபர் என்ற பெருமைக்குரிய விருதினை வென்றவர். மேலும் முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் கையினால் கேரளாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.

இவர் 2018ஆம் ஆண்டு கேரளா மாநிலம் வயநாட்டில் நான்கு ஏக்கர் பரப்பளவில் 45 ஆயிரம் சதுர அடி அளவில் கட்டிய அரக்கல் பேலஸ் கேரளாவில் உள்ள மிகப் பெரிய வீடாக இன்றளவும் உள்ளது. 1997ம் ஆண்டு வேலை தேடி அமீரகத்திற்கு சென்ற ஜாய் தம்முடைய கடின உழைப்பால் இத்தகைய நிலையை அடைந்தார்.

ஆனால் அவர் தன்னுடைய 54வது வயதில் தமது அலுவலகம் அமைந்துள்ள 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது துபாயில் மட்டுமின்றி கேரளாவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல்கட்ட விசாரணையில் அவருடைய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் தான் அவர் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது.

மேலும் கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பிரபல தொழிலதிபர் BR ஷெட்டியின் தொழில் வீழ்ச்சியும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

1970களில் வெறும் 8 டாலருடன் துபாய் மாநகரத்திற்கு வந்த ஷெட்டி 4.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 30,000 கோடி) அளவிற்கு சொத்துக்களை சேர்த்தார். உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் முழுமையாக இரண்டு தளங்களை வாங்கி உள்ளார். குறிப்பாக புர்ஜ் கலீபாவின் நூறாவது மாடியை இவர் வாங்கியுள்ளார். மேலும் பில்கேட்ஸ் வழியில் தமது சொத்துக்களை பெருமளவிற்கு தானமாக கொடுத்துள்ளார். அவருடைய நிறுவனம்தான் இன்றைய நிலையில் திவாலாகும் சூழ்நிலையில் உள்ளது.

இது அமீரக நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது
உலகம் முழுவதும் பெருவாரியான நாடுகள் கொரோனா தொற்றினால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளன. வளைகுடா நாடுகள் தங்களுடைய எண்ணெய் வளத்தையே பெரிதும் சார்ந்துள்ளன.

இப்பொழுது சிறிது சிறிதாக ஆட்டோமொபைல் துறை பெட்ரோலுக்கு மாற்றாக மின்சாரத்தில் ஓடும் வண்டிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த வண்டிகளில் எரிபொருளுக்கான செலவு குறைவாக உள்ளது. மேலும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் புகை இல்லாமல் இயங்குகிறது. இது எண்ணெய் உற்பத்தியை சார்ந்திருக்கின்றன வளைகுடா நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கொரோனா நோய் தொற்றினால் பலர் தங்கள் வண்டிகளை இயக்கவில்லை. அதனால் எரிபொருளுக்கான தேவை பெருமளவில் குறைந்துள்ளது. தொழில் போட்டி காரணமாக ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதால் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு பேரலுக்கு 100 டாலருக்கு மேல் விற்ற கச்சா எண்ணெயின் விலை வரலாற்றில் முதல் முறையாக 20 டாலருக்கு கீழ் சென்றுள்ளது.

இதன் உச்ச கட்டமாக ஏப்ரல் 20 அன்று நியூயார்க் மாநகரில் ஊக வணிக வர்த்தகத்தில் கச்சா எண்ணெயின் விலை முதல்முறையாக மைனஸ் $40.34 இருக்கு சென்றது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஒரு பேரல் கச்சா எண்ணையை ஒருவர் வாங்கினால் அவருக்கு எண்ணெய் நிறுவனம் $40.34 டாலர் தர வேண்டும்.

இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெயை சேமித்துவைக்க போதுமான கிடங்குகள் இல்லாததே ஆகும்.

உதாரணமாக, இந்தியாவின் தேவைக்கு அதிகபட்சமாக ஒரு வாரம் தேவைப்படுகின்ற கச்சா எண்ணையை சேமித்து வைக்கின்ற கட்டமைப்பு தான் நம்மிடம் உள்ளது. மேலும் இந்த காலத்தில் மக்களின் நுகர்வு பெருமளவு குறைந்துள்ளதால் இந்த விலை வீழ்ச்சியை பயன்படுத்தி அதிக அளவு சேமிக்க முடியாது. இதுதான் எல்லா நாட்டுகளின் நிலையும். அதனால்தான் உலக வரலாற்றில் முதன்முறையாக கச்சா எண்ணெய் விலை மைனஸ்க்குச் சென்றது.

இந்த விலை சரிவு வளைகுடா நாட்டில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். வளைகுடா நாடுகளில் மிக அதிக அளவில் இந்தியர்களின் பணியாற்றி வருகின்றனர். அதில் 40 சதவீதத்திற்கு மேல் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் கணிசமான மக்கள் நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

நம் இந்திய அரசு வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை மீட்பதற்கு இப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் தங்கள் தகவல்களை பதிவு செய்து வருகிறார்கள். அவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களை இந்திய அரசு இந்த மாத இறுதிக்குள் தங்கள் தாயகத்திற்கு அழைத்துவர ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி அமீரகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் நாடு திரும்புவதற்கு விண்ணப்பம் தெரிவித்துள்ளனர். நாடு திரும்புவதற்கான காரணம் கேட்கப்பட்டது. 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வேலை இழந்தது தான் காரணம் இன்று குறிப்பிட்டுள்ளனர். இது ஆரம்ப கட்ட எண்ணிக்கை தான். இன்னும் சில மாதங்களில் படிப்படியாக பலர் வேலை இழந்து நாடு திரும்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

அனைத்து வளைகுடா நாடுகளையும் சேர்த்து பார்த்தோமானால் மிகப் பெரிய எண்ணிக்கையிலான இந்திய மக்கள் நாடு திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த இந்தியர்கள் தான் கடந்த 20-30 ஆண்டுகளாக பாலைவன தேசத்தில் தாங்கள் பாடுபட்டு உழைத்த ஊதியத்தை அன்னியச் செலவாணி ஆக நமக்கு வழங்கி வந்தவர்கள்.

நாடு திரும்பும் இவர்களுக்கு இந்திய அரசு தம்மால் முயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அவர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்பினால் வங்கி கடன்களை ஏற்பாடு செய்து தரவேண்டும்.

நமது நாடு பெரும்பாலும் எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. அதனால் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி நமது நாட்டிற்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்திய அரசு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இவர்களின் வாழ்வாதாரங்களை காப்பது இன்றியமையாதது.

மேலும் சென்ற ஆண்டு நமது மத்திய நிதியமைச்சர் வெளிநாடுகளில் வருமான வரி செலுத்தாதவர்கள் அந்த பணத்தினை நமது நாட்டிற்கு அனுப்பும் பொழுது அதற்கு வரி கட்ட வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமீரக நாடுகளில் பொதுவாக வரி விதிப்பு இருப்பதில்லை. அதனால் அந்நாட்டில் வேலை செய்யும் மக்கள் தங்கள் பணத்தை இந்திய நாட்டிற்கு அனுப்பும் பொழுது அதற்கு வரி செலுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு நமது நாடு இந்த புதிய வரிவிதிப்பினை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மக்களால் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை செய்ய முடியும்.

வளைகுடா நாடுகள் பாலைவனப் பிரதேசத்தில் எண்ணெய் இயற்கை வளத்தைக் கொண்டு இந்த அளவுக்கு முன்னேறியுள்ளன. இந்த முன்னேற்றத்திற்கு இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். இந்த நாடுகள் கூடிய விரைவில் இந்த இக்கட்டான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும். அதற்கு நமது இந்தியர்களின் பங்கும் பெருமளவு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  • சியாம் சுந்தர்