‘எடுப்பார் கைப்பிள்ளை’ அரசியலுக்குத் தமிழர் தரப்பு முழுக்கு போட வேண்டும்! வி.உருத்திரகுமாரன் மாவீரர் நாள் செய்தி.

இலங்கைத் தீவின் இன்றைய அரசியல் யதார்த்தத்தில் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

‘உரிமைகளுக்காக விட்டுக் கொடுப்பின்றிப் போராடி, எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்து வாழ்வில் ஒரு தெரிவு. இத்தெரிவில் வெற்றியடைவதற்கான நடைமுறைச் சாத்தியம் குறைவு என்று ஐயம் கொள்வோர் பலருண்டு.

மற்றைய தெரிவு சிங்கள இனவாதத்துக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ எமது அடிப்படைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழந்து, இறுதியில் சிங்களப் பெருந்தேசியத்துக்குள் காலப்போக்கில் கரைந்து போவது.

முதலாவது தெரிவில் நாம் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒடுக்குமுறையை எதிர்த்துநிற்கும் எதிர்ப்பு உணர்வினை தணியாமல் காத்து எமது போராட்டத்தைச் செவ்வனே பேணிக் கொள்ளும் வரை நாம் தோல்வியடைந்தவர்களாகப் போய்விட மாட்டோம். சரியானதொரு சந்தர்ப்பத்தில் வெற்றிக்கான வாய்ப்பும் போராட்டத்தைத் தளராது தொடரும்போது மட்டுமே கிடைக்கும்.

இரண்டாவது தெரிவு தமிழ் மக்களுக்கு மிகவும் அவமானகரமான தோல்வியையே தேடித்தரும். எம்மால் எதுவும் முடியாது என்று சரணாகதியடையும் நிலைக்கு இட்டுச் செல்லும். சிங்கள மேலாதிக்கத்தை் இயல்பாக ஏற்றுக்கொண்டு அடிபணிந்து வாழும் இழிநிலைக்கு எம்மை இட்டுச்செல்லும். இந்நிலை ஏற்படின் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நிரந்தரமாகத் தோல்வியடைந்த மக்களாக மாறிவிடுவார்கள் என குறித்துரைத்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்த இழிநிலை தமிழ் மக்களுக்கு ஏற்படாது காக்கும் காவல் தெய்வங்களாக எமது மாவீரர்கள் இருப்பார்கள் என்பது எமக்கு நம்பிக்கை தரும் விடயமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் செய்தியானது, இந்தோ-பசிபிக் பூகோள அரசியல் சதுரங்கத்தில் இலங்கைத்தீவை மையப்படுத்திய வல்லரசுகளின் நகர்வுகள், அதனால் ஏற்பட்டுள்ள தென்னிலங்கை அரசியல் நிலவரங்கள், தமிழர் தரப்பு எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் என சமகால விடயத்தினை முன்னிறுத்தி மாவீரர்களை நினைவேந்தி அமைந்துள்ளது.

சிறிலங்கா அரசையும், சிங்களப் பெரும்பான்மை கட்சிகளையும், அனைத்துலக சமூகத்தையும் ஈழத்தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் கையாளக்கூடிய தலைமைத்துவத்தைத் தாயகத்தில் ஏற்படுத்துவது அவசியம் என்பதனைத் தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

இதுகுறித்து தாயக மக்கள் சிந்தித்து கவனம் செலுத்த வேண்டும் என்றே நாம் கருதுகின்றோம்.

தற்போதைய நெருக்கடிநிலை சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதனை மீண்டும் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த உண்மையினை தாயகத் தமிழர் தலைமை அனைத்துலக சமூகத்துக்குத் தெளிவாக அறிவிக்க வேண்டும். ‘எடுப்பார் கைப்பிள்ளை’ அரசியலுக்குத் தமிழர் தரப்பு முழுக்குப் போட வேண்டும், எனவும் மாவீரர் நாள் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்துள்ளார்.

முழுமையான மாவீரர் நாள் செய்தி:

இன்று தேசிய மாவீரர்நாள்!

எம் தேசப்புதல்வர்களின் திருநாள்!

தமிழீழத் தாயகத்தின் மூச்சுக்காற்றெங்கும் நிறைந்திருக்கும் எம் விடுதலை நாயகர்களின் பெருநாள். தமிழீழ மக்களின் விடுதலைக்காய் வீரச்செருக்கோடு களமாடி மண்ணில் விதையாய் வீழ்ந்த எம் வீர மறவர்களை எம் மக்கள் தமது இதயக்கோவிலில் இருத்திப் பூசிக்கும் நன்னாள்.

தமிழீழ தேசத்தின் தேசிய எழுச்சியையும், சுதந்திர வேட்கையினையும் உலகறியச் செய்து தமிழர் தேசத்தின் மனசாட்சியாய் ஆழ வேரோடியிருக்கும் புனித நாயகர்களின் நினைவு நாள்.

மாவீரர்களது ஈகத்தால் எம் மண் சிவந்திருக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க ஈழத்தாய் தன் வயிற்றிலிருந்து கிளர்ந்தெழுந்து எம் மண்ணுக்காய் உயிர் ஈந்தவர்களின் அக்கினி மூச்சினால் எமது தாயகம் தகித்துக் கொண்டிருக்கிறது.

இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசு ஒன்றே தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்பதில் பற்றுறுதி கொண்டு எமது மாவீரர்கள் களமாடினர்.

தமிழீழ மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக, சிங்களத்தின் இன அழிப்புக்கு உள்ளாகாது வாழ்வதற்கான வாய்ப்பினைத் தமிழீழத் தனியரசினை அமைப்பதன் மூலமே அடையலாம் என்ற தொலைநோக்குடன் மாவீரர்கள் களமாடினர்.

சாதிகள் அகற்றப்பட்ட, ஆண்-பெண் சமத்துவம் நிறுவப்பட்ட, சமூக ஏற்றத்தாழ்வுகள் விலக்கப்பட்ட, இயற்கைச்சூழற் பாதுகாப்பில் அக்கறை கொண்ட, சமூக நீதி நிலவுகின்ற சமூகமொன்றைப்படைக்கும் உன்னத இலட்சியத்துடன் மாவீரர்கள் களமாடினர்.

தமிழீழ மக்களின் இறைமையைப் பாதுகாக்கப் போரிட்ட மாவீரர்களின் உன்னதமான போராட்டம் எமது தேசத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. மாவீரர்கள் விட்டுச்சென்ற வழித்தடங்கள் நாம் சென்றடைய வேண்டிய இலக்கை எமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.

மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வணக்கம் செய்யும் இன்றைய நாளில் அவர்களுக்குத் தலைவணங்கி அவர்களின் கனவுகளை எம்முள்ளே உள்வாங்கி உறுதி எடுத்துக் கொள்வோம்.

அன்பான மக்களே!

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஊடாக தமிழீழ தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்ட பின்னர் மாவீரர் நினைவு எம் மக்கள் மத்தியிலிருந்து அழித்து விடுவதற்குச் சிங்களம் பகீரத முயற்சி எடுத்து வந்தமையினை நாம் அறிவோம். சிங்களம் மட்டுமல்ல அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினரும் இம்முயற்சியில் இறங்கியிருந்தனர்.

மாவீரர் நினைவை, மாவீரரது வகிபாகத்தை அழித்தல் என்பதற்கான திட்டம் மூன்று பரிமாணங்களைக் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவுத்தூபிகள் போன்ற மாவீரர்களின் பௌதிக நினைவுத்தடங்களை அழித்து, காலப்போக்கில் மாவீரர்களை மக்களது நினைவிலிருந்து அகற்றுதல் என்பது இத்திட்டத்தின் ஒரு பரிமாணம்.

மாவீரர்களது இலட்சியக் கனவான இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைத்தல் என்ற சுதந்திர கனவைத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அழித்தல் என்பது இத்திட்டத்தின் இரண்டாவது பரிமாணம்.

மாவீரர்களுக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற அங்கீகாரத்தை மறுத்து, அவர்களை பயங்கரவாதிகளாக வர்ணித்து, தமிழர் தம் அடுத்தடுத்த தலைமுறையினர் மத்தியில் மாவீரர் நினைவை அகற்றுதல் மூன்றாவது பரிமாணம்.

மாவீரர் துயிலும் இல்லங்களை, மாவீரர் நினைவுச் சின்னங்களை அழிப்பது மூலம் மாவீரர் நினைவுகளைத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து அழித்துவிடும் முயற்சியினைத் தமிழீழ மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். தாயகத்திலும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் மாவீரர் நாளை மக்கள் எழுச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.

அடுத்த இரண்டு பரிமாணங்களையும் எதிர்கொள்ளவென நாம் அரசியற்தளத்தில் போராடியாக வேண்டும்.

தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக சுதந்திரத் தமிழீழத் தனியரசே அமைய முடியும் என்பதனை நாம் உறுதியாக நிலை நிறுத்தியாக வேண்டும்.

மாவீரர்களுக்கு நாம் செய்யும் கொள்கை நிலைப்பட்ட, செயல்பூர்வமான வணக்கமாக இது அமையும்.

இலங்கைத் தீவின் இனமுரண்பாடு சிறிலங்கா அரசகட்டமைப்புக்குள் தீர்க்கப்பட முடியாத அளவுக்குத் தர்க்கரீதியான வளர்ச்சிக்கட்டத்தை அடைந்து விட்டது.

இதனால் சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள் தமிழரது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கப் போவதில்லை. இதையேதான் 1987 ஆம் ஆண்டு தேசியத்தலைவர் அவர்கள் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்படும் எந்த ஒரு முயற்சியையும் சிங்கள இனவாதப்பூதம் விழுங்கி விடும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், சிங்களம் தமிழ் மக்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும், தாயகத்தையும் நிராகரித்து அவர்களைச் ‘சிறிலங்கர்’ என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடைக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

தமிழ் மக்களாகிய நாமோ நாம் ஒரு தனித்துவமான தேசத்தவர் என்ற அங்கீகாரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

சிறிலங்காவின் சனநாயக கட்டமைப்பு சிங்கள இனநாயகமாக மாறி இறுக்கமடைந்த பின்னர் தமிழின அழிப்பு நடவடிக்கையினூடாகத் தமது இலக்கினை அடைந்து கொள்ள சிங்களம் முயல்கிறது. சிறிலங்காவின் அரச கட்டமைப்பை துணையாகக்கொண்டு இம்முயற்சியினைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இதனை நாம் முறியடிப்பதற்காகவே இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசு ஒன்றை அமைப்பதற்கான எமது போராட்டத்தை தீவிரமாகத் தொடர்ந்தாக வேண்டும்.

தாயகத்தின் தற்போதைய சூழலில் உள்ள மக்கள் தமது அரசியற் பெருவிருப்பினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாதவாறு தடைகள் சில உள்ளன. இருந்தபோதும் தமிழர்தேசம், பாரம்பரிய தாயகம் போன்றவற்றுக்கான அங்கீகாரத்தை வலியுறுத்தியும் தமிழின அழிப்புக்கு எதிராகவும் அரசியல் ரீதியாகப் போராட முடியும். இப்போராட்டம் மாவீரரது கனவுகளால் கட்டியமைக்கப்பட்ட அடிப்படைகளைப் பாதுகாத்துப் பலப்படுத்தும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி வைக்கும் நோக்கின் பின்னால், மாவீரர்களுக்கான ‘சுதந்திர போராட்ட வீரர்கள்’ என்ற அங்கீகாரத்தினை நிராகரிக்கும் எண்ணமும் இணைந்திருக்கிறது. விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியற்பரிமாணத்தை நசுக்கி விடும் எண்ணமும் இத்தடையோடு இணைந்திருக்கிறது.

இதனை எதிர்கொள்ளவென விடுதலைப் புலிகள் அமைப்பின்மேல் விதிக்கப்பட்டுள்ள தடையிணை அகற்றுவதற்கான அரசியற் செயற்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது.

இதற்கான முதற்கட்டச் செயற்பாட்டினை நாம் பிரித்தானியாவில் ஆரம்பித்துள்ளோம். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை அகற்றுமாறு நாம் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின்முன் மனுவொன்றினை இன்று தாக்கல் செய்துள்ளோம். இது தொடர்பான அரசியற் செயற்பாட்டையும், சட்டரீதியான செயல்பாட்டையும் நாம் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளோம். இதுபோன்ற விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை அகற்றும் முயற்சிகள் ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மாவீரர்களுக்கு நாம் செய்யும் செயல்பூர்வமான வணக்கமானது எமது இச்செயற்பாடு அமையும் என்பது எமது நம்பிக்கை.

அன்பானவர்களே!

உலகெங்கும் மக்கள் குழுமங்கள் எல்லாம் அரசுகள் என்ற முறைமைக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதனை நாம் அறிவோம். மக்கள் வாழும் நாடுகள் எல்லாம் அரசுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அரசுகள் தமக்கிடையே ஒரு கழகம் போல இயங்கிக் கொள்கின்றன.

அரசுகள் தமக்கிடையே உடன்பாடுகளையும் முரண்பாடுகளையும் கொண்டவையாக இயங்குகின்றன. இவ்வுடன்பாடுகளையும் முரண்பாடுகளையும் தீர்மானிக்கும் தலைமைக் காரணியாக அந்தந்த அரசுகளின் நலன்களே அமைகின்றன.

அரசுகளின் நலன் என்ற அச்சில் சுழலும் இன்றைய உலக ஒழுங்கின்கீழ்தான் நாமும் மாவீரர் கனவுகளை நனவாக்கும் எமது செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய நிலையுள்ளது.

தமது நலன்களை அடைந்து கொள்ள முயலும் வல்லரசுகளின் பந்தாட்டக்களமாக இலங்கைத் தீவு தற்போது மாறியிருக்கிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் இலங்கைத் தீவினைத் தத்தமது நலன்களின் அடிப்படையில் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக் கொள்ள முயல்கின்றன.

இதில் இலங்கைத்தீவில் சீனாவின் விரிவாதிக்கத்தைத் தடுப்பதற்கென இந்தியா, அமெரிக்கா இரண்டுக்குமிடையில் அவர்களது நலன் சார்ந்த ஓர் உடன்பாடு உள்ளது.

2015 ஆம் ஆண்டில் சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளினால் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின்பாற்பட்டுத்தான் நடந்தேறியது. இலங்கைத்தீவில் சீனாவின் விரிவாக்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் அதனை விபரிக்கலாம்.

இவ் ஆட்சிமாற்றத்துக்கு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு கிடைத்திருக்கவில்லை. இந்நிலை ஏற்படுத்திய தொடர்ச்சியான அழுத்தங்களின் விளைவாக சிறிலங்காவின் அரசகட்டமைப்புக்குள் தற்போது குழப்பமும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளன.

இந்த நெருக்கடியினை ஒரு பொதுத் தேர்தல் ஊடாக முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெறுவதனையும் எம்மால் உணர முடிகிறது.

இந்த நெருக்கடி எமக்கு எவ்வகையிலும் ஆச்சரியத்துக்குரியதாக இருக்கவில்லை. உள்நாட்டு நிலைமைகளை முற்றாகப் புறந்தள்ளி வெளிநாட்டுச் சக்திகள் தமது நகர்வுகளைச் செய்தல் எவ்வகையிலும் இலகுவானதல்ல என்பதனையும் தற்போதைய நெருக்கடிநிலை சுட்டிக்காட்டுகிறது.

இந்த நெருக்கடியிலிருந்து சிறிலங்கா தன்னை மீட்பித்துக் கொள்ளும். தமக்குள் முரண்பட்டுக் கொண்டாலும் தமிழர்களின் உரிமைகள் விடயத்தில் இரண்டு சிங்கள கட்சிகளும் இனவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே உள்ளன. இது பல்வேறு காலகட்டங்களில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கின்றதும் நாம் பட்டறிந்த பாடம்தான்.

உண்மை அவ்வாறிருக்க 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிமாற்ற முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கியிருந்தது. இனவாதம் வெளிக்கிளம்பி விடும் என்ற காரணம் கூறி தமிழர்களின் உரிமைகள் சார்ந்த விடயத்திலும் அடிப்படைகளை கைவிட்டுச் செல்லும் வகையில்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழர் தலைமை செயற்பட்டிருக்கிறது. இவர்களது செயற்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கவில்லை.

சிறிலங்கா அரசையும், சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளையும், அனைத்துலகச் சமூகத்தையும் ஈழத்தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் கையாளக்கூடிய தலைமைத்துவத்தைத் தாயகத்தில் ஏற்படுத்துவது அவசியம் என்பதனைத் தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

இதுகுறித்து தாயக மக்கள் சிந்தித்து கவனம் செலுத்த வேண்டும் என்றே நாம் கருதுகின்றோம்.

தற்போதைய நெருக்கடி நிலை சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதனை மீண்டும் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த உண்மையினை தாயகத் தமிழர் தலைமை அனைத்துலக சமூகத்துக்குத் தெளிவாக அறிவிக்க வேண்டும். ‘எடுப்பார் கைப்பிள்ளை’ அரசியலுக்குத் தமிழர் தரப்பு முழுக்குப் போட வேண்டும்.

சிறிலங்காவில் ஏற்பட்ட நெருக்கடி நிலை தோற்றுவித்துள்ள சூழலைத் தமிழ்மக்கள் உள்நாட்டிலும், அனைத்துலக அரங்கிலும் தமக்குச் சாதகமாக பயன்படுத்தகூடிய நிலைமைகள் உள்ளன.

சிங்களத் தேசியவாதத்திடம் தமிழர் எதிர்ப்பு மட்டுமல்ல, இந்திய எதிர்ப்பு, மேற்குலக எதிர்ப்பு போன்றவையும் ஆழமாக வேரோடியுள்ளன. இக்குழப்பநிலை சிங்களத் தேசியவாதிகளிடம் மேற்குலக எதிர்ப்பையும் இந்திய எதிர்ப்பையும் வலுப்படுத்தும் நிலைமைகள் உள்ளன. இதேவேளை, சிங்களத் தேசியவாதிகள் சீனாவுடன் நெருக்கமான தொடர்பைப் பேண விரும்புவார்கள்.

இந்நிலை தமிழர் தரப்புக்குத் தரக்கூடிய வாய்ப்புகளை நாம் நழுவவிடாது பயன்படுத்த வேண்டும்.

தாயகத்தில் ஒரு வலுவான தலைமை தமிழ் மக்கள் அமைத்துக்கொள்வது, சிங்களத்தின் இனஅழிப்புக்கு அனைத்துலக நீதிகோரும் பொறிமுறையினை வலுப்படுத்துவது, தமிழ்நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இலங்கைத் தீவு தொடர்பாக இந்தியக் கொள்கையில் ஏற்பட வேண்டிய மாற்றம் குறித்த கருத்துருவாக்கத்தை மேற்கொள்வது, அனைத்துலக சிவில் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாகத் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படுவது போன்றவை குறிப்பிடக்கூடிய சில அவசியமான செயற்பாடுகளாகும்.

அன்பான மக்களே!

அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் தான் உள்ளன என்பது தெளிவாகும்.

உரிமைகளுக்காக விட்டுக் கொடுப்பின்றிப் போராடி எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்து வாழ்தல் ஒரு தெரிவு. இத் தெரிவில் வெற்றியடைவதற்கான நடைமுறைச் சாத்தியம் குறைவு என்று ஐயம் கொள்வோர் பலருண்டு.

மற்றைய தெரிவு சிங்கள இனவாதத்துக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ எமது அடிப்படைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழந்து, இறுதியில் சிங்களப் பெருந் தேசியத்துக்குள் காலப்போக்கில் கரைந்து போவது.

முதலாவது தெரிவில் நாம் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்கும் எதிர்ப்பு உணர்வினை தணியாமல் காத்து எமது போராட்டத்தைச் செவ்வனே பேணிக்கொள்ளும்வரை நாம் தோல்வியடைந்தவர்களாக போய்விட மாட்டோம். சரியானதொரு சந்தர்ப்பத்தில் வெற்றிக்கான வாய்ப்பும் போராட்டத்தைத் தளராது தொடரும்போது மட்டுமே கிடைக்கும்.

இரண்டாவது தெரிவில் தமிழ் மக்களுக்கு மிகவும் அவமானகரமான தோல்வியையே தேடித்தரும். எம்மால் எதுவும் முடியாது என்று சரணாகதியடையும் நிலைக்கு இட்டுச்செல்லும். சிங்கள மேலாதிக்கத்தை் இயல்பாக ஏற்றுக்கொண்டு அடிபணிந்து வாழும் இழிநிலைக்கு எம்மை இட்டுச் செல்லும். இந்நிலை ஏற்படின் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நிரந்தரமாகத் தோல்வியடைந்த மக்களாக மாறிவிடுவார்கள்.

இந்த இழிநிலை தமிழ் மக்களுக்கு ஏற்படாது காக்கும் காவல் தெய்வங்களாக எமது மாவீரர்கள் இருப்பார்கள் என்பது எமக்கு நம்பிக்கை தரும் விடயமாக இருக்கிறது.

தமிழ் மக்கள் ஒவ்வொருவரினதும் மனசாட்சியைத் தட்டியெழுப்பியவாறு மாவீரர்கள் எம்மை வழிநடத்துவார்கள். தமிழ் மக்களின் போராட்டம் வழிதவறிப் போகாதவாறு எமக்கான காப்பரணாக மாவீரர்கள் இருப்பார்கள்.

மாவீரர்களுக்கு நாம் செய்யும் வணக்கம் இவர்களது கனவுகளை நனவாக்க உழைப்பதாகத்தான் இருக்க முடியும் என்ற உணர்வுடனும் உறுதியுடனும் செயல்படுவோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு தனது மாவீரர் நாள் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here