எங்களுக்கான விடுதலையை நாங்களே வென்றெடுத்து கொள்கிறோம்- சுமதி விஜயகுமார்


நமக்கு எப்போதும் திருப்பங்கள் நிறைந்த கதைகள் தானே பிடிக்கும். அப்படி திருப்பங்கள் நிறைந்த ஒரு கதை தான் இது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டாள். இந்த வரியை படித்ததும் நமக்கு ஆச்சர்யமோ படபடப்போ வர போவதில்லை. பழகி போன விஷயங்களுக்கு அப்படி தான் இருக்கும். சரி அடுத்த வரிக்கு போவோம். அவள் கருவுற்றிருந்தாள் . இதுவும் பெரிய விஷயமில்லை . இதற்கு முன்பும் ஒரு முறை கருவுற்று கலைக்க பட்டது. இனி திருப்பங்களை பாப்போம் . அவள் வயது 15 . முதல் கருவை கலைக்க உதவியது அவளது தந்தை . இரண்டாம் முறை கருவுற்ற போதுதான் அந்த பெண்ணின் தாய்க்கு விஷயம் தெரிந்தது . தெரிந்ததும் காவல் நிலையம் சென்று விட்டார். அந்த பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது அவளது தந்தை .

இது செய்திகளில் ஒரு நாள் வந்தது. நாம் அனைவரும் நம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருந்தோம் . ரொம்ப பிஸி. hasgtag போட நமக்கு நேரம் இல்லை . குரல் கொடுக்கவும் நேரமில்லை. பெரியார் கூறுவார் ஆண்களால் பெண்களுக்கு எப்போதும் நன்மை நடக்காது என்று . அதில் எனக்கு சற்று உடன்பாடில்லாமல் இருந்தது . ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் அப்பா தரும் பாதுகாப்பை போல் வேறு எதுவும் இருக்காது என்று . நான் என் வாழ்க்கையை மட்டுமே வைத்து அப்படி நினைத்திருந்தேன். நிறைய அப்பாக்களுக்கு மகள்களை விடவும் உயர்ந்தது நிறைய இருக்கிறது . ஜாதி, பணம் , மானம் , மரியாதை ,etc . அப்பாக்களே அப்படி என்றால் மற்ற ஆண்களை என்னவென்று சொல்வது. உங்களுக்கு புகழ்வதற்கு மட்டுமில்லை ஒரு ஆணை திட்டுவதற்கும் பெண்களோ , பெண்களின் உறுப்புகளோ தான் தேவை படுகிறது. நிலம், நீர் போன்ற இயற்கைக்கு அடுத்து உங்களின் சொத்து பெண்கள்.

ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் கீழ் கண்ட தகுதிகள் வேண்டும் :

1. அவள் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவளாய் இருக்க கூடாது
2. பண பலம் அல்லது அரசியல் செல்வாக்கு இருக்க வேண்டும்
3. மிக முக்கியமாய் கதறி அழும் காணொளி வேண்டும், அப்போது தான் எங்களுக்கு புஜங்கள் துடிக்கும் கண்ணீர் வரும்.
4. இதுவும் முக்கியம், அரசியல் ஆதாயம் வேண்டும்
5. அப்புறம் ஒற்றை பாலியல் வன்முறையாக இல்லாமல் கூட்டாக இருந்தால் மொத்தமாக போராட வசதியாய் இருக்கும்.

மேற்கொண்ட அனைத்தும் சம்பவித்த நிகழ்வுதான் பொள்ளாச்சி வன்முறை . ஒரு ஒடுக்கப்பட்ட பெண்ணை ஒரு சாதாரண ஆண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதெல்லாம் இந்தியாவில் தினம் தினம் நடக்கும் நிகழ்வுகள்தான். அநாதை இல்லத்தில் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதும் இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. மற்ற சந்தர்ப்பங்களிலாவது பெண்களுக்கு தோள் கொடுக்க குடும்பம் இருந்தது. அன்று அந்த செய்தியை கேட்ட பொழுது அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

தேவையறிந்து, நேரம் இருந்து வெளிவரும் உணர்வுகளும் ஒரு உணர்வா ? ஆண்களே, எங்களை அடிமைப்படுத்தியவர்கள் நீங்கள். எங்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் அது ஒட்டுமொத்த ஆண் சமூகத்திடம் இருந்து தான். வலைத்தளங்களில் பெண்ணுக்கு ஆதரவாய் குரல்கொடுத்து விட்டு,பெண்களுக்கு தெரியாமல் விலகும் ஆடைகளை கண்கொட்டாமல் பார்க்கும் வர்க்கம் தான் நீங்கள். விலகி நில்லுங்கள், எங்களுக்கான விடுதலையை நாங்களே வென்றெடுத்து கொள்கிறோம்.

சுமதி விஜயகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here