ஊரை மிரட்டும் ரவுடிகள் ,வேடிக்கை பார்க்கும் காவல்துறை.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள கிராமம் ஆலிச்சிக்குடி. இந்த ஊராட்சியின் துப்புரவு பணியாளராக உள்ளவர் திருமதி மு.தனக்கோடி [35]. இவரின் கணவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு இரு மகன்களும், பதினோறாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.
சென்னையை கொரோனா ஆட்டிப்படைத்தாலும், தனது குடும்பக் கடன் மற்றும் வறுமை காரணமாக அங்கேயே கூலி வேலை செய்து வருகிறார், தனக்கோடியின் கணவர்.
அவர் சென்னையிலிருந்து ஊருக்கு வந்து தன்னை மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் வீட்டிற்குள் பதுங்கியிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கும் யாரோ தகவல் தந்துள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறை, சுகாதாரத் துறை, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மே 1, 2 ஆகிய இரு நாட்களிலும் துப்புரவு பணியாளரிடம் செல்பேசி மூலம் விசாரித்துள்ளனர். தனது கணவர் ஊருக்கு வரவில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்துள்ளார்
மறுநாள் காலை கிராம உதவியாளர், துப்புரவு பணியாளரின் வீட்டிற்கு வந்து “காட்டில் பதுங்கியிருக்கும் உன் வீட்டுக்காரனுக்கு ராத்திரி நீ சாப்பாடு கொடுத்துட்டு வந்தன்னு எங்களுக்கு தகவல் வந்துருக்கு, மரியாதையா அவன போலீசுகிட்ட போவ சொல்லு” என்று மிரட்டியுள்ளார்.
தனது கணவர் பற்றி வதந்தி கிளப்பிவிடும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துப்புரவு பணியாளர் காவல் நிலையத்தில் 02.05.2020 அன்று புகார் அளித்துள்ளார்.
அன்று நள்ளிரவு ஊராட்சி மன்றத் தலைவர் மகனின் அடியாட்களில் சிலர் அவர் வீட்டின் ஜன்னல் வழியே லைட் அடித்து பார்த்துள்ளனர். 03.05.2020 அன்று நண்பகல் 11.00 மணியளவில் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய முதுநிலை காவலர், சுகாதார ஆய்வாளர், கிராம உதவியாளர் ஆகியோர் துப்புரவு பணியாளரின் வீட்டை சோதணை செய்தனர். பின்னர் அவரின் கணவரோடு செல்பேசியில் பேசி விட்டு, தமக்கு வந்த தகவல் தவறானது என்பதை காவலர் உறுதி செய்து கொண்டார்.
அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் பெ.பழனிவேல் [45] ”உன் வீட்டுக்காரன பத்தி நாந்தாண்டி போலீசுக்கு தகவல் கொடுத்தேன். உனக்கு என்ன தைரியம் இருந்தா போலீசுல ரிப்போட்டு குடுப்ப”, என்று அசிங்கமாக தனக்கோடியை திட்டியுள்ளான். முழு ஊரடங்கின் போதே தன்னோடு வந்த அடியாட்களோடு கூட்டம் கூடி அவரையும், அவரின் பிள்ளைகளையும் காவலர் முன்பே சரமாரியாக கட்டைகளால் அடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் அன்றே அவர் காவல் துறையிடம் அவர் புகார் அளித்தார்.
ஆனால், ரவுடி பழனிவேலுவின் தூண்டுதலில், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கிராம உதவியாளரை துப்புரவு பணியாளர் மீது பொய் புகார் கொடுக்க வைத்து வழக்குப் போட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தராமலும், அவரின் அனுமதி பெறாமலும் இதைச் செய்துள்ளார், கிராம உதவியாளர்.
தான் கொடுத்த புகார் பொய் என கிராம உதவியாளர் பேசிய பேச்சின் ஒலிப்பதிவும் காவல் துறை, வருவாய் துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியாருக்கும் தரப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர் மீது வழக்கு எதுவும் போட வேண்டாம் என்றும், மிரட்டி மட்டும் அனுப்புமாறும் தான் கூறியும் போலீசு அதன் புத்தியை காட்டி விட்டதாகவும் கிராம உதவியாளர் செய்த ’அற்புத அர்ச்சனையும்’ கூட அந்தப் பதிவில் உள்ளது!
தன் மீதான தாக்குதல் பற்றி சார் ஆட்சியரிடமும் துப்புரவு பணியாளர் மறுநாள் [04.05.2020] புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த இரு வழக்குகளையும் திரும்பப் பெறாவிட்டால் உன்னை வேலையிலிருந்தே எடுத்து விடுவேன் என்று பினாமி ஊராட்சி தலைவனான பழனிவேல் சார் ஆட்சியர் அலுவலகத்திலேயே மிரட்டியுள்ளான். அது போன்றே வட்டார வளர்ச்சி அலுவலர் S.A.சுந்தரம் துப்புரவு பணியாளரை எந்தக் காரணமும் சொல்லாமல் 04.05.2020 அன்றே பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
இப்போது மட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாகவே இக்கிராமத்தில் இந்த ரவுடிக்கும்பல் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது.
2018- ம் ஆண்டு தாங்கள் சொல்கிறபடி கேட்கா விட்டால், ஊரில் இனி கோவில் திருவிழாவையே நடத்த விட மாட்டோம் என்று கலகம் செய்து, கரகாட்டத்தை தடுத்து, சாமி ஊர்வலத்தையே பல மணி நேரம் நிறுத்தி வைத்தனர்.[இது பற்றி விழாக் குழுவினர் இருவர் அளித்த வாக்குமூலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.]
தனது உறவுக்கார பெண்ணை ஒரு இளைஞர் காதலித்தார் என்பதற்காக அவ்விளைஞரை தூக்கிச் சென்று தாக்கி அவரையும், அவரின்  குடும்பத்தாரையும், உறவினர்களையும் ஆபாசமாக திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்தனர். அந்தப் பேச்சுகளின் ஒலிப்பதிவு நகலோடு காவல் துறைக்கு புகார் தந்தும் அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை.
மேற்கண்ட சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர், அடுத்த ஒரு வாரத்தில் பெ.பழனிவேலுவின் செங்கல் சூளையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இயற்கைக்கு புறம்பான இந்த மரணத்தைப் பற்றி காவல் துறைக்கு தெரிவிக்காததுடன், மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற சடலத்தை பிரேத பரிசோதணை செய்வதையும் தடுத்த பெ.பழனிவேல் வீட்டிற்கு கொண்டு வந்து எரித்து விட்டனர். இதுபற்றி காவல் துறைக்கு புகார் அனுப்பிய நபரை மிரட்டிய காவல் துறை, அந்த இளைஞர் செங்கல் சூளையில்தான் இறந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி, வழக்கை காவல் துறை முடித்து விட்டது.
ஆறு மாதம் கழித்து இளைஞரின் மர்ம மரணம் பற்றி புகார் அனுப்பியவருக்கு பெ.பழனிவேல் தனது வழக்கறிஞர் மூலம் அனுப்பிய வழக்கறிவிப்பில், அந்த இளைஞர் தனக்கு சொந்தமான இடத்தில்தான் தற்கொலை செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாகவும் மறுவிசாரணை செய்யுமாறு புகார் அளித்தும் காவல் துறை கண்டு கொள்ளவில்லை.
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது நடந்த விளையாட்டுப் போட்டியின் போது ஊராட்சி மன்றத் துணை தலைவரை இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை தாக்கிய ரவுடிகள், ”எங்களை எவன் இந்த ஊரில் எதுத்தாலும் எல்லாருக்கும் இப்படிதான் ஒத விழும்”, என்று பகிரங்கமாக ஆயுதங்களுடன் ஊரில் திரிந்தனர். இதுவும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு காவல் துறைக்கு புகாருடன் இணைத்து தரப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது சென்னையில் இருந்த, இளைஞரின் மரணம் பற்றி புகார் அனுப்பியவரின் வீட்டிற்கு சென்ற பெ.பழனிவேலுவின் அண்ணன் பெ.முருகவேலுவும், [இவர் மத்திய கலால் துறையில் வேலை செய்கிறார்] ரவுடிகள் இருவரும் அவரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தி தனது குடும்பத்தினரை மிரட்டிய ரவுடிகள் மீது அவர் ரயில் பயணத்தின் போதே இணைய வழியில் புகார் அளித்தும் வழக்கம் போலவே காவல் துறை கண்டு கொள்ளவில்லை.
மேற்கண்ட குற்றச் சம்பவங்கள் மட்டுமல்ல, மேலும் பல சம்பவங்கள் தொடர்பான வீடியோ, ஆடியோ, எழுத்துப் பூர்வமான ஆதாரங்களுடன் புகார் அளித்தும் பெ.பழனிவேல் பணக்காரன், பிரபல அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய தோழன், தமிழக காவல் துறை உயர் அதிகாரி ஒருவரின் உறவினன் என்பதால் தங்களை எவனும் எதுவும் செய்ய முடியாது என்று கூறிக்கொண்டு திரிகிறது இந்த ரவுடிக் கும்பல்.
ஆரம்பத்தில் விசிக கட்சியோடு நெருக்கமாக இருந்த வரை அடக்கி வாசித்த இந்தக் கும்பல், அந் நெருக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டது. அதற்கு மாறாக தி.மு.கவின் பிரபல அரசியல் வாதியோடு அட்டை போல் ஒட்டிக்கொண்டு, அவருடன் நெருக்கமாக இருப்பதை வெளி உலகுக்கு காட்டிக் கொள்ள, அவருடன் தாங்கள் எடுத்துக் கொள்ளும் புகைப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது. தனது தங்கையின் திருமணத்திற்கு அவரை தனது வீட்டிற்கே வரவழைத்து அந்த பிரபல அரசியல்வாதியின் கட்சியில் பாரம்பரியமாக இருப்பவர்களையே ஆச்சரியத்திலும், மிரட்சியிலும் ஆழ்த்தியது.
அந்த பிரபல அரசியல் வாதியோடு எப்போது இக்கும்பல் நெருக்கமானதோ, அப்போதிலிருந்தே, இவர்களின் சொத்து மதிப்பு மட்டுமல்ல, சமூக விரோத செயல்களும் பன்மடங்கு பெருகிவிட்டது.
மேலே பட்டிலிடப்பட்டுள்ள இவர்களின் அனைத்து குற்றச் சம்பவங்களும், அந்த அரசியல் வாதியோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்புக்கு பின்னர் செய்தவைகள்தான்.
தமிழகத்தில் பல முற்போக்காளர்களால் மதிக்கப் படுபவரும் அதனாலேயே பார்ப்பன பாசிச கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாக்க படுபவருமான அவர், இந்தக் கும்பலின் குற்றப் பின்னணியை தெரிந்து கொண்டுதான் தன்னோடு அவர்களை அவர் நெருக்கமாக இருக்க  அனுமதித்திருக்கிறாரா? இல்லை, அப்படி இருக்க முடியாது என்றே நாமும் நம்புவோம்!    
மேல் சாதிகளிடம் வளைந்து, நெளிந்து நிற்கும் இந்தக் கும்பல், அதற்கு நேர் மாறாக, தனது விருப்பத்திற்கும்,செயலுக்கும் மாறாக சிந்திக்கும், செயல்படும் தனது சாதிக்காரன் எவனும் ஆலிச்சிக்குடி கிராமத்தில் வாழமுடியாது என்று கொக்கரித்துக்  கொண்டிருக்கிறது.
இந்தக் கும்பலைப் போன்றுதான், விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுவின் உறுப்பினராக இருந்தவனும், அவனின் அடியாட்களும்  தங்களுக்கு மாறான கருத்துடைய தனது சாதிக்காரர்களை பல ஆண்டுகளாக போலீசு மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு ஒடுக்கு முறைக்கு ஆளாக்கி வந்துள்ளனர்.இது பற்றி பொது மக்களில் பலரும் பல ஆண்டுகளாக புகார்களை அனுப்பியும் கூட, அவன் ஆளும் கட்சிக்காரன், ஒன்றியக்குழு உறுப்பினர், மந்திரிக்கு நெருக்கமானவன், புதுப்பணக்காரன் என்பதால் அவன் வீசியெறிந்த எலும்புத்துண்டை கவ்விக் கொண்டு விசுவாசமாக வாலாட்டினார்கள் அரசு அதிகாரிகள்!. விளைவு பத்தாம் வகுப்பு மாணவியை, அந்தக் கொடூரகும்பல் கோரமாக உயிரோடு துடிக்க, துடிக்க எரித்துக் கொன்றதுதான் நடந்தது.
அதற்கு பின்னால் அந்தக் கயவர்களை ஆளும் அதிமுக தனது கட்சியிலிருந்து நீக்கியது. தமிழக அரசோ போன உயிருக்கு விலையாக அச்சிறுமியின் பெற்றோருக்கு பணத்தை  வீசியெறிந்தது! போலீசோ அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது. இதனாலெல்லாம் வாழவேண்டிய வயதில் வதைக்கப்பட்ட அந்த இளம் தளிரின் உயிர் திரும்ப வந்துவிடுமா? பெற்றவர்களின் சோகமும், துடிப்பும் இல்லாமல்தான் போய்விடுமா?
ஆலிச்சிக்குடியும் மற்றுமொரு விழுப்புரம் சிறுமதுரையாக மாறுவதற்குள் தமிழக காவல்துறை விழித்துகொள்ளுமா? அல்லது வழக்கம் போல எழவுக்குத்தான் வருமா?      
நீர்வள மேம்பாட்டு ஆதார சங்கம், விருத்தாசலம்