வனத்துறை முட்டுகட்டையால் கிடப்பில் போடபட்ட சாலையை சீரமைக்க அமைச்சர்கள் வராததை கண்டித்து ரோட்டில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களால் ஊரப்பாக்கம் அருகே நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநில ஊரக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 14கி.மீ. கொண்ட ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணைகிறது. இச்சாலையில், காட்டூரிலிரிந்து அருங்கால் வரையிலும், இதுபோல் நல்லம்பாக்கத்திலிருந்து ஊனைமாஞ்சேரி கிரஷர் பகுதி வரையிலும் வனத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளதால் சாலை அமைக்கும் பணி கடந்த 19ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலை குண்டும், குழியுமாகவும், புழுதி நிறைந்த சாலையாகவும் மாறிவிட்டது. இத்தடத்தில் இயங்கி வந்த வழித்தட எண் 60கே, 60டி என்ற தமிழக அரசு பேருந்துகளும், 55டி என்ற இரண்டு மாநகர பேருந்துகளும், எஸ்5 என்ற இரண்டு மினி மாநகர பேருந்துகளும் சாலையின் சீர்கேட்டினால் கடந்த 15ஆண்டாக பஸ் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காரனைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், நல்லம்பாக்கம், குமிழி, மேட்டுப்பாளையம், அம்மணம்பாக்கம், ஒத்திவாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், கர்ப்பிணி பெண்கள், மாற்று திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர், வனத்துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர், எம்பி, எம்எல்ஏ முதல் மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயணில்லை. இந்நிலையில், வனத்துறையின் முட்டுகட்டையால் கிடப்பில் போடபட்ட ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையை சீரமைத்துதர மேற்படி சாலைக்கு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் நேற்று 19ம் தேதி நேரில் வர வலியுறுத்தியும், வர மறுக்கும்பட்சத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தலைமையில் மேற்படி சாலையில் மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்துவோம் என்றும் கடந்த 9ம் தேதி தமிழக முதல்வர், அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகளுக்கு பதிவு தபால் மூலம் பொதுமக்கள் மனு அனுப்பினர். ஆனால் மேற்படி சாலைக்கு அமைச்சர்கள் உட்பட அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை மேற்படி சாலைக்கு திரண்டு வந்து கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து ஆகியவற்றை சிறைபிடித்து சாலையில் வாழை இலை போட்டு மண் சோறு சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலரிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், மேற்படி சாலையை சீரமைக்க பலமுறை மனு கொடுத்தும், பல்வேறு போராட்ங்களை நடத்தியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடுவோம். மேலும் வரவுள்ள தேர்தல்களை புறக்கணிப்போம். ஓட்டு கேட்டு யாராவது ஊருக்குள் வந்தால் ஓட, ஓட விரட்டுவோம் என்றனர். பின்னர் இதுபற்றி உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதாக போலீசார் கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று இரண்டு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.