ஊரப்பாக்கம் அருகே ஐயஞ்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூட வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


ஊரப்பாக்கம் அருகே உள்ள ஐயஞ்சேரியில் சிமெண்ட் கடை அமைப்பதாக கூறி புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூட வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறுகையில், சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், ஊரப்பாக்கத்தில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கொலை, வழிபறி, கடை மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, திருட்டு, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், சிமெண்ட் கடை அமைப்பதாக கூறி மக்கள் குடியிருக்கும் பகுதி என்று கூட பார்க்காமல் ஐயஞ்சேரி-விபிகே நகர் பிரதான சாலையில் உள்ள மதுரை மீணாட்சிபுரம் என்ற பகுதியில் காஞ்சிபுரத்தில் உள்ள (4371) என்ற அரசு டாஸ்மாக் கடையை கடந்த 15ம் தேதி முதல் திறந்து வைத்துள்ளனர். இதன் அருகில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கோயில்கள், சர்ச் போன்றவை உள்ளது. இவை அனைத்திற்கும் சென்றுவர வேண்டும் என்றால் இந்த சாலையில்தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உட்பட பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போக்குவரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே இப்பகுதியில் தலை துண்டித்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோல் 4பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை சமூக விரோதிகள் கையை பிடித்து இழுக்கின்றனர். மேலும் இப்பகுதியில் சிசிடிவி கேமிரா இல்லாத காட்டுப்பகுதி என்பதாலும், தெரு மின் விளக்கு வசதி இல்லாததாலும், பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் நாங்கள் தினமும் உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடன் சென்று வருகிறோம். இந்நிலையில், மேற்படி பகுதியில், சிமெண்ட் கடை அமைப்பதாக கூறி பெயர் பலகை மற்றும் கடை எண் இல்லாமல் டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளதால் மேலும் சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேற்படி கடையை மூட வலியுறுத்தி தொடர்ந்து இரண்டு நாட்கள் பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடம் முறையிட்டும் பயணில்லை. எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் பொது மேலாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் மேற்படி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி விரைவில், ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here