ஊரடங்கு காலகட்டத்தில் பெண்களின் மீது நடத்தப்படும் குடும்ப வன்முறை….அஸ்வினி கலைச்செல்வன்.

மார்ச் 24-ம் தேதி இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 130 கோடி மக்கள் வீட்டுக்குள் முடங்க அறிவுறுத்தப்பட்டனர். தமிழ்நாடும் அது முதற்கொண்டு ஊரடங்கினை கடைபிடித்து வருகிறது.
இந்த ஊரடங்கினால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் கூலித்தொழிலாளிகளும், நடுத்தர வர்க்க குடும்பங்களும் என்றால் அவர்களையும் தாண்டி பாதிக்கப்படுபவர்கள் அவர்கள் வீட்டு பெண்களே..!

எல்லாவகையான சமூகசீர்கேடும் பெண்களைத்தான் அதிகமான பாதிப்புக்குள்ளாக்கும் என்ற உண்மைக்கேற்ப இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பெண்கள்,குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. குடும்பத்தினர் அதிகம் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் Domestic Violence என்கிற ‘குடும்ப வன்முறை’ க்கான  சாத்தியப்பாடுகள் பெருகியிருக்கின்றன.

வழக்கமான காலகட்டத்தில் கணவர் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளி ,கல்லூரிக்கும் சென்றுவிட்ட பின் குடும்ப பெண்களுக்கு சிறிது ஓய்வும், பொழுதுபோக்க அவர்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்க என்றும் சிறிது நேரம் கிடைக்கும்.ஆனால் இப்போது அனைவரும் வீட்டில் இருப்பதால்  குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே நேரம் சென்றுவிட , பெண்களுக்கு வேலையின் பளுவும் அதிகரித்திருக்கிறது. அதே போல் பெண்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை பார்க்க கணவரும் பிள்ளைகளும் அனுமதிக்காத சூழலில் அவர்களுக்கு இதுகாறும் கிடைத்துக்கொண்டிருந்த  சுதந்திரமும் பறிபோய்விட்டிருக்கிறது. பெண்களின் சுதந்திரத்தின் மீதான ஆக்கிரமிப்பு என்பதும் ஒருவகை வன்முறைதான்.

தனியார் நிறுவனங்கள்,பள்ளி, கல்லூரிகளுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்கள் ஓரளவு பொருளாதார ரீதியான சுதந்திரத்தையும், சுயமதிப்பையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். வேலையின் மும்முரத்தில் குடும்ப பிரச்சனைகளை மறந்தும் இருக்க முடியும். சிலசமயம் குடும்ப வன்முறையிலிருந்து தப்பித்தும் கொள்ளவும் வாய்ப்பிருக்கும்.( அவர்களின் சம்பளம் கணவன்மார்களுக்கு முக்கியம் என்பதால்). தங்கள் திறமை,முன்னேற்றம் போன்றவற்றில் செலுத்தும் கவனம், பெண்களின் தன்னம்பிக்கையையும் வளர்த்தெடுக்கும்.ஆனால் ஊரடங்கில் தனியார் நிறுவனங்கள்,பள்ளி,கல்லூரிகள் ஊதியத்தை நிறுத்தக்கூடாது என குளறுபடியான ஓரு அறிவிப்பை அரசு கொடுத்திருந்தாலும் பல தனியார் நிறுவனங்கள்,பள்ளி, கல்லூரிகள் ஊதியத்தை நிறுத்திவிட்டன. ஊதியத்தை இழந்த பெண்கள் குடும்பத்தில் தங்கள் மரியாதையையும் இழந்து நிற்கின்றனர். திடீரென்று தோன்றியிருக்கும் பணநெருக்கடியும்,அதனால் ஏற்படும் அழுத்தமும் பெண்களின் மீதான அடக்குமுறையாக பல குடும்பங்களில் உருவெடுக்கின்றன. வேலைக்கு செல்லாத ,சென்ற பெண்கள் அனைவரின் நிலையும் ஏறத்தாழ ஒரே நிலையாகத்தான் இன்று மாறியிருக்கிறது.

கூலித்தொழிலாளர் ஒருவரை அவர் மனைவி கல்லைப் போட்டு கொன்ற சம்பவத்தை செய்தியில் பார்க்க முடிந்தது.அதில் கணவன் வேலையில்லாத சமயத்தில் கூட குடிப்பதற்கு பணம் வேண்டும் என்று அவர் மனைவியை பலமுறை தாக்கியிருக்கிறார். பொறுத்து, பொறுத்து பார்த்த மனைவி கடைசியில் பொறுமை இழந்து இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். குடும்பத்தை நடத்தவே கடினப்படும் இந்தச் சூழலில் தான் குடிப்பதற்காக குடும்பத்தையே நாசம் செய்திருக்கிறார் அந்த குடிமகன்.இந்த குற்றத்திற்கான முதல் குற்றவாளி என்னவோ அரசுதான். இந்த டாஸ்மாக் சாராயக்கடை திறக்கப்பட்ட பின் குடும்ப வன்முறையானது பலமடங்கு அதிகரித்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்தாலும் சாராய வருமானம்தான் முக்கியம் என நினைப்பவர்கள் ஆட்சி செய்கையில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது.

பெண்கள் குடும்ப வன்முறைக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்க குழந்தைகளும்,சிறுமிகளும் ஆணாதிக்க சமூக வன்முறைக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ. மே மாதம் 10-ஆம் தேதியன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோா் தீ வைத்ததில், சிறுமி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ அளித்த மரண வாக்குமூலத்தில்,  வீட்டில் இருந்த தனது கைகளை கட்டிப்போட்டு உடலில் தீ வைத்து கொளுத்தியது அந்த பகுதியைச் சேர்ந்த முருகன், யசோகம் என்ற கலியபெருமாள் என தெரிவித்ததையடுத்து சம்பவம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது ஏம்பல் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த ஒரு தம்பதியரின் 7 வயது மகள் ஜெயப்பிரியா, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாள்.திடீரென காணாமல்போன குழந்தை கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சடலம் உடல் முழுவதும் காயங்களோடு கிடத்தாள். குறிப்பாக தொடைப்பகுதியில்  காயங்கள் நிறைந்து காணப்பட்டது.7 வயதே நிரம்பிய குழந்தையை மிக கொடுமையாக பலாத்காரம் செய்து, அடித்தும் கொன்றுள்ளான் அந்த கொடியவன்.
மோப்ப நாயின் உதவியோடு ராஜேஷ்(29) கைது செய்யப்பட்டான்.

ஓரத்தநாடு அருகே தாயை இழந்திருந்த 14 வயது சிறுமியை சொந்த தகப்பனும், தாத்தனும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதில் அந்த சிறுமி கர்ப்பம் தரித்துவிட்டாள்.பின்னர் புகாரளிக்கப்பட்டதில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குடும்பத்தினர், அண்டை வீட்டார், சமூகம், காவல்துறை, அரசு போன்ற அனைத்து வடிவங்களும் பெண்களை ஒடுக்கும்போது அவர்கள் எங்கேதான் போவார்கள்? என்னதான் செய்ய வேண்டும்?

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கான தீர்வு அவ்வளவு எளிதாக பெறப்பட கூடியதல்ல. சமுகத்தின் உச்சங்களில் இருக்கும் பெண்கள் கூட ஆண்களால் பாதிப்புகளை சந்தித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.சமூக பிற்போக்கு சிந்தனையும், மூடநம்பிக்கையும், ஆதிக்க மனோபாவமும் புரையோடிக் கிடக்கும் ஆணாதிக்கத்தின் கைப்பாவையாக சமூக கட்டமைப்பு நீடிக்கும்வரை இந்த நிலைகள் மாறாது.குடும்பம் பெண்களை பெருமைப்படுத்தவா அல்லது சிறைப்படுத்தவா? என்பதை பற்றியெல்லாம் விவாதங்கள் எழவேண்டும். புனிதம்,பெருமை, கவுரவம்,கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்கள் அடிமைகளாக்கப்படுவதை, ஒரு பண்டமாக்கப்படுவதை எதிர்த்து நாம் போராட வேண்டும். மனிதகுல நன்மைக்காகவும் ,வளர்ச்சிக்காகவும் ஆணாதிக்கத்தை, ஆணாதிக்க சமுகத்தை எதிர்த்து ஓரு உக்கிரமான போர் புரிவது இன்று தவிர்க்க முடியாத ஒரு கடமையாகும்.

அஸ்வினி கலைச்செல்வன்.

குறிப்பு:-
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் இந்த பெண்களுக்கான சிறப்பு மையத்தின் தலைமை அலுவலகத்தில், திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பாதிக்கப்பட்ட பெண்கள் அணுகலாம்.
சிறப்பு மையத்திற்கு, காவல்நிலையங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் என அனைத்து தரப்பில் இருந்தும் வழக்குகள் பரிந்துரைக்கப்படும்.

பெண்கள் சிறப்பு மையத்தை தொடர்பு கொள்ள: 9498336002