ஊரடங்கும்,உயிர்வலியும்.- விஷ்ணுராம்.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெறும் ஒரு  நாள் முன்பாக இருபத்தொரு நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பினால் சொந்த ஊருக்கு திரும்ப செல்ல முடியாமல் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில்  பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்கு சுமார் 300 முதல் 500 கிலோமீட்டர் வரை நடந்தே செல்ல முயன்று ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். உணவு இல்லாமலும் அத்தியவசிய பொருட்கள் வாங்குவதற்கு சிறிதும் பணம் இல்லாமலும் பல பேர் பட்டினியால் இறந்து விட்டனர். கொரொனா நோய்த்தொற்று அன்றி அரசு பிறப்பித்த இந்த ஊரடங்கு உத்தரவு மட்டும் சுமார் 50 பேரை பல்வேறு காரணங்களால் உயிர் பலியாக்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த இவ்வேளையில் அரசாங்கம் வெகுமக்கள் பாதிக்காதவாறு திட்டங்களைத் தீட்டி இருக்க வேண்டும். ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்கள் அன்றாட உணவுக்கும் அடிப்படைத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகளும், கடலுக்கு உள்ளே செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்களும், வேலை இன்றி தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களும், ஊரடங்கினால் வேலையின்றி தவிக்கும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களும், போதிய வருமானம் கிட்டாமல் பல சிக்கல்களுக்கு உள்ளாவார்கள். சிறுகுறு தொழில் நிறுவனங்களும், வருமானமின்றி தங்களுடைய தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க தவிக்கும் பெரு நிறுவனங்களும் கடந்த ஒரு மாதமாக பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றது.

அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை கண்டிக்கும் வகையிலும் அதனிலிருந்து  நிவாரணம் கிட்ட உச்சநீதிமன்ற கதவை பொதுநல வழக்கறிஞர்கள் தட்டினார்கள். ஆனால் கிடைத்ததோ பெரும் ஏமாற்றம்தான். நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் இவ்வேளையில் மத்திய அரசு செய்யத் தவறிய அல்லது செய்ய மறுத்த சில காரியங்களால் கோடிக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதை கண்டிக்க வேண்டிய பொறுப்பில் நீதிமன்றமும் நீதிபதிகளும் இருக்கிறார்கள் .ஆனால் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நடந்து கொண்ட நிலை நீதித்துறைக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலைநகரம் மற்றும் முக்கிய நகரங்களில் சிக்கிய அண்டை மாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் மற்றும் குறைந்தபட்ச சம்பளம் தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பல பொதுநல வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அதனை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே  “தொழிலாளர்களுக்கு உணவு வழங்கியது போதாதா? சம்பளம் எதற்கு?” என்ற கேள்வி எழுப்பினார். இக்கேள்வி பல தரப்புகளில் பலரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. வெறும் உணவு மட்டும் அளித்தால் போதும் உயிர் வாழ்ந்திட முடியும் என நினைத்து ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேசியது நீதிமன்றத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. உணவு அன்றி உடல் நோயுற்றவர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கவும், குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும், தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தின் செலவிற்கும் உணவு பொருட்கள் வாங்குவதற்கும் குறைந்தபட்ச பணமாவது தேவைப்படும் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் இன்று வாயை மூடிக்கொண்டு தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

கொரொனாவினால் இன்றைக்கு உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் நூற்றுக்கணக்கான நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது கொரொனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, ஐக்கிய நாடு ஆகியவை வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன. அவை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாலும் தன் மக்களுக்கு அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சித்து வருகிறது. ஆனால் 138 கோடி என்ற பெரும் மக்கட்தொகையை கொண்டுள்ள இந்தியாவில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு வழங்கவிருக்கும் மத்திய அரசாங்கம் அறிவித்து இருக்கும் ஆயிரம் ரூபாய் எவ்விதத்திலும் அவர்கள் பசியை முழுமையாக போக்க போவதில்லை.

கொரொனாவில் இருந்து மக்களை பாதுகாக்க நினைக்கும் அரசாங்கம் அவர்களை பசி பட்டினியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் பல ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கும் பல தொழிற்சாலைகளுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு பெரும் சுமையாக அமைந்துள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் வேளையில் மே 3 வரை நீட்டிப்பு செய்யப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடியுமா என்பது ஐயமாக இருக்கிறது. இவ்வேளையில் ஊரடங்கு உத்தரவு நீடித்தால் அது பல தொழிற்சாலைகளுக்கும் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரும் துன்பத்தை வழங்கப் போகிறது. இதை எதிர் கொள்வதற்கு பல மாநிலங்களில் பல மாவட்டங்களில் உள்ள தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் வங்கி கடன்வட்டிகளை மூன்று மாதத்திற்கு தள்ளுபடி செய்ய மற்றும் ஊழியர் வருங்கால வைப்பிலிருந்து தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும்  தொழிலாளர்களுக்கு  குறைந்தபட்ச  நிதி வழங்குவதற்கும் கட்டுப்பாடுகளோடு தொழிற்சாலைகளையும் தொழில்களையும் இயங்குவதற்கு  அனுமதி வழங்கவும்  என பல கோரிக்கைகளை விடுத்துள்ளனர் அவர்களை பரிசீலித்து முக்கியமான கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றி மக்களை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களுக்கு தடையின்றி விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அளித்த அனுமதி நாள் விவசாயிகளின் நிலைமை ஓரளவுக்கு எப்பொழுதும் போல் இயங்குகிறது. எனினும் பூ, வாழை இலை, பருத்தி என பல பணப்பயிர்களை விளைவித்து விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். ஊர் முடங்கிக் கிடக்கும் இந்த நிலையை பயன்படுத்தி பல இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் உற்பத்தியை மிகக் குறைவான விலைக்கு வாங்கி அவைகளை ஐந்து மடங்கு, பத்து மடங்கு விலைக்கு விற்கிறார்கள். வருமானம் இல்லாமல் அவதிப்படும் ஏழைகளுக்கு இது மேலும் பெரும் சுமையாக விழுகிறது இதனை அரசாங்கம் நேரடியாக தலையிட்டு கொள்முதல் மற்றும் விற்பனை அரசாங்கமே நடத்தி விவசாயிகளுக்கு நியாய விலையையும் நுகர்வோருக்கு குறைந்த விலைகளில் உணவுப் பண்டங்களையும் வழங்க வேண்டும்.

ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் கொரொனாவை வென்றுவிட முடியாது என பல நிபுணர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். அதேபோல் உலகநாடுகள் தன்னுடைய பொருளாதாரம் முடங்கி விடக்கூடாது என்பதற்காக முக்கிய தொழில்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது .அதே போல் இந்தியாவும் மிகுந்த கட்டுப்பாடு, விதிகள் மற்றும் விழிப்புணர்வோடு தொழில்களை இயக்க அரசு அனுமதி வழங்கி மக்களை கொரோனாவிடமிருந்தும் வறுமையிலிருந்தும் மீட்பதை பற்றி ஆக்கபூர்வமான வழிகளில் முயற்சிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here