உள்ளாட்சி தேர்தல் – வாக்காளராய் இருப்பது கடமை! வேட்பாளராவது திறமை!! – ராஜகுரு.


ஊரகப்பகுதியில் உள்ள கிராம ஊராட்சியில் வாக்காளராக இருப்பதை உறுதி செய்த பிறகு, தேர்தலின் போது வாக்களிப்பதோடு நம்முடைய கடமையை முடித்துக் கொள்வது,சமூக அக்கறையுள்ள ஒருவருக்கு போதுமானதல்ல.

வேட்பாளராக போட்டியிட்டு, உள்ளாட்சி பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஊரக மக்களுக்கு தலைமையேற்று செல்ல தயாராக வேண்டியது மிகவும் அவசியம். சரியான நபர்கள் ஒதுங்கிக் கொள்வதால்,தவறான நபர்களால் உள்ளாட்சி பதவிகள் இட்டு நிரப்பப்படுவது காலம்காலமாக நடந்தேறி வருகிறது. வெற்றிடங்கள் சாத்தியமில்லை என்பதால் அவற்றை தென்றலால் மட்டுமல்ல புயலாலும் நிரப்ப முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.
ஊரகப்பகுதிக்கான உள்ளாட்சி, கிராம ஊராட்சி,வட்டார ஊராட்சி எனப்படும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு உடையது இந்த மூன்றடுக்கின் 4 பதவிகளுக்கு மட்டுமே நேரடித் தேர்தல் நடத்தப்படுகிறது.அதாவது கிராம ஊராட்சியின் ஒவ்வொரு வாக்காளரும் உள்ளாட்சி தேர்தலின் போது அந்த குறிப்பிட்ட பதவிகளுக்கு தலா ஒன்று வீதம் வாக்களிக்கிறார்.
அவை வருமாறு:-
1.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்
2.ஊராட்சி தலைவர்
3.ஒன்றிய வார்டு உறுப்பினர்
4.மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
மேற்கூறிய 4 பதவிகள் தவிர பிற அனைத்து உள்ளாட்சி பதவிகளும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படும் அதாவது நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர் தேர்தல்கள் கட்சி சார்பற்றதாகவே நடக்கும் .கட்சி சார்பான வேட்பாளர்களும் கட்சி சின்னங்களும் அனுமதிக்கப்படுதில்லை. போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சுயேட்சையாகவே கருதப்படுவர் இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுயேட்சை சின்னங்களின் பட்டியலில் இருந்தே இவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.
ஒன்றிய வார்டு மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது. கட்சி சின்னங்கள் அனுமதிக்கப்படும் சுயேட்சைகளும் போட்டியிடலாம்.
மேற்கூறிய 4 பதவிகளுக்கான தேர்தல் தொடர்பான பொது விதிமுறைகள் வருமாறு :-

1.ஒரு பதவிக்கு போட்டியிடும் நபர் அதே நேரத்தில் வேறு எந்த பதவிக்கும் போட்டியிடக்கூடாது.
2.சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டே உள்ளாட்சி தேர்தலில் ஏதேனும் ஒரு பதவிக்கு போட்டியிட முடியும்.
3.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளராக இருக்க வேண்டும்.
கிராம ஊராட்சியின் ஒரு வார்டின் வாக்காளராக இருப்பவர் எந்த ஊராட்சி வார்டிலும் வார்டு உறுப்பினருக்கு போட்டியிடலாம். எந்த வார்டில் போட்டியிடுகிறாரோ அந்த வார்டின் ஒரு வாக்காளரால் முன்மொழியப்பட வேண்டும்
கிராம ஊராட்சியின் வாக்காளர் ஒருவர் ஊராட்சித்தலைவருக்கு போட்டியிடலாம்.
4.ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஒன்றிய வார்டு/மாவட்ட ஊராட்சி வார்டுக்குள் அடங்கிய ஊராட்சி/ ஊராட்சிகளின் வார்டுகளின் ஏதேனும் ஒன்றின் வாக்காளராக இருக்க வேண்டும்.
5.கிராம ஊராட்சியின் வாக்காளர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கோ அல்லது ஊராட்சி தலைவர் பதவிக்கோ போட்டியிடலாம்.
6.மேற்கூறிய 4 பதவிகளுக்கும் (ஊராட்சி வார்டு உறுப்பினர்/ஊராட்சி தலைவர்/ஒன்றியவார்டு உறுப்பினர்/மாவட்ட ஊராட்சி உறுப்பினர்)ஒரே படிவமே வேட்பு மனுவாக உள்ளது.

7.ஒரு பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அந்த பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.வேட்பு மனு பரிசீலனையின் போது சரியான வேட்புமனு ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.வேட்பாளரே கூடுதல் மனுக்களை திரும்பப்பெற்றுக் கொள்ளலாம்.

8.முந்தைய தேர்தலில் போட்டியிட்ட நபர்.குறித்த காலத்தில் தேர்தல் கணக்கு ஒப்படைக்காமல் இருந்தால்,தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்.

9.உள்ளாட்சி அமைப்புகளுக்கு வேட்புமனு பரீசீலனையின் போதுவரை நிலுவை வைத்துள்ளவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

10.வேட்புமனு பரிசீலனையின் போதுவரை வேட்பாளர் தனது சொத்து விபரங்கள்,தன் மீதான வழக்கு தொடர்பான விபரங்கள் அடங்கிய உறுதி மொழிப்பத்திரம் சமர்ப்பிக்காவிடிலும்,தவறான தகவல்கள் அளித்திருப்பதாக நிருபிக்கப்பட்டாலும் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

11.வேட்பு மனுவின் உரிய கலங்கள் நிரப்பப்படாமல் இருந்தாலும் தவறாக நிரப்பப்பட்டாலும் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

12.மக்கள் தொகை அடிப்படையிலான SC/ST இட ஒதுக்கீட பெண்களுக்கான 50%இட ஒதுக்கீட்டின்படி,குறிப்பிட்ட பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மாறாக சமர்ப்பிக்கப்படும் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

13.அதிகபட்ச வாக்குகளை இரு வேட்பாளர் பெற்றுள்ள நிலையில் திருவுளச் சீட்டுகள் மூலம் வெற்றி பெற்றவர் தேர்வுச் செய்யப்படுவார்

14.உள்ளாட்சி அமைப்பின் எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத ஒப்பந்தக்காரராக செயல்பட்டவர்,ஒப்பந்தத்திலிருந்து சம்பந்தப்பட்டவர் உள்ளாட்சி அமைப்பில் இருந்து விடுவித்து ஆணை பெற்ற பின்னரே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலும்.விடுவிப்பு ஆணை இல்லாத பட்சத்தில் வேட்புமனு நிராகரிக்கப்படும்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் பாறை ஏறி வைகுண்டம் போக முடியாது என்பது எல்லோருக்கும் பொருந்தும், எல்லோருக்குமே புரியும்.
கிராம ஊராட்சிகளின் உள்ளாட்சி அமைப்புகளையும் உள்ளாட்சி தேர்தலையும் அவை ஒன்றுமேயில்லை என ஒதுக்கிவிட்டு சட்டமன்ற,நாடளுமன்ற தேர்தலையே அரசியல் களமாகவும் அது தொடர்பான நடவடிக்கைகளை மட்டுமே அரசியல் நடவடிக்கையாகவும் பார்த்து பழகிவிட்டவர்கள் ஒதுங்கி நிற்க என்ன காரணம் கூறுகின்றனர்
உள்ளாட்சி அமைப்புகள் எல்லாம் அதிகாரமே இல்லாத வெறும் தீர்மானங்களை நிறைவேற்றும் அமைப்புகளாக உள்ளன என்பதே அவர்களின் முக்கிய குற்றச்சாட்டு.
இந்திய அரசியல் சட்டத்தின் திருத்தங்களின் முலம் உருவான ‘பஞ்சாயத்து ராஜ் சட்டம்’தனது குறிக்கோளாக அறிவித்த ஊராட்சி என்பது சனநாயகத்தை நிலை நிறுத்தும் வகையில் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் அதிகாரத்தை பரவலாக்குவதற்கான அடிப்படை என்பதை சாத்தியமாக்க-மெய்ப்பிக்க யாதொரு முயற்சியும் மேற்கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்வது,ஊராட்சிகளை சவலைப்பிள்ளைகளாகவே வைத்திருக்க விரும்பும் ஏதேச்சதிகாரிகளுக்கு சாதகமான நிலைப்பாடு ஆகாதா?
உள்ளாட்சிகளில்-ஊராட்சிகளில் மக்கள் பங்களிப்போடு தீவிர தலையீட்டை உருவாக்குவதன் மூலம் மட்டுமே,உள்ளாட்சி அமைப்புகளை,மக்களுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாட்சி அமைப்புகளை அதிகாரம் மிக்கதாக வளர உதவ முடியும்.வெளியில் இருந்து வேடிக்கைப்பார்ப்பதன் முலம் அல்ல.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமே இல்லை என வருத்தப்படுபவர்களுக்கு,இந்திய குடியரசுத்தலைவருக்கோ இந்திய பிரதமருக்கோ அல்லது வேறு எந்த மக்கள் பிரதிநிதிக்கோ இல்லாத காசோலை அதிகாரம் ஒரு கிராம தலைவருக்கு மட்டுமே உள்ளது என்பது அதிர்ச்சி தரும் உண்மையாக இருக்கலாம்.
எட்டி நின்று எட்டிக்காய் என்று பசப்புவதை விட்டுவிட்டு கிட்டே செல்லுங்கள் மக்கள்கிட்டே செல்லுங்கள் மக்களொடு நில்லுங்கள்,மக்கள் மனத்தை வெல்லுங்கள்…..திறமையில்லாதவர்கள் திமிற வேண்டாம் ஒதுங்கிக்கொள்ளுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here