உள்ளாட்சி தேர்தல்- வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடவிடலாமா? – ராஜகுரு.


     
அக்டோபர் 4 ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது அப்போது.” வாக்காளர் பட்டியல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.விடுபட்டிருப்பின் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடம் விண்ணப்பித்து சேர்த்துக் கொள்ளலாம் “-என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வாக்காளர் என்ற முறையில் தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்க்க,தான் குடியிருக்கும் உள்ளாட்சி தொடர்பான வார்டுக்குரிய வாக்காளர் பட்டியலை,நகர்புறப்பகுதி எனில் பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சியின் மண்டல அலுவலகம் ஆகியவற்றிலும், ஊரகப்பகுதி எனில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பணம் செலுத்தி பெற வேண்டும்.
      

கிராம ஊராட்சியின் வார்டு வாரியாக ஒரு பாகமாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும்.அப்பட்டியல் சம்பந்தப்பட்ட சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் பாகத்திலிருந்து எடுக்கப்பட்டு, வார்டு வாரியாக பிரிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு வார்டு வாரியாக பிரிக்கும் போது கவனக்குறைவால் ஒருவருடைய வாக்கு அவரிருக்கும் வார்டுக்கு பதிலாக வேறு வார்டினில் இருக்கலாம்.எனவே கிராம ஊராட்சியைப் பொறுத்தமட்டில்,ஊராட்சி முமுமைக்குமான அனைத்து வார்டுகளுக்கும் உரிய வாக்காளர் பட்டியலை பெறுவது நல்லது.

ஒருவருடைய பெயர் வார்டு மாறியிருப்பதால் வேட்பாளராக போட்டியிடுவதில் பிரச்சனை ஏதுமில்லை. குறிப்பிட்ட வார்டைச் சேர்ந்த ஒருவர் எந்த வார்டிலும் போட்டியிடலாம். தடையில்லை. எந்த வார்டில் வேட்பாளராகப் போட்டியிடுகிறாரா அந்த வார்டின் வாக்காளர் பட்டியலில் பதிவு பெற்ற ஒரு வாக்காளர் முன் மொழிந்தால் போதுமானது.சரியான வார்டுக்கு தனது வாக்காளர் பதிவை மாற்ற விரும்பினால் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையாளரும் வாக்குப்பதிவு அலுவலருமான வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)இடம் விண்ணப்பித்து உரிய திருத்தம் வெளியிடக் கோரலாம்.
          ஒருவேளை ஒருவருடைய பெயர் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் எந்தவொரு வார்டிலும் இல்லை என்றால், அத்தகைய தவறு ஏற்பட இரு வாய்ப்புகள் உண்டு.

ஒன்று : சட்டமன்ற தொகுதிக்குரிய சமீபத்தில் வெளியிடப்பட்ட (திருத்தம் உள்ளிட்ட) வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து அதிலிருந்து ஊராட்சிக்கான வாக்காளர்களை வார்டு வாரியாக பிரித்தெழுதும் போது விடுபடுதல்

இரண்டு : சட்டமன்ற தொகுதிக்குரிய சமீபத்தில் வெளியிடப்பட்ட( திருத்தம் உள்ளிட்ட) வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஊராட்சி வாக்காளர் பட்டியலிலும் பெயர் இல்லாமல் இருத்தல்.

ஒரு கிராம ஊராட்சியில் எத்தனை வார்டுகள் உள்ளனவோ அத்தனை பாகங்களாக, உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் இருக்கும். வார்டு எண்ணிக்கையை பொறுத்த மட்டில்,நான்கு வகையான ஊராட்சிகளே உள்ளன.வார்டு எண்ணிக்கை மக்கள் தொகை அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது.

மக்கள் தொகை /          வார்டு எண்ணிக்கை

500முதல் 2000 வரை. /                             6

2001முதல்5000 வரை.   /                         9

5001மதல்10000வரை.  /                         12

10000க்கு மேல்    /                                    15

(1) நடப்பு சட்டமன்ற வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால்,ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய திருத்தம் வெளியிடக்கோர வேண்டும்.

(2) நடப்பு சட்டமன்ற வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பின்,சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் வாக்கு பதிவு அலுவலரான கோட்டாசியர்(RDO)/சார் ஆட்சியர்(sub collector)இடம் விண்ணப்பித்து பெயரை சேர்க்க வேண்டும்.அவர் வெளியிடும் திருத்தப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு,ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை அணுகி உரிய திருத்தம் வெளியிடக்கோர வேண்டும்.

         விடுபட்ட பெயரை எப்பொழுது வரை சேர்க்கலாம்?உள்ளாட்சித்தேர்தல் நடைமுறை துவங்கி,வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நாள் வரை விடுபட்ட பெயரைச் சேர்க்கலாம்.

எந்தவொரு தேர்தலின் போதான வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நாள் முதல் தேர்தல் முடிவு வெளியிடப்படும் நாள் வரையிலான நாட்கள் தவிர,எந்தவொரு நாளிலும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.உரிய திருத்த ஆணை பெறலாம். வாக்களராகும் உரிமையை மட்டுமல்ல வேட்பாளராகும் உரிமையையும். பாதுகாக்கலாம்.மீட்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட நாம் ஒருபோதும்  அனுமதிக்க கூடாது.

ராஜகுரு
சிந்தனைப்பள்ளி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here