உள்ளாட்சி தேர்தல் – நடந்ததும் நடக்கப்போவதும். – அ.லோகசங்கர்.உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாயிற்று.ஆனால் கடந்த 2016- ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டு, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கிட தயாரான நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதையும், ஏறத்தாழ 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமலே காலம் கடத்தியதையும் நினைக்கும் போது,உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்பதை நம்பிட சற்று தயக்கமாகத்தான் இருக்கிறது. வான்மழையை எதிர்பார்த்து வயலை உழுகின்ற விவசாயிகளைப்போல, உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவோம்.

முந்தைய உள்ளாட்சி தேர்தல்களை விட,நடக்கப்போவதாக நம்பும் உள்ளாட்சி தேர்தல் பல அம்சங்களில் வித்தியாசமானதாக இருக்கப்போகிறது. முக்கியமான வேறுபாடுகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1.உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50%இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரமிக்க சட்டமன்ற,தேர்தலில்,நீண்ட காலமாக கோரப்படுகின்ற 33%இட ஒதுக்கீடு என்கின்ற மூன்றில் ஒரு பங்கு(1/3)இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லாத,ஆணாதிக்க சிந்தனை நிறைந்த (ஆண்களைதலைவர்களாக கொண்ட கட்சிகள் மட்டுமல்ல.பெண்களை தலைவர்களாக கொண்ட கட்சிகளும் தான்!)கட்சிகள்,உள்ளாட்சிகளில் மட்டும் 50%வழங்கப்பட்டுள்ளது பற்றி கூச்ச நாச்சமின்றி கள்ள மெளனம் காக்கின்றன.
பாதிக்குப் பாதி பெண் வேட்பாளர்கள் தேவைப்படுவது,இந்த ஆணாதிக்க கட்சிகளுக்கு இனம்புரியாத தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.குறிப்பிட்ட பதவியை கைப்பற்ற கனவு கண்டிருந்த பலருக்கு, பதவி பெண்களுக்கென இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்,தாயை தயார் செய்வதா?அல்லது சகோதரியை தயார் செய்வதா?தாரத்தை தயார் செய்வதா? என தத்தளித்து வருகின்றனர்.நேற்று வரை தங்கள் வீட்டு பெண்களை வீட்டில் பூட்டிவைத்து விட்டு,அரசியல் காளைகளாக அடாவடியாகத் திரிந்தவர்களுக்கு,ஏதோ ஒன்றை இழக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. ஒன்று அவர்கள் கனவு கண்ட பதவியை கைவிட்டு விட வேண்டும் அல்லது தங்கள் வீட்டில் பொத்திப்பொத்தி பாதுகாத்தவர்களை பதவிக்காக பொதுவெளியில் கை நழுவ விட வேண்டும்.
எப்படி இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு தரப்பட்டுள்ள 50%இட ஒதுக்கீடு,ஆணாதிக்கத்திற்கு சவாலாக இருக்கும் என்பதால், ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான மருந்து தான்.இனிப்பான உணவாக்கி கொள்வது எதிர்காலத்தில் சாத்தியமாகும் என நம்புவோம்.

2.உள்ளாட்சி தேர்தலில், மறைமுகத்தேர்தல், நேர்முகத் தேர்தல் என்ற இருவித தேர்தல் முறை கடைபிடிக்கப்படுவது மற்றொரு முக்கியமான அம்சமாகும்.
உள்ளாட்சிகளின் தலைவர் பதவிக்கு தேர்தல் மறைமுகமானதாகவோ அல்லது மக்களால் நேர்முகமாகவோ நடத்தப்படுவதாக இருந்தாலும், அப்பதவிகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு.ஆனால் உள்ளாட்சிகளின் அனைத்து துணைத்தலைவர் பதவிகளும்,ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு மறைமுகமாக தேர்வு செய்யப்படுகிறது.அந்த துணைத்தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடே கிடையாது.
துணைத்தலைவர் பதவிகளுக்கு, தலைவர் பதவிகளுக்கு வழங்கி உள்ளதைப்போல,அதற்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்,நாளது தேதிவரை அமல்படுத்தப்படவில்லை.
மறைமுகத் தேர்தல் மேலைநாட்டினரால் குதிரைப்பேரம் என அழைக்கப்படும் (கழுதை இயேசுபிரான் பயன்படுத்தியதால் உயர்ந்தவொரு உயிராக அவர்களுக்கு தோன்றியிருக்கலாம்!)ஆதரவாக உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்ற’கழுதை பேரங்களுக்கு’வழி வகுத்தது – வழி வகுக்கின்றது – இனியும் வழி வகுக்கும்.
நாடளுமன்றத்தின் மாநிலங்களவை எனப்படும் மேலவைக்கு மறைமுகத் தேர்தலே வழிமுறையாக உள்ளதோடு,அதில் இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.எனவே இட ஒதுக்கீட்டை மறுப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் மறைமுக தேர்தல் விருப்பத்திற்குரியதாக உள்ளது என்பது அப்பட்டமான உண்மை.

3.மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப, பிரதிநிதித்துவம் செய்வதற்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கையில், சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு கூட்டவோ குறைக்வோ செய்ய வேண்டும். பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மறுப்பது சனநாயக மறுப்பாகும்.
ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் எண்ணிக்கை மக்கள் தொகை அடிப்படையில் கீழே குறிப்பிட்டுள்ளவாறு நிர்ணயிக்கப்படுகிறது.
மக்கள் தொகை வார்டு உறுப்பினர்
எண்ணிக்கை 500க்கு2000வரை 6
2001முதல்5000வரை 9
5001முதல்10000வரை 12
10000க்கு மேல் 15
வார்டு உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் 4 வகை ஊராட்சிகளே உள்ளன.
கடந்த தேர்தலின் போது மக்கள் தொகை 2000 ஆக இருந்த ஊராட்சி அப்போது 6 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்தது,தற்போது மக்கள் தொகை 2000க்கு மேல் உள்ளபோது 9 உறுப்பினர்கள் கொண்ட ஊராட்சியாக ஆக்கப்பட வேண்டும். பிரதிநிதித்துவத்தை அதிகரிக்காமல் கூடுதல் பிரதிநிதித்துவத்தை மறுப்பது சனநாயகத்தையே மறுக்கின்ற செயலாகும்.
இங்கே சுட்டப்பட்டுள்ளது ஒரு உதாரணமேயாகும்.மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான மக்கள் உரிமையை மறுப்பது சனநாயகத்தையே கேலிக்குரியதாக்கும் செயலாகும்.
பெண்களுக்கான 50%இட ஒதுக்கீடு;மறைமுகத்தேர்தல் ,நேர்முகத்தேர்தல் குளறுபடிகள்;மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க மறுப்பது என பல்வேறு சிக்கல்களுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தலை வரவிடாமல் செய்வதற்கான உள்ளார்ந்த விருப்பங்களோடு பிரதான கட்சிகள் எல்லாம் “வேண்டாத தெய்வமில்லை!”என்ற வேண்டுதலோடு,நீதித்தேவதையின் தடையாணைகளை எதிர்நோக்கி தவமிருக்கின்றன.
நீதிதேவதை நிச்சயம் அருள்புரிவாள்!

அ.லோகசங்கர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here