உளவியலும்,உடல்நலமும்.- S.மீனா,உளவியலாளர்.

நமக்கு கிடைத்த இந்த வாழ்வை சிறப்பாக வாழ நம் உடல், மனம், சமூக நலவாழ்வு இவற்றை சீராக பேணி பாதுகாத்து நோயற்று, பலவீனமற்று வாழ்தல் நல்வாழ்வு ஆகும். நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள நாம் மருத்துவரை அணுகுகிறோம். சமூகத்தால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள சட்ட அமைப்புகளை அணுகுகிறோம். அதே போல் மனநலம் பெறவும், மனதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளவும் உளவியல் ஆலோசகர்களையும், மனநல மருத்துவர்களையும் நாடுவது அவசியம் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.


சளி, காய்ச்சல், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற உடலில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றே மனதிலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்படி சிகிச்சை இருக்கிறதோ, நாம் சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறோமோ, அதே போல் மனதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை இருக்கின்றன. மன நல பிரச்சனைகளுக்கு மருத்துவ உதவி, ஆலோசனைகள் எடுத்துக்கொள்ளும் விழிப்புணர்வு ஓரளவு வந்திருந்தாலும் பெரும்பாலான மக்கள் மன நல ஆலோசனைகள், மன நல மருத்துவம் என்பது மெண்டல் ஆனவர்கள் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற சொல்லாடல்கள் படித்தவர்கள் மத்தியிலும் பரவலாக காணமுடிகிறது. 
ஆனால் இந்த போட்டி உலகத்தில், நெருக்கடி தரும் பல்வேறு சூழ்நிலைகளினால் மக்கள் மிகுந்த மன பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் நேரங்களில் உளவியல் உதவி அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மனப்பிரச்சனைக்கும் தனித்தனியாக, முறையான மருந்துகளும், அறிவியல் பூர்வமான உளவியல் சிகிச்சைகளும், வகைப்படுத்தப்பட்ட உளவியல் ஆலோசனைகளும் வந்துவிட்டன.ஓர் உளவியலாளர் அல்லது உளவியல் ஆலோசகரால் மூன்று வகைகளில் உங்களுக்கு உதவ முடியும்.


1)பிரச்சனைகள் அல்லது சிக்கல்களை சரி செய்ய

2)பிரச்சனைகள் வருவதை தடுக்க

3)உங்கள் வாழ்வை மேலும் வளமானதாக மாற்ற


1). பிரச்சனைகள் அல்லது சிக்கல்களை சரி செய்யும் முதல் வகையில், இரண்டு நிலைகள் உண்டு.
a)தினசரி வாழ்வில் எழும் பிரச்சனைகளை சரி செய்வது
b)மன நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது
a). தினசரி வாழ்வில் எழும் பிரச்சனைகளை சரி செய்வது என்பது
உணர்வுகளை சரியாக கையாள முடியாமை முக்கியமாக கோபத்தை கட்டுப்படுத்த முடியாமை, மண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், காதல் தோல்வி பிரச்சனைகள்,  குடும்ப பிரச்சனைகள், நண்பர்கள், உறவினர்களுடன் பிரச்சனைகள், வேலை செய்யும் இடத்தில் அடிக்கடி எழும் பிரச்சனைகள், நட்பு கொள்ள முடியாமை, பள்ளி/கல்லூரி/வேலை/தொழில் செயல்பாடுகளில் பிரச்சனைகள் இவற்றால் ஏற்படும் மனப்போராட்டங்கள் அனைத்தும்  தினசரி வாழ்வில் எழும் பிரச்சனைகள் ஆகும். இவ்வகை பிரச்சனைகளை எதிர்கொள்வோரின் மன நலன் சிறிது பலவீனமாக இருக்கிறது. உளவியல் உதவி அல்லது ஆலோசனைகள் பெற்றுக்கொண்டால், பலவீனமடைந்து குன்றிய மன நலத்தை திரும்ப பெற்று விடலாம். கவனிக்காமல் அப்படியே கொஞ்ச காலம் விட்டால், அவை மன நோயாக மாறி விட வாய்ப்பு உண்டு.இது போன்ற பிரச்சனைகளை சளி காய்ச்சல், தலைவலி போன்ற உடல் பிரச்சனைகளுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கலாம். இந்த  உடல் பிரச்சனைகளை எதிர் கொள்ளாதவர்கள் இவ்வுலகில் யாருமே இல்லை. இந்த சாதாரண உடல் பிரச்சனைகள் சில நேரங்களில் அதுவே சரியாகி விடும். சில நேரங்களில் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரியாகி விடும் . சாதாரண பிரச்சனைகள்  தொடர்ந்து இருக்கும் போது அப்படியே விட்டு விட்டால் அது மற்ற பெரிய நோய்களுக்கும் வழி வகுக்கும் அபாயம் உண்டு. பெரிய நோய் வந்த பிறகு, முதலிலேயே பார்த்திருக்கலாமே என்று நீங்கள் பிறகு யோசிக்கும் நிலை வரலாம்.


b).மன நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது
மனப்பதட்டம், மனச்சோர்வு, கட்டாய செயல்பாட்டு மன உளைச்சல் நோய், மனப்பிரச்சனைகள் உடலை வருத்தும் நோய், மனச்சிதைவு, குணநல குறைபாட்டு நோய், ஆளுமை கோளாறு போன்றவை மனநோய்கள் ஆகும் . இவ்வகை மன நோய்களுக்கு, உளவியல் ஆலோசனையுடன் மன நல மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

உடல் நோய்களில் எவ்வாறு தீவிரமானவை, கொஞ்சம் தீவிரமானவை, அதி தீவிரமானவை என்று பல நிலைகள் இருப்பது போல, மனநோய்களிலும் பல நிலைகள் உள்ளன. மனநோய்கள் சிலவற்றுக்கு, சாதாரண காய்ச்சல் மற்றும் சில வைரஸ் காய்ச்சலுக்கு கிடைப்பது போல போல் பூரண நலம் உண்டு. நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்று வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்து சமாளித்துக்கொள்ளும் வகையும் உண்டு.

2).பிரச்சனைகள் வருவதை தடுக்க
பிரச்சனைகள் வராமல் தடுத்துக்கொள்வது, இதற்கு உதாரணமாக, ப்ரி மாரிட்டல் கவுன்சலிங் என்று சொல்லப்படும் திருமணத்திற்கு முன்னரே பெறப்படும் உளவியல் ஆலோசனையை சொல்லலாம். மண வாழ்வில் இணையப் போகிற இருவரின் ஆளுமைகளை இருவரும் தெரிந்து கொள்ளுதல், மண வாழ்வில் என்னென்ன பிரச்சனைகள் எழ வாய்ப்பு இருக்கிறது, பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள மனதை எவ்வாறு தயாராக வைத்திருப்பது போன்ற உளவியல் உதவிகள் இந்த வகை கவுன்சலிங்–ன் போது வழங்கப்படும்.

3). உங்கள் வாழ்வை மேலும் வளமானதாக மாற்ற
வாழ்வை மேலும் வளமானதாக மாற்ற உதவுவது. இதற்கு உதாரணமாக கரியர் கவுன்சலிங் என்று சொல்லப்படும் வேலை/படிப்புக்கான துறையை தேர்ந்தெடுக்க உளவியல் ஆலோசனை வழங்குவதை சொல்லலாம். இவ்வகை உளவியல் உதவியில், உங்கள் இயல்பான திறமைக்கேற்ப மற்றும் உங்கள் ஆளுமை, திறன்கள், ஆர்வம், விழுமியங்கள் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு, உங்களுக்கான சரியான துறை தேர்ந்தெடுக்க வழிகாட்டப்படும். மேலும் நீங்கள் ஒரு தொழில் செய்யும் முன்பு தொழில் சிக்கல்களை பற்றிய ஆலோசனைகள் பெற்று கொள்வது, கல்வி மற்றும் மேற்படிப்பு குறித்து ஆலோசனைகள் முன்னரே பெற்றுக்கொள்வது ஏன் என்பதற்கான அவசியத்தை உணர்த்துவதால் வாழ்வு மேலும் வளமானதாகும்.
இது போன்றே போதை பொருள் மீட்பு ஆலோசனைகள், மறுவாழ்வு ஆலோசனைகள் என்று  பல வகைகளில் உளவியல் ஆலோசனைகள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க மட்டுமல்லாது, பிரச்சனைகள் வராமல் தடுத்துக்கொள்ளவும், வாழ்வை மேலும் வளமானதாக மாற்றவும் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
உளவியல் ஆலோசகர்களும், மனநல மருத்துவர்களும் இதற்காகவே படித்து, பயிற்சி பெற்றவர்கள், உங்களை புரிந்துகொள்ளவும், ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கவும் நன்கு தெரிந்தவர்கள். தொழில் நீதி நெறிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆகவே உங்களின் தனிப்பட்ட விபரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும்; மற்றவர்களுக்கு தெரிந்து விடுமோ என்று கவலையோ, பயமோ கொள்ள தேவையில்லை.
நாம் அனைவருமே, நம்மை  தைரியமான, வாழ்க்கையின் சவால்களை யாருடைய துணையும் இன்றி நாமே எதிர்கொள்ளும் சக்தி உடையவர்கள் என நம்பினாலும், சில நேரங்களில் மற்றவர்களிடம் உதவி பெறுவது என்பது நடைமுறை உண்மை மற்றும் அவசியமாகிறது. கூடுதலாக சொல்லப்போனால், “தன்னால் முடியாத போது, அதை ஏற்றுக்கொண்டு உரியவரிடம் உதவி கேட்பது” என்பது மனிதனின் பலம் என்று சொன்னால் அது நூறு சதவீதம் உண்மை ஆகும்.
ஆகவே உங்கள் மன நலனை மதிப்பீடு செய்து கொள்ளவும், நிபுணர் கருத்தை தெரிந்து கொள்ளவும் உளவியல் ஆலோசகர்களை எந்த ஒரு பயமும், கூச்சமும் இன்றி அணுகுங்கள். உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த நவீன கருத்தாக்கங்களை தெரியப்படுத்துங்கள், அதன் மூலம் எல்லோரும் நல்ல மன நலத்துடன் வாழ உதவுங்கள்.

S.Meena, Psychologist
Youbeyou Consultancy Services,
Salem, +91-9626177111.