உலகளாவிய தொற்று நோய்க்கு எதிரான போராட்டமும்-மேற்கத்திய நாடுகளின் ஆணவமும்.

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.”

கோவிட்-19 இன் தொடர்ச்சியான பரவல் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலர் இதனை 1918 காய்ச்சலுக்கு ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். பன்னாட்டு உறவுகளில் உள்ள சிலர் இது “உலக போர் III, ” என்று நம்புகின்றனர் அல்லது இன்னும் துல்லியமாக கணித்தால், இது மரபு சாராத பாதுகாப்பின் முதல் உலகப் போர் ஆகும். கோவிட் -19 க்கு எதிரான போர் உலகப் போரின் அளவை எட்டியிருக்கிறதா என்று சொல்வது கடினம். ஆனால் இது உண்மையில் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய “கருப்பு அன்னப்பறவை நிகழ்வு” (Black Swan Event) ஆகும். கோவிட்-19 அனைத்து நாடுகளின் நிர்வாக திறனை சோதித்து அறியும் கருவியாக அமைந்துவிட்டது.


கொரோனா வைரசு மூன்று மாதங்களுக்கு முன்பு வுகானை முதன்முதலில் தாக்கியபோது, ​​அது மிகுதியாக பரவுக்கூடிய தொற்றுநோய் என்று மக்களுக்குத் தெரியாது. சீனா தனது தணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் சரிசெய்து தன் நாட்டின் அமைப்பின் முழு திறனையும் வெளிகொண்டு வருவதற்கு பக்கபலமாக நின்றது. ஒட்டுமொத்தமாக, சீனா தன் வேலையை நன்றாகவே செய்து வருகிறது.
உலகம் முழுவதும் வைரசு தொடர்ந்து சீற்றமடைந்து வரும் நிலையில், சீனா வைரசு பரவுவதைத் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. கோவிட்-19 உலகளாவிய சவாலாக மாறியுள்ள நிலையில், அனைத்து நாடுகளும் கருத்தியல் மோதல்களை கைவிட்டு, இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்க வேண்டும்.

சீனா தனது உள்நாட்டு நிலைமையை பலப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஏனைய நாடுகளுக்கும் ஆட்கள் மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகிறது.
அமெரிக்காவும், ஐரோப்பாவும் சீனாவால் உருவாக்கப்பட்ட வாய்ப்புக்கான சூழலை கைப்பற்றி பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அமெரிக்கா சிடுமூஞ்சித்தனத்திலும் சந்தேகத்திலும் தன் நேரத்தை வீணடித்து, முகத்திரை அணிவதை கூட அரசியல் மயமாக்க அனுமதித்தது. இங்கு பொது அறிவு, சித்தாந்தத்தால் கடத்தப்பட்டிருப்பது நகைப்புக்குரியது.

மேற்கத்திய நாடுகளின் பிழைகளுக்குப் பின்னால் மூன்று வகையான ஆணவங்கள் உள்ளன.

முதலாவது -இன ஆணவம்;
மேற்கத்திய மக்கள் சிலர் ஆசியாவிலிருந்து வந்தவர்களை விட தாங்கள் உடல் வலிமைமிக்கவர்கள் என்று நம்புகிறார்கள்.

இரண்டாவது, பண்பாட்டு ஆணவம். கோவிட்-19 இன் தோற்றம் வனவிலங்குகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். சில சீன மக்கள் காட்டு விலங்குகளை உணவாக உண்ட பிற சீன மக்களை தூய்மையற்றவர்களாக இவ்வுலகத்திற்கு காண்பித்தார்கள். இது சீன உணவு வகைகளுக்கு எதிரான மேற்கத்தியர்கள் கொண்டிருந்த தப்பெண்ணத்தை ஆழப்படுத்தியது. ஆனால் இது முற்றிலும் உண்மையானதல்ல. மேற்கில் ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. அது மேற்கத்திய பிரபுக்களின் காலத்திலிருந்து, அனைத்து வகையான காட்டு விலங்குகளையும் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். உலகின் பல பகுதிகளிலும் மக்கள் கவர்ச்சியான, காட்டு விலங்குகளை சாப்பிடுவதற்கான எடுத்துக்காட்டுகள் பல உள்ளன.

மூன்றாவது ஆணவம்:
மேற்குலகின் ஆட்சி முறையுடன் தொடர்புடையது. மேற்கத்திய நாடுகள் தங்கள் அரசாங்கங்களின் நடவடிக்கைகள் வெளிப்படையானவை என்பதை, மக்களுக்கே முழு நிர்வாகத்திறனை கொடுத்து, வலியுறுத்தின. மக்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால், இது குருட்டுத்தனமான நம்பிக்கை என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஆணவத்தின் பொருட்டு, அமெரிக்க ஐக்கிய நாடும், ஐரோப்பாவும் வைரசு தொற்று பரவுவதை தடுப்பதில், தொடக்கத்தில் மிகுந்த மெத்தனம் காட்டினார்கள். சீனாவின் தொடக்க கால அனுபவத்தை கருத்தில் கொள்ளும்போது, இது போன்ற தீவிரமான தவறுகளை அவர்கள் (அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும்) செய்தது மன்னிக்க முடியாதது.

தொற்றுநோய் தீவிரமடைகின்ற நிலையில், அமெரிக்காவும் ஐரோப்பாவும் படிப்படியாக கடுமையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. ஆனால் அதனை நடைமுறை படுத்துவதில் பல சிக்கல்கள் இப்போதும் இருந்து வருகின்றது.
முதலாவது, சிறுபான்மை மற்றும் சிறு குழுக்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஆளும் கட்சிகள் பற்பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இது அமெரிக்காவில் வெளிப்படையாக நடந்தது. மக்களின் உயிரை விட குறுகிய கால அரசியல் நலன்களே முதன்மையானது என்று அமெரிக்கா கருதுகிறது. அளவுக்கு மீறிய சமூக உரிமைகள் மேற்கத்திய சனநாயக அமைப்பில் தற்போது ஒரு பிரச்சினையாகவே மாறியுள்ளது.
இரண்டாவதாக பொருளாதார முலதனத்திற்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்தார்கள். கோவிட்-19- ஐ எதிர்கொள்ளும் போது, சில அரசியல்வாதிகள் பொருளாதாரத்தை குறிப்பாக பங்கு சந்தையை இந்த தொற்றுநோய் பாதிக்கும் என்றே மிகவும் கவலைப்பட்டனர். இது சீனாவின் மக்கள் சார்ந்த கருத்தாக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு மேற்கத்திய நாடுகள் உண்மையில் முதலாளித்துவ சமூகங்களாகவே உள்ளன என்பதையே காட்டுகின்றது.
மூன்றாவதாக, அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் கொள்கைகளில் சமூக டார்வினிசத்தை செயல்படுத்தியுள்ளன. கோவிட்-19 பரவியதில் இருந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில உயர் அதிகாரிகள், “மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை” முன்மொழிந்தனர். அவர்களில் சிலர், வயது வந்தவர்கள், கோவிட்-19 நோயாளிகள் என்று கண்டறியப்பட்டால், ஒட்டுமொத்த நிலைமையை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தொற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர ஒத்துழைப்பு அளிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலைமை நம்பிக்கையூட்டுவதாக இல்லை. அமெரிக்காவில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் தங்கள் பொறுப்புகளை அடுத்தவர் தலையில் கட்டுவதிலேயே செயல்பட்டு கொண்டிருந்தனர். பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மருந்துகள் விநியோகத்தை இடைமறித்தது மட்டும் அல்லாமல் தங்கள் எல்லையையும் மூடினர். சில நாடுகள் இப்போது சீனாவின் உதவியை ஏற்றுக்கொள்ள ஒருபக்கம் விருப்பம் காட்டினாலும் மறுபக்கம் சீனாவை பழிப்பதில் குறியாய் இருக்கின்றனர். இது கோவிட் -19 போராட்டத்தில், சர்வதேச ஒத்துழைப்புக்கு உகந்ததல்ல.

முன்பெல்லாம், மேலை நாட்டு மக்கள் தாங்கள் எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மிகுந்த திறன்வாய்ந்தவர்கள் என்ற தோற்றத்தை நமக்கு அளித்தனர். ஆனால், கோவிட்-19 இந்த கூற்று பொய் என்று மக்களை உணரச் செய்தது. இணையம், பெரிய தரவுகள்(Big Data), போக்குவரத்து வலைப்பின்னல்களின் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் பலவீனமாக உள்ளன. அவர்களின் தொழில்துறை உற்பத்தியும் தொழில்நுட்பத் திறன்களும் நாம் எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு வலுவாக இல்லை. அவர்களின் மருத்துவ முறைமைகள் மற்றும் அரசாங்கத் தலைமைத்துவத்தில் பல பிரச்சினைகளை இருப்பதை நமக்கு வெளிப்படையாக்கியுள்ளனர்.

சீனா வலுவான தலைமை, தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத் திறன்களை கொண்டதாகவும் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பண்பாட்டு ஒத்திசைவு மற்றும் கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கை ஆகியவற்றைக் காட்டியுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு பங்களிக்க சீனா தன் விருப்பத்தை தெரிவித்திருக்கின்றது. மேற்கத்திய நாடுகள் தாங்கள் முன்பு சீனா மீது கொண்ட தவறான எண்ணங்களை முடிந்தவரை விரைவில் மாற்றிக்கொள்ள வேண்டும்.