உருளைக்கிழங்கு விவசாயிகள் மீது பெப்சி வழக்கு : உயிரியல் போருக்கானத் தொடக்கம்!-இடும்பாவனம் கார்த்திக்.


மரபணு மாற்றம் செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளைப் பயிரிட்ட குஜராத் விவசாயிகளிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தரக்கோரி வழக்குத் தொடுத்திருக்கிறது அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெப்சி நிறுவனம். இதனைச் சாதாரண ஒரு செய்தியாக எண்ணிக் கடந்து சென்றுவிட முடியாது. நாளை இந்திய நாடு எதிர்கொள்ளவிருக்கிற பேராபத்தினை முன்கூட்டியே எச்சரித்திருக்கிற ஒரு பெருநிகழ்வு இது.

பழங்காலத்தில் நமது முன்னோர்கள் விதைநெல்லைப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். விதைநெல்லை விற்றவன் வாழ்வு விடியாது என்ற கிராமத்து வழக்கு இன்றும் புழக்கதிலுண்டு. அந்நாட்களில் வீட்டுக்கு வெளியே விதைநெல்லை வைக்கோல் கோட்டைக் கட்டி சேமித்து வைத்தார்கள். காய்கறி விதைகளை சாணத்திற்குள் வைத்து ஒளித்து சுவற்றில் ஒட்டி வைத்தார்கள். இயற்கைப்பேரிடர் ஏற்பட்டு ஊரே வெள்ளத்தில் அழிந்தால்கூட விதைகள் அழியக்கூடாது என்பதற்காக அருந்தானிய விதைகளை கோயில் கலசங்களில் சேமித்து வைத்தார்கள். அவைகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, வீரியம் குறையாமல் இருந்து, பயன்தந்தது. இவ்வாறு நமது முன்னோர்கள் விதைகளைப் போற்றிப் பாதுகாத்து வந்தார்கள்.

ரஷ்யாவில் விதைகளுக்காக உயிரையே விட்டத் தியாக வரலாறும் உண்டு. உலகம் முழுவதும் பயணித்து பயிர்களுக்கான மூலவிதையைக் கண்டறிந்தார் பல்லுயிர்ப்பெருக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுகிற ரஷ்யாவைச் சேர்ந்த நிகோலாய் இவனோவிச் வாவிலோ.
இவரது பெயரில் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் விதை வங்கி ஒன்று இயங்கி வந்தது. ஹிட்லரின் ஜெர்மானியப்படை பீட்டர்ஸ்பெர்க் நகரை முற்றுகையிட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உணவின்றி இறந்தனர். அதேநேரம், விதை வங்கிக்குள் வாவிலோவின் 12 உதவியாளர்களும் முடங்கினர். அங்கு உணவு, விதைகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்தபோதும் அதனை உண்ணாதிருந்து பட்டினிக்கிடந்து இறந்து போயினர் உதவியாளர்கள் 12 பேரும். அந்தளவுக்கு விதைகளை உயிரைவிட உயர்வானது என்று அவர்கள் கருதினார்கள் என்பதற்கு இதுவே சான்று!

விதைகள் என்பவை வருங்காலச் சந்ததிகளுக்கான உணவைத் தரும் அட்சயபாத்திரம்; கற்பக விருட்சம். அதனாலேயே அதனைக் காக்க ரஷ்யர்கள் உயிர்விட்டார்கள். நம் முன்னோர்களும் போற்றிக் காத்தார்கள். ஆனால், இன்று நமது பாரம்பரிய விதைகள் நம்மிடம் இருக்கிறதா? மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனராக இருந்த ராதெலால் ஹெர்லால் ரிச்சார்யா சேமித்து வைத்திருந்த 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை சின்செண்டா எனும் பன்னாட்டு நிறுவனத்திடம் 2003ல் தாரை வார்த்தது அன்று மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசு . அப்போது விதைகள் பறிபோகிறதெனக் கண்ணீர்விட்டு அழுதவர்கள் ரிச்சார்யாவும், நம்மாழ்வாரும் மட்டும்தான்.

அதேபோல, உணவு உற்பத்தியில் தன்னிறைவு எனக் காரணம் கூறி பசுமைப்புரட்சியைக் கொண்டு வந்து, பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளைத் திணித்தார்கள். அவை பூச்சிக்கொல்லி, உரங்களின்றி வளராது; மகசூலைத் தராது. இதனால், விவசாயிகள் விதைகளை இழந்ததோடு மட்டுமல்லாது அவர்களின் இடுபொருட்கள் செலவும் அதிகரித்தது. இப்போது வேளாண்மையில் முழுமையாக நமது தற்சார்பை இழந்து நிற்கிறோம். அதேபோல, மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள் பேரழிவைத் தரும் என மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானி புஷ்பா பார்கவா எச்சரித்தும் இன்று அதனைத் திணிக்கிறார்கள்.

நம்மிடம் இருக்கும் விதைகளைப் பறிகொடுத்துவிட்டால் நாம் உணவு உற்பத்தியின் மையக்கண்ணியையே இழந்துவிட்டோம் என்று பொருள். வேளாண்மையின் தற்சார்பை முழுவதுமாகத் தொலைத்துவிட்டோம் என்று பொருள்.

இன்றைக்கு நமது பாரம்பரியப் பயிர் ரகங்கள் யாவும் நம்மிடமில்லை. மான்சாண்டோ, சின்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம்தான் இருக்கிறது. இதன்மூலம், இந்நாடு பயிர் செய்ய வேண்டிய உணவுதானியத்தை அந்நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் பேராபத்து இருக்கிறது.

அந்நிறுவனங்கள் நினைத்தால் ஒரு குறிப்பிட்ட விதையை இந்தியாவிற்குத் தராது நிறுத்தி வைக்க முடியும். அவ்வாறு விதைகளை மறுப்பதன் வாயிலாக செயற்கையாக ஒரு உணவுப்பஞ்சத்தை, பட்டினியை நாட்டில் உருவாக்க முடியும். அத்தகைய நிலை உருவானால், உணவுத்தேவைக்காக இந்தியா இன்னொரு நாட்டிடம் கையேந்தும்; அடிபணியும் சூழல் உருவாகும். இதன்மூலம், ஆயுதப்போர் செய்யாது, எல்லையில் இராணுவத்தைக் குவிக்காது இன்னொரு நாடு இந்திய நாட்டைக் கைப்பற்ற முடியும். இதற்குப் பெயர்தான் உயிரியல் போர் (BIO WAR). இதனால்தான், இந்திய நாட்டின் இறையாண்மையை எல்லைகளைவிட வேளாண்மையே முதன்மையாய் தீர்மானிக்கிறது என்கிறோம். இக்காரணத்தினால்தான், வேளாண்மையை இந்தியாவின் இறையாண்மையென நம்மாழ்வார் தொடங்கி பாமயன் வரை கூறுகிறார்கள்.

கச்சா எண்ணெய்யைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் தேசங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். உணவுப்பொருட்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் உலக மக்களையே கட்டுப்படுத்திவிடலாம் என்கிறார் நோபல் பரிசுப் பெற்றவரும், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹென்றி கிசிஞ்சர். ஆகவே, இன்றைக்கு உருளைக்கிழங்குகளைப் பயிரிட்ட குஜராத் விவசாயிகள் பயிர் செய்ததற்காகப் அந்நிய நாட்டு பெப்சி நிறுவனம் வழக்குத் தொடுத்து இழப்பீடு கேட்டதெல்லாம் உயிரியல் போருக்கானத் தொடக்கம்தான்!

இடும்பாவனம் கார்த்திக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here