உயிரை பறிக்கும் கட் – அவுட் கலாச்சாரம் – ஜெயசேகர்,கருங்கல்.

0
11


கடந்த வியாழக்கிழமை 23 வயது இளம் பெண் சுபஸ்ரீ சாலை தடுப்பின் மேல் வைத்த ஒரு பேனர் அதாவது கட்-அவுட் தலையின் மேல் விழ அவள் நிலைதடுமாறி தண்ணீர் லாரியின் அடியில் சிக்கி ரத்தவெள்ளத்தில் பலியானாள்.
இளம் பொறியாளரான சுபஸ்ரீயின் மரணம் என்பது கொலைதான் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளும், அதை தடுக்க தவறிய காவல்துறையும், கட்-அவுட் வைக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கிய பின்னும் அதை நடைமுறைைைப்பபடுத்தாத ஆட்சியாளர்கள் மேலும் நடவடிக்கை எடுக்காத நீதிபதிகள் இருக்கும் வரை சட்டங்கள் என்பது சாதாரண மக்களை மட்டுமே தண்டிக்கும்… இதை மக்களாகிய நாமும் வெட்கமே இல்லாமல் வேடிக்கை பார்க்கிறோம் அல்லது இரண்டு நாள் பேசுவோம் பிறகு அடுத்த பிரச்சனைக்கு கடந்து போகிறோம்.

ஒவ்வொரு குடிமகனும் டிராபிக் ராமசாமி போன்று இந்த அயோக்கிய அரசியல்வாதிகளை எதிர்த்து போராடாவிட்டால் நாளை நம் வீட்டிலும்….

கட்-அவுட் வைக்க நாங்கள் எப்போதோ தடை விதித்து விட்டோம் என்கின்றது நீதிமன்றம். மாநகராட்சியை கேட்டால் நாங்கள் கட்-அவுட் வைக்க அனுமதி கொடுப்பதே இல்லை என்கிறது. காவல் துறையை கேட்டால் அனுமதி இல்லவே இல்லை என்கிறது… அப்படியென்றால் யார்தான் அனுமதி கொடுக்கிறார்கள்? இன்று கட்-அவுட் கலாச்சாரம் என்பது தமிழகத்தில் பரவலாக காணப்படுகிறது. அது சினிமா துறையாக இருந்தாலும் சரி அல்லது அரசியல் கட்சியானாலும் சரி ஆனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் சாலையின் குறுக்கே ஏன் சாலைகளை உடைத்தும் கூட கட் – அவுட் வைப்பதுதான் வேதனையாக உள்ளது. இதே போலத்தான் கடந்த 25 /11/2017 அன்று இந்த அரசியல் கொடூரர்களால் கொலைசெய்யப்பட்டார் ரகு என்ற ரகுபதி. திருமண ஏற்பாடுகளில் கலகலப்பும் மகிழ்ச்சியும் ததும்பியிருக்க வேண்டிய அந்த வீடு. அழுகை கூக்குரல்களால் இருண்டு போனது ரகுவின் மரணம் கேட்டு. அனால் இன்றுவரை மயான அமைதியின் பிடியிலும் சோகத்தின் மொத்த உருவமாக கவலையில் இருக்கிறது ரகுவின் வீடு.

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ரகுபதி, திருமணத்துக்கு பெண் தேடுவதற்காக எத்தனை கனவுகளுடன் அந்த இளைஞர் வந்திருக்க வேண்டும்? எத்தனை எத்தனை ஆசைகளோடு அவரது பெற்றோர் இருந்திருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது என்பது ரகுவின் குடும்பத்திற்கு மட்டுமல்ல நாம் எல்லோருக்குமே தெரியும்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஹெல்மெட் போடாத உலக மகா கொடியவர்களை போல் கொத்து கொத்தாய் பிடித்து அபராதம் விதித்து சட்டத்தை நிலை நாட்டி உயிர்பலிகளை தடுப்போம் என்று வாய் கூசாமல் எப்படித்தான் பேச முடிகிறதோ இந்த அதிகார வர்க்கத்திற்கு. ஹெல்மெட்டுக்காக அலறும் உயர் நீதிமன்றம் என்ன செய்ய போகிறது? ரகுபதி மற்றும் சுபஸ்ரீ போன்றவர்களை கொன்ற கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்க வகை செய்யுமா? அல்லது இதுவும் கடந்து போகும் என்று மௌனமாக இருக்குமா? இன்று அதிகமாக சாலை விபத்துகள் குடியினாலும், இந்தமாதிரியான அரசியல்வாதிகளின் விளம்பரத்தினாலுமே ஏற்படுகின்றன. ஆனால் இறந்துபோகும் இவர்களின் குடும்பங்களுக்கு நம்மால் ஆறுதல் மட்டுமே கூற முடியும்…

ஜெய சேகர், கருங்கல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here