தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்கு உள்நோக்கம் கொண்டது- மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபுர் அலி.

தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு பங்கேற்க வந்த வெளிநாட்டினருக்கு எதிரான FIR-ஐ நிராகரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவர்களை பற்றி அவதூறுகளை பரப்பிய மீடியாக்களையும் கடுமையாக கண்டித்தது.

தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டினர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தீங்கு விளைவிக்கும் உள் நோக்கம் கொண்டது என உயர்நீதிமன்றம் தெரிவிக்கிறது.

தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு பங்கேற்க வந்த 29 வெளிநாட்டினர் மீது சுற்றுலா விசா நிபந்தனையை மீறி இஸ்லாத்தை பரப்பியதாகவும், பொது முடக்கத்தை டெல்லியில் மீறியதாகவும் மகாராஷ்டிரா காவல்துறை குற்றம் சாட்டி எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்தது. அந்த எஃப்.ஐ.ஆர்களை மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் ரத்து செய்தது.

ஆறு இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு தங்குமிடம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மசூதிகளின் அறங்காவலர்கள் ஆகியோரின் மீதான எஃப்.ஐ.ஆர்களையும் நீதிமன்றம் ரத்து செய்தது.

மகாராஷ்டிரா காவல்துறை மனித நேயமற்ற முறையில் செயல்பட்டதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கட்டாயத்தின் கீழ் மாநில அரசு காவல்துறையை வழிநடத்தியதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் Cr.P.C. போன்ற நடைமுறைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் சட்டங்களையும் அவர்கள் பயன்படுத்த துணியவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் வரை தனது உத்தரவை நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மகாராஷ்டிரா அரசாங்கத்தின் கோரிக்கையையும் நீதிபதிகள் டி.வி.நலாவடே மற்றும் எம்.ஜி. செவ்லிகர் கொண்ட பெஞ்ச் நிராகரித்தது.

நீதிபதி செவ்லிகர், வழக்கை விசாரித்த நீதிபதி நலாவாடே எழுதிய தீர்ப்பின் செயல்பாட்டு பகுதியுடன் உடன்பட்டார், ஆனால் சில காரணங்களுடன் அவர் உடன்படவில்லை. ஆகையால், அவர் தனது சொந்த காரணத்தை கூறுகிறார்

“விசா விதிமுறைகளை மீறவில்லை”.

வெளிநாட்டினர் எந்தக் கருத்துக்களைப் பரப்புகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுகாட்ட எந்த ஆதாரமும் இல்லை என்பதை உயர் நீதிமன்றம் கவனித்தது. முஸ்லிம்களின் குர்ஆன் மற்றும் மத புத்தகங்களை அவர்கள் படித்து வருவதாகவும், மஸ்ஜித்தில் முஸ்லிம்களுக்கு சொற்பொழிவுகளை நிகழ்த்துவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பதாக அந்த பதிவு காட்டுகிறது என்று அது மேலும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தெளிவற்றவை என்று நீதிமன்றம் கருதியது, இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து, அவர்கள் இஸ்லாம் மதத்தை பரப்புகிறார்கள் என்பதில் எந்த கட்டத்திலும் அனுமானம் செய்வதற்கு சாத்தியமில்லை, மேலும் மதமாற்றம் செய்யும் எண்ணமும் அவர்களிடம் இருந்தது எனவும் கூறமுடியாது. இந்த வெளிநாட்டவர்களிடமிருந்து எந்தவொரு புள்ளியிலும் மதமாற்றம் செய்யும் தூண்டுதலின் கூறு இருந்தது என்று கூறுவதற்கும் முகாந்திரம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

விசா கையேடு மற்றும் மத்திய அரசின் பல சுற்றறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், அண்மையில் புதுப்பிக்கப்பட்ட விசா கையேட்டின் கீழ் கூட, வெளிநாட்டவர்கள் மத இடங்களுக்கு வருவதற்கும், மத சொற்பொழிவுகளில் கலந்துகொள்வது போன்ற சாதாரண மத நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கும் எந்த தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றம் கண்டறிந்தது.

“இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 21 போன்ற சரத்துக்களைப் பார்க்கும்போது, வெளிநாட்டினருக்கு விசா வழங்கப்படும் போது, அத்தகைய வெளிநாட்டவர்கள் மத நடைமுறைகளைக் கடைப்பிடிக்க அல்லது நமாஸை மட்டும் செய்வதற்காக மஸ்ஜித்களுக்கு வருவதைத் தடுக்க முடியாது” என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், டெல்லியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னரே தப்லீக் ஜமாத்தின் செயல்பாடு நடைபெறாமல் இருந்தது, அதுவரை அது நடந்து கொண்டுதான் இருந்தது.

“இந்த நடவடிக்கை அரசாங்கத்தால் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்ட எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மனுதாரர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை பரிசீலிக்கும் போது இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் ”என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

“தங்குமிடம் கொடுப்பதில் தவறில்லை”

இந்திய குடிமக்கள் மற்றும் மஸ்ஜித்தின் அறங்காவலர்கள் தப்லீக் வெளிநாட்டினருக்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டுகளின் பேரில், உயர்நீதிமன்றம், இந்தியர்கள் மஸ்ஜிதில் வெளி நபர்களுக்கு இடமளிப்பதிலிருந்தோ அல்லது வெளிநாட்டினர் உள்ளிட்ட நபர்களுக்கு உணவு வழங்குவதிலிருந்தோ தடுக்கப்படுவதாகக் காட்ட எந்தவொரு அரசு சட்ட பதிவும் இல்லை என்று கூறியது.

“காவல்துறையினரால் பதிவுசெய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன, மேலும் வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி மற்றும் அறிக்கைகளின் பாரா வரை எல்லாம் நகல் போல் பதியப்பட்டு இருக்கின்றன” என்று நீதிமன்றம் கூறியது.

மஸ்ஜித்களின் சில அறங்காவலர்கள், இந்த நடவடிக்கைகளிலும், தனி நடவடிக்கைகளிலும் குற்றம் சாட்டப்படுகிறார்கள், மேலும் அந்த அறங்காவலர்களின் அறிக்கைகள் உள்ளன, அவை வெளிநாட்டினருக்கு எதிராகவோ அல்லது அந்த அறங்காவலர்களுக்கு எதிராகவோ பயன்படுத்தப்பட முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

“சாட்சிகளால் வழங்கப்பட்டதாகக் காட்டப்படும் பெரும்பாலான தகவல்கள் வதந்திகளின் தன்மைகளை கொண்டிருகின்றன ” என்று நீதிமன்றம் கூறியது.

“ஊடகங்களால் பிரச்சாரம்”

இந்தியாவில் கோவிட் -19 பரவுவதற்கு தப்லிகி வெளிநாட்டினர் காரணம் என அவதூறு கூறிய ஊடகங்களையும் உயர் நீதிமன்றம் கண்டித்தது.

“டெல்லி மர்க்காஸ்க்கு வந்த வெளிநாட்டினருக்கு எதிராக அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. இந்தியாவில் COVID-19 வைரஸ் பரவுவதற்கு இந்த வெளிநாட்டினர் தான் காரணம் என்று ஒரு பிம்பத்தை உருவாக்க இவ் ஊடகங்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வெளிநாட்டினருக்கு எதிராக துன்புறுத்தல்கள் இருந்தன” என்று உயர் நீதிமன்றம் கூறியது.

தொற்றுநோய் அல்லது பேரழிவு இருக்கும்போது ஆளும் அரசியல் சக்திகள் ஒரு பலிகடாவைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது என்றும், இந்த வெளிநாட்டினரை பலிகடாவாக்க முயற்சிகள் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் சூழ்நிலைகள் காட்டுகின்றன.

வெளிநாட்டினருக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மனந்திருந்தவும், அத்தகைய நடவடிக்கையால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய சில சாதகமான நடவடிக்கைகளை எடுக்கவும் இப்போது சரியான தருணம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுபவைகளுக்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது என்று ஐகோர்ட் கூறியது. இங்கு காட்டப்பட்ட பதிவுகள் மற்றும் சமர்ப்பிப்புகள் கூறுவது யாதெனில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விதமான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன.

“அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, பயண ஆவணங்களை மீறுவதற்கு அவர்களே பொறுப்பு என்றும் வைரஸ் போன்றவற்றை பரப்புவதற்கு அவர்களே பொறுப்பு எனறும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாம் அவர்களை சிறைகளில் அடைத்தோம்”. என உயர் நீதிமன்றம் சுட்டிகாட்டியது.

” FIR பதிவதில் உள்ள வன்மம்”

தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டினர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள் நோக்கம் இருந்தது என உயர்நீதிமன்றம் தெரிவிக்கிறது.

“இந்த விஷயத்தின் சான்றுகள் மற்றும் சமர்ப்பிப்புகள் கூறுவது யாதெனில் டெல்லி மர்க்கஸ்க்கு வந்த தப்லிக் ஜமாஅத் சார்ந்த முஸ்லீம் நபர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு உள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகள் மற்ற மதங்களைச் சேர்ந்த பிற வெளிநாட்டவர்கள் மீது எடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலைகள் காரணமாக, நடவடிக்கையின் பின்னணி மற்றும் அது எதை அடைந்தது என்பது நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட வேண்டும் ” என்றும் நீதிமன்றம் கூறியது.

தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்களின் மனதில் அச்சம் ஏற்பட்டடு உள்ளது என முஸ்லிம்களின் CAA எதிர்ப்பு மற்றும் NRC எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஐகோர்ட் குறிப்பிட்டு காட்டி உள்ளது.

இந்த நடவடிக்கை மறைமுகமாக, இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக எந்த வடிவத்திலும், எந்த அளவிற்கும் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை வெளிச்சமிட்டு காட்டுவதாக உள்ளது என உயர்நீதிமன்றம் கூறியது.

“மற்ற நாடுகளின் முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருப்பதற்கு கூட, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது”, என்று உயர் நீதிமன்றம் கவனித்து உள்ளது.

மனுதாரர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், 2005, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), தொற்று நோய்கள் சட்டம், 1897 மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது

source- The Leaflet.