உயர்த்திய கல்வி கட்டணத்தை திரும்ப பெற்றது சென்னை பல்கலைக்கழகம். மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.


சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் தேர்வுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. தேர்வு கட்டண உயர்வை எதிர்த்து அரசியல் அறிவியல் துறையை சார்ந்த மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதற்கொண்டு தொடர் போராட்டத்தினை  நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலேயே முதன்மை பல்கலைக்கழகம்.மிகவும் அதிகமாக நிதி பெறும் பல்கலைக்கழகமும் இதுதான்.ஆனால் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை தொடரந்து உயர்த்தி வருகிறார்கள். மாணவர் விடுதி ஊழல்,கட்டடங்களை கட்டுவதிலே ஊழல் ,பேராசிரியர் நியமனங்களிலே ஊழல் என்று பல்கலைக்கழக நிதிகள் வீணடிக்கப்படுகின்றன.இதன் சுமைகள் மாணவர்கள் மீது சுமத்தப்படுகின்றன.

மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த அடாவடி போக்கினை கண்டித்து துவக்கிய போராட்டம் பல இன்னல்களை கடந்து உறுதியாக நின்றது. பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகும்போதெல்லாம் நிதி இல்லை,நிதி இல்லை என்ற பதிலே கிடைத்தது. அதன் பிறகு உண்மை நிலவரத்தை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவலை பெற ஆயத்தம் செய்தனர்.
இந்நிலையில் போராட்டத்தின் நான்காம் நாளான இன்று பல்கலைக்கழக துணை வேந்தரின் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தை துவக்கினர்.

மாலை மூன்று மணி அளவில் மாணவர்கள் பிரதிநிதிகளை துணைவேந்தர் அழைத்ததின் பெயரில் கார்த்திகேயன்,இலக்கியன்,பச்சமுத்து,ரகு,அரவிந்த், இளவரசி,திருப்பதி ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்த துணை வேந்தர் அதே சமயம் உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற்று கொள்கிறோம் என்றும் அறிவித்தார்.குடிநீர் ,கழிவறை ,விடுதி பிரச்சனைகளையும் மாணவர்கள் பேசிய போது இயன்ற வரை தீர்த்து வைக்கிறேன் என்றும் வாக்களித்தார்.

மாணவர்களின் மீது அடக்குமுறை ஏவப்படும் போது நமக்கென்ன என்று ஒதுங்கி சென்ற பல மாணவர்களை போல இல்லாமல் உறுதியாக நின்று இறுதி வரை போராடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசத்தின் குரல் தன் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

மாணவர் சமுகம் எழுச்சி பெற்றால் பல சமுக மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.

கல்வியையும்,கல்வி நிலையங்களையும் பாதுகாக்க பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.அதில் இது ஒரு சிறந்த முன்னெடுப்பாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here