தொழிலாளர் சட்டங்களை நாசப்படுத்தும் யோகியும்,பா.ஜ.கவும் – சியாம் சுந்தர்.

பிஜேபி ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு நாட்டில் உள்ள 38 தொழிலாளர் நல சட்டங்களில் 35 சட்டங்களை நீக்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு காரணமாக புலம்பெயர்ந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பலர் தமது சொந்த மாநிலத்திற்கு திரும்பி வந்துள்ளனர். மேலும் கொரோனா நோய் தொற்றினால் பல பன்னாட்டு நிறுவனங்கள் சீன நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. அவர்களை தமது மாநிலத்திற்கு ஈர்ப்பதற்கு, புலம்பெயர்ந்த தன் மாநில மக்களுக்கு சொந்த ஊரிலேயே வேலை கிடைப்பதற்கும் இது உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

தொழிலாளி, அவர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்கள் தொழில் செய்யும் நாடும் அதன் பொருளாதாரமும் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய ஒரு சங்கிலித்தொடர் போன்றது ஆகும், இதில் ஒருவருக்கு ஏற்படும் சாதகங்களும் பாதகங்களும் இந்த சங்கிலி தொடரில் தொடர்புடைய மற்றவற்றிற்கும் சாதக பாதகங்களை உண்டாக்கும்.இந்த முடிவானது நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன மாற்றங்களை இந்த சங்கிலி தொடரில் ஏற்படுத்தும் என்று விரிவாகப் பார்க்கலாம்.

புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனத்தின் பார்வையில் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை பார்க்கக்கூடிய ஆட்களை வைத்து அதிக லாபத்தை பெற வேண்டும் என்ற நோக்கமே இருக்கும். அதற்கு ஏற்ப தொழிலாளர் நலச்சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசு சொல்வது போல சில நிறுவனங்கள் தங்கள் தொழிலகங்களை புதிதாக நிறுவுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். இதனால் அரசு நினைப்பதை போல் குறுகிய காலத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்க கூடிய சூழ்நிலை உருவாகும்
உதாரணத்திற்கு நாம் ஒரு போக்குவரத்துக் கழகத்தை தொழில் தொடங்க வரும் புதிய நிறுவனமாக எடுத்துக் கொள்வோம். அவர்கள் குறைந்த வயதில் இளைஞர்களாக பார்த்து குறைந்த சம்பளத்தில் பணிக்கு அமர்த்துவர். நிறுவனம் நினைத்தது போல குறைந்த வயது காரணமாக அந்த டிரைவரால் நீண்ட நேரத்திற்கு பேருந்தை இயக்க முடியும். அந்த நிறுவனமும் அதிக லாபத்தை பெறமுடியும்.

அந்த டிரைவர் சில ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணி செய்து அனுபவம் பெறுகிறார் என்று வைத்து கொள்வோம்.அவருடைய பணி அனுபவம் காரணமாக அவருடைய ஊதியம் அதிகரித்து இருக்கும். அவருடைய வயது மூப்பு காரணமாக தனது இளைய வயதில் வேலை செய்ததை போல அதிக நேரம் பேருந்தை இயக்க முடியாது. மேலும் அவருக்கு திருமணமாகி வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பார்கள். அதன் காரணமாகவும் அவர்களால் நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய முடியாது.

இப்பொழுது அந்த நிறுவனத்திற்கு யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை கொடுத்தால் அந்த நிறுவனம் என்ன செய்யும்? நமது நாட்டில் வேலை இல்லாத இளைஞர்கள் பலர் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி அந்த நிறுவனம் புதியவர்களை வேலைக்கு எடுக்கும். அதிக சம்பளம் பெறுகின்ற அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும். மேலும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலை போய்விடும் என்ற பயத்தை ஏற்படுத்தி அவர்களை அதிக நேரத்திற்கு வேலை வாங்கும். இதன் மூலம் அந்த நிறுவனத்தால் குறைந்த செலவில் அதிக லாபத்தை எடுக்க முடியும்.

இந்த மாற்றத்தினால் தொழிலாளி வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று விரிவாகப் பார்ப்போம். பணியில் இருக்கின்ற தொழிலாளி தன்னுடைய வேலை எந்த நேரத்திலும் போய் விடும் என்ற பயத்திலேயே வேலையில் இருப்பார். அவர்கள் எந்தப் பெரிய பொருளாதார முடிவுகளும் எடுக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு வாகனம், வீடு போன்ற அதிக முதலீடு தேவைப்படுகின்ற எந்த விஷயத்தையும் செய்ய மாட்டார்கள். அவர்களுடைய வாங்கும் திறன் வெகுவாக குறையும். அவர்கள் வாங்கும் சம்பளம் முழுவதையும் தங்களுடைய பிற்கால வாழ்க்கைக்கு வேலை போன பின்பு தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு சேமிக்கத் தொடங்குவர்.

இவ்வாறு ஒவ்வொரு தொழிலாளியும் செயல்பட ஆரம்பித்தால் நாட்டிலுள்ள பிற தொழில் நிறுவனங்கள் பாதிப்படைய ஆரம்பிக்கும். மக்கள் கார் வாங்காததால் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடையும். ரியல் எஸ்டேட் வீழ்ச்சி காரணமாக அதனைச் சார்ந்துள்ள சிமெண்ட், ஸ்டீல், செராமிக்ஸ், பெயிண்ட் போன்ற அனைத்து துறைகளும் பாதிப்படையும்.

வங்கிகளும் தொழிலாளிகளுக்கு எந்த நேரத்திலும் வேலை போய்விடும் என்ற ரிஸ்கின் காரணமாக அவர்களுக்கு எந்த வங்கிக் கடனையும் அளிக்காது. அவ்வாறு வங்கிகள் கடன் அளித்தாலும் ஒரு தொழிலாளி வேலை இழந்தவுடன் கடன்களை திரும்ப சரியாக செலுத்த மாட்டார். இதனால் வங்கிகள் வாராக்கடன் காரணமாக பாதிப்படையும். இதன் காரணமாக நீண்ட காலநோக்கில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்படையும்.

மேலும் மக்கள் வேலை இழந்த காரணத்தினால் செலவை மிச்சம் பிடிக்க பேருந்துகளில் பயணம் செய்வதை குறைத்து நடந்தோ, சைக்கிளிலோ செல்ல ஆரம்பிப்பார்கள். கடைசியில் பணி நீக்க நடவடிக்கையை ஆரம்பித்த நிறுவனத்திற்கே பாதிப்பாக முடியும்.

அதனால் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போக ஏற்படுத்தும் சட்டங்கள் எல்லாம் கடைசியில் இந்த சங்கிலித்தொடரில் இருக்கும் அனைவருக்கும் ஆபத்தாக முடியும்

இதற்கு நாம் கடந்த கால தொழிற் சங்க வரலாற்றை ஆராய்ந்து பார்த்தாலே நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடியும். நமது நாட்டில் தொழிலாளர் நலச் சட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முதலாளிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டன. என்ன நம்ப முடியவில்லையா? தொழிலாளர் நலச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் முதலாளிகளின் நலனுக்காக தான் ஏற்படுத்தியது.

தொழில் துறையின் வளர்ச்சி காரணமாக பல நூற்பாலைகள் நமது நாட்டில் 1910ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டன. இதில் வேலை செய்யும் தொழிலாளிகள் சிறு குழுக்களாக சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் இது போல பலநூறு சிறு குழுக்கள் சங்கங்களாக செயல்பட ஆரம்பித்தன. இந்த சங்கங்கள் அறிவிக்கப்படாத வேலை நிறுத்தத்தை அறிவித்து தமது சங்க ஆட்கள் வேலைக்குச் செல்ல விடாமல் தடை செய்தனர். நமது இந்திய நாட்டில் 1920 முதல் 24 ஆண்டு வரையில் இது போல அறிவிக்கப்படாத ஆயிரக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றது. மேலும் பணியில் இருக்கும் தொழிலாளிகள் தங்களது மேற்பார்வையாளர்களை பணி விரோதம் காரணமாக தாக்கத் தொடங்கினர்.மேலும் இந்த சங்க குழுக்களுக்குள் சண்டைகள் தோன்ற ஆரம்பித்தன.இதில் பலர் கொலையும் செய்யப்பட்டனர். இதனால் நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதன் காரணமாகத்தான் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற நோக்கில் தொழிலாளர்களுக்கு பல நலம் தரும் சட்டங்களை இயற்ற வேண்டிய நெருக்கடிக்கு அரசு தள்ளப்பட்டது. தொழிற்சங்கங்கள் நிறுவுவதற்கும் பல வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு அவையும் சட்டமாக்கப்பட்டது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் தொழிற்சங்கம் வாடியா என்பவரால் நமது சென்னையில் ஏற்படுத்தப்பட்டது என்பது நமக்கெல்லாம் பெருமையாகும்.

இதன் காரணமாக தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தங்கள் பெரும் அளவில் குறையத் தொடங்கின. நிறுவனத்தின் உற்பத்தியும் பெருகத் தொடங்கியது. நாடு விடுதலை அடைந்த பிறகு சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் மேலும் சட்டங்கள் இயற்றப்பட்டன. இச்சட்டங்கள் எல்லாம் தொழிலாளர் நலனுக்காக மட்டும் இயற்றப்பட்டது அல்ல. தொழிலாளி முதலாளி மற்றும் நாட்டின் நலன் என்று அனைத்து தரப்பையும் கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் ஆகும்.

இச்சட்டங்களை புதிதாக வருகின்ற நிறுவனத்திற்காக நீக்குவது என்பது குளவிக் கூட்டில் கல் எறிந்ததற்கு ஒப்பானதாகும். குறுகிய காலத்தில் இது பலன் அளித்தாலும் நீண்ட நோக்கில் இது இந்த சங்கிலித்தொடரில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி விடும். அதனால் ஒரு மாநில அரசு எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நோக்கில் செயல்படுவது மிகப்பெரிய கேட்டினை உண்டாகும்.

வரலாறு நமக்கு பல படிப்பினைகளை சொல்லி கொடுத்து இருக்கிறது. இந்த வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ளவேண்டும். இதை உத்தரபிரதேச அரசு செய்யுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்