உண்ணிகள் போல் இரத்தத்தை சுவைக்காது புலி!- தோழர் தமிழச்சி

மே 18, 2009-இல், நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில மாதத்தில் பாண்டிச்சேரியில் பெரியார் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்காக தோழர் கொளத்தூர் மணி, சீமான் வந்திருந்தார்கள். பிரான்சில் இருந்து சென்றிருந்த எனக்கு அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தோழர் கொளத்தூர் மணி மற்றும் சில தோழர்கள் என்னை அவர்களுடன் அழைத்துச் சென்றார்கள். நிகழ்ச்சி நடைபெறும் நுழைவு பகுதியில் பெரிய போஸ்டர், கட்அவுட் காணப்பட்டது. பெரியார் உருவம் வரையப்பட்டிருந்த பெரிய கட்அவுட்டுக்கு அருகில் தோழர் கொளத்தூர் மணி ‘கட்அவுட்’ சற்று சிறிய அளவில் இருந்தது. தோழர் கொளத்தூர் மணி என்னிடம் சொன்னார், “இங்கே பாருங்கள் தோழர், எனக்கும் சேர்த்து ‘கட்அவுட்’ வைத்திருக்கிறார்கள். இதுதான் முதன்முறை, இது எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது. இனி இப்படி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.”

அந்த நிகழ்ச்சியில் தான் தோழர் கொளத்தூர் மணிக்கு ‘கட்அவுட்’ வைத்த முதல், கடைசி நிகழ்ச்சியாக இருந்திருக்கும். பெரியார் இயக்கங்களின் நிகழ்வுகள், போராட்டங்கள், அறிக்கைகள், பிரச்சாரங்கள் என அனைத்தையும் உன்னிப்பாய் கவனித்து வரும் நான் அதற்கு பிறகு 2019 வரையில் தோழர் கொளத்தூர் மணிக்கு ‘கட்அவுட்’ வைக்கப்படவே இல்லை என்பதையும் கவனித்து வருகிறேன்.

“தன்னை எதிலும் முதன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் தோழர் கொளத்தூர் மணி என்பது அவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.”

பாண்டிச்சேரியில் நடைபெற்ற அந்நிகழ்ச்சி மேடையில் சீமான் பேசிக் கொண்டிருந்தார். நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு மாதங்கள் என்பதால் இப்போதுள்ள ‘பாசறை தம்பிகள்’ அப்போது இல்லை. சீமானை சுற்றி பெரியார் தொண்டர்கள் தான் இருந்தார்கள். பெரியார் இயக்க ஆதரவாளர்களாக முன்பு இருந்த ராஜீவ் காந்தி, மணி செந்தில் உள்ளீட்ட நாம் தமிழர் கட்சியின் இன்றைய செயல்பாட்டாளர்கள் உள்பட பலரும் சீமானுடன் நெருங்கி வர பெரியார் இயக்க மேடை பிரச்சாரமும் ஒரு காரணமாக இருந்தது என்பதை அவர்களாலும் மறுக்க முடியாது.

தவிர, சீமானின் அன்றைய காலக்கட்டங்கள் கோடம்பாக்கத்தை சுற்றியும், ‘சொர்க்கம் மதுவிலே’ என்ற கும்மாளங்களோடும், நடிகைகளுடன் கிசுகிசு பணியிலும் சீமான் களமாடிக் கொண்டிருந்த காலமது என்பதால் ராஜீவ் காந்தி, மணி செந்தில் போன்றவர்களுக்கு நெருங்க முடியாத சீமானாக தான் சீமான் இருந்தார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த மணி செந்திலும், கோவையைச் சேர்ந்த ராஜீவ் காந்தியும் 2019 களுக்கு முன்பு பெரியாரிய சிந்தனைகளில் எத்தனை தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை அப்பகுதி பெரியார் இயக்கத் தொண்டர்கள் நன்கு அறிந்தவர்கள். பொது ஊடக தளங்களில் குறிப்பாக ‘ஆர்குட்’ இல், மணி செந்தில் பெரியார் கருத்துக்களை மேற்கோளிட்டு சாதிய / மதவாதிகளுடன் தீவிரமாக இயங்கியவர். அப்போது அவரிடம் விவாத நெறி இருந்தது. அவை நாம் தமிழர் கட்சிக்கு மாறிய பிறகும் ஆரம்ப விவாதங்களில் தொடர்ந்தது. நாளடைவில் பெரியார் ஆதரவு நிலைப்பாடு வெளிப்படையாய் பேசுவது குறைந்து போய் திராவிடர் எதிர்ப்பை தீவிரப்படுத்தினார். அது அவருடைய கருத்துரிமை!

இன்றைய நாம் தமிழர் கட்சி தம்பிகள் ஆபாச வசவுகளுக்கு பெயர் போனவர்கள். தி.மு.க, வை.கோ, பா.ம.கவின் முரட்டுத் தொண்டர்களைக் கூட இவர்கள் ஓரங்கட்டி விடுவார்கள். அந்தளவுக்கு பெண்கள் அரசியல் பேசும் தளங்களிலும் ஆஜராகி தாறுமாறாக வசைபாடும் இளைஞர்கள். இந்த அநாகரிகத்தைச் செய்யாதவர்கள் மணி செந்தில், ராஜீவ் காந்தி. அந்த பக்குவத்தை கொடுத்திருப்பது பெரியாரின் பெண் விடுதலை சார்ந்த அவர்களுடைய புரிதல். பெண்களை இழிவு செய்வது அநாகரிகம் என்ற அறிவு அவர்களுக்கு இருப்பதால் இனியும் அதை செய்யவும் மாட்டார்கள் என்னும் நம்பிக்கை அரசியல் விமர்சகர்களான என்னை போன்ற பெண்களுக்கு உண்டு. அதை தோழர் கொளத்தூர் மணி மீது ‘அவதூறு’ சொல்வதன் மூலம் சிறிது அசைத்திருக்கிறார் மணி செந்தில். எனவே நான் இங்கு இன்னொரு நிகழ்வையும் பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு மணி செந்தில் மடல் ஏற்படுத்தி இருக்கிறது.

மணி செந்தில் கூறியதைப் போல் சீமான் அண்ணனுக்கு தெரியாமல்

தோழர் கொளத்தூர் மணிக்கு மடல் எழுதியதைப் போல், நான் மணி அண்ணனுக்கு தெரியாமல் இந்த மடலை எழுதுவதாக கூறமுடியாது. முதலில் இது மடல் அல்ல. நடந்த உண்மைகளை மக்கள் முன் நிறுத்தும் அரசியல் கட்டுரை.

2009 இல், கோவையில் நடைபெற்ற பெரியார் இயக்கத்தின் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொள்ள நேரிட்டது. அப்போது தோழர் கு.இராமகிருஷ்ணன் வீட்டிற்கு நானும், தோழர் மதிமாறனும் சென்றிருந்தோம். அன்று அப்பகுதியில் நடைபெற்ற கூட்டம் என்பதால் அங்கும் சென்றிருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கும் தோழர் கொளத்தூர் மணி, சீமான் வந்திருந்தார்கள். அங்கு நிகழ்ச்சி முடிந்து சீமான் கீழே இறங்கி வந்த போதுதான் நான் கேட்டேன்,

“ஒரு மனுசன் ஒரு மணி நேரமா என்ன பேசறதுன்னே தெரியாமல் இப்படியா கத்துவது” என்று. இந்த கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். திருதிருவென முழித்து சற்றென சமாளித்து, “நீங்கள் அறிவார்ந்த நாட்டில் இருந்து வந்திருக்கிறீர்கள். இங்கு இருப்பவர்களுக்கு இப்படி கத்தி கத்தி மணிக்கணக்கில் பேசினால்தான் புரிகிறது” என்று கூறிவிட்டு இதற்கு மேலும் இங்கு நிற்பதா என்று யோசித்துக் கொண்டிருந்த போது ராஜீவ் காந்தி அங்கு வந்தார்.

         என்னை நோக்கி, "அக்கா வீட்டில் விருந்து வைத்திருக்கிறோம். தோழர்கள் வருகிறார்கள், நீங்களும் வரவேண்டும்" என்றார். அருகில் தோழர் கொளத்தூர் மணியும் இருந்தார். தோழர் பரிமளராஜன் உள்பட இன்னும் சில பெரியார் இயக்கத் தோழர்கள், நான் வழக்கறிஞர் கலையரசன் தோழர் வீட்டுக்கு சென்றோம். 

சீமானை சுற்றி பாதுகாவலர்கள் போன்று பத்து, பனைந்து பேர். நிகழ்ச்சியிலும் உடன் இருந்த அதே நபர்கள் அந்த வீட்டிற்கும் வந்திருந்தார்கள். எங்களை அங்கிருந்த ஒரு அறைக்குள் நாற்காலிகளில் உட்கார வைத்தார்கள். நான் மட்டுமே பெண். மற்ற அனைவரும் ஆண்கள். அதில் மணி செந்திலும் இருந்தார். சற்று சிறிய அறை என்பதால் அங்கிருந்தவர்கள் மீது மது வாடை வீசுவதை உணர முடிந்தது. மணி செந்தில் குடித்து இருந்தாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் மற்ற அனைவரும் மது குடித்து இருப்பது வாடையிலும், பேச்சியிலும் தெரிந்தது.

நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்ட போது நான் கேட்டேன், “பொது நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள நீங்கள் எப்படி குடித்துவிட்டு வரலாம்?”

அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் சற்றென கோபத்தோடு விவாதிக்க முற்பட்டார்கள். பதிலுக்கு விடாமல் நானும் பேச ஆரம்பித்தேன்.

மணி செந்தில், எங்களை அமைதிபடுத்தும் பொருட்டு சற்றென இடைமறித்து பேச்சை திசைமாற்றினார். வேறொரு நபர், விடுதலைப் புலிகளின் இயக்கப் பாடலை பாட ஆரம்பித்தார். இன்னும் சிலர் தங்களுக்கு முன் இருந்த மேஜையில் தாளம் போட ஆரம்பித்தார்கள்.

“நீங்க செய்யற வேலையைப் பார்த்தா பொறுக்கித்தனமாக இருக்கிறதே. குடித்துவிட்டு இயக்க நிகழ்ச்சிக்கு வந்ததோடு, இங்கு வந்தும் ஈழத்தின் இயக்கப் பாடல்கள் பாடி தாளம் போடுகிறீர்களே, எதுக்கு இந்த பொழப்பு?” என்று கேட்டேன்.

அவ்வளவுதான்,,, மணி செந்திலை தவிர, மற்ற அனைவரும் கோபத்தோடு எழுந்து என்னிடம் கத்த ஆரம்பித்தார்கள். கூச்சல் கேட்டு தோழர் கொளத்தூர் மணியும், சீமானும் ஓடி வந்தார்கள். அமைதிபடுத்த முயற்சித்தார்கள்.

குடிக்காரன்களில் ஒருவர் ‘பஜாரி’ என்று ஏதேதோ பேசிக் கொண்டே போனான். அவனை அடிக்க முன் நகர்த்தேன். பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களும் உள்ளே வந்தார்கள். தோழர் கொளத்தூர் மணி என்னை தடுத்து வெளியே அழைத்துச் சென்றார்.

“என்ன தோழர், குடித்துவிட்டு கும்மாளம் போடுகிறார்கள்? இவர்களை எப்படி பெரியார் இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் அனுமதிக்கிறீர்கள்” என்றேன். தோழர் கொளத்தூர் மணி மேற்கொண்டு கூறிய சில தகவல்களை இங்கு தவிர்க்க விரும்புகிறேன். ஒருவேளை நான் கூறிய சம்பவம் உண்மையா? என்று அவரிடம் விசாரிப்பவர்கள் அவர் என்னிடம் என்ன கூறினார் என்பதையும் கேட்டறியவும்.

சீமான் மீதும் அன்றைய 2019, 2010 களில் அவருடன் இருந்த நபர்கள் மீதும் எனக்கு எரிச்சலும் கோபமும் ஏற்படுத்த காரணம் அவர்களுடைய இந்த நடவடிக்கைகள் மட்டுமல்ல, இவர்களின் பல நடவடிக்கைகள் குறித்தும் பல தகவல்கள் அறிந்து கொண்டதால் பெரியார் இயக்கத் தோழர்கள் எதற்காக அனுமதிக்கிறார்கள் என்னும் கேள்வியும் என்னிடம் இருந்தது. இதை தோழர்களிடமும் விவாதித்திருக்கிறேன்.

2009 இல், பாண்டிச்சேரியில் நடைபெற்ற பெரியார் இயக்கத்தினரின் நிகழ்ச்சிக்கு தோழர் கொளத்தூர் மணியுடன் சென்றிருந்தேன் அல்லவா? மேடையின் மீது நின்று கொண்டு சீமான் பேசி முடித்துவிட்டு இறுதியாக ஒரு அறிவிப்பு செய்தார். “நாம் தமிழர் கட்சி ஆரம்பித்துள்ளேன். விரும்புபவர்கள் அனைவரும் நம் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அங்கிருந்தவர்கள் அனைவரும் பெரியார் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள். அதுவும் பெரியார் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான தோழர் கொளத்தூர் மணி முன்பேயே இப்படியொரு கோரிக்கையை வைக்க சீமானுக்குள் எத்தனை சுயநலம் இருந்திருக்கும்? மற்ற இயக்கங்களில் இப்படி பேசுவதற்கு வாய்ப்பு அளிப்பார்களா?

சீமானின் இந்த பேச்சுக்கு சிறு எதிர்ப்பு எதுவும் அங்கு இல்லை. நான் சற்றென அதிர்ச்சியாகி, எனது இடது பக்கத்தில் அமர்ந்திருந்த தோழர் கொளத்தூர் மணியை நோக்கி, “என்ன தோழர், இவன் இப்படி பேசுகிறான் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே.,” என்று கேட்டேன்.

“கொள்கையில் தெளிவில்லாதவர்கள் செல்ல எண்ணுபவர்கள் போகட்டும். கொள்கையோடு இருப்பவர்கள் நம்மோடு இருக்கட்டும்” என்றார்.

தோழர் கொளத்தூர் மணியின் பதில்கள் எனக்கு திருப்திகரமானதாக இல்லாததோடு, தோழர் மீதும் பெரும் கோபம் வந்தது.

“நம்மை நோக்கி வரும் இளைஞர்களை கொள்கையில் தெளிவில்லை என்பதைவிட, அவர்களை கொள்கை ரீதியாக தயார் படுத்தி அணி திரட்ட வேண்டிய கடமை நமக்கிருக்கிறதல்லவா? நீங்கள் எப்படி இப்படி பேசுகிறீர்கள் என்றேன்… அதே பதற்றத்தோடு…”

தோழர் கொளத்தூர் மணி நிதானமாகச் சொன்னார், “இல்லை தோழர் போக நினைப்பவர்கள் போகட்டும்.”

தோழர் கொளத்தூர் மணி பெருந்தன்மையாக பேசுவதைப் போல் எனக்கு அப்போது தோன்றவில்லை. பெரியார் இயக்கத்தை கூறுபோட வந்த நயவஞ்ச நரி ஒன்றுக்கு தராதரம் தெரியாமல் இடம் கொடுத்திருப்பதாக எனக்கு தோன்றியது.

             2009 பாண்டிச்சேரி நிகழ்வில் தோழர் கொளத்தூர் மணியுடன்

அன்று நான் சொல்லியதை இன்று ‘சரி’ என்று தோழர் கொளத்தூர் மணி நினைக்கலாம். ஆனால் அன்று தோழர் சொன்னது இன்று ‘சரி’ என்று தோன்றுகிறது. அப்படியொரு அபத்தமான அவதூறு மடல் ஒன்றை தோழர் கொளத்தூர் மணிக்கு எழுதி இருக்கிறார் இன்றைய நாம் தமிழர் கட்சியின் பாசறை தம்பி மணி செந்தில்.

“இலட்சியப் பற்றுகளை தவற விட்டுவிட்டு வரலாற்றில் வீழ்ந்து கிடக்கிறார்.”

“இல்லாத திராவிடத்தை காக்க நிற்கிற உங்களது பரிதாபநிலை எதற்காக”

“கோபாலபுரத்து தெருக்களில் திமுக தலைவரின் சந்திப்புக்காக காத்துக் கிடக்கிறார்”

“சீமான் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்கிறீர்கள். ஆனால் சீமானை பற்றி பேசி விளம்பரம் தேடி கொள்ளுமளவிற்கு நீங்கள் காணாமல் போய் விட்டீர்கள்”

“தம்பி (சீமான்) மீது உங்களுக்கு ஏற்படுகிற அந்த வஞ்சினம் தான் உங்களை இவ்வாறெல்லாம் பேச வைக்கிறது”

இவை போன்ற வார்த்தைகளை வஞ்சக நயம் கொஞ்சும் எதுகை மோனகையோடு தோழர் கொளத்தூர் மணிக்கு மடல் வரைந்து நியாயம் கேட்கிறார் மணி செந்தில். இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான மடலை கைதேர்ந்த அரசியல்வாதிகளால் மட்டுமே எழுத முடியும். மணி செந்தில் வரைந்தது மடல். மடலுக்கு நாம் எதிர்வாதம் வைப்பது அரசியல் விவாத கட்டுரை. இதை ஏன் மணி செந்திலால் செய்ய முடியவில்லை? எந்த தார்மீக அறச்சீற்றம் மணி செந்திலை இப்படி எழுத வைத்திருக்கிறது?

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைதேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘திராவிடர் பன்றிகள்’, ‘எச்ச சோறு தின்னும் உங்களுக்கே இத்தனை அதப்புன்னா…’ என்று பெரியாரியக்கவாதிளை கேவலமாக விமர்சிக்க ஆரம்பித்த சீமான், ‘திராவிடர் சுடுகாடு குறித்து பேசினால் எனது ஆட்சியில் ஓரமா போய் கூவு என அடக்கி வைப்பேன்’, ‘திராவிடர் சிலைகளை தகர்த்து வைப்பேன்’ என்றெல்லாம் பலத்த கரகோஷத்திற்கு, கைதட்டலுக்கு மத்தியில் பேசிவிட்டு, அனைத்திற்கும் மேலாக ‘ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கூறி’ இன்று அனைத்து கட்சிகள், இயக்கங்களினால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும் சீமான், இவை குறித்த தொலைக்காட்சி விவாதங்களின் போது, மிரண்டு, உளறி, மூக்கு நோண்டிக் கொண்டு தாடையை தடவிக் கொண்டு அபத்தங்களுக்கான விளக்கங்களை வண்டு முருகன் பாணியில் சீமான் பேசிவருகிறார்.

சீமான் யாரை எல்லாம் விமர்சித்தாரோ அவர்களை நோக்கி கேள்விகளை எழுப்புகிறார்கள் பத்திரிகையாளர்கள். அவ்வாறு தோழர் கொளத்தூர் மணியிடம் விகடன் பத்திரிகை பேட்டி எடுத்தது. அதில் தோழர் கூறிய வாதங்களின் மீது மணி செந்திலுக்கு எரிச்சல் வருகிறது. பதில்கள் நாம் எதிர்ப்பார்த்தது போல் இல்லையே என அறச்சீற்றம் கொண்டதன் விளைவு சீமான் அண்ணனுக்கு தெரியாமல் பொதுவெளியில் மடல் எழுதுகிறாராம்.

மணி செந்தில் நீங்கள் எழுதும் மடல்களை ஒருமுறை மீளாய்வு செய்யுங்கள். உங்கள் ‘பச்சை பொறுக்கித்தனம்’ தெரியும்.

“சீமான் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்கிறீர்கள். ஆனால் சீமானைப் பற்றிப் பேசி விளம்பரம் தேடி கொள்ளுமளவிற்கு நீங்கள் காணாமல் போய் விட்டீர்கள் அண்ணா..” என்று மடல் எழுதும் மணி செந்தில் சொல்ல வருவது என்ன?

உலகப் புகழ் பெற்ற பெரும் அரசியல் தலைவர் சீமானைப் போன்று அறியப்படாத நபராக உள்ள தோழர் கொளத்தூர் மணி சீமானை பற்றி விமர்சிப்பதன் மூலம் புகழ் அடைகிறார் என பொருட் கொள்ளலாமா? மணி செந்தில் கருத்து இவ்வாறாக இருப்பீன், காட்சி பிம்பங்களில் குழம்புகிறார் மணி செந்தில்.

தோழர் கொளத்தூர் மணி தோழர் கு.இராம கிருஷ்ணன் இருவரையும் பெரியார் இயக்கத் தோழர்களில் பெரும்பான்மையோர் அண்ணன் என்றே அழைப்பார்கள். அதன் மீது எப்போதும் எனக்கு விமர்சனம் இருந்து வருகிறது. அதேப்போல் தந்தை பெரியார் என்பதன் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. புரட்சிகர இயக்க செயல்பாடுகள் கொண்டுள்ள இயக்கங்களில் இவ்வாறான செண்ட்டிமென்ட் வார்த்தைகளை தவிர்த்து ‘தோழர்’ என்று அழைப்பது சிறப்பானதாக இருக்கும் என்று என்னை போன்ற தோழர்களும் விமர்சனம் செய்ததுண்டு.

மணி செந்தில் பெரியார் இயக்க ஆதரவாளராக இருந்த போது, தோழர் கொளத்தூர் மணியை ‘கதாநாயகனாக’, ‘தேவ தூதனாக’ கருதி அவரது கரங்கள் தொழுதிருப்பதாக அவருடைய மடல் விளக்குகிறது.

கட்அவுட் இல்லாத கதாநாயகனாக, தேவ தூதாக இருந்த தோழர் கொளத்தூர் மணியை தொழுத கண்கள் அக்மார்க் கோடம்பாக்கம் ஏரியா கதாநாயகனே கட்அவுட் களில் மிளிர்ந்து மூஷ்டியை தூக்கி கர்ஜித்து நான் புலி,,, புலி,,, என்றால் கட்அவுட் இல்லாத கதாநாயகன் ‘நாட்அவுட்’ ஆவது கவர்ச்சி அரசியல் ஆட்டத்தில் சகஜமானதுதான்.

இது ‘கலை இரசிகர்கள்’ மனப்பான்மையைக் கொண்டது. சினிமா இரசிகர்களிடம் மிகுதி காணப்படும் குணாம்சம். தல ‘மாஸ்’ காட்டுவது புரட்சிகர சமூக சீர்திருத்தவாதிகளின் தலைமை பண்பில் உள்ளவர்களின் நோக்கமல்ல. சே குவேரா, லெனின், ஸ்டாலின், மாவோ, அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உள்ளீட்ட மக்களுக்கான தலைவர்கள் யாரும் ‘கட்அவுட்’ கலாச்சாரத்தை இரசிக்க மாட்டார்கள். தோழர் கொளத்தூர் மணியிடமும் அந்த குணாம்சம் இருந்ததால் தான் தனக்கு வைக்கப்பட்ட முதல் கட்அவுட் மீது விமர்சனம் வைத்து அந்த கலாச்சாரத்தை தொடரவிடவில்லை.

காட்சிப் பிழையை கையாளும் மணி செந்தில் இந்த இடத்தில் தான் கருத்து பிழையை மேற்கொள்கிறார். பிழைப்புவாதிகள் செய்யும் வேலையல்லவா இது? பிழைப்புவாதியை அண்டி நிற்கும் மணி செந்திலிடம் இவை இல்லாவிட்டால் எப்படி?

இவர் கோணத்திலேயே இவ்விவாதத்தை தொடர வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் என்னைவிட வாசகர் எண்ணிக்கை சீமானுக்கு குறைவாக இருப்பதால், சீமானை விட நானே மிகப் பிரபலமான ஆள் என்று ஒரு வாதத்தை நான் தொடருவேன் என்றால் அதற்கு பெயர் ஆணவச் செருக்கு. கருத்தாளர்களுடன் விவாதிப்பதற்கு கருத்துக்கள் தான் தேவை. ஆணவச் செருக்கல்ல. மணி செந்தில் செய்வது அதைத்தான். அவருடைய அரசியல் புரிந்தல் அவ்வளவே.

இந்த மொக்கை மடலை வாசித்த பிறகு தோழர் கொளத்தூர் மணி கூறியது நினைவுக்கு வருகிறது. “கொள்கையில் தெளிவு இல்லாதவர்கள் போனால் போகட்டும்” என்றாரே… மணி செந்தில் சரியான முடிவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் மடல் எழுதும் பெரும் பணியை மேற்கொண்ட மணி செந்தில் அதற்கு காரணமான சர்ச்சையையும் பேச வேண்டுமல்லவா? அதை மடலில் அங்கும் இங்குமாக சுட்டிக்காட்டுகிறார். அதாவது தோழர் கொளத்தூர் மணி விகடன் பேட்டியில் கூறியது:

“2008-ல் விடுதலைப்புலிகளின் ஊடகவியல் பிரிவு சார்பில் திரைப்படம் எடுப்பதற்கு தொழில்நுட்பம் தெரிந்த ஓர் இயக்குநர் வேண்டும் என என்னிடம் கேட்டார்கள். சீமானைப் பரிந்துரைத்தேன். அதையடுத்தே விடுதலைப்புலிகள் ஊடகவியல் பிரிவினருக்குப் பயிற்சியளிக்க ஈழத்துக்குச் சென்றார் சீமான். 10 நாள் பயிற்சி முடிந்து திரும்பி வரும்போது, ஊடகவியல் பொறுப்பாளர் சேரலாதனிடம் ‘நான் பிரபாகரனைப் பார்க்க வேண்டும்’ என வற்புறுத்தியுள்ளார்.

அன்றைய தினம், புலிகளின் ராணுவக் கல்லூரி பட்டமளிப்பு விழா. அதற்காகத் தலைவர் பிரபாகரன் புறப்பட்டுக்கொண்டிருந்த போது சீமான் சந்தித்துள்ளார். சீமான் நுழைவாயிலில் சென்று வெளிவருவதற்கு 12 நிமிடம் தரப்பட்டது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே தலைவரைச் சந்திக்க முடியும். இதைவைத்துப் பார்த்தால், நான்கு நிமிடங்களுக்குமேல் அவர் தலைவருடன் கழித்திருக்க வாய்ப்பில்லை. அதனால், ‘தலைவருடன் ஆமைக்கறி தின்றேன்’, ‘போர்க்கப்பலில் அரிசி மூட்டையில் தலைவரோடு அமர்ந்து போர்ப்பயிற்சி எடுத்தேன்’ என்று சீமான் சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை.” என்று கூறினார்.

மணி செந்திலின் அறச்சீற்றமும் அவதூறு மடலும் இந்த பேட்டியின் அதிருப்தியின் மீது கட்டமைக்கப்பட்டது. சீமான் உங்களிடம் பேசும் போது நானும் அருகில் இருந்தேனே. அப்போதெல்லாம் ஏன் மறுப்பு சொல்லவில்லை என்கிறார். சீமான் ஒவ்வொரு முறை இவ்வாறு பேசும் போதும் தோழர்கள் இவை குறித்து கேள்வி எழுப்பும் போதும் விகடனுக்கு கொடுத்த பேட்டியில் உள்ளதை போன்றுதான் எங்களிடமும் 8 வருடங்களாக சொல்லி வருகிறார்.

இந்த தகவலின் உண்மை தன்மையை மணி செந்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் தோழர் கொளத்தூர் மணியிடமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாமே? ஆனால் அவரின் நோக்கம் அதுவல்ல, தோழர் கொளத்தூர் மணியின் பேட்டி பொது இணைய ஊடகங்களில் பரவலானது. இவை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக விளக்கம் வேண்டும். இத்தனை பொய்களைச் சொல்லிதானே இவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள். அதை பொய் என்று தோழர் கொளத்தூர் மணி கூறும் போது பிழைப்புவாதிகளை அண்டிப் பிழைப்பவர்களுக்கு பெரும் சினம் வருகிறது.

பிழைப்புவாதிகளுக்கே இத்தனை ரோஷம் வருகிறதென்றால் பெரியாரின் சுயமரியாதை கூட்டத்திற்கு எத்தனை ரோஷமிருக்கும்?

“திராவிடர் பன்றிகளை வேட்டையாட வந்த புலி. அந்த பன்றிகளின் காலில், வாலில் உள்ள உண்ணிகளை வேட்டையாட வந்தவன் நானல்ல” என்கிறார் சீமான். உயிரியல் வரிசையில் Parasitiformes எனப்படும் ஒட்டுண்ணிகள் (Parasitism) தானே இறை தேடாமல் அடுத்த உயிர்களின் இரத்தத்தை உறிஞ்சு குடித்து உயிர் வாழும் ஓர் உயிரினம். இந்த உண்ணிக்கும் சீமானும் பெரும் ஒற்றுமை இருக்கிறது.

திராவிடர் பன்றிகள் என்னும் பெரியார் தொண்டர்களையும் அவர்களின் உழைப்பால் கட்டமைக்கப்பட்ட வாய்ப்புகளையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டதோடு, அந்த மேடைகளிலேயே தன் கட்சிக்கு ஆட்களை சேர்க்கும் உழைக்காமல் அடுத்தவர் குருதியில் ருசிகாணும் உண்ணியைப் போன்று பிழைத்து சற்று பெருத்து ஈழப் பிணங்களின் குருதியின் அரசியலையும் ருசித்து சின்னம் கொடி என எதையும் விட்டு வைக்காமல் அதையும் தனதாக்கி முத்துக்குமார் செங்கொடி போன்ற தீயில் கருகிய குருதிகளையும் ருசித்து அதன் மீது தனது ஆதிக்கத்தை நிறுத்தி பெருத்த ஒட்டுண்ணி கூச்சலிடுகிறது நான் புலி… புலி…. என்று.

புலிகளின் குணங்கள் ஒட்டுண்ணியை போன்று அடுத்தவரை சார்ந்து அவரது குருதியை நக்காது. தான் வேட்டையாடிய மிருகத்தின் குருதியை ருசிப்பது புலியின் குணம். சீமானின் குணம் உண்ணியை போன்றது. அது புலி …. புலி …. என பிதற்றித் திரிகிறது. உண்ணியை நசுக்குவதற்கு கோடாளி எதற்கு? ஒரு பிச்ச செருப்பு கூட போதுமே! இது சீமானுக்கும் தெரியாததல்ல.

வார்த்தைகளில் நாகரிகம் இல்லாதவர்கள் பண்பாளர்கள் இல்லை என்றால் அரசியலில் அதைச் செய்பவர்கள் எப்படி தலைவனுக்குரிய பண்பாளனாக இருக்க முடியும்? ஒன்று அரசியல் வார்த்தையை நெறிப்படுத்துங்கள் அல்லது உங்கள் அரசியல் தரம் தாழ்ந்து மதிப்பிழந்து போய்விடும். இது புலி எனக் கூறிக் கொள்ளும் உண்ணிக்கு விடப்படும் எச்சரிக்கையாகவும் இருக்கலாம். உண்ணிக்காக அவதூறான தகவல்களோடு வன்மமாக மடல் எழுதும் மணி செந்தில் போன்றவர்களுக்கான எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.

தமிழச்சி

24/10/2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here