உணவு – தன்னிறைவு – வல்லரசு…….சீனா.

திடீரென கூடுதலாக 140 கோடி பேர்களுக்கு நாம் உணவளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படின் இவ்வுலகில் என்ன நடக்கும்?

2020 ஆம் ஆண்டில் சீனா 70000 கோடி கிலோ உணவை உட்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் உலக உணவு வர்த்தகத்தின் மொத்த அளவு ஆண்டுக்கு 40000 கோடி கிலோ மட்டுமே. இப்படியிருக்க, சீனா தனக்கு தேவையான உணவை சரியான அளவில் உற்பத்தி செய்ய தவறினால், உலகின் பிற பகுதிகளும் பாதிக்கப்படும்.

உலகின் விவசாய நிலங்களில் வெறும் 9 சதவிகிதமே தன்னகத்தே கொண்ட சீனா, உலக மக்கள்தொகையில் 20 சதவிகிதம் அளவு தன்னிடம் இருக்கும் போதிலும் தன் மக்கள் அனைவருக்கும் உணவளிப்பதில் வெற்றி கண்டுள்ளது. சீனாவின் உணவு தட்டுப்பாடின்மையே நிலையான உலக அமைதிக்கு ஒரு பங்களிப்பாகும்.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு புதிய சீனா நிறுவப்பட்டபோது, ​​அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துரை செயலாளராக இருந்த டீன் குடெர்ஹாம் அச்செசன், சீன அரசாங்கத்தால் அதன் முன்னோடிகளைப் போல அதனுடைய 546 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க முடியாது என்று வலியுறுத்தினார்.

1974 இல் நடந்த முதல் உலக உணவு மாநாட்டில், பல நாடுகளின் தரப்பில் கலந்து கொண்ட வல்லுநர்கள் “சீனாவிடம் தன் 1 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க எந்த வசதியும் இல்லை” என்று மிகுந்த வருத்தத்தோடு கருத்து தெரிவித்தனர்.
1970 களின் பிற்பகுதி வரை நாடு முழுவதும் ‘வீட்டுப் பொறுப்புத் திட்டம் ’ அறிமுகப்படுத்தப்பட்டு தேவை மற்றும் விநியோகத்தை சமநிலைப்படுத்த மலிவு விலை உணவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த புதிய முறையின் கீழ், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களின் ஒரு பகுதியை கூட்டுறவு சங்கம் வழியாக வினியோகிக்க ஒதுக்கிவிட்ட பின் உபரியாக இருக்கும் விளைபொருட்களை சந்தைகளில் விற்க அனுமதிக்கபட்டனர். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தபட்டதோடு அல்லாமல் மக்களை விரைவாக வறுமையிலிருந்து மீட்டது.

1973 ஆம் ஆண்டில், சீன வேளாண் விஞ்ஞானி யுவான் லாங்பிங், முதன் முறையாக கலப்பின அரிசி விதைகளை உருவாக்கினார். நாடு முழுவதும் அந்த புதிய வகை அரிசி விதைகளை பயன்படுத்திய விவசாயிகளால் ஒரு மாபெரும் அறுவடையை செய்ய முடிந்தது.
1949-இல் இருந்து 2018 வரையிலான, சீனாவின் தானிய உற்பத்தி (ஓர் ஆண்டிற்கு) 113 மில்லியன் டன்னிலிருந்து ஐந்து மடங்கு அதிகரித்து 658 மில்லியன் டன்னாக உயர்ந்தது. உணவு பற்றாக்குறை இல்லா சீனா உலக உணவு சந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை, மேலும் வளரும் நாடுகளின் உணவு இறக்குமதிக்கும் அச்சுறுத்தலாக இல்லை.
சீனாவின் உணவு உற்பத்தி உலகின் மொத்த உற்பத்தி அளவில் கால் பகுதியாகும். சீனாவின் அரிசி, கோதுமை மற்றும் சோளத்தின் தன்னிறைவு விகிதங்கள் 95 சதவீதத்திற்கு மேல் இருந்தன, மேலும் தனிநபர் உற்பத்தி 470 கிலோவை எட்டியது, இது உலக சராசரியை விட மிக அதிகம்.

உணவுப் பற்றாக்குறை சீனாவின் ஓர் கடந்த கால நிகழ்வாக அமைந்திருப்பதால் , உலகிலுள்ள பிற நாடுகளை பட்டினியிலிருந்து காப்பாற்ற அது களத்தில் இறங்கியுள்ளது.

1980 களில் இருந்து, யுவான் குழு பல நாடுகளில் கலப்பின அரிசி வகை சாகுபடி பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது. இதன் விளைவாக வெளிநாடுகளில் கலப்பின அரிசி சாகுபடியின் மொத்த பரப்பளவு 7 மில்லியன் ஹெக்டேரை கடந்துள்ளது, இது உள்ளூர் அரிசி சாகுபடியை விட 20 சதவீதம் கூடுதலாகும்.
வளரும் நாடுகளில் உணவு பற்றாக்குறையை தீர்க்க ஓர் சிறந்த தொழில்நுட்பமாக, ஐக்கிய நாட்டு சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு , கலப்பின அரிசியை அறிவித்துள்ளது.
எதிர்காலத்தைப் பார்க்கும்போது, ​​சீனா தனது சொந்த முயற்சிகளை நம்பி உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நிலைமைகள், திறன்கள் மற்றும் நம்பிக்கையைக் கொண்டுள்ளது” என்று ஐக்கிய நாட்டு சபையால் வெளியிடப்பட்ட “சீனாவில் உணவுப் பாதுகாப்பு” என்ற வெள்ளை அறிக்கையில் கூறப்படுகிறது.

மொழிபெயர்ப்பு.- ஈகன் ஆபிரகாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here