இராவணனும், ஓலைச்சுவடிகளும்- சொ.சங்கரபாண்டி

ஓலைச்சுவடிகளைத் திருடிச்சென்றார்கள் என்று பொய்யாக வதந்திகளை சில வாரங்களாகவே பரப்பி வருகின்றன சில யூட்யூப் ஊடகங்கள். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சில செயல்பாட்டுக் கோளாறுகளையும், தமிழ்மரபு அறக்கட்டளையின் சாதனைகள் பற்றிய அதிகப்படியான சில கூற்றுகளையும் மட்டுமே ஊதிப்பெருக்கி, வேறெந்த நம்பத்தகுந்த சான்றுகளில்லாமல் கொஞ்சம் கூட ஊடக அறமில்லாமல் அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓலைச்சுவடிகளைத் திருடினார்கள் என்று கட்டமைக்கின்றனர். இந்த ஓட்டை உடைசல் யூட்யூப் ஊடகங்களை வழிபடும் பல அமெரிக்க நாம்தமிழர் அடிப்பொடிகளும் இப்பொய்களை அமெரிக்க ஃபாக்ஸ் செய்தி நிறுவன இரசிகர்கள் போல் இங்கும் பரப்பிவருகிறார்கள்.  இதைச் சுட்டிக்காட்டுபவர்களையும் அடுத்தக் கட்ட காட்சிகளில் திருடர்களாகக் காட்டுவார்கள் என்று அறிந்தே நான் இதை எழுதுகிறேன்.

இவற்றுக்கிடையே தோழர் பா.ஏகலைவன் தொடங்கியிருக்கும் ’இராவணன்’ என்கிற புதிய யூட்யூப் ஊடகம் மட்டும் துறைசார் வல்லுநர்களை நேர்காணல் செய்து இச்சிக்கல் பற்றிய சரியான நிலவரத்தை எடுத்துச் சொல்ல முன்வந்தது வரவேற்புக்குரியது.

இரண்டு காணொலிகளை ’இராவணன்’மூலம் வெளியிட்டிருக்கிறார்.  நாம்தமிழர் அடிப்பொடிகளுக்கு இது ஏமாற்றமாக அமைந்தாலும், அவர்கள் நம்பியிருக்கும் தோழர் பா.ஏகலைவனையாவது நம்புவார்கள் என்று கருதுகிறேன். முன்பு குமுதம் இணையத் தொலைகாட்சியில் பணியாற்றிய தோழர் பா.ஏகலைவன் உண்மையான தமிழுணர்வுடனும், அதே நேரத்தில் நேர்மையாகவும் செயல்பட்டு உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர். 

முதல் காணொலியில் – தமிழ்மரபு அறக்கட்டளையின் சார்பாக ஓலைச்சுவடிகளை வருடி கணினியில் ஆவணப்படுத்தும் திட்டத்தில் இணைந்து பணியாற்றிய நண்பர் செல்வமுரளி. தமிழ்க் கணிமைக்காக  உத்தமம் அமைப்பு மூலமாகவும், தனிப்பட்ட அளவிலும் தன்னார்வப் பங்காற்றிய துடிப்புமிக்க இளைஞர் என்ற அளவில் எனக்கும் அறிமுகமானவர்.

இரண்டாம் காணொலியில் –  ஆவணப்படுத்தும் தொழில்நுட்பத்தில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற இரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநரான திரு. சுந்தர் கணேசனையும், தொல்லியல் அறிஞர் முனைவர் இராஜவேலுவையும் நேர்காணல் செய்திருக்கிறார் தோழர் பா. ஏகலைவன்.  திரு. சுந்தர் கணேசனையும், முனைவர் இராஜவேலுவையும் பற்றி அவர்களுடைய எழுத்துகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் பத்தாண்டுகளுக்கும் மேலாக வாசித்து வருபவன் என்ற வகையில் அவர்களுடைய அறிவுப்பூர்வமான கருத்துகளைப் பெரிதும் நம்புகிறேன்.

இக்காணொலிகளின் மூலம் நான் ஏற்கனவே ஊகித்திருந்த சில கருத்துகளே உறுதியாகத் தோன்றுகின்றன.

(1) தமிழ்மரபு அறக்கட்டளையோ, அவ்வமைப்பைச் சேர்ந்த தனிநபர்களோ  ஓலைச்சுவடிகளைத் திருடியிருக்கவும் முடியாது, ஐரோப்பிய நாடுகளில் கடைகளிலோ, கண்காட்சிகளிலோ விற்றிருக்கவும் முடியாது. தொன்மையான பொருட்களைக் கையாளும் சட்டங்களும், பாதுகாப்பு அமைப்புகளும் அதை அனுமதித்திருக்கவும் முடியாது.

(2) தஞ்சைப் பல்கலைக்கழகம் நிதிப்பற்றாக்குறையினாலோ, அல்லது இந்திய அரசு நிறுவனங்களில் நிலவும் வழக்கமான மெத்தனப்போக்குகளும் ஓலைச்சுவடிகளை ஒழுங்காகப் பராமரிக்கவோ, பட்டியலிட்டோ வைத்திருக்காதெனக் கருதுகிறேன்.

(1985-90ல் சென்னையில் நான் ஆய்வு மாணவனாக இருந்த பொழுது சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் விலையுயர்ந்த உலக அறிவியல் ஆய்விதழ்களெல்லாம் அடுக்கி வைக்கப்படாமல் குப்பைமலை போல் கொட்டிவைக்கப் பட்டிருப்பதைப் பார்த்துக் கண்ணீர் வரும். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்ட அறிவியல் இதழ்களுக்கே அந்த அளவுதான் மதிப்பென்றால் ஓசியில் வந்த ஓலைச்சுவடிகளை எந்த அளவுக்கு மதிப்பார்களென்று  புரிந்துகொள்ளலாம். தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடிகள் ஏ.சி. இல்லாத தூசு நிறைந்த இடவசதியில்லாத சிறிய மூலை அறையில் வைக்கப்பட்டிருப்பதையும், துறைத்தலைவர்களும், துணைவேந்தரும் இருக்கும் அறைகள் அவர்களது தேவையைவிட பலமடங்கு மிகப்பெரியவையாக இருப்பதையும் நான் கேள்விப்படுகிறேன். அமெரிக்காவில் பல பெரும் வணிக நிறுவனங்களில் கூட அதன் தலைவர்கள் தனி அறையில்லாமல் பிற ஊழியர்களைப் போன்ற மேலே திறந்தவெளி கொண்ட தடுப்பகங்களில் அமர்ந்திருப்பார்கள். )

(3) தமிழ்மரபு அறக்கட்டளை மிக நல்ல நோக்கில் செயல்படும் தொண்டமைப்பு.  தமிழின் தொன்மையான கருவூலங்களான நூல்களும், ஓலைச்சுவடிகளும், பிற பொருட்களும், ஆவணப்படுத்தப்பட வேண்டுமென்பதில் அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு மிகப்பெரியது. ஆனால் சில நேரங்களில் அவர்கள் செய்யவிருப்பதோ, செய்து முடித்ததோ, மிகைப்படுத்திச் சொல்லப்பட்டிருக்ககூடும். அதனால் பொறாமையுற்றவர்கள் இதைச் சாக்காக வைத்துக் கல்லெறிய ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் தேடுவது, திரட்டுவது, தொழில் நுட்ப முன்னனுபவம், அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் எனப் பல சவால்கள் நிறைந்த திட்டங்களில் தொழில்முறைப்படி  திட்டமிடலும், திட்டமிட்ட படி செயல்படலும் மிக அவசியம். அவை ஓரளவுக்கேனும் நிறைவேற்றப்படும் முன்பே அதிக விளம்பரப்படுத்துவதில் எச்சரிக்கையும் அவசியம். தமிழ்மரபு அறக்கட்டளையும் தமிழ்ப்பல்கலைக்கழகமும் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது.