இரயில்வே தேர்வு மோசடி!தமிழர்களின் வேலையை பறிக்கும் மத்திய அரசு!


*இரயில்வே தேர்வு மோசடி!*
*தமிழர்களின் வேலையை பறிக்கும் மத்திய அரசு!*
தென்னக இரயில்வே திருச்சி கோட்டத்தில், எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழிற் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மக்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 5 வருட ஆட்சியில் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது.
தமிழர்களின் உரிமைகளைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாத இந்த பாசிச அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசை தூண்டிவிட்டு 13 பேரை சுட்டுக்கொன்றது. மீத்தேன்,ஹைட்ரோகார்பன் என பல்வேறு நாசகார திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இரயில்வே துறையில் குரூப் D தேர்வில் தமிழக மாணவர்களை புறக்கணித்து 90 சதவீதம் வடமாநிலத்தவர்களை தேர்ச்சியடைய வைத்ததன் மூலம் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும்,வேலைவாய்ப்பையும் பிடுங்கி தாரை வார்த்துள்ளது. இத்தகைய செயலை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

குறிப்பாக தென்னக ரயில்வே துறைக்கான வேலைவாய்ப்பு தேர்வில் வட மாநிலத்தவர்களுக்கு மதிப்பெண்களை வாரி வழங்கி இருக்கிறது. மொத்த மதிப்பெண்கள் 100 க்கும் அதிகமாக,109,120 என மதிப்பெண்களை வடமாநிலத்தவர்களுக்கு வழங்கியதன் மூலம் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

இதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா, இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு பணியில் அமர்த்தி இருக்கிறது.

2014 நவம்பரில் தெற்கு இரயில்வே குரூப்-டி பணியாளர் தேர்வு நடத்தியது. இதற்காக தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் விதி (Attestation) நீக்கப்படுகிறது. இனிமேல் அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெற வேண்டிய தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆங்கில நாளிதழ் விளம்பரங்களில் வெளியிடும்போது, “விண்ணப்பிப்போர் அத்தாட்சி பெற்ற சான்றிதழ் இணைத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
இதனை நம்பி, சான்றிதழ்களில் அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பேரின் விண்ணப்பங்களை தென்னக இரயில்வே நிராகரித்தது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.

தமிழகத்தில் சுமார் 80 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் சூழலில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களை தேர்வு செய்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

தமிழக மாணவர்களை மத்திய அரசு அவ்வளவு இழிவாக கருதுகிறதா? மத்திய பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திறமையற்றவர்களைப் போன்று சித்தரிப்பதற்காகவே இந்த மோசடிகள் அறங்கேற்றப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்களின் உரிமைகளை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பறிக்குமானால் மீண்டுமொரு ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று நடத்தவும் தயங்கமாட்டோம் என மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.

எனவே மத்திய பாஜக அரசின் இத்தகைய தமிழர் மாணவ விரோதப்போக்கை கண்டிப்பதோடு, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் எப்படி கர்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தனிச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அதே போன்று தமிழகத்திலும் தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனவும்,

இரயில்வே துறை குரூப் D தேர்வில் மோசடி நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது. எனவே இந்த தேர்வு முடிவை ரத்து செய்து, மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும்,

தொடர்ந்து பாஜக அரசு தமிழகத்திற்கு எதிரான நாசகார திட்டங்கள் தீட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும், தமிழக மக்கள் வரும் தேர்தலில் பா.ஜ.க.வை புறக்கணிக்க வேண்டும் எனவும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

முஹம்மது பைசல்
மாநில ஊடக தொடர்பாளர்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here