இயக்கங்களின் தோல்வி மனப்பான்மையும் மாற்று அரசியலும்……மகராசன்.

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு.கோழைத்தனத்தின் தோழன் .உறுதியின் எதிரி.மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம்.இந்த மரண பயத்தை வென்றுவிடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான்.அவன்தான் தன் மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்.
-வேலுப்பிள்ளை பிரபாகரன்.

தமிழ்நாட்டின் இயக்க அரசியல் இன்று கடுமையான தோல்வி மனப்பான்மையால் தன் பலத்தை கணிசமாக இழந்துவிட்டிருக்கிறது.இழந்து கொண்டிருக்கிறது.

மாற்றம் வரவேண்டும் தோழர்? ஆனால் மக்கள் தயாராக இல்லை தோழர்? ஏகாதிபத்தியம் இன்று வெல்லற்கரியதாக இருக்கு தோழர் ,அதன் அசுர பலத்தின் முன் நாம் எதுவும் செய்ய முடியாது தோழர்.அரசு பாசிச அரசாக இருக்கு தோழர்,கவனமாக செயல்படவேண்டும் தோழர்.

புரட்சிதான் தோழர் ஒரே தீர்வு. தேர்தல் புறக்கணிப்புதான் தோழர்.தேர்தலில் பங்கெடுக்காமல் நாம் புரட்சி செய்கிறோம் தோழர்.ஆயுதவழியெல்லாம் சாத்தியமில்லை தோழர்.மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வெல்ல வேண்டும் தோழர்..ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை தோழர்…

மேடையில் பேசுவதுதான் புரட்சி,தேர்தலில் பங்கெடுப்பதுதான் புரட்சி, நாமெல்லாம் புரட்சி செய்ய வந்திருக்கிறோம்.மக்களை திரட்டி போராட்டம் செய்திருக்கிறீர்களா? என்ன போராட்டமா? நான்தான் மக்கள்திரள் ,அனைவருக்கும் சிந்திப்பதற்கு நான் ஒருவன் போதாதா?அதற்கு மேல் என்ன வேண்டும் .மக்களாவது ,போராட்டமாவது!…

தி.மு.க ஆட்சியில் நாங்கள் போராடுவதற்காகவாவது அனுமதி கிடைத்தது.இப்போது அதற்கே அனுமதி மறுக்கப்படுகிறது.அதனால் பாசிச அ.தி.மு.க ஆட்சி ஒழிய வேண்டும் தோழர்..இப்போதெல்லாம் ரிமாண்ட் செய்து விடுகிறார்கள் தோழர்.நம்மால் எதிர்ப்பை மட்டும்தான் தோழர் பதிவு செய்யமுடியும்.விசம் வைத்து வேறு கொல்லப்பார்க்கிறார்கள் தோழர்.

முகநூல்,வாட்சப்பில் பரப்புரை செய்வதற்கே சிரமமாக இருக்கிறது தோழர்.காவல்துறை நம்மை கண்காணித்து கொண்டே இருக்கிறது தோழர்..

இன்னும் பலவிதமான அச்ச , அபய ,அவல குரல்கள் பல்வேறு வகைகளில் எங்கும் ஒலித்து கொண்டே இருக்கின்றன.
திராவிட,கம்யூனிச,தமிழ்தேசிய,ஜனநாயக,சோசலிச என்று எந்த தத்துவத்தை கொண்ட அமைப்பாக இருந்தாலும் ,அந்த அமைப்புகளின் இன்றைய நிலை ஆரோக்கியமாக இல்லை என்பதை எளிதில் கண்டுகொள்ளமுடியும். இன்று ஓரு மாணவன் அல்லது இளைஞன் முற்போக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தால் அவனால் நிச்சயமாக ஒரு முடிவுக்கு வந்துவிடமுடியாது.

அரசை எதிர்க்கிறேன் என்று சொல்லும் அனைவரும் அரசை எதிர்ப்பதை விட்டுவிட்டு தங்களுக்குள் ஏன் இவ்வளவு தீவிரமாக மோதிக்கொள்கிறார்கள் என்பது புதியவர்களின் சிந்தனையில் எழும் முக்கியமான கேள்வி.ஒருவேளை கருத்தளவில் ஒரு முடிவுக்கு வந்தபின் அந்த தத்துவத்தை தாங்கியிருக்கும் அமைப்பினுள் சென்றால் அவற்றின் உட்பூசல்களும்,
போதாமையும்,திறனின்மையும்,ஊக்கமின்மையும், திட்டமில்லாமையும் அவர்களை விரைவில் சலிப்பு மனப்பான்மைக்குள் தள்ளிவிட்டுவிடுகிறது.இது இயக்கங்களின் இன்றைய நிலையை நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது.

இயக்கங்களோ,முற்போக்கு அரசியல் கட்சிகளோ மக்களிடம் செல்ல வேண்டும் ,மக்களை திரட்ட வேண்டும் என்று ஒரே குரலில் சொன்னாலும் நீண்டகாலமாக அதனை செய்வதற்கு அவர்களால் இயலாமல் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.மக்களை திரட்டுவதற்கான தத்துவமும் ,அரசியலும்,செயல்முறையும் இல்லாதபோது அவைகள் எப்படி மக்கள் இயக்கங்களாக இருக்க முடியும் ?தத்துவம் ,அரசியல் ,அமைப்பு , வேலைநடை ,தலைமை என்ற அரங்குகளில் ஏதேனும் ஒன்றினில் ஏற்படும் பலவீனம் ஒட்டுமொத்த பலவீனமாக மாறுகிறதா?அல்லது குறிப்பான காரணங்கள் உள்ளதா?

இதற்கான காரணங்களை தமிழ்நாட்டுச்சூழலில் உற்றுநோக்கினால் அமைப்பிற்கான இலக்கணங்களாக கடந்த கால வரலாற்றில் இருந்து பெறப்பட்ட சிறந்த வழிமுறைகள் முன்வைக்கப்பட்டாலும் மார்க்சிய கட்சிகளாக இருந்தாலும் சரி ,தனிநபர் அமைப்புகளானாலும் சரி ” தலைவன் அரசியல்தான்” நடைமுறையில் இருக்கிறது.இன்னொன்று “தனிநபர் அரசியல்”. உள்ளுக்குள்ளே ஜனநாயக முறைகளும், சிறந்த தலைவர்கள் பலர் அனுமதிக்கப்படாததும் அமைப்புகளை ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இட்டுச்செல்வதிலிருந்து விலக்கிவிடுகிறது. பொதுச்செயலாளரின் அளவிற்கு சிந்திப்பதற்கு நமது அமைப்பிற்குள் யாருக்கும் தகுதியில்லை என்று ஓரு மார்க்சிய அமைப்பே பறைசாற்றும் போது மற்ற அமைப்புகளை கேட்கவே வேண்டாம்.வெளியில் என்ன சொல்லப்பட்டாலும் மத்தியக்குழு,செயற்குழு,அரசியல் தலைமைக்குழு என்னவாக இருந்தாலும் ஆட்டிப்படைப்பது ” தலைவன்” அரசியலே.
தமிழகத்தின் பெரும்பாலான முற்போக்கு கட்சிகளின்(அ) இயக்கங்களின் தலைவர்கள் அமைப்பை தங்களின் சொந்த சொத்தாக பாவிப்பதும்,முன்நகர வேண்டுமென்றால் அதை தடுப்பதும் ,அதற்கு பல்வேறு காரணகாரியங்களை முன்வைப்பதும்,அது உள்ளுக்குள்ளே சிதைந்து சிதறிக்கொண்டிருந்தாலும் வெளியுலகிற்கு அதன் போலி தோற்றத்தையாவது உடையாமல் பாதுகாக்க முயற்சிப்பதும்தான் வாடிக்கையாக மாறிக்கொண்டிருக்கிறது.இருப்பதை காப்பாற்றி கொள்வதுதான் ஒரே செயலுத்தி.

தலைவர் சிறைக்கு சென்றுவிட்டால் அடுத்தநிலை தலைவர்கள் ஒருவேளை போராட்டத்தை தீவிரப்படுத்த முயன்றால்,அவர்களுக்கு சொல்லப்படுவது” நீங்கள் போராடினீர்கள் என்றால் அரசு என்னை வெளிவரமுடியாமல் செய்துவிடும் ,அதனால் நான் வெளியே வரும் வரை எந்த போராட்டமும் வேண்டாம்” என்பதே.அதே போல சிறைக்கு போகாமலே பார்த்துக்கொள்ளும் தலைவர்களும் உண்டு. சிறைக்கொட்டடிக்குள் ” அண்ணே,பயமாக இருக்கிறது ,விரைவில் வெளியே எடுத்துவிடுங்கள் என்று கெஞ்சுவதும் ,சிறைக்கு வெளியே வந்து ” நான்கு சுவர்கள் என்னை என்ன செய்யும் என்று முழங்குவதும் தலைவனின் லட்சணமே.

 

 

தலைவர்கள் அனைவரும் வெளியில் தோற்றமளிப்பது போல் உள்ளுக்குள்ளும் தைரியமானவர்கள் அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.அரசு அவர்களை மிரட்டும்போது ,அச்சுறுத்தும்போது அவர்கள் பணிந்து அல்லது பயந்துபோகிறார்கள் . அதனை அவர்கள் அப்படியே வெளிப்படுத்தாமல் வேறுபல காரணங்களை முன்வைத்து அமைப்பினரை குழப்புகின்றனர்,தடுக்கின்றனர்,முடக்குகின்றனர்.இந்த மாறாத தத்துவத்திற்குள்ளே நிற்பதுதான் தமிழகத்தின் முற்போக்கு அரசியல்.

அமைப்பிற்குள்ளே தலைவர்கள் தங்களுக்கான அல்லது தன்னை சார்ந்து நிற்கும் ஓருசிலருக்கான பொருளியல் தேவைகளை மட்டுமே கவனிப்பதும்,அமைப்பு முழுமைக்குமாக கவலைப்படாததும், வெளிப்படையான பொருளியல் திட்டத்தையும்,கணக்குகளையும் முன்வைக்காததும் அதன் வளர்ச்சியினை தடுக்கும் காரணியில் ஒன்றாக அமைகிறது.

அரசியல் நடவடிக்கைகளில் ஏற்படும் செயலற்றதன்மை விரைவில் அமைப்பையும் பீடித்துவிடுகிறது.செயல்நடவடிக்கைகளை குறைத்தபின் அதற்கேற்றாற் போல் தத்துவத்தையும்,அரசியலையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கிறது.
இதற்கே இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது அமைப்பை எங்கே கட்டுவது?,மக்களை எங்கே திரட்டுவது?,அரசை எங்கே எதிர்ப்பது?

முற்போக்கு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தங்களை தீவிரமான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இந்த பாசிச அரசின் ஒடுக்குமுறை அதிகமானால் தன்னால் செயல்படமுடியாது என்று நினைப்பவர்களுக்கு அரசியலில் என்ன வேலை இருக்க முடியும்? பாதுகாப்பான அரண்களில் நின்றுக்கொண்டு முழக்கமிடுவதுதான் அரசியல் என்று நினைக்கிறீர்களா? மக்களை திரட்டுவதை விட்டுவிட்டு என்னை கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று நீங்கள் முழங்குவது மோடியின் புலம்பலை போன்றதுதான்.

மேடைகளில் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்று முழங்குவதும், எதிரி ஆயுதம் எடுத்துவிட்டால் அரசு ஆயுதம் எடுத்துவிட்டது இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும் என்று சத்தமில்லாமல் சரணாகதி அடைவதும்தான் அரசியலா?நம்முடைய பலம் இது ,நம்மால் இவ்வளவுதான் செய்ய இயலும் என்று வெளிப்படையாக மக்களிடம் ஓப்புக்கொள்வது எவ்வளவோ நல்லது.செய்ய முடிந்ததை மட்டும் பேசுவதனால் நாம் எதையும் இழந்து விடுவோமா?குறைந்தபட்சம் மக்களிடையே அவநம்பிக்கையையாவது உருவாக்காமல் இருக்கலாம்.

இன்று பல இயக்கங்களின் தலைவர்களும்,தலைமையும் நம் காலத்தில் எதுவும் நடக்காது ,பின்வரும் காலங்களில் யாராவது நடத்தி முடித்தால் அதற்கு நம்மை காரணமாக தங்களை குறிப்பிடுவார்களா? என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்டார்கள்.கடந்த பத்தாண்டுகளில் தோன்றிய தனிநபர் இயக்கங்களும் பரிதாபத்திற்குரியவையே.அதன் அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டால் அவருக்காக போராடுவதற்கே அந்த அமைப்பிடம் ஆளணி இருக்காது.( அவர்களின் ஏடுகளிலும்,முகநூலிலும் நிறைய ஊழியர்கள் இருப்பார்கள்.போராடுவதற்கு வரமாட்டார்கள்) தோழமை அமைப்புகளை போராடவைத்து அவர்கள் கையில் அட்டை கொடுப்பதோடு சரி.இப்படிப்பட்டவர்களின் மனநிலை மாற்றத்தையா உருவாக்கும், இருப்பதையும் இல்லாமலாக்கிவிடும்.

அரசின் கடுமைகளை எதிர்கொண்டு ,அந்த கொடும் சூழலிலும் சோர்ந்துபோகாமல், ஓயாமல் ஊக்கத்துடன் அரசோடு தொடர்ந்து சமர் செய்வதற்குரிய அமைப்பையும், வேலைத்திட்டங்களையும் கட்டமைத்து அஞ்சாமல் துணிந்து நிற்போமேயானால் அரசு அஞ்சும், மக்கள் உற்று பார்ப்பர்,பின்னால் திரள்வர் . தத்துவங்களை திரும்ப திரும்ப போதித்துக்கொண்டிருப்பதை தவிர்த்து மக்களிடையே அவர்களின் பிரச்சனைகளுக்காக வேலை செய்வதுதான் மக்களை திரட்டுவது என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.நான் உங்களுக்கு அறிவு சொல்ல வந்திருக்கிறேன் என்பது மக்களிடையே வேலை செய்வது அல்ல.அது அவர்களை திரட்டுவது அல்ல.திரண்டுவிட்ட கூட்டம் உங்கள் கட்டளைகளுக்கு ஒருபோதும் அடிபணியாது.

மக்களிடையே வேலை செய்து அதன் பலன்களை குறுகியகாலத்தில் அறுவடை செய்ய முயற்சிப்பதும் மக்களை திரட்டுவது அல்ல.மக்கள் திரள தயாராக இருக்கிறார்கள் .கூடங்குளம், ஸ்டெர்லைட் போராட்டங்களே அதற்கு சாட்சி.நீங்கள் போராட தயாராக இல்லையென்பதுதான் பிரச்சனை.குறுகியகாலத்தில் உயர்ந்துவிடும் மக்களின் புரட்சிகர மனநிலைக்கு ஓப்பாக அரசியல் கட்சிகளும் ,இயக்கங்களும் தங்களை உயர்த்தி கொள்ள முடியாமல் போவதை ஒத்துக்கொள்ளாமல் நாம் மக்களை குற்றம் சாட்ட துவங்கிவிடுகிறோம்.

ஓரு சரியான கட்சி இல்லாமல் மக்களை திரட்டி வழிநடத்திவிடவும் முடியாது ,ஒரு புரட்சிகர தத்துவம் இல்லாமல் அப்படி ஓரு கட்சியையும் வழிநடத்திவிட முடியாது.ஆனால் மக்களுக்கு தேவை தத்துவங்களல்ல,தீர்வுகள். அவர்களுக்கு தீர்வினை தருபவர்கள் அவர்களிடம் சொல்வதெல்லாம் அவர்களுக்கு தத்துவமே.

ஒன்று அடக்குமுறைகளை கண்டு அஞ்சாது அரசியல் களத்திலே நிற்கவேண்டும் அல்லது தங்களின் தோல்வி மனப்பான்மையை அறிந்து அரசியலில் இருந்து அகன்றுவிட வேண்டும்.தங்களுடைய தயக்கங்களை ,ஆற்றாமைகளை ,அச்சங்களை முன்னிட்டு மக்களை முடக்குவதை விட்டுவிட்டாலே அதுவே நீங்கள் இந்த தேசத்திற்கு செய்யும் பெருந்தியாகம்தானே?.இதிலாவது நீங்கள் உங்கள் தோல்வி மனப்பான்மையை வெல்லலாம்தானே?
நிச்சயமாக வரலாறு உங்களை இகழாது மாறாக ,அது உங்களை போற்றும்.
வரலாறு போற்றுவதற்குரிய நம்முடைய செய்கைகள் நமது தேசத்தில் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கும்.அது உங்களுக்கு நிரந்தரமாக நன்றிகடன் பட்டிருக்கும்.

மகராசன்.
குமரி மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here