இன்றைய தொழிற்சங்கங்களும் தொழிலாளர் வர்க்க விடுதலையும்- பாலாஜி.

இந்தியாவில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்து சுமார் 100 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

ஆரம்பக்கட்டத்தில் இருந்த வர்க்க உணர்வும் போராட்ட குணங்களும் அடியோடு காணாமல் போய்விட்டது போலத் தோன்றுகிறது.

கார்ப்பரேட் முதலாளிகளின் அடிமை சுரண்டல் முன்பை விட அதிகமாகிக் கொண்டு செல்லும் காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஆனால், இன்றைய தொழிற்சங்கங்கள் இந்தச் சுரண்டலை எதிர்த்த அறிவியல்பூர்வமான போராட்டங்களை நடத்துவதில்லை.

மேலும், தற்போதுள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் தமது வர்க்கத்துகான அடிப்படை அரசியலை தெரிந்து கொள்ளும் அளவிற்குக்கூட அவர்களை பயிற்றுவிப்பதில்லை.

“தங்களுக்குத் தேவையான சம்பள உயர்வு, போனஸ், ஆயுத பூஜை, தீபாவளி, பரிசு பொருட்கள் உணவு, போக்குவரத்து, இவைகளைப் பெற்றுத்தர மட்டுமே தொழிற் சங்கங்கள் உள்ளன” என்ற தவறான புரிதலில் தொழிலாளர்கள் உள்ளனர். இதை பெற்றுக் கொடுப்பது மட்டுமே தமது வேலை என, அடிப்படை தொழிற்சங்க சித்தாந்தம் கூட தெரியாத பல தொழிற்சங்கவாதிகள் தொழிலாளர்களின் வழிகாட்டுதல்கள் ஆக, தலைமைப் பொறுப்பில் உள்ளார்கள்.

“கூட்டுபேர ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார பலன்களை பெறுவதற்கு மட்டுமே தொழிற்சங்கங்கள்” என்ற பார்வையைத் எந்த தொழிற்சங்கமும் இதுவரை மாற்றியதாக தெரியவில்லை, மாறாக அதை ஊக்குவிப்பதையே செய்கின்றனர்.

எப்படி கட்சிகள் ஆரம்பிப்பது ஒரு வருமான தொழில் போன்று மாறிவிட்டதோ… அதே போன்று சங்கங்கள் ஆரம்பிப்பதும் ஒரு தொழில் போன்று மாறிக்கொண்டே வருகிறது..

புதிது புதிதாக பல தொழிற்சங்கங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கட்சிக்கு ஒரு சங்கம், சாதிக்கொரு சங்கம் என்று தொழிலாளர்களை பிரிப்பதற்கு மட்டுமே இத்தகைய தொழிற்சங்கங்கள் பயன்படுகின்றன.

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ் அறைகூவல் விடுத்தார். இதை நோக்கிய, அனைத்துத் தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்துவதற்கான செயல்பாடுகளை எந்தத் தொழிற்சங்கங்கள் செய்கின்றன?

தொழிற்சங்கங்கள் என்பவை தொழிலாளர்களுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் பாடசாலையாக இருக்க வேண்டும் என்பது தொழிலாளர் வர்க்க சித்தாந்தமான மார்க்சியம் காட்டும் வழி.

உழைப்புச் சுரண்டலை பற்றியும், அடிப்படை மார்க்சிய லெனினிய கோட்பாடுகள் பற்றியும், அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் பற்றியும் அல்லது தொழிலாளர் நலச் சட்டங்கள் பற்றியும் கூட கற்பிக்காத, தொழிலாளியை அரசியல் படுத்தாத தொழிற்சங்கங்களே இங்கு அதிகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கான காரணம் என்ன..??

தொழிலாளர்களிடம் குன்றியிருக்கும் வர்க்க உணர்வும், தொழிலாளர் இயக்கத் தலைவர்களின் அரசியல், சித்தாந்த பலவீனமும்தான் காரணம்.

“நாம் இன்னும் அடிமைகளாகத்தான் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வேலை செய்து கொண்டிருக்கிறோம்” என்று தன் அடிமைத்தனத்தை தன்னையே அறிந்துகொள்ள விடாமல் அழகாக காய் நகர்த்தும் இந்த கார்ப்பரேட்டுகளும் அதற்கு வேலை செய்யும் அரசும் தொழிலாளிகளின் வர்க்க உணர்வை அடியோடு அழித்து கொண்டு இருக்கின்றனர். நம்மை வர்க்கங்களாக ஒன்றுசேர விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை முதலாளிகளை விட முதலாளிகளின் வேலைக்காரர்களாக இருக்கும் அரசு மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

தற்போது இருக்கும் ஒரு சில தொழிற்சங்கங்கள் “சட்ட ரீதியிலான தொழிற்சங்க உரிமைகளை பெற்றுத்தருவோம்” என்று கூறி நிர்வாகத்துடன் பேசி பல வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர்.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைக்கூலிகளாக இருக்கும் அரசும் அரசை சார்ந்திருக்கும் நீதிமன்றங்களும் எப்படி முதலாளிகளுக்கு எதிரான ஒரு நீதியை வழங்கும் என்று தெரியவில்லை.

முதலாளிகளுக்கு தேவையான சட்டங்களே இங்கு அமுல் படுத்தப் படுகின்றன. முதலாளிகளுக்கு ஏற்றாற்போல் சட்டங்கள் மாற்றப்படுகின்றன, நீதிமன்றங்களும் அதற்குத் துணை நிற்கின்றன.

அப்படி இருக்கையில் சட்டபூர்வமான போராட்டங்களின் மூலம் மட்டுமே தொழிலாளிகளின் கோரிக்கைகளை எப்படி வெல்ல முடியும்.

“8 மணி நேர வேலை 8 மணி நேர உறக்கம் 8 மணி நேர பொழுதுபோக்கு” என்ற சட்டத்தை பல வருடங்கள் போராடி உயிர்நீத்து நமது பாட்டாளி வர்க்க முன்னோடிகள் பெற்றுக் கொடுத்தனர்.

தொழிலாளர் சட்டங்களை மாற்றி 8 மணி நேர வேலை நாளை 10, 12 மணி நேரமாக மாற்றுவது, தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச் சட்டங்களாக திருத்தி அமைப்பது, தொழிற்சங்க உரிமைகளை பறிப்பது, இவை அனைத்தும் முதலாளிகளுக்கான சட்டங்களாக மாறிக்கொண்டிருப்பது என்ற நிலைமையில் நாம் சட்டத்தை நம்பிக் கொண்டிருப்பது எந்த வகையில் சிறந்ததாக இருக்கும்.

முதலாளிகளின் குற்ற குடோனாக இருக்கும் நீதிமன்றங்கள் எப்படி தொழிலாளர்களுக்கான நீதி கிடைக்கும் இடமாக இருக்கும்?

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை பல லட்சமாக இருக்கையில் மேலும் மேலும் வழக்குகளை பதிவு செய்து அதற்கான நீதி கிடைக்கும் என்று காத்திருப்பது எந்த வகையில் தொழிலாளி வர்க்கத்தின் சூழ்நிலைகளை மாற்றும்?.

தொழிற்சங்கங்கள் என்றால் என்ன என்பதை முதலில் தொழிற்சங்கவாதிகள் கற்கவேண்டும், பின் தொழிற்சங்கங்களை பற்றியும் வர்க்கச் சுரண்டல் பற்றியும் தொழிலாளர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

அடிப்படை அரசியலை புரியவைக்க வேண்டும், அரசியல் பொருளாதாரத்தை கற்பிக்க வேண்டும், கூலி முறையின் அடிப்படைகளையும் மற்றும் அவர்களின் உழைப்பே மதிப்பைப் படைப்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

ஒரு தொழிற்சாலைக்குள் பல சங்கங்கள் உருவாவதை தடுத்து பல தொழிற்சாலைகளில் உள்ள சங்கங்களை ஒரே சங்கங்களாக இணைக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும்.

“அடக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை விடுதலை செய்வதை லட்சியமாகக் கொண்ட நடவடிக்கைகளில் தொழிலாளி வர்க்கம் ஈடுபட வேண்டும். அதுதான் தொழிலாளி வர்க்க விடுதலைக்கான வழி” என்கிறார் மார்க்ஸ்.

ஆனால் தற்போதுள்ள தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ சித்தாந்தத்துக்கு அடிமைப்பட்டு இருக்கும் தமது சங்க உறுப்பினர்களை கூட விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க வாதிகளும் முதலாளியுடன் கைகோர்த்துக் கொண்டு வருமானத்திற்கான ஒரு கடையாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனை மாற்றி தொழிலாளர் வர்க்கம் ஒன்று சேர்ந்து போராட்டக்களத்தில் இறங்கி இந்த அரசையும், கார்ப்பரேட் முதலாளிகளையும் எதிர்த்து மார்க்சிய லெனினிய சித்தாந்தங்களின் வழியே போராடினால் மட்டுமே தொழிலாளர்களாகிய நாம் மீண்டு எழ முடியும்.

நாம் இப்பொழுது மீண்டெழவில்லை எனில் நமக்கு அடுத்து வரும் நம் சந்ததியினரை 200 ஆண்டுகளுக்கு முன் நம்மைப் போன்ற பாட்டாளி வர்க்கம் விழுந்து கிடந்த அடிமை கிணற்றில் நாமே தள்ளி விட்டாற் போல் ஆகிவிடும்.

தொழிற்சங்கங்களை மீட்டெடுப்போம்! தொழிலாளர் வர்க்கத்தை காப்போம்!!

பாலாஜி.
தொழிலாளர்
ரெனால்ட் நிசான்.