இன்றய சூழலில் பெண்பிள்ளைகளின் பெற்றோர்கள் மனநிலை. – ஜெயசேகர்,கருங்கல்.

இன்றைய காலக்கட்டத்தில்   பெண்பிள்ளைகளின் பெற்றோர்களின் மனநிலையானது மிகவும் கவலையுடன்தான் இருக்கிறது . ஏனென்றால் இந்த நவீன காலத்திலும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே போகிறது. பெரும்பாலான பெற்றோர்கள்  காதல் திருமணத்தை எதிர்ப்பது கூட பெண்களுக்கெதிரான மனநிலைதான்.

ஆனால் ஜாதி என்ற போர்வையை கழட்ட மனதில்லாத பல குடும்பங்கள் இன்று தங்கள் பிள்ளைகளை இழந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களும் சிறை கம்பி எண்ணுகின்றார்கள். அப்படி இருந்தும் இந்த சாதி என்ற போர்வையை கழட்ட மனம் இல்லாமல் இருப்பது கொடூரத்தின் உச்சம். பெரும்பாலான பெற்றோர்களோடு பேசும்போது அவர்கள் பல விஷயங்களை கூறிகிறார்கள்…
    
   முதலாவதாக  தன்னுடைய பெண் பிள்ளைகள் காதல் என்கின்ற வலையில் விழுந்துவிட்டால் பின் பிள்ளையை நாம் பறி கொடுத்து விடுவோமோ அல்லது பிள்ளைகளை ஏமாற்றி விடுவானோ என்ற பயம்தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. செய்தித்தாள்களில் தினந்தோறும் பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டேத்தான் போகிறது. இதற்கு பெரும்பாலும் பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை  அதிகார வர்க்கம் சரியான முறையில் நடைமுறைபடுத்தாமல் இருப்பதும் ஒரு காரணமாக கூட இருக்கலாம்.

   இரண்டாவதாக  காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் . ஆகவேதான் காதலிக்கும் போது அந்த நபரின் குணம், குடும்ப பின்னணி, பொருளாதார சூழ்நிலை போன்றவற்றை பார்ப்பதில்லை. இதன் காரணமாக வருங்காலத்தில் மிகவும் கஷ்டப்பட போவது தனது மகளே என்ற பயம்தான் அனேக பெற்றோர்களுக்கு. ஆனால் இந்த பிள்ளைகள் இதை புரிந்துக்கொள்வதே இல்லை.

பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் நபர் நல்ல வேலையில் இருந்தாலோ அல்லது அருமையான  குடும்ப பின்னணி போன்றவை இருந்தாலோ பெரும்பாலான பெற்றோர்கள் திருமணத்தை தாங்களே நடத்தி வைக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் பெரும்பாலும் பார்க்கும் நபர் வேலையில்லாமல் இருந்தாலோ அல்லது ஊர்சுற்றும் நபரை தேர்ந்தெடுத்தாலோ பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதை மிகவும் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் இந்த பிள்ளைகள் இதை புரிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் இரண்டு மூன்று மாதங்களிலேயே பிரிந்து விடுகிறார்கள் அல்லது தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் ஆகிவிடுகிறது.

   ஜாதியின் பெயரால் பல காதல் ஜோடிகள்  சொந்தபந்தத்திற்கும் , ஊருக்கும் பயந்து ஓடி திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் பின்பு அவர்களே பிரிந்து விடுகிறார்கள். அல்லது பெற்றோர்களின் தூண்டுதலின் பேரில் கொலை செய்யப் படுகிறார்கள் … அதனால்தான்  அம்பேத்கர் அவர்கள் சொன்னார் சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்று. பெற்ற பிள்ளையை விட ஜாதிதான் பெரிது என்று நினைக்கும் கேடுகெட்ட சமூகம் இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துக்கொண்டு இருக்கத்தான் செய்யும்…

    இன்றும் ஆணவக் கொலைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டு தான் உள்ளது என்பதை நினைக்கும்போது ஒருபக்கம் கோபமாகவும் மறுபக்கம் கவலையாகவும் உள்ளது. இப்படிப்பட்டவர்கள் இருக்கும்வரை   ஜாதிய வன்மம் தலைதூக்கும். இவர்களை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். இன்றய காலக்கட்டத்தில் மிகவும் கேவலமானது அரசே மதுவை இலக்கு வைத்து விற்பனை செய்வதுதான். இந்த மதுவின் நிமித்தம் இன்று பல குடும்பங்கள் பல்வேறு பிரச்சனைகள் உருவாக இந்த அரசும் காரணம் இருக்கிறது என்பது கேவலமான உண்மை.

பெண்களை பொறுத்தவரை, முடிந்தவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்வதே அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை தரும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதில் எதாவது பிரச்சனை என்றால் கூட பெரியோர்களின்  ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம்
பிள்ளைகள் உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முழு அதிகாரம் உள்ளது.

காதல் மூலமாக வாழ்க்கையை தேர்வு செய்யும் பெண்கள் அவசரகதியில் உணர்ச்சி வேகத்தில் வாழ்க்கை துணைவனை தேர்வு செய்யாமல் நிதானத்துடன் எதிர்கால வாழ்க்கையையும் பற்றி சிந்தித்து முடிவுகள் எடுப்பது நல்லது.ஏனென்றால் தோல்வி அடைந்தால் முழுப்பொறுப்பையும் பெண்கள் மீது சுமத்திவிடும் போக்குதான் நிலவுகிறது.

வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் பிள்ளைகள் கொஞ்சம் கவனமாக நடந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதே உண்மை…

ஜெய சேகர் கருங்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here