இந்துத்வா அராஜகமும் ,ஆர்.எஸ்.எஸ். அரசும் -அஸ்வினி கலைச்செல்வன்

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் அதிர்ச்சியிலிருந்து வெளிவர இயலாத நிலையில் பேரிடியாக மற்றுமொரு ஐந்து ஆண்டுகள் நம்மை ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு பா.ஜ.க வுக்கு கிடைத்திருக்கிறது. இதன் பின்னணி பற்றி பேசி பயனில்லை என்ற போதும் மேலும் நாட்டின் சீர்கேடுகளும் மக்களை ஒடுக்கும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் நினைத்ததை விட மிக மோசமான சூழலில் சிக்கியிருப்பது வேதனையான விஷயமென்றாலும் இன்னும் மோசமான கொடூர அரசியலற்ற அதிகார தடுப்புகளை கையாளும் பாசிச ஆட்சியை எப்படி கடப்போம் என்பதே பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகார திணிப்பும், சாதிய ஒடுக்குதலும், மதவாத கலவரங்களும், ஆட்சி அராஜகங்களும் தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கிய நேரத்திலேயே சம்பவித்தது அனைவரும் அறிந்ததே.

மதவாத அரசியலின் மீது மோகம் கொண்டவர்களே! சற்று சிந்தியுங்கள். மனித உயிர்களின் மதிப்பை எப்போது உணருவீர்கள்?

பார்ப்பனியத்தின் காவலர்களே! பௌத்த மதம் கொல்லாமையை போதித்து மக்கள் மத்தியிலே செல்வாக்கு பெற்றுவிட்ட காலகட்டத்தில் ,அவர்களை விட மேலானவர்கள் என்று காட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஓரே காரணத்திற்காகத்தானே அதுவரை நீங்கள் விரும்பி சாப்பிட்ட மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தை கைவிட்டீர். ஆனால் இன்று பசுக்காவலர்களாக மாறிவிட்ட நீங்கள் மனிதர்களை கொல்ல துணிந்த மிருகங்களாக மாறிவிட்ட காட்சியைத்தானே பார்க்க முடிகிறது. உங்களின் நடத்தைகளுக்கு பின்வரும் நிகழ்வுகளே சாட்சியாக நிற்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கிய சில மணி நேரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்ட விசயங்கள் பல. அதில் முதன்மையானது நாட்டின் காவலாளியான மோடி சௌகிதார் என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார் என்பதே. இதில் அதிசயிக்கதக்கதாக எதுவுமில்லை தேர்தல் வேசங்கள் கலைக்கப்பட்டது. மாறுவேடங்கள் கலைக்கப்பட்ட அதே சமயம் சம்பவித்த நிகழ்வுகளின் தொகுப்பு இதோ.

மே 22-ம் தேதி #மத்திய_பிரதேச மாநிலத்தில், சியோனி பகுதியில் தவுபிக்-அஞ்சும் ஷீபா என்ற தம்பதியினர் திலிப் மால்வியா என்பவருக்கு சொந்தமான ஆட்டோ ரிக்சாவில் பயணிக்கும் போது, மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக சந்தேகத்தின் பெயரில் பசுக்கள் கண்காணிப்பு பிரிவு படையினர் என்று கூறி இந்துத்வா கும்பல் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

வாகன ஓட்டியுடன் தம்பதியினரையும் நடுச்சாலையில் அடித்தும் மிரட்டியும் துன்புறுத்தியுள்ளனர். கணவனை மிரட்டி மனைவியை செருப்பால் அடிக்க வைத்த குரூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

மதவெறிப்பிடித்த கும்பலின் தாக்குதலில் ஷீபம் பாகெல் , தீபேஷ் நாம்தேவ், ரோஹித் யாதவ், சந்தீப் உய்க்கே மற்றும் ஷியாம் டெஹரியா ஆகியோர் “ஜெய் ஶ்ரீராம்” என்று முழக்கமிட வற்புறுத்தியுள்ளனர்.

பல மொழி, சாதி, சமயங்கள் கொண்ட நாட்டில் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்துத்வா கும்பலின் அராஜகப்போக்கை அரசு கண்டும் காணாமல் இருப்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். மேலும் ஷீபம் என்பவன் ஶ்ரீராம் சேனாவின் தலைவன் என்பதை இங்கே சற்றே கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களின் உதவியால் காணொளி எங்கும் பரவியதை தொடர்ந்து தாக்குதல் செய்த 5 பேரை கைது செய்ததுடன் தாக்குதலுக்கு உள்ளான 3 பேர் மீதும் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் வாக்கு எண்ணிக்கைக்கு முன்தினம் அதாவது மே 22 அன்று நடந்து பின் 24ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் சட்டத்தை கையில் எடுக்கும் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று கூறியிருக்கிறார்.

அதை தொடர்ந்தே மே 25 அன்று, #ஹரியானா மாநிலத்திலும் மதவாத தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
ஜேகப்பூரா பகுதியில் இரவு தொழுகை முடித்து வீடு திரும்பிய முகமது பார்க்கர் அலாம் என்ற 25 வயதுடைய வாலிபரை 4 இளைஞர்கள் கொண்ட கும்பல் “பாரத் மாதா கி ஜே “,”ஜெய் ஶ்ரீராம்” என்ற முழக்கங்களை சொல்ல வற்புறுத்தி மறுத்ததன் பேரில் கடுமையான தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை கழற்ற சொல்லியும், அதை கழற்றி எறிந்து தொடர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பாக 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கூறியுள்ளனர்.

அடுத்தடுத்த நாட்களில் #பீகார் மாநிலம் பெகுசாராயில் மே 26 அன்று முகமது காசிம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து முகமதுவிடம் விசாரித்த போது, ராஜீவ் யாதவ் என்பவர் குடிப்போதையில் தன்னிடம் பெயர் கேட்டு,நீ பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூறியப்படியே துப்பாக்கியால் சுட்டான் எனவும், மீண்டும் சுடவரும்போது தள்ளிவிட்டு தப்பியதாகவும் தெரிவித்தார்.

துப்பாக்கி சூட்டிற்கு பயந்து ஊர் மக்கள் கூட உதவ முன் வரவில்லையென வருத்தம் தெரிவித்தவர் வழக்குப்பதிவு செய்த பின்னரும் கூட அவனை கைது செய்யவில்லையென்று கூறியுள்ளார்.

ஆயுதங்களை வைத்திருக்கவும் பொதுவெளியில் பயன்படுத்தவும் மதவாத கும்பலுக்கு அரசு அளித்துவரும் ஆதரவும் கவனிக்கப்பட வேண்டியது.

ஜம்முகாஷ்மீரின் கதுவா மாவட்டம் ரசானா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமியான ஆசிபா 2018 ஜனவரி 10-ம் தேதி காணாமல் போனார். ஜனவரி 17ம் தேதி சிறுமியின் உடல் வனப்பகுதியில் மீட்கப்பட்டது.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கோயில் நிர்வாகியான வருவாய்த்துறை முன்னாள் அதிகாரி சஞ்சிராம் ,அவரது மகன், மருமகன், இவர்களின் நண்பன்,சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இருவர், சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும். தலைமைக் காவலர் என 8 பேர் கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்தனர் என்று வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

ஆசிபா வழக்கில் 6 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும், ஒருவன் சிறுவன் என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மீதமிருந்த ஒருவர் என்ன ஆனார்? என்பதே பற்றி ஊடகங்கள் ஏன் பேசவில்லை.

சிறுவன் என விடுதலை செய்யப்பட்டவன் செயல் சிறுவனுக்குரிய செயல் அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும் (source :The Indian Express )

ஆசிபா வழக்கை தொடர்ந்து #தமிழகத்தில் சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 23 வயது தஷ்வந்திற்கு தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் தஷ்வந்த் தாய் சரளா கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஶ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிட தக்கது.

மீண்டும் #மகாராஷ்டிரா மாநிலத்தில், 5 வயது தலித் சிறுவன் ஆர்யன் கட்சே என்பவன் கோவிலில் திருடியதாகக்கூறி, கடுமையாக தாக்கியதுடன் நிர்வாணப்படுத்தி சூடான கல்லில் அமர வைத்து அமோல் தோரை என்பவன் தண்டனை கொடுத்துள்ள சம்பவம் நடந்திருக்கிறது. ஆர்யன் கட்சேயின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடரும் இச்சாதிய மதவாத ஒடுக்கு முறைகளை கண்டும் காணாமல் நடந்து வரும் அரசை சர்வதிகார பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள் உணர்ந்து செயல்படுவது மிக அவசியம்.

பாயல் தாத்வியின் மரணத்தை தொடர்ந்து மேலும் மருத்துவ மாணவர் சாதிய வன்கொடுமையால் பலியாகி இருக்கிறார். இந்நாட்டில் சமத்துவம் எங்கே? இத்தீவிரவாத அரசியலின் பிடியில் நாடு கதறி தவித்து கொண்டிருக்கிறதே?

தொடர்ச்சியான மோடியின் அரசும், அதன் கையாளாக செயல்படும் நீதிமன்றங்களும் ஜனநாயகத்தை விற்று பிழைக்கிறதே தவிர மக்களாட்சி மண்ணோடு போனதை பற்றி சிந்திக்கவே மறுக்கிறது என்பதே சரி.

ஊடகங்களும் செய்திகளை கேளிக்கையாக்கி வியாபார நோக்கோடு விற்கிறதே ஓழிய மக்களின் குரலாக ஒலிப்பதை மறந்திருக்கிறது.மக்களும் மறதி நோயில் சிக்கி தானியங்கி இயந்திரங்களாக செயல்படுகிறார்கள்.காலத்தே வேரறுக்காத களைகள் இந்நாட்டினை கொன்றொழிக்கும்.
நாடு நாசமாவதை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள் வேறென்ன செய்வீர்கள் பாவம் நீங்கள் மனிதர்கள்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here