இந்திய ஒன்றியமும் – இளைஞர்களும்- பெருங்களத்தூர் கார்த்திக்

‘இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பு’ – இளைஞர்கள் அதிகம் கொண்ட இந்திய ஒன்றியம் ஏன் இன்றுவரை கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியே இருக்கிறது. பள்ளிக்கல்வி, தொழிற்கல்வி, இளநிலை, முதுநிலை என பருவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இருப்பினும் ஏதேனும் ஒரு நிலையில் அனைவரும் யுவன் யுவதிகளாக இருப்போம். சிந்திக்கும் திறனும் வேலை செய்யும் ஆற்றலும் மிக அதிகமாக இருக்கும். அத்தகைய ஆற்றல்கள் செயல்பாட்டிற்கு வந்தால் நாம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

50 முதல் 55 சதவீதம் இளைஞர்களைக் கொண்ட இந்திய ஒன்றியம் முன்னேறாமல் பின்னோக்கி செல்ல காரணம் யார்.? மாணவர்களுக்கு சரியான கல்வியும் சமூகத்தைப் பற்றிய சிந்தனையும் ஏற்படுத்தாத கல்வி முறையா.?
மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் தராத நமது அறிவியல் துறையா.?
துறைசார்ந்த விளையாட்டில் ஊக்கப்படுத்தாத விளையாட்டுத்துறையா.? பணத்திற்காக புற்றீசலாய் ஆங்காங்கு முளைக்கும் தனியார் கல்வி நிறுவனங்களா.? இளைஞர்களை மதுவிற்கும் போதைக்கும் அடிமையாக்கிய மது ஒழிப்பு துறையா.?
அனைவருக்கும் கல்வி என்று கூறுவதுபோல் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்று கூற தவறிய வேலைவாய்ப்பு துறையா.? இதை அனைத்தையும் சரியாக செய்யத் தவறிய இந்திய அரசா.?

வளர்ச்சி இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் என்ன.?
ஏன் நம்மால் எதையும் உள்நாட்டு உற்பத்தியாக உருவாக்கப்பட முடியவில்லை.?
புதிதாக எந்த ஒரு சாதனத்தையும் உருவாக்கப்பட முடியவில்லை. இதை தாண்டி தன் சொந்த முயற்சியில் மாணவர்கள் ஏதாவது கண்டுபிடித்தால் அதை மேம்படுத்த திட்டமிடாமல் தட்டி கழிக்கிறது அரசு. உதாரணம் கடல் நீரிலிருந்து குடிநீர் எடுக்கும் திட்டம். மாற்று வழியில் மின் உற்பத்தி திட்டம். குறைந்த செலவில் எரிபொருள் திட்டம். இது போன்ற பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. இவை அனைத்தையும் உள்நாட்டு உற்பத்தியில் செய்யத் தொடங்கினால் நம் நாடு வளர்ந்து விடும். ஆனால் முதலாளித்துவ வளர்ச்சிக்காகவே இதுபோன்ற திட்டங்கள் அரசு செயல்படுத்தாமல் இருக்கிறது.

பள்ளிகளில் கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பணத்திற்காக பல்வேறு முறைகேடுகளினால் தரமற்ற ஆசிரியர்களும் பேராசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். இவர்களால் எப்படி ஒரு தரமான மாணவனை உருவாக்க முடியும். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வினால் ஏற்படும் பல்வேறு கையாடல்களும் முறைகேடுகளும் கல்வித்துறைக்கு மிகப்பெரும் அவலநிலையை ஏற்படுத்துகிறது. இந்த கல்வித்துறை மாணவர்களை எப்படி திறம்பட கையாளும்.? அந்த மாணவர்கள் எப்படி சமூகத்தை முன்னேற்றுவார்கள்.? இது போன்ற செயல்களை மாணவர்கள் கேள்வி கேட்டாலோ போராட்டம் செய்தாலோ மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என அவர்களை ஒடுக்கி அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு. இது ஒருபுறம் இருப்பினும் பெரும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கொலையாலும், தற்கொலையாலும் இறந்து போகிறார்கள். இது சமூகத்தை உண்மை நிலையை எடுத்துக்காட்டுகிறது. கொலை செய்யும் மாணவர்களை சீர்கேட்டில் எடுத்து செல்கிறது அவர்களுக்கான கல்வி. தற்கொலை செய்யும் மாணவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையற்ற வாழ்க்கையை காட்டுகிறது இந்த கல்வி. தென் மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு கல்வி கற்கச் செல்லும் பல மாணவர்கள் இறப்பது மிகுந்த வேதனைக்குரியது மற்றும் ஆய்வுக்குறியது. ஆனால் அதைப்பற்றி கல்வித்துறை கண்டுகொள்வதே இல்லை.

‘ தீண்டாமை ஒரு பாவச் செயல்’ என்று ஐந்து வயதிலேயே ஒரு மாணவன் படிப்பான். ஆனால் அதனை விளக்கி எந்த ஒரு ஆசிரியராலும் பெரும்பாலும் கற்பிக்க படாமலேயே இருக்கும். இதன் விளைவு அவன் சமூகத்தில் இளைஞனான பின் தீண்டாமையால் தீண்டப்படுவார் அல்லது தீண்டாமையை தீண்டுவார். இத்தகைய கேடுகெட்ட சமூகத்தில்தான் மாணவர்களும் இளைஞர்களும் உருவாக்கப்படுகிறார்கள். அறிவியலாலும் அரசியலாலும் விளையாட்டாலும் திறம்பட சிந்திக்க உருவாக்கப்படும் மாணவர்களே சமூகத்தின் வேர்கள்..
விதைகளை விதைப்போம் வெற்றி காண்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here