இந்திய அரசை பொறுத்தவரையில் ஆந்திரா இந்தியாவின் ஒருபகுதி கிடையாது -சந்திரபாபு நாயுடு

இந்திய அரசை பொறுத்தவரையில் ஆந்திரா இந்தியாவின் ஒருபகுதி கிடையாது என சந்திரபாபு நாயுடு கடுமையாக கூறிஉள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும், மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சிறப்பு நிதி எதையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திராவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்காத விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் புயலை கிளப்பி வருகிறது.

மாநிலங்களவையில் நேற்று அருண் ஜெட்லி பேசுகையில், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்குவது தொடர்பாக இருநாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றார். இருப்பினும் ஆந்திர பிரதேச மாநில எம்.பி.க்களின் போராட்டம் தொடர்கிறது.

மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்காத விவகாரத்தில் அதிருப்தி அடைந்து உள்ள ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மத்திய அரசை பொறுத்தவரையில் ஆந்திர பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருபகுதி கிடையாது என கூறிஉள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

துபாயில் உள்ள சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் அறிவிக்கை தொடர்பாக கட்சியின் தலைவர்களிடம் பேசிஉள்ளார். தொலைபேசியில் நடந்த கூட்டத்தில் விரிவான தகவல்களை அவரிடம் எடுத்துரைத்து உள்ளனர். அப்போது சந்திரபாபு நாயுடு பேசுகையில், “இந்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையானது ஆந்திர பிரதேச மாநில மக்கள் நாம் இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லை என உணரசெய்யும் வகையில் உள்ளது,” என கூறிஉள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

“ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதி கிடைக்கும் வகையில் இந்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கடுமையான போராட்டத்தினை முன்னெடுக்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டு உள்ளார்,” என அக்கட்சியின் மக்களவை தலைவர் நரசிம்கம் கூறிஉள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here