பா.ஜ.க ஆட்சியில் இந்தியா கற்காலத்திற்கு திரும்புகிறதா? – சுமதி விஜயகுமார்.

உலகம் அறிவியல் தளத்தில் நான்கு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டுநர் இல்லாத கார்கள், கிழக்கு மேற்கு உலகங்களை இணைக்கும் சீனாவின் பெய்ஜிங் முதல் லண்டன் வரை 17 நாடுகளை இணைக்கும் ரயில் பாதை திட்டம், நிலவுக்கு ரோபோ அனுப்பும் திட்டம் என்று பல அறிவியல் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறது. இப்போது பரவி கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயற்சித்து கொண்டிருக்க, இந்தியாவோ வேறு பல வேலைகளில் மிக அக்கறையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்தியாவின் GDP இதுவரை இல்லாத அளவிற்கு 23.9% குறைந்துள்ளது. ஒரே நாளில் 80,000-த்திற்கும் மேல் புதிதாக கொரோனா தொற்று பதிவாகி கொண்டிருக்கிறது. மிக சமீபத்தில் 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த தாய் , ஊரடங்கால் வேளைக்கு செல்ல முடியாமல் பட்டினியாய் இருந்துள்ளார். மகன் பசியில் இறந்து போக , அவனை உரியமுறையில் அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல் வீட்டிலேயே 5 நாட்களுக்கு வைத்திருந்திருக்கிறார். உடல் அழுகி நாற்றம் வெளியில் வர அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் . ஊரடங்கு ஆரம்பித்த காலத்தில் கால்நடையாய் தங்கள் கிராமங்களுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் வழியிலேயே இறந்த துயரத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம்.

இதற்கெல்லாம் அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்ற ஏக்கத்துடன் பார்த்தால் , பிரதமரோ மயிலுக்கு உணவு கொடுத்து அதை புகைப்படம் எடுத்து பெருமை கொள்கிறார். நாடே அலங்கோலப் பட்டுக்கொண்டிருக்க நாட்டு நாய்களை வளருங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

இந்தியாவின் முதல் (?) பெண் நிதியமைச்சர் என்ற பெருமை கொண்ட நிர்மலா சீதாராமனோ இது ஆண்டவன் செயல் என்று கையை விரித்து விட்டார். கொரோனா பிரச்சனை உலக நாடுகள் அனைத்திற்கும் இருக்கிறது, ஆனாலும் பல நாடுகள் இந்த பிரச்சனையை கடும் முயற்சியினாலும், வேலை இழந்து பொருளாதரத்தில் தவிக்கும் தொழில் முனைவோருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து மக்கள் உயிரை காப்பாற்றி கொண்டிருக்கிறது. இந்தியாவோ,  பெரு  முதலாளிகளின் வரியை தள்ளுபடி செய்துகொண்டிருக்கிறது.

கொரோனா தொற்று பரவ துவங்கிய நாட்களில் உலக நாடுகள் ஊரடங்கு நிலையை அமல்படுத்தி கொண்டிருக்க, இந்தியாவோ Namasate Trump என்று கோலாகலமாக பல லட்சம் மக்களை கூட்டி கொண்டாடி தீர்த்தது. கொரோனா பரவல் அதிகம் ஆன சமயம் அதற்கும் மத சாயம் பூசி தப்லிக் ஜமாதினால் தான் தொற்று பரவியது என்று கதறியது. அதன் பின்பாவது பாடம் கற்றதா என்றால் இல்லை என்பதே பதிலாய் கிடைக்கிறது. 400 ஆண்டுகளுக்கும் பழமையின் சின்னமாய் விளங்கிய பாபர் மசூதியை இடித்து அங்கு ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழாவை மிக சிறப்பாய் உத்தரபிரதேச முதல்வர் ஏற்பாடு செய்தார். அதன் தலைமை அர்ச்சகருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாய் மொட்டை மாடியில் நின்று கைகளை தட்டவும் , இரவு 9 மணிக்கு விளக்கை அணைக்கவும் சொல்லி மக்களுக்கு அறிவுரை வழங்கபட்டது. இதனால் எல்லாம் கொரோனா கட்டுக்குள் வந்ததா? என்றால் அதன் பின்னர் தான் வீரியம் அடைந்தது.

கொரோனா தொற்று காலத்தில் தான் இந்த அரசு இப்படி இருக்கிறதா என்று பார்த்தால், பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்த 2014 முதல் இதைத்தான் வேறுவேறு விதங்களில் செய்து கொண்டிருக்கிறது. மோடி ஆட்சி அதிகாரத்தில் நுழைந்தது முதல் மக்கள் நல திட்டங்கள் பலவற்றை அறிவித்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை. அந்த திட்டங்களுக்கு , நம் மனதில் பதியாத அளவிற்கு ஹிந்தி பெயர்களை வைத்தார். அறிவித்த திட்டங்களில் பாதி இல்லை 5% திட்டங்கள் கூட துவங்கப்படவில்லை என்பதே நிதர்சனமாய் இருக்கிறது. இது இப்படி இருக்க, காஷ்மீரை வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைக்கும் முயற்சியாய் , காஷ்மீரிகளுக்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370ஐ கலைத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்து , இனி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று உறுதியளித்தார். 

நாளைய தூண்களை உருவாக்கும் பல்கலைக்கழகங்களான ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் JNU பல்கலைக்கழகங்களுக்குள் பிஜேபியின் கிளை அமைப்புகள் நுழைந்து மாணவர்களிடம் வெறியாட்டம் நிகழ்த்தியது. அதில் வன்முறை நிகழ்த்தியவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. மாறாக பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். மஹாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பீமா கோரேகோன் நிகழ்ச்சியில் வன்முறையை தூண்டியதாக சமூக செயல்பாட்டாளர்களும், பேராசிரியர்களும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் பேத்தியின் கணவராகிய ஆனந்த் டெல்டும்டே-வை எந்த ஆதாரமும் இல்லாமல் பிஜேபி அரசு கைது செய்தது. 

பேனாவை ஆயுதமாக தீட்டி எழுதி வந்த 80 வயது வரவர ராவ் என்பவரை, சிறையில் அடைத்து கொடுமை படுத்தி கொண்டிருக்கிறது இந்த அரசு. ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்தால் பிஞ்சு குழந்தைகள் இறக்க நேரிடும் என்று தன் சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டரை வாங்கி பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய உத்தரபிரதேச மருத்துவருக்கு இந்த அரசு கொடுத்த வெகுமானம் பல ஆண்டுகால சிறை தண்டனை. காரணம் அவரின் பெயர். கபீல் கான் என்ற இஸ்லாமிய பெயர். மாட்டின் பெயரால் அடித்தே கொல்லப்பட்ட இந்தியர்களின் ரத்தக்கறை இன்னும் இவர்களின் கையிலிருந்து காயவில்லை. கொலையுண்டவர்களில் பெரியவர்கள் என்று மட்டும் அல்லாமல் , புதிதாக திருமணம் ஆன இளைஞர்களும், 14,15 வயதே ஆன சிறுவர்களும் அடக்கம். அந்த கொலைகளை செய்தவர்களுக்கு பாராட்டு விழாக்களை பிஜேபி கட்சியினை சேர்ந்தவர்கள் முன்னெடுத்தார்கள்.

எழுத்தாளர்களான கௌரி லங்கேஷ் , நரேந்திர தபோல்கர் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டது ஒரு முன்னோட்டம் தான். அனைத்து ஊடகங்களையும் தன் கைக்குள் போட்டு கொண்ட பிஜேபி அரசு , தமிழ்நாட்டின் ஊடகத்தையும் விட்டுவைக்கவில்லை. இடதுசாரி சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் வேலைய இழக்க வைத்ததை மிக சமீபமாக பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். சாமானிய மக்களுக்கு கடைசி பட்சமாய் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது உச்ச நீதி மன்றத்திடம் தான் இருக்கிறது. ஆனால் உச்சமன்ற நீதிபதிகளோ இந்திய வரலாற்றில் முதன்முதலாக ஊடகங்களை சந்தித்து நீதியை இனி மக்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள். அதில் ரஞ்சன் கோகாயும் ஒருவர். அவர்மேல் பாலியல் வழக்கு சுமத்தப்பட்டது. பின்னர் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. இப்போது அவர் பிஜேபியின் MP. அவர் பல முக்கிய வழக்குகளுக்கு தவறான தீர்ப்புகள் வழங்கியதையும் பின்பு பிஜேபியில் இணைந்து MP ஆனதையும் பொருத்தி பார்த்தால் தெரியும் அவரின் நேர்மை.

ஒவ்வொரு செங்கலாய் தமிழ்நாடு கட்டமைத்த கல்வி நிலையங்களை புதிய கல்வி கொள்கை என்னும் பெயரில் தகர்க்க திட்டங்கள் தீட்டியாகி விட்டது. அந்த புதிய கல்வி கொள்கையின் இலக்கை தமிழ்நாடு என்றோ அடைத்து விட்டது. அதனால் என்ன , நாம் தான் ஒரே நாடு ஆயிற்றே. நீட் தேர்வினால் நாம் இழந்த அனிதாவிற்கே இன்னும் நியாயத்தை பெறவில்லை. அதன் தொடர்ச்சியாய் பல பிள்ளைகளை தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோம். விமானநிலைய சேவை , ரயில்துறை சேவை , துறைமுகம் என்று அனைத்தும் தனியார் மயம் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பிரச்சனைகள் பூதாகரமாக இருக்கும் போது, பா.ஜ.க விற்கு கருப்பர் கூட்டத்தின் முருகர் விமர்சனம்தான் மிகப்பெரிய பிரச்சனை. இரு பிரிவினருக்கிடையேயோ  அல்லது இரண்டு நபர்களுக்கு இடையேயோ தகராறு நிகழ்ந்து உயிர் சேதம் ஆனால் அதற்கும் மத சாயம் பூசி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியையே காலம் காலமாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கையில் இன்னும் 10 ஆண்டு ஆட்சி இருந்தால் இந்தியா கற்காலத்தையும் தாண்டி காட்டுமிராண்டி காலத்திற்கு தள்ளப்படுவது உறுதி.

மக்கள் விழிப்படைவது மட்டுமே தீர்வாய் அமையும்.