இந்தியாவை பிளவுபடுத்தும் புதிய குடியுரிமை சட்டங்கள்.- அஸ்வினி கலைச்செல்வன்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை பற்றிய பல செய்திகளும் கட்டுரைகளும் போராட்டங்களும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கூட மக்களை உண்மைகள் இன்னும் சென்று சேரவில்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவுற விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தே எழுதுகிறேன்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் சாராம்சம்:

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்திய நாட்டின் குடிமக்களாகிய ஒவ்வொரு இந்தியரும், தான் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர் இந்திய குடிமகன் என்பது ஏற்றுக்கொள்ளப்படும். ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால், குடியுரிமை பறிக்கப்படும். குடியுரிமை பறிக்கப்பட்டவர்கள் அனைவரும், அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்படலாம். அவர்களில் பலர் சொந்த நாட்டிற்கு நாடுகடத்தப்படலாம்.இது மதசார்பற்ற முறையில் அனைவருக்கும் பொதுவானது.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியாவுக்குள் அல்லது இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்தியர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களுடன் கூடிய பதிவேடாகும். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மாநிலக் குடிமக்கள் பதிவேடு, மாவட்டக் குடிமக்கள் பதிவேடு, துணை-மாவட்ட குடிமக்கள் பதிவேடு, மற்றும் வட்டாரக் குடிமக்கள் பதிவேடு ஆகியவை அனைத்தும் உள்ளடக்கிய பதிவேடாகும். இது NRC (National Register of Citizens) எனப்படும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் சாராம்சம் :

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பது இந்தியாவில் வசிக்கும் அனைவரின் (குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதோர்) பெயர்களும் விவரங்களும் அடங்கிய பதிவேடாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையை கணக்கெடுத்து கொள்வதாகும். இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளிக்கு ஒரு முறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக 1872ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் கணக்கெடுப்பு 16வது ஆகும். சுதந்திரத்திற்கு பிறகு 8வது கணக்கெடுப்பு ஆகும். 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்களின் தரவுகளை சேகரிக்க மொபைல் செயலி பயன்படுத்தப்படும்.NPR என்பது National public ratio ஆகும்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது கிராமம், நகரம், டவுன், வார்ட்களில் வசிக்கும் குடியிருப்போரின் தகவல்கள் அடங்கிய பதிவேடு ஆகும். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறித்த பதிவேடு ஆகும்.

இந்திய குடிமக்களுக்கான தேசிய பதிவேடு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், முகவரி, திருமண உறவு, துணையின் பெயர், அங்க அடையாளம், பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவேட்டு எண், தேசிய அடையாள எண் போன்றவை உள்ளடக்கியதாக அமையும்.

ஏன் முஸ்லிம்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்க வேண்டும்?!

ஒருவர் முதலில் தான் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர் இந்து, கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், சமணம் அல்லது பார்சி மதத்தை சேர்ந்தவர் என்றால் அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான முதல் தகுதியை பெறுகிறார். ஆனால், அவர் இஸ்லாமியராக இருந்தால், குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இழக்கிறார்.

அடுத்ததாக அவர் எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து இந்தியாவுக்கு குடியேறியிருந்தால்,அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான இரண்டாவது தகுதியை பெறுகிறார். ஒருவேளை அவர் வேறு நாடுகளிலிருந்து குடிபெயர்ந்ததிருந்தால் குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இழக்கிறார்.

அடுத்ததாக அவர் எந்த தேதியில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அவர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் குடிபெயர்ந்திருந்தால் அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான முழு தகுதியையும் பெறுகிறார். அந்த குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்திருந்தால் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது.

மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் இந்த மசோதாவை எதிர்ப்பதே சரியானது. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். 

பிரதமர் மோடி குடியுரிமை பெற்றவரா?!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றதற்கான ஆதாரத்தை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியான தகவலின் அடிப்படையில் நரேந்திர மோடி பிறப்பால் இந்தியாவின் குடிமகன் எனவே குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என்று கூறியுள்ளனர்.தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் சீமி பாஷா, “குடியுரிமைச் சட்டம் 1955-ன் பிரிவு 3-ன்படி, பிரதமர் தன்னுடைய குடியுரிமையைப் பதிவு செய்யத் தேவையில்லை என்றால், பிறகு மற்றவர்கள் ஏன் தங்களுடைய குடியுரிமையைப் பதிவு செய்ய வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பாரபட்சமாக செயல்படும் அரசை கண்டித்து ,குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது நிலையில் டெல்லியில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. 42 பேர் வரை கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here