இந்தியாவும் ஈழமும் ..சொ.சங்கரபாண்டி

இந்தியாவும் ஈழமும் ..சொ.சங்கரபாண்டி

திமுக ஆதரவு திராவிடச் சிந்தனையாளர்கள் (கலைஞர் குடும்ப மூடநம்பிக்கையாளர்களான திமுக உபி கூட்டத்தைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை!) கடந்த சில ஆண்டுகளாகச் சொல்லிவரும் பாதி உண்மையொன்றுண்டு. அதாவது, ஈழப்பிரச்னையால் திமுக இழந்தது அதிகம் என்று அடிக்கடி ஒப்பாரி வைக்கிறார்கள்.

(திமுக மட்டுமல்ல. அதிகம் இழந்தது மதிமுகதான். வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பொழுது எம்ஜியாரை விட ஒரு அரசியல்வாதியாக அதிக அளவு நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்டவர். அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டமும் திரண்டது. சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றார். அவரைப் போன்றவர்கள் வளர்வதை விட ஸ்டாலின் வளர்வது நல்லது என்று முடிவெடுத்த துக்ளக் சோ அவரைப் பற்றி பல அவதூறுகளையும், அவநம்பிக்கைகளையும் வெளியிட்டு ஸ்டாலினைத்தான் திமுகவின் நியாயமான வாரிசு என்று உயர்த்திப் பிடித்தார். அப்பொழுதிருந்த ஜெயலலிதா எதிர்ப்பலையினால் மதிமுக-மார்க்சிஸ்டு கூட்டணியோ, பாமக அணியோ கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுவிடக்கூடாதென்பதற்காகவே சோ இராமசாமி வெளிப்படையான அரசியலில் இறங்கி திமுகவை ஆதரித்து இரஜினி பகடைக்காயை நகர்த்தி மூப்பனார் காங்கிரசுடன் சேர்த்து வைத்தார். தமிழக அரசியலில் பார்ப்பனிய சூழ்ச்சியை மிகக்கச்சிதமாக எப்பொழுதுமே செய்தவர் சோ இராமசாமிதான். அவரைப் பார்க்கிறபொழுது இப்போதைய குருமூர்த்தி ஒரு மகாமுட்டாள்தான்!

ஈழப்பிரச்னையைக் கைவிட்டால் வைகோவை பெரும் பொருளுதவி செய்து ஆதரிக்க அவர் சாதிக்கூட்டம் தயாராக இருந்ததாகவும், ஆனால் வைகோ அதற்கிணங்கவில்லை என்பதையும் பலமுறைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். வைகோவும், மதிமுகவினரும் ஈழப்பிரச்னையை முன்னெடுக்காமலிருக்கவே பொடா (pota)சட்டத்தைப் பயன்படுத்தியது பார்ப்பனிய வெறிக்கும்பல். ஆனால் இன்றோ நாம்தமிழர் கேடிக்கும்பல் அவரைப்போய் தெலுங்கனென்று கீழ்த்தரமாக எழுதிவருகிறது!).

எனவே, திமுகவும், மதிமுகவும் ஈழப்பிரச்னையால் இழந்தது உண்மைதான். ஆனால் அதன் இன்னொரு பக்கத்தைப் பற்றி திமுக ஆதரவு திராவிடச்சிந்தனையாளர்கள் சிந்திப்பதோ எழுதுவதோ இல்லை. அதாவது திராவிட அரசியலினால் ஈழப்போராட்டம் எத்தனை இழந்தது என்பதை. இந்தியா எப்பொழுதுமே ஈழத்துக்கு எதிராகச் செயல்படும் என்கிற உண்மையில் அடங்கியிருக்கிறது இது.

(சில நாட்களுக்கு முன்பு பின்வருமாறு ஒரு பதிவில் எழுதியிருந்தேன்:
ஒருகட்டத்தில் சிங்களப் பேரினவாதமும், இலங்கை அரசும் முடிவுசெய்து, ஈழமென்ற பெயரில் ஒரு சிறிய நிலத்துண்டைத் தருகிறோம், அதை எடுத்துக் கொண்டு தமிழர்கள் இலங்கையை விட்டுத் தொலைந்து போங்கள் என்று சொன்னால் கூட அதையும் தரவிடாமல் தடுக்கும் இந்தியா என்ற இந்தி-இந்துத்துவ-சனாதனச் சாதிவெறி பிடித்த இந்தியா!
இது அப்பட்டமான உண்மை! இதைக் கடந்த 25 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன்.

இந்தியா ஏன் ஈழத்தை இப்படி எதிர்க்க வேண்டும் அல்லது ஒடுக்க வேண்டும்? 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனக்குத் தோன்றிய காரணங்கள் கீழே:

  1. பிற நாடுகளில் தனிநாடு கோரிக்கையை ஆதரித்தால் இந்தியாவிலும் இக்கோரிக்கைகள் வலுப்படுமென்று பொதுவாக எப்பொழுதுமே சொல்லப்பட்டு வந்தது. இதில் ஓரளவுக்குத்தான் உண்மை. இந்துத்துவ-பார்ப்பனிய நலன்களுக்கு அனுகூலமாக இருக்கிறதா என்பதே இந்தியாவின் நிலைப்பாடே ஒழிய, மொட்டையாகப் பிரிவினைகளையே எதிர்ப்பது என்பதல்ல. எடுத்துக்காட்டாக, வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிய இந்தியா முழுமையாக உதவியது இந்த அடிப்படையில்தான்.
  2. இரண்டாயிரமாண்டுகளாக சமஸ்கிருத மொழியையும், வைதீக மரபையும் தமிழ்மொழியும், தமிழ்மரபும் எதிர்கொண்டுப் போராடித் தத்தளித்து வருகிறது என்பதை வரலாறுச் சான்றுகள் கூறுகின்றன. சங்க காலத்தில் சமயங்களோ, பிறப்புவழிச் சாதிகளோ இல்லாமலிருந்ததையும், அதன்பின் படிப்படியாக இவை படையெடுப்பினாலும், கலப்பினாலும் படிப்படியாகத் திணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆங்கில ஆதிக்கத்தில் இவை பற்றிய அறிவியல் சான்றுகள் அடிப்படையிலான உண்மைகள் வெளிவரத் தொடங்கிய பின்னால் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுவிடுமென்று பயந்த பார்ப்பனிய வெறியாளர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குகின்றனர். இந்து-சமஸ்கிருத-இந்தி வெறியானது தேசப்பற்றின் பின்னால் ஒளித்துவைக்கப்படுகிறது. அதனால் தனக்கென்று ஓர் அடையாளத்தை தமிழும், தமிழர்களும் எங்கு எப்பொழுது ஏற்படுத்த முயன்றாலும் இந்தியா அதன் கழுத்தை நெறிக்கும்.
  3. தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் இந்தியத் தேசப்பற்றின் பின்னாலிருந்த சூழ்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தி மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தியதை இந்தியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திராவிட இயக்கம் இதைத் தேர்தல் அரசியல் மூலமாகவும் எளிதில் வெற்றிகண்டு இந்திய ஆட்சி அமைப்புக்குள்ளாகவே ஓரளவுக்குத் தனித்தன்மையைப் பேணி வந்தது மட்டுமல்லாமல் சமூக மற்றும் பொருளாதரத் தளத்தில் பெரும் வெற்றியையும் கண்டது.

இதே போல் ஈழத்தமிழர்களும் ஏன் செய்யவில்லை என்று திமுக கும்பல் தற்போது அடிக்கடி கேட்கிறது. தந்தை செல்வாவும், பிற தலைவர்களும் இதே வழியைப் பின்பற்றி முற்றிலும் தோற்றுப்போனதற்குப் பின்தான் ஆயுதம் தாங்கிய போராளி இயக்கங்களே ஆரம்பித்தன என்ற உண்மை கூடவா இந்த மூடர்களுக்குத் தெரியாது? இரண்டு நாடுகளுக்கும் அடிப்படையிலுள்ள இனவேறுபாடே இதற்குக் காரணம். இந்தியாவில் ஒரு மொழியடிப்படையிலான இனம் மட்டுமே பெரும்பான்மை பலம் கொண்டிருக்கவில்லை. ஜனநாயக வழியில் எல்லா மொழியினரையும் பலவந்தப் படுத்தும் அரசியல் ஆற்றல் எந்த ஒரு மொழியினத்துக்கும் இல்லை. ஆனால் இரண்டு மொழியினங்கள் மட்டுமே உள்ள இலங்கையில் சிங்கள இனம் இமாலயபலம் கொண்டதனால் ஜனநாயகமே வன்முறைத்தன்மை கொண்டது. அங்கு அறவழி, ஜனநாயக வழி என எல்லாமே தோற்றுப்போன பின்தான் ஆயுதப் போராட்டம் உருவானது. இப்பொழுது ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப் பட்டு 10 ஆண்டுகளாக ஜனநாயகத்தில் என்ன நடந்திருக்கிறது? உலக நாடுகளை அனைத்தின் கண்ணிலும் மண்ணைத்தூவி இலங்கை தன்வழியில்தான் போகிறது என்பதையாவது பேசுகிறதா இந்த மூடர் கூட்டம்? பெரிதாக உபதேசம் மட்டும் பண்ண வந்திருக்கிறது இந்தப் புதிய திமுக கும்பல்.

  1. மேலும் இந்தியாவின் பிறமாநிலங்களில் படிப்படியாக இந்து-இந்தி-பார்ப்பனிய இந்தியாவை முழுமையாக ஏற்கச் செய்துவிட்டது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை ஒரு தீண்டத்தகாத அரசியல் கொண்ட மாநிலமாகத்தான் பெருவாரியான இந்தியாவையும் கருதச் செய்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இடதுசாரி இந்தியர்களுடன் இணைந்து செயல்பட வேண்டுமென்று அடிக்கடி நினைப்பதுண்டு, ஏனெனில் இந்தியாவில் (இப்பொழுதும் கூட) நான் மதிக்கும் ஒரே அரசியல் சமூகம் அவர்களே. ஆனால் இரண்டு முறை அவர்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு ஈழப்பிரச்னையைப் பற்றிப் பேசும்பொழுது அவர்கள் விசித்திரமாகக் கேட்ட கேள்வி இதுதான். ஏன் தமிழ்நாட்டில் இந்தியை ஏற்க மறுக்கிறீர்கள்? ஆங்கிலத்தை ஆதரிக்கிறீர்களே? என்ற கேள்வி அமெரிக்காவிலேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்தியர்கள், அதுவும் சமத்துவத்தை ஆதரிக்கும் இடதுசாரிகளே கேட்கும் பொழுது நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் உணர்ந்திருக்கிறேன். அவர்களுக்கும் ஆத்திரப்படாமல் பக்குவமாக் காரணங்களை விளக்கிய பொழுதும் கூட கடந்துதான் சென்றார்களே தவிர, புரிந்துகொள்ள முயலவில்லை என்றே நினைக்கிறேன்.
  2. எனவே திராவிடமோ, தமிழ்த்தேசியமோ (என்னைப் பொறுத்தவரை இரண்டுமொன்றே!) ஏனைய இந்தியருக்கு அரசியலில் ஏற்புடையதல்ல என்கிற பொழுது ஈழத்து அமைப்புகள் அவர்களுடன் உறவாடியது ஈழத்துக்கு முற்றிலும் குந்தகமாகத்தான் அமைந்தது. வேளாளச் சாதி ஆதிக்கம் நிறைந்த ஈழ அரசியல் தலைமை திராவிட அரசியலுடன் உறவாடாமல் இந்துத்துவப் பார்ப்பனிய அரசியலுடன் (காங்கிரசு, பாஜக இரண்டும்தான்) உறவாடியிருந்தால் பங்களாதேசம் போன்று பயந்து அடங்கிக்கிடக்கும் ஈழத்தையாவது ஆதரித்திருப்பார்களோ என்னவோ. இல்லையென்றாலும் இந்த அளவுக்கு அழிவை இந்தியா ஈழத்தின் மேல் நிகழ்த்தியிருக்காது என்றே நினைக்கிறேன்.

திராவிட அரசியல் உறவினால் ஈழம் இழந்ததை திமுக மூடர்கள் பேசமாட்டார்கள். இன்னொரு பாதி உண்மை என்று நான் மேலே கூறியது இதுதான்.

  1. வேளாளச் சாதி ஆதிக்கம் நிறைந்த ஈழ அரசியல் தலைமை இந்துத்துவப் பார்ப்பனிய அரசியலுடன் உறவுகொள்ளாமல் சமத்துவ திராவிட அரசியலுடன் உறவாடச் செய்ததன் முக்கிய காரணம் போராளி இயக்கங்களே, குறிப்பாக புலிகள் இயக்கமே. மேலும் புலிகள் இயக்கம் திராவிட அரசியலிலிருந்து சாதி-பொருளாதார-பெண் விடுதலை போன்ற பல சமத்துவக் கூறுகளை தம் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மிக நேர்மையுடன் ஆட்சிப்படுத்தினர் என்பதையும் கூடப் பேச மாட்டார்கள் திமுக மூடர்கள்.
  2. தமிழ்நாட்டில் சனாதனப் பார்ப்பனியத்தில் நம்பிக்கையுள்ள அனைவருமே கண்மூடித்தனமாக ஈழத்தை எதிர்க்கின்றனர். ஏனெனில், தம் மீது வெறுப்பரசியலைக் கொண்ட, தம்முடைய அரசியல் அதிகாரத்தைத் தோற்கடித்த தமிழ்நாட்டைப் போல் முழு இந்தியாவும் ஆகிவிடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர். இந்தத் தெளிவான பார்வைக்கு அவர்களுக்கு அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகளின் துணை தேவையில்லை. அவர்களுடைய உள்ளுணர்வே வழிநடத்தும். ஈழத்துக்குத் துணைபோவதை அவர்களுடைய எதிர்காலத்துக்கு வைக்கும் நெருப்பாகப் பார்க்கின்றனர். இந்திய ஒன்றிய அரசிலும், வட இந்திய ஊடகங்களிலும், ஏனைய இந்தியா முழுவதும் தமிழ்நாட்டைப் பற்றியும் ஈழத்தையும் பற்றியும் அவர்கள் கருத்தே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனியத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் கூடப் பெரியாரியமும், மார்க்சியமும் பேசுவார்கள். ஆனால் மனித உரிமைப் போராட்டத்தின் பல தீர்வுகளில் ஒன்றாகவோ, அல்லது வேறு வழியே இல்லாத பட்சத்தில் அதை இறுதித்தீர்வாகக் கூடவோ அவர்களால் தனி ஈழத்தை நினைத்துப் பார்க்க முடியாது. இந்து இராம் ஒரு எடுத்துக்காட்டு.
  3. கலைஞர்-எம்ஜியார் அரசியலின் போது எம்ஜியாரை மலையாளி என்று இனவெறி அரசியல் செய்த திமுக அண்டை மாநிலமான கேரளாவில் வெறுக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டையும், ஈழப் போராட்டத்தையும் பற்றிய பயமும், அவர்களிடம் எப்பொழுதுமே உண்டு. இந்திய ஒன்றிய அரசில் வெளியுறவுத்துறையை எப்பொழுதுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கேரள அதிகாரி வர்க்கமும் தொடர்ந்து ஈழத்துக்கு எதிராகக் காய்களை நகர்த்தி வந்தனர்.
  4. மொத்தத்தில் தமிழ்நாட்டின் திராவிட-தமிழ்த்தேசிய கட்சிகளும், ஈழத்தமிழர்களும் ஒருவர் இன்னொருவருடன் கைகோர்த்து இருந்ததனால் இழந்ததுதான் அதிகம். ஆனால் உண்மையென்ன? இந்தியா என்ற எதிரி அவர்கள் இருவருக்கும் செய்ததை மறந்துவிட்டு இப்படியெல்லாம் நாம் எழுதுவதே வெட்கக்கேடானது. ஒரு குடும்பத்தை வெட்டிப்போட எதிரி வந்தால், தந்தை தன் பிள்ளையைக் காக்க நினைப்பதும், பிள்ளை தந்தையைக் காக்க நினைப்பதும் மாந்த இயல்பு. உன்னைக் காப்பாற்றப் போய் நான் வெட்டுப்பட்டேன் என்று எந்த அப்பனாவது, பிள்ளையாவது பேசுவானா. தமிழர்களாகிய நாமெல்லாம் என்ன பிழைப்போ, தூ…
  5. காணாததற்கு நம்மை மேலும் பிளவுபோடப் புதிதாக வந்திருக்கிறது நாம்தமிழர் என்ற கீழ்த்தரமான சீமானியக் கூட்டம்! அவர்களுடைய பிளவுவேலை படிப்படியாக வளர்ந்தும் வருகிறது. ஆனால் வெற்றி மட்டும் நம் அனைவரையும் முற்றிலும் அழிக்கத்துடிக்கும் எதிரியான இந்தி-இந்துத்துவ-சனாதன இந்தியாவுக்குத்தான் கிட்டும். தமிழர்களுக்கு விடிவுகாலமே இல்லையென்றே தோன்றுகிறது.

எல்லாத் தேசிய இனங்களையும் சம உரிமைகளுடன் நடத்தும் சமத்துவ இந்தியா என்பது இன்னும் கானல் நீராகவே இருக்கிறது. அதற்காக இந்தியா முழுமையிலும் போராடி வரும் சிறு சிறு ஜனநாயக சக்திகளையாவது இணைப்பதே இந்தியாவும் ஒரு நல்ல நாடாக அமைய வழிவகுக்கும். அதன்பிறகே ஈழம் போன்ற அண்டைநாட்டுச் சிக்கல்களும் தீரும்.

சொ.சங்கரபாண்டி.