இந்தியாவில் ஹிட்லர் சட்டம் -மா. சிவக்குமார்

குடியுரிமை சட்டத் திருத்தம் முதல் பார்வையில் பிரச்சனை எதுவும் இல்லாததாக பலருக்குத் தோன்றுகிறது. அது பெரிய மாற்றம் எதையும் செய்து விடவில்லையே என்றுதான் தோன்றுகிறது.

இந்தத் திருத்தப்படி பாகிஸ்தானில் அல்லது வங்க தேசத்தில், அல்லது ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக ஒடுக்கப்படும் இந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிருத்துவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக வந்திருந்தாலும், குடியுரிமை கோரலாம்.

2008-க்குப் பிறகு இந்தியாவைச் சுற்றி இருக்கும் நாடுகளில் எந்த நாட்டிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவுக்கு வெளியேற வேண்டி வந்தது.

– முதலில், 2008-09ல் நடந்த போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் வந்தார்கள்.

– இரண்டாவதாக, மியான்மாரில் 2017-18  முதல் தீவிரமனைந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கை மூலமாக துரத்தப்பட்ட ரோகிங்க்யா முஸ்லீம்கள் இந்தியாவுக்குள் வந்தார்கள்.

பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும், ஆப்கானிஸ்தானிலும் இந்து, பார்சி, சீக்கிய, ஜைன, கிருத்துவ மதச் சிறுபான்மையினருக்கு எதிராக மேலே சொன்னவை போன்று பேரளவு தாக்குதல்கள் கடந்த 10 ஆண்டுகளில் நடக்கவில்லை.  கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவு அகதிகள் வெளியேற்றமும் நடக்கவில்லை.

பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும், ஆப்கானிஸ்தானிலும் இந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிருத்துவ மதச் சிறுபான்மையினருக்கு எதிராக தனிநபர்கள் மீது தாக்குதல்கள் பல நடந்திருக்கின்றன. வங்கதேசத்தில் பகுத்தறிவுவாதிகள் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. (பாகிஸ்தானில் மலாலா மீது கூட தாலிபான்களின் தாக்குதல் நடந்தது, அகமதியா முஸ்லீம்களும், ஷியா முஸ்லீம்களும் தாக்கப்படுகிறார்கள்.).

‘ஆமாம், அகமதியாக்களும், ரோகிங்க்யாக்களும் ஒடுக்கப்படுகிறார்கள்தான். ஆனால், அகமதியா முஸ்லீம்களும், ரோகிங்க்யா முஸ்லீம்களும் உலகெங்கிலும் இருக்கும் முஸ்லீம் நாடுகளுக்கு குடியுரிமை கோரி போகும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவர்களுக்கு இங்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டாம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வசிக்கும் இந்து, பார்சி, சீக்கிய, ஜைன, கிருத்துவ மதத்தினருக்குத்தான் பிற நாடுகள் இல்லை’ என்று பதில் சொல்கிறார்கள்.

“இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் கிருத்துவ மதத்தினருக்கு உலகில் கிருத்துவ நாடுகள் இல்லையா” என்று கேட்டால் ‘அவர்களுக்கு அருகில் நாடு இல்லை, தொலைதூரம் போக வேண்டியிருக்கிறது. எனவே, இங்கு இடம் கொடுக்கிறோம்’ என்கிறார்கள்.

“இலங்கையிலிருந்து வெளியேற விரும்பும் ஈழத் தமிழர்களுக்கு புகலிடம் கொடுப்பதற்கு அருகில் வேறு ஏதாவது நாடு இருக்கிறதா” என்று கேட்டால் “அவர்களுக்கு ஒரு சிறப்பு சட்டம் மூலம் குடியுரிமை கொடுத்து விடலாம். இந்தச் சட்டத் திருத்தம் தேவையில்லை” என்று பதில் வருகிறது.

இவங்க வாதம் எல்லாம் எப்படி இருக்கு?

ஒரு கூட்டம் நடக்கிறது. எதிரெதிர் நிலையில் உள்ள பல்வேறு தரப்பினர் கூடி பேச வேண்டும். ஒருவர் அரிவாளை மறைச்சு எடுத்துக் கொண்டு வருகிறார். அதை கண்டுபிடிக்கிறாங்க.

“ஏன் அரிவாள் எடுத்துட்டு வந்திருக்கிற”

“இல்ல கூட்டத்த முடிச்சிட்டு மாந் தோட்டத்தில கொஞ்சம் வேலை இருக்கு. அதுக்குத்தான்.”

“தோட்டத்தில என்ன வேலை இப்ப, இப்பதான் மாங்காய் எல்லாம் முத்தி பழம் பறிக்கிற நேரமாச்சே. அரிவாளுக்கு என்ன வேலை?”

“பெரிய அளவு இல்லதான், ஆனா எதுக்கும் தேவைப்பட்டா இருக்கட்டும்னு வைச்சிருக்கேன்.”

“தோட்டத்துக்கு வேலை செய்ய வேறு யாரும் வரலையா? உன் மகன் வருவானே, வேலைக்கு ஆட்கள் வருவாங்களே, அவங்க அரிவாள எடுத்துக் கிட்டு வந்துற மாட்டாங்களா. தேவைப்பட்டா அவங்க அரிவாள பயன்படுத்திக்கலாமே”

“அதெல்லாம் இல்ல, எனக்கு என் அரிவாள் இருந்தாதான் கைவாகா இருக்கும்”

“சரி, அரிவாளை கூட்டத்துக்கு வெளியில வெச்சிட்டு வா, போகும் போது எடுத்துக்கலாம்”

“அப்படில்லாம் முடியாது, எனக்கு கொஞ்ச நாளாகவே முதுகுல நல்ல அரிப்பு, அப்பப்ப சொரிய வேண்டியிருக்கு. அதுக்கு அரிவாள கையோட வெச்சிருக்க வேண்டியிருக்கு…”

“டேய், முதுகு சொரியணும்னா, ஒரு விசிறிக் கட்டையோ, ஒரு கம்போ போதாதா, எதுக்கு அரிவாள்”

“அதெல்லாம் இல்ல, எனக்கு வர்ற சொறி, அரிவாளை வெச்சி சொரிஞ்சாதான் கேக்குது”

“ஆனா, அரிவாள் கூரா தீட்டியிருக்கிற மாதிரி தெரியுதே, முதுகு சொரியிறதுக்கு எதுக்கு தீட்டி கொண்டு வந்த”

“அரிவாள்னா பளபளன்னு கூரா இருந்தாதானே தோட்டத்துல தேவைப்படும் போது வெட்ட சரியாக இருக்கும்”

இப்பிடி மாத்தி மாத்தி பேசுறது இவங்க வாதமா இருக்கு. கேக்கறவங்களுக்கு இது முதுகு சொரியிற அரிவாளா, கிளை வெட்ற அரிவாளா, வேற எதாவதான்னு சந்தேகம் வருமா வராதா….

இப்படி சந்தேகம் வந்தா, அரிவாள் கொண்டு வந்த பார்ட்டி எப்படிப்பட்ட ஆளுன்னு பார்க்கணுமா, வேணாமா? அவரு தெருவுல ரெண்டு பேரு குடிச்சிட்டு சண்டை போட்டுகிட்டு இருந்தா அந்தத் தெருவையே தொடாம நாலு தெரு சுத்தி நடந்து போகக் கூடிய அப்பாவியா

அல்லது

30 வருசம் முன்னால ஒரு கும்பலை கூட்டிக் கொண்டு போய் சட்ட விரோதமா, உச்ச நீதிமன்றத்துக்கு கொடுத்த வாக்குறுதிய மீறி பாபர் மசூதியை இடிச்ச பார்ட்டியான்னு பார்க்கணுமா வேண்டாமா? அப்போ அவங்க கட்சிதான் உத்தர பிரதேசத்தில ஆட்சியில இருந்ததுன்னு பார்க்கணுமா வேண்டாமா?

அதுக்கு முன்னேயும் பின்னேயும் நாடு முழுவதும் மதக் கலவரங்களை முன்னே நின்னு நடத்தினவங்க. குறிப்பா 2002-ல் அவங்க கட்சி ஆட்சியில இருக்கும் போது குஜராத்தில் இரண்டரை மாதங்களாக கலவரம் நடத்தி 2000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டாங்க என்பதை பார்க்கணுமா வேண்டாமா?

‘முஸ்லீம்தான் நம்ம எதிரி, இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தமானது, இதை ஏத்துக்கிட்டு இந்துக்களின் தயவில இருக்கிறவங்க மட்டும்தான் இங்க வாழலாம்’னு 100 வருசத்துக்கு மேலா பேசிகிட்டு இருக்காங்க என்பதையும் சேர்த்து பார்க்கணுமா வேண்டாமா?

இன்னும் இது போல பட்டியலை பார்த்துகிட்டே போனா இந்த பார்ட்டி இப்படி ஒரு சட்டத் திருத்தத்தை ஏன் கொண்டு வருதுன்னு சந்தேகம் வரத்தானே செய்யணும்!

இந்தச் சட்ட திருத்தத்தில முக்கியமான ஒண்ணு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கிய, ஜைன, பார்சி, கிருத்துவ மதத்தினர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ் குடியுரிமை இல்லாமல் இங்கு இருப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கிய, ஜைன, பார்சி, கிருத்துவ மதத்தினர் மட்டும் குடியுரிமையை நிரூபிப்பதற்கு ஆவணங்களை காட்ட முடியா விட்டாலும்.

– சிறைக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.
– அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட மாட்டார்கள்.
– நாட்டை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள்.

அப்படின்னா தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களை காட்ட முடியாத ஒருவர் தான் பாகிஸ்தான், வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த இந்து, பார்சி, சீக்கிய, ஜைன அல்லது கிருத்துவ மதத்தினர் என்று எழுதிக் கொடுத்து விட்டால் போதும்.

– ஒரு ஈழத் தமிழர் தான் இந்தி அல்லது வங்காள மொழி பேசுபவராக காட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.
– ஒரு தமிழ்நாட்டு பழங்குடியே கூட குடியுரிமையை நிரூபிக்க முடியா விட்டால் தான் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இந்துவாக காட்டினால்தான் மேலே சொன்ன தண்டனையிலிருந்து தப்பலாம்.
– இந்தியாவின் எந்தப் பகுதியிலும் உள்ள முஸ்லீம்கள் மேலே சொன்னது போல ஆவணத்தின் படி தமது குடியுரிமையை நிரூபிக்க முடியா விட்டால், அவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த இந்து, பார்சி, சீக்கிய, ஜைன அல்லது கிருத்துவ மதத்தை சேர்ந்தவர்களாக நிரூபித்தால்தான் தண்டனையிலிருந்து தப்பலாம்.

பா.ஜ.க ஆட்சியில் இருக்கும், பா.ஜ.க வலுவாக இருக்கும் மாநிலங்களிலும், பகுதிகளிலும் இது எப்படி அமல்படுத்தப்படும் என்று யோசித்துப் பார்க்கலாம். அதாவது, கூர் தீட்டப்பட்ட, கைக்கு அருகில் இருக்கும் அரிவாள் எப்படி பயன்படுத்தப்படும் என்று யோசித்துப் பாருங்கள்.

2025 ஜனவரி 1-ம் தேதிக்குள் (உதாரணமாக) தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி ஆவணங்களை கொடுத்து தன்னை நிரூபித்துக் கொள்ளாத எல்லோரும் சட்ட விரோத குடியேறிகளாகி விடுவார்கள்.

உள்ளூர் கட்சிக்காரர் (பா.ஜ.க) உதவியுடன் தேசிய குடிமக்கள் பதிவேட்டு அதிகாரியிடம் போய் ஆவணத்தை காட்ட வேண்டும். அந்த ஆவணம் செல்லுமா, செல்லாதா, போலியா, ஒரிஜினலா என்பைத அந்த அதிகாரி முடிவு செய்வார். அதை எதிர்த்து முறையீடு செய்யலாம், அங்கும் நிராகரிக்கப்பட்டால், சிறைக்கு, அகதிகள் முகாமுக்கு, நாட்டை விட்டு வெளியே அனுப்பப்படலாம். வீடு, தொழில், நட்புகள் எல்லாம் பறிக்கப்படும்.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இதில் என்ன வாய்ப்பு இருக்கிறது? யாருடைய தயவில் இதை அவர்களால் செய்ய முடியும்?

பெரும்பான்மை இந்து சமூகத்தின் கலாச்சாரத்தை [அதாவது ஆர்.எஸ்.எஸ் செல்லுவதை] ஏற்றுக் கொண்டு அவர்கள் தயவில் வாழ முன்வருபவர்கள் மட்டும் இங்கு இரண்டாம் நிலை குடிமக்களாக [சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, மிலேச்சர்களாக] வாழ அனுமதிக்கப்படுவார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் 100 ஆண்டு கால பழைய கொள்கைக்கு ரோடு போடுவதாகத்தானே இந்தச் சட்டத் திருத்தம் உள்ளது.

இத்தகைய ஒரு கொள்கை ஜனநாயகத்துக்கு எதிரானது, நவீன சமூகத்துக்கு எதிரானது, அறிவியல் முன்னேற்றத்துக்கு எதிரானது. இது காட்டுமிராண்டி காலத்துக்கு உகந்த கொள்கை, ஆர்.எஸ்.எஸ்-ம், பா.ஜ.க-வும் அத்தகைய காலத்துக்கான அமைப்புகள்.

அவர்களை நம்பி இதை ஏற்றுக் கொள்ளச் சொல்பவர்கள் யோசிக்க வேண்டும்.

மா.சிவக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here