இந்தியாவில் பொதுவாக்கெடுப்பின் வரலாறும் , பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் அதன் சிக்கல்களும்.- இரொங்பாம் மொகேந்திர சிங்.

கங்லா இணையத்தில் வந்த இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.”

பொதுவாக்கெடுப்பு என்பது இந்தியாவுக்கு என்றும் வேண்டாத சொல், இது ஓம்காரத்திற்கு எதிரானது. காஷ்மீரைச் சேர்ந்த மகாராஜா ஹரி சிங் ஏற்கனவே ஆகஸ்ட் 15, 1947 அன்று பாகிஸ்தானுடன் ஒரு நிலையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், இந்தியாவுடன் சேருவதா அல்லது பாகிஸ்தானுடன் சேருவதா என்ற தயக்கத்தில் இருந்த போது, பாகிஸ்தான், பதான் பழங்குடியினரை அக்டோபர் 20, 1947 அன்று காஷ்மீருக்குள் ஊடுருவ அனுப்பியது.
மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் உதவி கோரினார். அக்டோபர் 26, 1947 அன்று, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட பின்னரே இந்தியா உதவி செய்தது.
இது இந்தியாவுக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு, இல்லையென்றால் சிறிநகர் ஆசாத் காஷ்மீரில் இருந்திருக்கும்.
அக்டோபர் 27, 1947 அன்று இந்திய துருப்புக்கள் காஷ்மீருக்குள் இறங்கின. சிறிநகருக்கு வெளியே பாராமுல்லாவில் பதான் படையெடுப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு பாகிசுதானின் பதான் பழங்குடியினர் மக்களை கொள்ளையடிப்பது மற்றும் பெண்களைக் பாலியல் வன்கொடுமை செய்வதில் மும்முரமாக இருந்தனர். இறுதியில் பதான் பழங்குடியினர் இந்திய ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர்.
ஏற்ற நேரத்தில் காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேரு, மகாராஜா ஹரி சிங்-கிடம் உறுதியளித்தார். மேலும் காஷ்மீரில் உள்ள பெரும்பான்மை முஸ்லீம் மக்களை திருப்திப்படுத்துவதற்காக தேசிய மாநாட்டின் தலைவரான ஷேக் அப்துல்லாவிடம் அரசாங்கத்தின் பொறுப்பை ஒப்படைக்க மகாராஜா ஹரியை வற்புறுத்தினார்.
பொது வாக்கெடுப்பின் முடிவு எந்த திசையை நோக்கி செல்லும் என்று யூகிக்க முடியாத இந்திய அரசு , காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கான முயற்சிகளுக்கு தடையாகவே உள்ளது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் மூண்ட போது, நேரு ஐ.நா.வின் உதவியை கோரினார். ஜனவரி 1, 1949 இல், இந்தியாவும் பாகிஸ்தானும் கராச்சியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, மேலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) வரையப்பட்டது.
காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியாவை கட்டாயப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இது உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா கூறுவதால் அமெரிக்கவும் தலையிட மறுக்கிறது.
ஐ.நா.வின் சாசனத்திற்குள், உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் உலக அமைப்பு தலையிடுவதற்கு வெளிப்படையான தடை உள்ளது. இது சாசனத்தின் குறிப்பிடப்பட்ட விதி, கட்டுரை 2 (7) ஆகும்.
பாக்கிசுதானின் ஆயுதப் படைகளின் இரகசிய ஆதரவு இருந்தும், காஷ்மீர் பிரிவினைவாதிகளால் சுயநிர்ணய உரிமை வாக்கெடுப்பு நடத்த இயலா சூழ்நிலை ஒரு பக்கம் இருப்பதால், இந்திய அரசாங்கத்திடம் பொது வாக்கெடுப்பு கேட்பது என்பது மணிப்பூருக்கு சாத்தியமே இல்லை.

குஜராத்தின் தென்கிழக்கு முனையில் முஸ்லீம் மன்னராட்சி ஜுனாகத் அரசு 1947-இல் சுயநிர்ணய உரிமை வாக்கெடுப்பு வாக்குறுதியுடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். ஆனால் அது ஒருபோதும் ஜுனாகத் மாநிலத்தில் நடக்கவில்லை.
காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய மாநிலம் என்பதையும், அங்கு வசிக்கும் 12 மில்லியன் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தங்கள் விதியை தீர்மானிக்க வேண்டும் என்பதை பற்றியும் காஷ்மீரின் எதிர்காலத்தை அங்கீகரிக்கும் கேள்விக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பல தீர்மானங்களை நிறைவேற்றியது. இப்போது 64 ஆண்டுகள் ஆகியும், எதுவும் நடக்கவில்லை.
Plebiscite என்ற ஆங்கில சொல்லுக்கு சில முக்கியமான பொது கேள்விகள் தொடர்பாக – ஒரு மாநிலத்தின் தகுதி வாய்ந்த வாக்காளர்களிடையே நடத்தப்படும் நேரடி வாக்கெடுப்பு அல்லது ஒரு அரசியல் பிரிவின் மக்கள் மற்றொரு நாட்டோடு இணைவதற்கோ அல்லது தங்கள் சுயாட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஆகும்.
சுயநிர்ணய உரிமை எவ்வளவு கடினம் என்பதைக் புரிந்துகொள்ள நான் சு(ஸ்)காட்லாந்தை மேற்கோள் காட்டுவேன். சுகாட்லாந்து ஏற்கனவே 2007 முதல் இங்கிலாந்தில் அதிகாரப் பகிர்வில் உள்ளது. தனக்கென எடின்பர்க்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்றத்தைக் கொண்டுள்ளது. சட்டமன்ற அதிகாரங்களும் மற்றும் வரியை மாற்றி அமைத்துக்கொள்ளும் அதிகாரங்களைக் பெற்றுள்ளது.
இப்போது ஆளும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி, சுகாட்லாந்தின் சுதந்திரம் குறித்து வாக்கெடுப்பு நடத்த முன்வருகிறது. அது நடக்கப்போவதில்லை என்று பிரிட்டனின் முன்னால் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியிருக்கிறார்.
சர்வதேச சட்டத்தின் கீழ் சுதந்திரத்திற்கான கோரிக்கையில் மூன்று நிபந்தனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்: (1) மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா? (2) அப்படியானால், சுயநிர்ணய உரிமைக்கு உட்பட்டவர் யார்? மற்றும் (3) சுயநிர்ணய உரிமை பிரிவினைக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறதா?
சுகாட்லாந்திற்கான சுதந்திரம் இங்கிலாந்தைக் கலைத்து இரண்டு மாநிலங்களை உருவாக்குவதாக இருக்காது. அதற்கு பதிலாக ஸ்காட்லாந்து அயர்லாந்து குடியரசு போலவே, இங்கிலாந்திலிருந்து பிரிந்து செல்லும்,. இதனால் சர்வதேச சட்டத்தில் இங்கிலாந்தின் நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது.
இது ஒரு பக்கம் இருக்க, சுகாட்லாந்து தன்னாட்சி அடையுமாயின் அது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மற்றும் ஐ.நா., சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பிற சர்வதேச அமைப்புகளுடனான அதன் உறவை வரையறுக்க வேண்டும். இதெல்லாம் நடக்க பல ஆண்டுகள் ஆகும்.
மணிப்பூரில் பொது வாக்கெடுப்பு கேட்பது அவ்வளவு எளிதல்ல. இந்த பணியில் உள்ள சிக்கல் என்னவெனில் இது ஒரு எளிய கட்டமைப்பை சார்ந்ததோ, யோசனையோ அல்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் அணுகுமுறைகளோ அல்ல, மாறாக இது மிகவும் கடினமான கட்டமைப்பை சார்ந்த சிந்தனையும் அணுகுமுறையும் கூட. மேலும் இது பல நுட்பமான முக்கியத்துவம், கொண்ட பொருளை உள்ளடக்கிய சிந்தனை ஆகும்.


உண்மையில் எந்த இடத்திலும் ஒரு நபர் எப்போது வேண்டுமானாலும் புவியியல் ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியில் நடத்தப்பட வேண்டிய பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு கொடுக்கலாம். ஆனால் மாற்றத்திற்கு ஆதரவு இருப்பதற்கான நியாயமான சான்றுகள் அந்த மனுவில் இருக்கவேண்டும். இது புவியியல் எல்லைகளில் ஏதேனும் மாற்றங்களைச் கொண்டுவந்தால், அது அரசாங்கம் மற்றும் நிர்வகிக்கப்படும் இருவரின் ஒப்புதலால் அமைய வேண்டும். இதன் பொருள் மணிப்பூர் ஒரு தனி நாடாக மாறுவதைக் கருத்தில் கொண்டு பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு மனதளவில் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதாகும்.
இந்திய பிராந்தியத்தை உடைக்க இந்திய அரசு ஒப்புக் கொண்டாலும், இந்திய அரசியலமைப்பில் பெரும்பான்மையில் உள்ள மத்திய சட்டமன்றத்தினரின் ஒப்புதலுடன் கூடிய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கட்டாயம் தேவை. ஆனால் இது நடக்க சாத்தியமேயில்லை.
சர்வதேச சட்டத்தை பொருத்தமட்டில், இறையாண்மையும் சுயாதீனமும் உள்ள ஒரு அரசை அந்த நாட்டில் உள்ள பாதுகாப்பு குழு அதை அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகள் என்னவென்றால் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை கோட்டிற்குள் அமைந்த ஒரு சமூகத்திற்கு இணங்கும் வகையில் திறமையும் சுயாதீனமும் மற்றும் இறையாண்மையும் கொண்டதாக அரசு அமைந்திருக்கவேண்டும்.
இப்போது கேள்வி என்னவென்றால், ஒரு இறையாண்மை கொண்ட அரசு உரிமை பெற, பொது வாக்கெடுப்பு எனும் புதிரில் மணிப்பூர் எங்கு பொருந்துகிறது என்பதுதான்?
பொருளாதார ரீதியாக மணிப்பூரை மிகுந்த பொருளாதார வளம் நிறைந்த கிழக்கு திமோருடன் ஒப்பிட முடியாது. சுகாட்லாந்திடம் கூட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூறு பில்லியன் பிரித்தானிய பவுண்டை (British Pound) தாண்டும் அளவிற்கு ஆழ் கடல் எண்ணெய் வளம் உள்ளது.

தனி நாடாக உரிமை கோருவதற்கு மணிப்பூருக்கு சட்டப்பூர்வ உரிமைகள் இல்லை என்பது அல்ல. சுயநிர்ணயத்திற்கான மணிப்பூரின் கோரிக்கையை ஆதரிக்க மணிப்பூரிடம் இரண்டு முக்கியமான சட்டத் தூண்கள் உள்ளன: (1) பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான உரிமை மற்றும் (2) சுயநிர்ணய உரிமை.
அனைத்துலக சட்டத்தின்படி பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான உரிமை என்பது ஒரு இறையாண்மை கொண்ட நாடு அதன் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின் மீது தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உரிமை. இது மணிப்பூரின் வரலாற்று உரிமை.

இந்தியா தனது புயபலத்தை கொண்டு மணிப்பூரை தன்னோடு இணைத்து கொள்வதற்கு முன்பு மணிப்பூருக்கு இருந்த சுயநிர்ணய உரிமை எதிர்காலத்திலும் அதற்குத் தொடர வேண்டும். தனது எதிர்கால அரசியல், சமூகம், பண்பாடு மற்றும் பொருளாதார நிலையை தீர்மானிக்க மணிப்பூருக்கு உரிமை உண்டு.
2,000 ஆண்டு பழமையான வரலாற்றில், 1891 க்கும் 1947 க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த மணிப்பூர் நெங்காலமாக இறையாண்மையுள்ள தனி நாடாகவே இருந்து வந்துள்ளது.

சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. சாசனம் 1 பிரிவு 1 (2) இன் ஒரு மூலக்கல்லாகும். இதன்படி, மணிப்பூர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அந்த சாசனம் கூறுவது என்னவென்றால், “ ஐ.நா. சபையின் நோக்கமாவது, … சம உரிமைகள் மற்றும் மக்களின் சுய நிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் நாடுகளுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதாகும் …”
1970-இல் ஐ.நா. சபை எடுத்த தீர்மானம், நட்பு உறவுகள் தொடர்பான உலகநாடுகள் சட்டத்தின் கோட்பாடுகள் குறித்த பின்வருமாறு கூறுகிறது: “மக்கள் அனைவருக்கும் தன்னிச்சையாக தீர்மானிக்க உரிமையுண்டு, வெளிக்களத் தலையீடு இன்றி, தமது அரசியலையும், பொருளாதாரம், சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியையும் பின்தொடர வேண்டும் மேலும் ஐ.நா. சாசனத்தின் விதிகளின்படி இந்த உரிமையை மதிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ளது”.

சுய நிர்ணய உரிமை என்பது மக்களின் உரிமை, மணிப்பூரிகளும் மக்களே என்று வாதிட எந்த தேவையும் இல்லை. சர்வதேச சட்டத்தின்படி “மக்கள்” என்பது ஒரு பொதுவான வரலாற்று மரபு, இன அடையாளம், ஒரே பண்பாடு, மொழியியல் ஒற்றுமை, மத நாட்டம், ஒரே நிலப்பரப்புக்குள் வாழ்பவர்களும் மற்றும் பொதுவான பொருளாதார வாழ்க்கை உடையவர்களாக அமைதல் வேண்டும் என்று வரையறுக்கப்படுகிறது.

ஒருவேளை இந்தியாவிடம் இருந்து விடுதலையை நாடி மணிப்பூர் தனது சுய நிர்ணய உரிமையை அமல்படுத்த விரும்பும் பட்சத்தில் இந்தியா அதற்கு ஒத்துகொள்ளவில்லை என்றால், ஐ.நா. சபையால் ஒன்றும் செய்ய இயலாது.

1993 ஆம் ஆண்டின் வியன்னா பிரகடனம் கூறுவது என்னவென்றால், அனைவரும் சமம் என்ற கொள்கையுடன் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு இணங்கி, நியாயமாக அரசாங்கங்கள் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மக்களை நடத்துவதன் மூலம் பிராந்திய ஒருமைப்பாட்டை கொண்டு வரலாம். ஒரு மாநிலத்தின் சட்டபூர்வத்தன்மை அதன் குடிமக்களுக்கு தனது கடமைகளை திருப்திகரமாக செயல்படுத்துவதிலிருந்து பெறப்படுகிறது. அக்கடமைகளாவன
(1) குடிமக்களின் பாதுகாப்பு
(2) மக்களின் பொருளாதாரம், பண்பாடு, சமூக மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்துதல்
(3) மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீதான மரியாதை மற்றும் பொறுப்பினை ஊக்குவித்தல்
(4) சுயநிர்ணய உரிமை மற்றும் சம உரிமைகளை ஊக்குவித்தல்

ஒரு அரசு இந்த நலன்களை ஊக்குவிக்காமல், மாறாக மக்களை ஒடுக்கி, அவர்கள் பண்பாட்டை அழித்து பொருளாதார ரீதியில் அவர்களை சுரண்டுமாயின் அது அரசாங்கம் என்ற முறையில் சட்டபூர்வத்தன்மையை இழக்கும், அதுமட்டும் அல்லாது பிராந்திய ஒருமைப்பாட்டையும் கைவிட நேரிடும் (Eva – Herzer).

மணிப்பூரில் சுயநிர்ணய உறுதிப்பாட்டைச் செயல்நடத்தவேண்டுமானால், இந்தியாவின் குடிமக்களாகிய மணிப்பூரிகளின் மன நிறைவு அடையும் வகையில் இந்தியா தனது கடமைகளை சரியாக செய்யவில்லை என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.

கடைசியாக, சுய நிர்ணய உரிமை என்பது ஐ. நா. சாசனத்தில் கூறப்பட்ட அடிப்படை சுதந்திரத்தை தழுவியிருந்தாலும், அதனை செயல்படுத்துவதில் சர்வதேச சட்டத்தில் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறது. மேலும், இந்த புதிய உலக அமைப்பில் பொது வாக்கெடுப்பு ஒரு சந்தேகத்திற்குரிய பொருளாகவே பார்க்கப்படுகின்றது. சாதகமற்ற சூழ்நிலைகளில், அது பெரும் தீங்கு விளைவிக்ககூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here