இந்தியாவின் நிர்வாக அவசரநிலை– -சுகாஸ் பால்சிகர்.

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபூர் அலி.

சம அளவில் கவலை அளிக்கும் விதமாக, இயல்பு வாழ்கையை நிறுத்துதல் என்பது வர்க்க-பிளவின் செயல்பாடுகளை கண்கூடாக ஆக்குவதாகவும், முன்பைவிட அதனின் செயல் திறனை கூர்மையாக்குவதாகவும், அரசியலிலும் அதனின் பண்புகள் ஊடுருவக்கூடியதாகவும் மாற்றும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரிடையே, இயல்பு வாழ்கை முடக்கத்தை ஆதரித்து எழும் கண்ணோட்டம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் அவர்களின் பொது அரசியல் புரிதல் மட்டும் அல்ல அவர்களுக்கும் கீழ்த்தட்டு வர்க்கத்தினருக்கும் சமூக தொடர்பு இல்லாததும் ஆகும்.

முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இயல்பு வாழ்க்கை முடக்கம் தனது இரண்டாவது கால அட்டவணையில் நுழையும் போது அது தனது முதல் கால அளவில் வெற்றி அடைந்த இடங்களை பார்ப்பதும் அங்கு வெற்றி என்பது எதனை குறிக்கிறது என்பது பற்றியும் நாம் காண வேண்டும். இயல்பு வாழ்க்கை முடக்கம் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்ற கூற்றை ஒரு புறம் ஒதுக்கி வைப்போம். இவ்வாறு கூறுவதற்கு
ஓரளவுக்கு காரணம் உள்ளது, அது யாதெனில் “வெற்றி” குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்திருந்தால் இயல்பு வாழ்க்கை முடக்கத்தின் நீட்டிப்புக்கு அழைப்பு ஏற்பட்டிருக்காது, மேலும் வைரஸ் அவ்வளவு எளிதில் அடக்கப்படாமல் போகலாம் என்று நிபுணர்கள் சொல்லக்கூடும் என்பதால் – அது மக்களுடன் சிறிது நேரம் தங்கி மீண்டும் மீண்டும் தலையை காட்டும். ஆனால் வைரஸுக்கு எதிரான “போரில்” வெற்றி இருந்தாலும், இந்தியா இயல்புநிலையை மீண்டும் தொடங்கும் போதெல்லாம், இது ஒரு புதிய இயல்பானதாக இருக்கும். எதிர்காலத்தின் இயல்பானது கடந்த நான்கு வாரங்களின் மூன்று வெற்றிகரமான கதைகளின் அடிப்படையில் இருக்கும்.

முதலாவது கதை பேசப்படவில்லை ஆனால் பரவலாக உணரப்பட்டது. இது ஜனநாயகத்துடன் நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றியது. இயல்பு வாழ்க்கை முடக்கத்தை பற்றி ஒரு வருங்கால வரலாற்றாசிரியர் எவ்வாறு குறிப்பிடுவார் எனில் ஒரு மாபெரும் நாட்டை இயங்க விடாமல் நிறுத்தி கோடிக்கணக்கான எண்ணிக்கை கொண்ட மக்களை வீட்டு சிறையில் அடைப்பது என்பது நிச்சயமாக எண்ணிப்பார்க்க முடியாத ஒரு அசாதாரண செயலாகும். இந்த வெற்றி எதனை குறிக்கிறது? தொற்றுநோய்க்கு எதிரான ஒரு தேசிய போராட்டத்தை உறுதி செய்வதற்கான அவசர உற்சாகத்தில், அனைத்து-கட்சி ஆலோசனை, கூட்டாட்சி கொள்கைகள், நீதித்துறை மேற்பார்வை போன்ற ஜனநாயகத்தின் குரல்கள் அனைத்தும் அரசியல் மற்றும் நிர்வாகத்தின் காலாவதியான பாடப்புத்தகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கை முடக்கத்தின் இரண்டாம் காலகட்டம் முடிவுக்கு வரும் தருவாயில் கூட, கேரளா மத்திய அரசின் திட்டத்தைப் பின்பற்றவில்லை மாறாக அது சுயமாக செயல்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் குற்றம் சுமத்துகிறது. இதன் அடிப்டையில் பார்க்கும் போது, ஞானத்தின் ஒரே நீரூற்று, கொள்கையின் ஒரே ஆதாரம், ஒரே சக்தி அது மத்திய அரசு மட்டுமே என்று கட்டமைக்கப்படுவது தெரிகிறது.

இயல்பு வாழ்க்கை முடக்கத்தை கட்டுப்படுத்த,வழிநடத்த எந்த சட்டம் எந்த அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கியது என்பது குறித்து எவ்வித கேள்வியும் இங்கு கேட்கப்படவில்லை. பேரிடர் மேலாண்மை சட்டம் தொற்றுநோய்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமா என்பது குறித்தும் எவ்வித விவாதமும் எழவில்லை. தொற்றுநோயை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது பற்றிய நடைமுறைகளை கொண்ட, ஜனநாயக ரீதியான மன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் நம்மிடம் இல்லை என்பது பற்றியும் ஒருவரும் பெரிதாக கவலை கொள்ளவில்லை. காலனி ஆட்சியினால் உருவாக்கப்பட்ட சட்டத்தையே இன்னும் நாம் நம்பியிருக்கிறோம். அரசியல் கட்சிகள் இந்த விடயங்களை மறந்துவிடுகின்றன. பொது விவாதங்கள் இந்த நடைமுறை விடயங்களை புறக்கணிக்கின்றன. அதிகார படிநிலைகளை நாங்கள் நிறுவியுள்ளோம்: ஜனநாயக நடைமுறைகள் தேவையில்லை. இது ஒரு அறிஞரால் “நிர்வாக அவசரநிலை” என்று ஓரளவு லேசாக விவரிக்கப்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கை முடக்குதல் என்பது நமது ஜனநாயகத்தில் மிகவும் ஆபத்தான பரிசோதனையாக இருக்கும் என்பதை மிக குறைந்த நபர்களை தவிர பலர் இன்று உணர மாட்டார்கள். இக்கருத்தை மத்திய அரசு அல்லது ஆளும் கட்சியைப் பற்றியது என்ற அளவில் குறுக்க தேவையில்லை. இயல்பு வாழ்க்கை முடக்குதலின் பயமுறுத்தும் வெற்றி என்பது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் விருப்பமும், ஜனநாயகத்தின் பிரமாண்டமான இடைநீக்கத்தில் பொதுமக்களை வாழ வைப்பதும் ஆகும். இந்த இயல்பு வாழ்க்கை முடக்குதல் என்பது சிவில் மற்றும் போலீஸ் அதிகாரத்தை கொண்டு ஒட்டுமொத்த குடிமக்களையும் எவ்வாறு வீட்டு சிறைக்குள் அடைக்க முடியும் என எதிர் கால எதேச்சதிகார சக்திகளுக்கு பாடமாக அமைய முடியும். இச்சூழ்நிலையில், மனமுவந்து ஏற்றுக்கொண்ட மன-அறிவுசார் இயல்பு வாழ்க்கை முடக்குதலிருந்து வெளியேறுவது இந்தியாவிற்கு ஒரு கடினமான பணியாக இருக்கும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது இயல்பு வாழ்க்கை முடக்குதலை செயல்படுத்த இராணுவத்தை நிலைநிறுத்த உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு கோரிக்கை விடுத்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

கோவிட் அச்சுறுத்தல் சமூக விலகல் தொடர்பாக உறுதியான கொள்கைகளை செயல்படுத்தி இருக்க கூடாது என்று வாதிடுவது நமது நோக்கம் அல்ல. இங்கு நாம் விவாதிப்பது வீழ்ச்சியைப் பற்றியது. ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படுவதற்கு ஒரு செயல் வடிவம் இப்போது நம்மிடம் உள்ளது. இது எவ்வாறு வடிவம் கொண்டிருகிறது எனில் ஒரு பொது காரணத்தைப் பற்றி பேசுங்கள், பொது நல்வாழ்வைப் பற்றி பேசுங்கள், ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை கைவிடுவதற்கான அங்கீகாரத்தைப் பெறுங்கள். இன்று, இது ஒரு நியாயமான நடவடிக்கையாகத் தோன்றலாம் – உண்மையில், ஊடகங்களும் எதிர்க்கட்சியும் அவ்வாறு கூறியுள்ளன, அதன் அடிப்டையில் பொதுமக்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பார்க்கும் போது, தேசிய அளவில் அவசியம் இருப்பதால் ஜனநாயகக் நடைமுறைகளை பின்பற்ற தேவையில்லை என்பது போன்ற கருத்தோட்டங்கள் எதிர்காலத்தில் நமது ஜனநாயக சட்ட திட்டங்களை தாக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் நம்மிடம் உள்ளது?

நமது இந்த சமூக விலகல் செயல்பாடுகள் மேலும் இரு வேறு கருத்தோட்டங்கள் எழ காரணமாக அமைந்திருக்கிறது. ஒன்று இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நீண்ட காலமாக இருக்கும் தூரத்தைப் பற்றியது. இரு சமூகங்களுக்கும் சமாதானமாக இணைந்து வாழ்வது கடினம் என்ற கருத்தை உறுதி செய்ய தேவையான அனைத்தும் செய்யப்படுகின்றன. டெல்லியில் தப்லிகி ஜமாத்தினர் கூட்டிய பொறுப்பற்ற கூட்டம் இந்த கொடிய தூரத்தை அதிகரித்தது. இத்தூரத்தை, கொரோனா கோரப்பிடி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு டெல்லி கலவரத்தின் பின்னணியில் ஏற்பட்ட முஸ்லீம்-வெறுப்பு சரியாக கைப்பற்றியது. CAAக்கு எதிரன முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டங்கள் இந்தியாவுக்கு எதிரான சதி என்று தொடர்ச்சியாக முத்திரை குத்தப்பட்டதை நினைவு கூர்தலின் மூலமாக மேற்கூறிய தொடர்ப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும் கொரோனாவின் பரவல் மற்றும் இயல்பு வாழ்க்கை முடக்குதலின் காரணமாக மக்கள் அடைகின்ற துன்பத்தை முன்வைப்பதில் இந்து-முஸ்லீம் பிளவுகளை உற்சாகமாக இணைத்துள்ளன. கடந்த நான்கு வாரங்களில் ஒரு கருத்தோட்டம் ஆழமான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அக்கருத்தோட்டம் எல்லாவற்றையும் மதங்களை காணும் கண்ணாடி மூலம் பார்க்க வேண்டும் என்றும், இந்திய நலனுக்கு எதிராக முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள் என்றும் கூறியது. மேலும் “கொரோனா ஜிஹாத்” போன்ற சொற்களை புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இந்த அசிங்கமான வகுப்புவாத வைரஸைத் தடுக்க எந்த அரசாங்கமும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.இது போன்ற கருத்தோட்டம் புதியதல்ல, ஆனால் தற்போதைய சூழ்நிலை இக்கருத்தோட்டத்தின் மீது செலுத்தும் நேரடி பங்களிப்பை நாம் குறிப்பிடப்பட வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் சமூக-பொருளாதார புறக்கணிப்பை நாம் எதிர்க்கிறோம். அவ்வகையான எதிர்ப்பு மறைந்தது எனில் நாட்டின் நூற்றாண்டு கால திட்டமான சமூக இடைவெளி முழுமையான வெற்றியைப் பெறும்.

சம அளவில் கவலை அளிக்கும் விதமாக, இயல்பு வாழ்கையை நிறுத்துதல் என்பது வர்க்க-பிளவின் செயல்பாடுகளை கண்கூடாக ஆக்குவதாகவும், முன்பைவிட அதனின் செயல் திறனை கூர்மையாக்குவதாகவும், அரசியலிலும் அதனின் பண்புகள் ஊடுருவக்கூடியதாகவும் மாற்றும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரிடையே, இயல்பு வாழ்கை முடக்கத்தை ஆதரித்து எழும் கண்ணோட்டம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் அவர்களின் பொது அரசியல் புரிதல் மட்டும் அல்ல அவர்களுக்கும் கீழ்த்தட்டு வர்க்கத்தினருக்கும் சமூக தொடர்பு இல்லாததும் ஆகும். கடந்த நான்கு வாரங்களில், இடப்பெயர்வு, வறுமை மற்றும் பட்டினி பற்றிய பல கதைகள் வெளிவந்துள்ளன; சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களும் நம்மை வந்து அடைகின்றன. ஆனால் நடுத்தர வர்க்க மனசாட்சி இதனை கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியமில்லை என்று கருதுகிறது. தனிப்பட்டவர்களின் கருணை செயல்கள், பரோபகாரத்தை கொண்டாடுதல் மற்றும் மறதி நோய்க்கு விரைவாகச் செல்வதை நாம் நிறுத்துகிறோம். ஏழைகளின் அரசியல் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிட்டது.
COVID க்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும், அதன் முதல் முன்னுரிமையாக, பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் சிரமங்களை நிவர்த்தி செய்ய கூடிய ஒரு நல்ல கொள்கை உருவாக்க வேண்டும் என்று அரசியல் அழுத்தங்களும் கோரவில்லை.
இந்திய அரசியல் எப்போதுமே ஏழைகளைப் பற்றி உண்மையிலேயே உணர்திறன் கொண்டிருந்தது என்று சொல்ல முடியாது; ஆனால் இப்போது, ​​தேர்தல் ஆதாயங்களின் காரணமாக இழிந்த சாத்தியம் கூட ஏழைகளின் உரிமைகளுக்காக போராட கட்சிகளைத் தூண்டுவதில்லை.

சிறுபான்மை, பெரும்பான்மை மக்களுக்கு இடையே நிலவும் சமூக விலகல் மற்றும் ஏழை, செல்வாக்குமிக்க வர்க்கங்களுக்கு இடையே நிலவும் சமூக விலகல் ஆகிய இந்த இரண்டு சமூக விலகல்களும் ஜனநாயக கோட்பாடுகளை உதாசீனப்படுத்தும் கருத்தோட்டங்களை நன்றாக கட்டமைத்துள்ளன. ஒரு பெரும்பான்மை மற்றும் நடுத்தர வர்க்கத்தால் இயக்கப்படும் சமூக கட்டமைப்பில், ஜனநாயகத்தின் கோட்பாடுகள் பெயரளவில் இல்லாவிட்டால் ஓரளவு இருக்க வேண்டும். கொரானாவிற்கு எதிரான இந்த “யுத்தத்தை” “நாம் வாழ்ந்தால் மட்டுமே நல்வாழ்வைப் பற்றி சிந்திக்க முடியும்” என்ற வசதியான வாசகத்துடன் தொடங்கினோம்.
பின்னர் இந்த வாசகத்தை ” என் உயிர் மட்டுமே முக்கியம்” என மாற்றினால், நாம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிடும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த உண்மையான சாத்தியத்தின் நடுவே, நாம் மூன்று கதைகளால் வேட்டையாடப்படுகிறோம்: ஜனநாயகத்தைக் குறைத்தல், இடைக்கால தூரத்தை அதிகப்படுத்துதல் மற்றும் ஏழைகளிடமிருந்து தனிமையைப் பேணுதல். இதுவே இயல்பு வாழ்கை முடக்கத்திற்கு பிந்தைய வாழ்க்கையின் வடிவமாக இருக்குமா?

இந்த கட்டுரை முதன்முதலில் ஏப்ரல் 22, 2020 அன்று “இயல்பு வாழ்கை முடக்கத்திற்கு பின் நாடு” என்ற தலைப்பில் அச்சு பதிப்பில் வெளிவந்தது. இதன் ஆசிரியர் புனேவின் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலை கற்பிகிறார், மேலும் Studies in Indian Politics எனற ஆய்வு இதழின்
தலைமை ஆசிரியராகவும் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here