இடைத்தேர்தல் முடிவுகளும் ,மக்கள் மனநிலையும். – சுமதி விஜயகுமார்.

இதோ,இதோ  என்று பலமுறை இழுத்தடித்து இப்போது இடைத்தேர்தலில் வெற்றி கண்ட பின் , உள்ளாட்சி தேர்தல் நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளது தமிழக அரசு. ‘இந்த ஆட்சி இன்னும் இரண்டே மாதங்களில் கலையும்’ என்று இன்னும் ஸ்டாலின் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார். அவருக்கு கட்சியின் . . .வளர்ச்சியை விட, கட்சியில் தன் மகனின் வளர்ச்சியே முக்கியமானதாக போய் விட்டது. உண்மையில் மக்கள் விரும்புவது எந்த ஆட்சியை என்று கேட்டால் இப்போதிருக்கும் ஆளும் ஆட்சியும் கிடையாது அதனை எதிர்க்கும் எதிர் கட்சியின் ஆட்சியும் கிடையாது.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை ஒப்பிட வேண்டும் என்றால் அதை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று சொல்வது ஒரு சாதாரண மனிதரில்லை, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென். அப்படியே போகிற போக்கில் வந்த வளர்ச்சி இல்லை இது. வெறும் 5 அல்லது 10 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியும் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக, பலரும் தங்கள் பொருளையும் உழைப்பையும் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து சிறுக சிறுக நமக்கு பெற்று தந்த வளர்ச்சி. 

நாட்டிற்கு எந்த ஒரு தீங்கான திட்டம் வந்தாலும் அதற்கு முதல் எதிர்ப்பு குரல் தமிழகத்தில் இருந்து தான் ஒலிக்கிறது. அது மொழி திணிப்பு முதல் நீட் தேர்வு வரை . இந்த அரசியல் என்பது பல தலைவர்களின் உழைப்பின் மூலம் நம் மக்களுக்கு கிடைத்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பு துவங்க பட்ட நீதி கட்சியின் துவக்கம் என்பது தமிழ்நாட்டு வளர்ச்சியின் துவக்கம். அதனை தொடர்ந்து தொடர்ந்து வந்த திராவிட கழகங்கள் மற்றும் காமராஜரின் ஆட்சி என்று பல அரசியல் நிகழ்ந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சி மட்டும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டே இருந்தது.

இதெல்லாம் ஜெயலலிதாவின் ஆட்சி வரைக்கும் தான். அவருக்கு பிறகு இங்கு பிஜேபி தான் மறைமுகமாக ஆட்சி புரிகிறதென்பது நாடறிந்த ரகசியம். 100 வருட முன்னேற்றம் இப்போது தேக்க நிலையில். தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்று அமர்த்தியா சென் சொன்னதற்காக முக்கியமான காரணம் இட ஒதுக்கீட்டின் மூலம் மக்களுக்கு கிடைத்த சம உரிமை, சமூக நீதி. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதன்முதலாக கல்வியின் கதவுகளை திறக்க செய்த சாவி இந்த இடஒதுக்கீடு. 

அந்த இடஒதுக்கீடை நீர்த்து போக செய்யத்தான் இன்று மத்தியில் ஆளும் அரசு உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடை கொண்டுவந்திருக்கிறது. கடைக்கோடி ஏழை மாணவர்களும் மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டும் என்று தகுதி தேர்வை நீக்கிய தமிழக அரசு இப்போது நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுப்பதில்லை. 

சீனாவின் மக்கள் தொகையை நெருங்கி கொண்டிருக்கும் இந்தியா ,பொருளாதாரத்தில் சீனாவை விட பல இடங்களுக்கு பின்னால இருக்கிறது.இந்தியாவில் இருந்து பிரிந்து போன மிக சிறிய நாடான பங்களாதேஷோ இந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. நாம் இன்னமும் மாட்டு சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று சொல்லும் அரசுடன் போராடி கொண்டிருக்கிறோம். நம்மை காக்க வேண்டிய மாநில அரசோ குடும்ப அரசியலிலும் பதவி போராட்டத்திலும் நேரத்தை செலவழித்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் மக்களோ புதிதாக முளைத்திருக்கும் மைய அரசியலையும்  , போலி தமிழ் தேசிய அரசியலையும் புறம் தள்ளி மீண்டும் திராவிட கட்சிகள் முன்னேற்ற பாதையில் அழைத்து சென்று விடாதா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.இனி மீண்டும் ஒரு நல்ல மாநில அரசு அமைந்தாலும் பழைய வளர்ச்சி என்பது கேள்விக்குறியே. அனைத்து மாநில உரிமைகளையும் மத்திய அரசிடம் கொடுத்தாகிவிட்டது. 

இனி முன்னேற்றம் என்றால் மாநில சுயாட்சியை மீட்டெடுத்ததன் பிறகு தான் இருக்கும். அதற்கான நேர்மையான மக்கள் நலனுக்காக ஒரு அரசு அமையும் வரையில் காத்திருக்க தான் வேண்டும்,

சுமதி விஜயகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here