ஆழ்துளை கிணறுகள்….தொடரும் அபாயங்கள். – ஜெயசேகர்.

ஆழ்துளைக் கிணறுகள் இதுவரை பல குழந்தைகளை காவு வாங்கி உள்ளது. 25/10/2019 அன்றும் திருச்சி அருகே மணப்பாறையில் நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் 30 அடி ஆழத்தில் தவறி விழுந்தது. தகவலறிந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீயணைப்புப் படைவீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் போராடி வருகின்றனர்.
இதைப்போல எத்தனையோ சம்பவங்கள் நடந்துக்கொண்டுத்தான் இருக்கிறது. இதற்கு யார்தான் காரணம்? அரசை மட்டுமே குறை சொல்லுவதை முதலில் தவிர்க்க வேண்டும். அதற்கான கருவிகள் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் ஆழ்துளைக் கிணறுகளை தோண்டுபவர்கள் அதனை சரியாக மூடாமல் இருப்பதுதான் இதற்கான முக்கிய காரணம். இதற்கு யார் காரணமோ அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சரியான தண்டனை பெற்று தர வேண்டும். இல்லையென்றால் இன்னும் பல குழந்தைகளை நாம் இழக்க வேண்டி வரும்.

ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதில் உரிய விதிமுறைகளை பின்பற்றாத அரசு அதிகாரிகளும், நில உடைமையாளர்களும், போர்வெல் லாரி உரிமையாளர்களும் கடுமையாக தண்டிக்கப்பட சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மீண்டும் சிறு குழந்தைகளை காவு வாங்கி கொண்டே இருக்கத்தான் செய்யும்.

கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்பதில் காட்டப்படும் அக்கறையை இது போன்ற விபத்துகள் நிகழ்வதற்கு காரணமான, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை முறைப்படுத்துவதில் அரசும் அக்கறை காட்டவேண்டும். இதுவரை தமிழகத்தில் தோண்டப் பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் எத்தனை உள்ளது. எத்தனை கிணறுகள் மூடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன, எத்தனை கிணறுகள் மூடப்படாமல், உயிர்பலி வாங்கும் நிலையில் உள்ளன என்பன போன்ற விவரங்கள் அரசு கணக்கெடுத்து கண்காணிக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளை முறைப்படுத்தாத அல்லது வழிமுறைகளை பின்பற்றாதவர்களை கடுமையான சட்டத்தின் முன் நிறுத்தி வேண்டும். ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் அது பல இடங்களில் கிடப்பில் போட்டு விட்டது. ஆழ்துளைக் கிணறுகளால், குழந்தை மரணங்களைத் தடுக்க, அரசு கடுமையான விதிமுறைகளை உருவாக்கி, கடும் நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.

ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமல்லாமல் எதுவெல்லாம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறதோ அதை அந்தந்த உடைமையாளர்கள் யாருக்கும் தீங்கு ஏற்படாமல் அல்லது உயிர்பலி ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வர வேண்டும். இனிமேலும் இந்தமாதிரியான உயிர் பலி வாங்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை தடுக்க எல்லாவிதமான முயற்சிகளை எடுக்க வேண்டும்… உயிர் என்பது விலைமதிப்பில்லாதது… அதை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. எல்லா மக்களும் பாதுகாப்பாக வாழ வேண்டும். நம்முடைய ஒரு சிறு தவறு பிற மனிதனின் உயிரையே பறிக்கும் அபாயம் உள்ளது.

ஜெய சேகர், கருங்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here