ஆனந்த் டெல்டும்டே மக்களுக்கு எழுதிய திறந்த மடல்.

pune mirror இணையதளத்தில் வெளியிடப்பட்ட கடிதத்தை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபூர் அலி.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சமூக ஆர்வலர் ஆனந்த் டெல்டும்டே
இந்திய மக்களுக்கு எழுதிய ஒரு திறந்த மடல்

சிறைச்சாலை அதிகாரிகள் முன் சரணடைவதற்கு உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக சமூக ஆர்வலர் ஆனந்த் டெல்டும்டே நாட்டு மக்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.

சில தொடர்ச்சியான சம்பவங்களுக்குப் பிறகு அவரது கைது எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது என்பது குறித்த அவரது சில எண்ணங்களை இந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார் “என்னை சுற்றியுள்ள இந்த வழக்கிலும் ஆர்.எஸ்.எஸ்-ன் கை மறைக்கப்படவில்லை. எனது மராத்தி நண்பர்கள் என்னிடம் கூறினார்கள், ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரமேஷ் படங்கே, ஏப்ரல் 2015ல் என்னை குறிவைத்து அவர்களின் ஊதுகுழலான பஞ்சஜான்யாவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் கெயில் ஓம்வெட் மற்றும் அருந்ததி ராயுடன் அம்பேத்கர்வாடி மாயாவியாக நான் அடையாளம் காணப்பட்டேன். இந்து புராணங்களில் மாயாவி அழிக்கப்பட வேண்டிய ஒரு அரக்கனைக் குறிக்கிறது”

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களின் கணினிகளிலிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக கூறப்படும் 13 கடிதங்களில், ஐந்து கடிதங்களின் அடிப்படையில் அவர் இவ்வழக்கில் சம்பந்த படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது “என்னிடமிருந்து நேரடியாக எதுவும் மீட்கப்படவில்லை. இந்த கடிதம் இந்தியாவின் பொதுவான பெயரான ‘ஆனந்த்’ ஐ குறிக்கிறது, ஆனால் காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி அப்பெயரை என்னுடன் அடையாளம் கண்டுள்ளது.”

மூன்று வாரங்களுக்குள் சரணடையுமாறு மார்ச் 16 ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட சமூக ஆர்வலர்கள், கோவிட்-19 தொற்றுநோய் பரவும் இக்காலத்தில் சிறைக்குச் செல்வது என்பது “கிட்டத்தட்ட மரண தண்டனைக்கு” இணையானது என்பதின் அடிப்படையில் கால அவகாசம் கோரி மனுவை நகர்த்தினர். இருப்பினும், நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் மட்டுமே வழங்கியது.

அவரது இந்த திறந்த மடலை இவ்வாறு முடிக்கிறார், “நான் என்ஐஏ காவலில் இருக்கிறேன், நான் உங்களுடன் மீண்டும் எப்போது பேச முடியும் என்று தெரியவில்லை. இருப்பினும், உங்கள் முறை வருவதற்கு முன்பு நீங்கள் பேசுவீர்கள் என்று நான் ஆவலுடன் நம்புகிறேன்.

இந்திய மக்களுக்கு ஒரு திறந்த மடல்.

பிஜேபி-ஆர்எஸ்எஸ்ஸின் ஒருங்கிணைந்த சத்தம் மற்றும் அடிபணிந்த ஊடகங்களின் முரட்டு கூச்சல் இவைகளின் மத்தியில் எனது குரல் முற்றிலும் மூழ்கிவிடக்கூடும் என்பதை நான் அறிவேன், ஆனால் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்குத் தெரியாததால் உங்களுடன் பேசுவது மதிப்புக்குரியது என்று நான் இன்னும் கருதுகிறேன்.

ஆகஸ்ட் 2018 யில், கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் ஆசிரியர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள எனது வீட்டை போலீசார் சோதனை செய்ததில் இருந்து, ​​எனது உலகம் முற்றிலும் தலைகீழாக மாறியது. எனது மோசமான கனவில் கூட, எனக்கு நடக்கத் தொடங்கிய நிகழ்வுகளை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

எனது சொற்பொழிவுகளின் அமைப்பாளர்களை, பெரும்பாலும் பல்கலைக்கழகங்களை சார்ந்தவர்களை காவல்துறையினர் பார்வையிடுவதையும், என்னைப் பற்றிய விசாரணைகள் மூலம் அவர்களை பயமுறுத்துவதையும் நான் அறிந்திருந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பத்தில் இருந்து வெளியேறிய என் சகோதரனின் பின்னணியில் அவர்கள் என்னை தவறாக எண்ணக்கூடும் என்று நினைத்தேன். ஐ.ஐ.டி கரக்பூரில் நான் ஆசிரியராக பணியாற்றி கொண்டு இருந்த போது, ​​பி.எஸ்.என்.எல் அதிகாரி ஒருவர் போன் செய்து, தன்னை எனது அபிமானி என்றும் நலம் விரும்பிகளில் ஒருவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு, எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக எனனிடம் தெரிவித்தார். நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன், ஆனால் மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை, எனது சிம் கார்டை கூட நான் மாற்றவில்லை. எது எப்படி இருப்பினும் இவ்வகையான ஊடுருவல்கள் என்னை கலக்கம் அடைய செய்தது, ஆனால் நான் ஒரு சாதாரண மனிதன் என்பதையும், எனது நடத்தையில் சட்டவிரோதத்தின் எந்த கூறுகளும் இல்லை என்பதையும் போலீஸை நம்ப வைக்க இது போன்ற ஊடுருவல்கள் எனக்கு உதவுவதாக என்னை ஆறுதல்படுத்தி கொண்டேன். பொதுவாக போலீஸ் தனிமனித உரிமை ஆர்வலர்களின் கூட்டத்தை விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் காவல்துறையை அதிகம் கேள்வி கேட்கிறார்கள். இதன் அடிப்படையில் நான் ஒரு கற்பனையை செய்து கொண்டேன். “நான் அந்த கூட்டத்தை சேர்ந்தவன் என்பதால் போலீஸ் என்னை வெறுக்கலாம். ஆனால் எனது வேலையில் நான் முழுநேர ஈடுபாடு கொண்டு இருப்பதால் என்னால் அக்கூட்டத்தின் பாத்திரத்தை செய்ய முடியவில்லை என்பதை போலீசார் கண்டுபிடிப்பார்கள்“ இக்கற்பனையின் மூலம் என்னை நான் மீண்டும் ஆறுதல்படுத்திக் கொண்டேன்.

ஆனால் எனது நிறுவனத்தின் இயக்குநரிடமிருந்து ஒரு காலை நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தபோது, ​​காவல்துறையினர் வளாகத்தை சோதனையிட்டு என்னைத் தேடுகிறார்கள் என்று எனக்குத் தெரிவித்தபோது, ​​ சில நொடிகள் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அன்று சில மணி நேரங்களுக்கு முன்புதான் நான் அலுவலக வேலை காரணமாக மும்பைக்கு வந்திருந்தேன், என் மனைவி எனக்கு முன்னதாக அங்கு வந்திருந்தார். கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் அவர்களின் வீடுகள் சோதனை செய்யப்பட்டதையும் அறிந்த போது மயிரிழையில் நான் தப்பித்ததாக உணர்ந்தேன். காவல்துறையினர் எனது இருப்பிடத்தை அறிந்திருந்தனர், அப்போது கூட என்னைக் அவர்கள் கைது செய்து இருக்க முடியும், ஆனால் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் மும்பை வந்த நேரத்தில் அவர்கள் எங்கள் வீட்டையும் திறந்தனர், பாதுகாப்புக் காவலரிடமிருந்து ஒரு நகல் சாவியை வலுக்கட்டாயமாகப் பெற்றனர், வீட்டை வீடியோ எடுத்து மீண்டும் பூட்டினர். எங்கள் மீதான சோதனையானது அங்கேயே தொடங்கியிற்று. எங்கள் வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில், எனது மனைவி அடுத்த விமானத்தின் மூலம் கோவாவுக்கு சென்று, நாங்கள் இல்லாத நேரத்தில் காவல்துறையினர் எங்கள் வீட்டைத் திறந்துவிட்டதாகவும், அவர்கள் எதையாவது அங்கு திட்டமிட்டு வைத்திருந்தால் நாங்கள் அதற்கு பொறுப்பேற்க மாட்டோம் என்றும் பிச்சோலிம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை எங்களுடன் விசாரணை மேற்கொள்ள விரும்பினால் எங்கள் தொலைபேசி எண்களை பெற்று கொள்ளலாம் என்று தானாக முன்வந்து கூறினார்.

கைது செய்யபட்டவர்களுக்கு மாவோயிஸ்ட் வண்ணத்தை கொடுக்க தொடங்கியவுடன் வழக்கத்திற்கு மாறாக போலீஸ்சார் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தத் தொடங்கினர். இச்சந்திப்பின் நோக்கமாவது, தங்களுக்கு வேண்டிய ஊடகங்களின் மூலம் எனக்கும் கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் எதிராக பகிரங்கமாக தப்பெண்ணத்தைத் தூண்டிவிடுவது ஆகும். ஆகஸ்ட் 31, 2018 அன்று, இதுபோன்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு காவல்துறை அதிகாரி, முன்பு கைது செய்யப்பட்ட கைதிகளின் கணினியிலிருந்து மீட்கப்பட்ட கடிதத்தை எனக்கு எதிரான ஆதாரமாக வாசித்தார். பாரிஸில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் நான் கலந்து கொண்ட கல்வி மாநாடு பற்றி அப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் எளிதாக கிடைத்த தகவல்களுடன் இக்கடிதம் விகாரமாக சித்தரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதை நினைத்து சிரித்தேன், ஆனால் அதன் பிறகு, இந்த அதிகாரிக்கு எதிராக ஒரு சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடிவு செய்து, செப்டம்பர் 5, 2018 அன்று மகாராஷ்டிரா அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினேன். இன்றுவரை அக்கடிததிற்கு அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எவ்வாறாயினும், உயர்நீதிமன்றம் அவர்களை கண்டித்ததிலிருந்து காவல்துறையின் பத்திரிகையாளர் சந்திப்புகள் நிறுத்தப்பட்டன.

“என்னை சுற்றியுள்ள இந்த வழக்கிலும் ஆர்.எஸ்.எஸ் கை மறைக்கப்படவில்லை. எனது மராத்தி நண்பர்கள் என்னிடம் கூறினார்கள், ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரமேஷ் படங்கே, ஏப்ரல் 2015ல் என்னை குறிவைத்து அவர்களின் ஊதுகுழலான பஞ்சஜான்யாவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் கெயில் ஓம்வெட் மற்றும் அருந்ததி ராயுடன் அம்பேத்கர்வாடி மாயாவியாக நான் அடையாளம் காணப்பட்டேன். இந்து புராணங்களில் மாயாவி அழிக்கப்பட வேண்டிய ஒரு அரக்கனைக் குறிக்கிறது”

உச்சநீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருந்த போதும் புனே காவல்துறையினரால் நான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டபோது, ​​இந்துத்துவாவின் சைபர் கும்பல் எனது விக்கிமீடியா பக்கத்தை நாசப்படுத்தியது. இந்த பக்கம் பொது மக்களுக்கானது, பல ஆண்டுகளாக நான் இந்த சைபர் கும்பலின் தாக்குதல் பற்றியும்கூட அறிந்திருக்கவில்லை. அவர்கள் முதலில் எல்லா தகவல்களையும் நீக்கிவிட்டு, “அவருக்கு ஒரு மாவோயிஸ்ட் சகோதரர் இருக்கிறார்… அவரது வீடு சோதனை செய்யப்பட்டது… அவர் மாவோயிஸ்டுடனான தொடர்புகளுக்காக கைது செய்யப்பட்டார்” போன்றவற்றை மட்டுமே எழுதினார். பின்னாளில் சில மாணவர்கள் என்னிடம் இது பற்றி கூறியதாவது, அவர்கள் பக்கத்தை மீட்டெடுக்க அல்லது பக்கத்தைத் திருத்துவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம், இந்த கும்பல் மிக வேகமாக செயல் பட்டு எல்லாவற்றையும் நீக்கி, கேவலமான உள்ளடக்கத்தை பதிவிடுகிறது என்று. இறுதியில், விக்கிமீடியா தலையிட்டு, சில எதிர்மறை உள்ளடக்கங்களுடன் அப்பக்கத்தை உறுதிப்படுத்தியது.

நக்சல் வல்லுநர்கள் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை கொண்ட அதிவேக ஊடக பிரிவு அனைத்து வகையான உண்மைகளையும் விரட்டியடித்தது. இந்தியா ஒலிபரப்பு அறக்கட்டளை மற்றும் சேனல்களுக்கு எதிரான எனது புகார்களுக்கு எளிய பதில் கூட கிடைக்கவில்லை. அதன் பிறகு அக்டோபர் 2019யில் என் தொலைபேசியில் தனி மனித சுதந்திரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இஸ்ரேலிய ஸ்பைவேரை அரசாங்கம் சொறுகியது என்ற உண்மை வெளிவந்தது. இதன் அடிப்படையில் ஊடகங்களில் ஒரு தற்காலிக சலசலப்பு ஏற்பட்டது, ஆனால் இந்த தீவிரமான விஷயமும் இறந்துவிட்டது. நான் ஒரு எளிய மனிதனாக இருக்கிறேன், எனது ரொட்டியை நேர்மையாக நான் சம்பாதித்து வருகிறேன், எழுத்துக்கள் மூலம் என் அறிவால் முடிந்தவரை மக்களுக்கு உதவுகிறேன். கார்ப்பரேட் உலகில், ஒரு ஆசிரியராக, ஒரு சிவில் உரிமை ஆர்வலர் மற்றும் ஒரு பொது அறிவுஜீவி என பல்வேறு பாத்திரங்களில் இந்த நாட்டிற்கு கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக சேவை செய்து உள்ளேன் என்ற ஒரு களங்கமற்ற பதிவு என்னிடம் உள்ளது. 30 க்கும் மேற்பட்ட எனது புத்தகங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் / கருத்துகள் / பத்திகள் / நேர்காணல்கள், சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் எவையும் வன்முறைக்கு ஆதரவளிப்பது போல் இருந்ததில்லை.

ஆனால் என் வாழ்க்கையின் மோசமான முடிவில், கடுமையான யுஏபிஏவின் கீழ் நடந்த கொடூரமான குற்றத்திற்காக நான் குற்றம் சாட்டப்படுகிறேன். என்னைப் போன்ற ஒரு நபர் அரசாங்கத்தின் மற்றும் அதன் கண் அசைவில் இயங்கும் ஊடகங்களின் உற்சாகமான பிரச்சாரத்தை எதிர்க்க முடியாது. இவ்வழக்கின் விவரங்கள் இன்டர்நெட் முழுவதும் பரவியுள்ளன. எந்தவொரு நபரும் இது ஒரு விகாரமான மற்றும் குற்றவியல் புனைகதை என்பதைக் காண போதுமான தகவல்கள் அங்கு உள்ளன. AIFRTE இணையதளத்தில் உள்ள வழக்கு பற்றிய விவரங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களின் கணினிகளிலிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக கூறப்படும் 13 கடிதங்களில், ஐந்து கடிதங்களின் அடிப்படையில் நான் இவ்வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு இருக்கிறேன். என்னிடமிருந்து நேரடியாக எதுவும் மீட்கப்படவில்லை. இந்த கடிதம் இந்தியாவின் பொதுவான பெயரான ‘ஆனந்த்’ ஐ குறிக்கிறது, ஆனால் காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி அப்பெயரை என்னுடன் அடையாளம் கண்டுள்ளது. இந்த கடிதங்களின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் நிபுணர்களால் மட்டும் அல்ல ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியால் கூட கிழித்து தொங்கவிடப்பட்டது. முழு நீதித்துறையிலும் அவர் ஒருவர்தான் ஆதாரங்களின் தன்மைக்குச் சென்றார். கடிதங்களின் உள்ளடக்கம் குற்றமாகக் கருதக்கூடிய எதையும் குறிக்கவில்லை. ஆனால் யுஏபிஏ சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் அது தஞ்சமடைகிறது, நான் சிறையில் அடைக்கப்படுகிறேன்.

உங்கள் புரிதலுக்காக இந்த வழக்கு பின்வருமாறு சித்தரிக்கப்படலாம்: திடீரென்று, ஒரு நாள் காவல்துறை உங்கள் இல்லத்திற்குள் வந்து, எந்த ஒரு ஆணைபத்திரத்தையும் காட்டாமல் உங்கள் வீட்டைக் கொள்ளையடிக்கிறது. அதன் பிறகு அவர்கள் உங்களைக் கைதுசெய்து போலீஸ் காவலில் அடைகின்றனர். நீதிமன்றத்தின் முன் அவர்கள் கைது பற்றி எவ்வாறு கூறுவார்கள் எனில், xxx என்ற இடத்தில் ஒரு திருட்டு (அல்லது வேறு ஏதேனும் புகார்) வழக்கை பற்றி விசாரிக்கும் போது (இந்தியாவில் எந்த இடத்திற்கும் மாற்றாக) ஒரு பென் டிரைவ் அல்லது ஒரு கணினியை yyy யிடம் இருந்து அவர்கள் கைப்பற்றினர் (பெயரையும் மாற்றவும்) ,அதிலிருந்து சில கடிதங்கள் மீட்கப்பட்டன மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டார், அதில் zzz பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, அவர் காவல்துறையின்படி உங்களைத் தவிர வேறு யாருமல்ல. இதன் மூலம் ஆழ்ந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் உங்களை முன்வைக்கிறார்கள். இத்தருணத்தில் உங்கள் உலகம் திடீரென்று தலைகீழாக மாறியிருப்பதைக் நீங்கள் காணலாம். உங்கள் வேலை போய்விட்டது, உங்கள் குடும்பம் வீட்டை இழந்து நிற்கிறது, கனவிலும் நினைக்காத ஒரு காரியத்தை நீங்கள் செய்ததாக மீடியா உங்களை சித்தரிக்கிறது. உங்களுக்கு எதிராக “சீல் செய்யப்பட்ட உறைகளை” காவல்துறை தயாரிக்கும் இதன் மூலம் உங்களை ரகசிய இடத்தில் விசாரிப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகளை அவர்கள் நம்ப வைக்க முடியும். எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பது பற்றி எந்தவொரு வாதமும் நடைபெறாது, ஏனெனில் இது விசாரணையில் காணப்படும் என்று நீதிபதிகள் பதிலளிப்பார்கள். காவலில் விசாரித்த பின்னர் நீங்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள். நீங்கள் ஜாமீன் கோரினால், நீதிமன்றங்கள் அவைகளை நிராகரிக்கும், மேலும் முன்பு கைது செய்யபட்டவர்கள் ஜாமீன் பெறுவதற்கு அல்லது விடுவிக்கப்படுவதற்கு 4 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்ததாக வரலாற்று தகவல்கள் காட்டும். இது யாருக்கும் நிகழலாம். அப்பாவி மக்களின் சுதந்திரம் மற்றும் அவர்களின் அனைத்து அரசியலமைப்பு உரிமைகளையும் மறுக்கும் இத்தகைய கடுமையான சட்டங்கள் ‘தேசம்’ என்ற பெயரில் அரசியலமைப்பு ரீதியாக சரி என்று பார்க்கப்படுகின்றன.

பகட்டாரவாரத் தேசிய வாதத்தை கொண்ட தேசமும், தேசியவாதமும் கருத்து வேறுபாடுகளை அழிக்க, மக்களை பிரிக்க அரசியல் வர்க்கத்தின் மூலம் ஆயுதம் ஏந்தியுள்ளன.வெகுஜன வெறி மூலம் இங்கு தேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும், தன்னலமற்ற சேவைகளை செய்பவர்கள் தேசதுரோகிகளாகவும் மாற்றப் பட்டிருக்கின்றனர். எனது இந்தியா பாழடைந்து வருவதை நான் காணும்போது, ​​இதுபோன்ற ஒரு மோசமான தருணத்தில் நான் உங்களுக்கு எழுதுகிறேன் என்பது ஒரு பலவீனமான நம்பிக்கையுடன் தான்.

சரி, நான் இப்பொழுது என்ஐஏ காவலில் இருக்கிறேன், நான் உங்களுடன் எப்போது மறுபடியும் பேச முடியும் என்று தெரியவில்லை. இருப்பினும், உங்கள் முறை வருவதற்கு முன்பு நீங்கள் பேசுவீர்கள் என்று நான் ஆவலுடன் நம்புகிறேன்.

ஆனந்த் டெல்டும்டே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here