ஆங்கில மொழிக் கல்வி:அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்

Image result for education
                        தமிழகத்தின் ஒவ்வொரு பள்ளி மாணவ மாணவியரும் ஆங்கிலத்தை நன்கு படிக்க, எழுத, பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆங்கிலவழிக் கல்வி அதற்கு மாற்றாகாது. தன்னம்பிக்கையும், சுயசிந்தனையும், சிறந்த பண்பு நலன்களும் கொண்ட ஒரு தமிழ் தேசக் குடிமகனை உருவாக்கத் தமிழ்வழிக் கல்வி தான் தேவை. தமிழை நன்கு அறிந்திருந்தால்தான் ஆங்கிலத்தை படிக்க முடியும். முதலில் தெரிந்ததை சொல்லித்தந்த பின் தெரியாததை சொல்லித்தருவதே பயன்தரும். குழந்தைகளுக்கு தமிழ் தெரியும். அதனை சொல்லித்தந்த பின் அதன் மூலம் ஆங்கிலத்தைச் சொல்லித்தருவதே ஆங்கில மொழி அறிவை வளர்க்கும். மேலும். ஆங்கிலவழிக் கல்வி தன்னம்பிக்கையை, சுயசிந்தனையை, சிறந்த பண்பு நலன்களைக் கண்டிப்பாக உருவாக்காது. அது திறமையும் அறிவும் சுயநலமும் உடைய மனித இயந்திரங்களைத் தான் உருவாக்கும். அதனைத்தான் இன்றைய ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் செய்து கொண்டுள்ளன. ஆனால் தமிழ்வழிக்கல்வி சிறந்த மனிதனை உருவாக்கும்.
         அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. கல்வியில் தரம் இன்மை, போதிய வசதிகள் இன்மை, ஆங்கில மோகம், வறட்டுப் பெருமை முதலியன அதன் சில காரணங்களாகும். அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு இடங்கள் முதலியவற்றின் தரத்தை ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குச் சமமாக  உயர்த்த வேண்டும். முக்கியமாக ஆரம்பப் பள்ளிகளுக்கு அதிக வசதிகள் செய்து தர வேண்டும். தனியார்களின் உதவியோடு அரசு அதனைச் செய்யலாம். ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்கள்-மாணவர்கள் விகிதத்தை 1:25 ஆகக் குறைக்க வேண்டும். கற்றுத் தருவதைத் தவிர வேறு பணிகள் அந்த ஆசிரியர்களுக்கு இருக்கக் கூடாது. ஆரம்பப் பள்ளிகளில் துப்புரவு பணிகளுக்காகவும், பிற அலுவலகப் பணிகளுக்காகவும் தேவையான உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆரம்பப்பள்ளிகள் தான் கல்வியின் அடிப்படை என்பதை உணர்ந்து அங்கு அதிக வசதிகள் செய்து தரப்படவேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்துப் பாடங்களிலும் முறையானத் தரமான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப் பட வேண்டும்.
Image result for education
         ஆங்கில மொழி படிப்புக்கு அதிக வகுப்புகளையும் அதிக நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகளின் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது. இங்கு ஆசிரியர்களுக்கு பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு முதல் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை ஐந்து வருடமும்  குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் எடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர் தனது பணியைச் சரியாகச் செய்தாரா என்பதை எளிதில் அறிய முடியும். இதனால் கண்டிப்பாகத் தரம் உயரும். குறிப்பிட்ட 25 மாணவர்களுக்கும் முதல் வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரை ஒரு குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் சொல்லித் தந்தும் அந்தக் குறிப்பிட்ட 25  மாணவர்களுக்கும் எழுதப் படிக்கக்கூடத் தெரியவில்லை எனில் அந்த ஆசிரியரிடம் ஏதோ தவறு உள்ளது என்று பொருள். உரிய பயிற்சிகள் வழங்கியும், முறையாகக் கண்காணித்தும் அது போன்ற தவறுகள் நடக்காது பார்த்துக் கொள்ள வேண்டும்.
         தற்போதைய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில அறிவு இல்லை என்றே சொல்லலாம். எனவே ஆங்கிலத்தில் நன்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை ஆரம்பப் பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு நியமிக்க வேண்டும். பிற நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் உள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கும் மிகத் தரமான இலக்கண அறிவுடன் கூடிய ஆங்கிலப் பயிற்சியை வழங்க வேண்டும். இதன்பின் அனைத்துப் பள்ளிகளின் கல்வித்தரத்தைக் கண்காணிக்கத் தனிக் குழுக்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் தரத்தை உயர்த்துபவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கலாம். அரசுப் பள்ளிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி ஆங்கிலப் பாடம் சொல்லித்தரப்பட்டு மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு படிக்க, எழுத, பேசக் கற்றுக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
Image result for govt schools in tamilnadu
    மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டு வருவது என்பது செருப்புக்காகக் காலை வெட்டுவது போன்றது. பாரதி சொல்வது போன்று அப்பொழுது நாடு பிசாசுகள் வாழும் சுடுகாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. தனியார் பள்ளிகள் பணத்துக்காக பாரதி கூறியபடி பிசாசுகள் வாழும் சுடுகாடுகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. அதனை அரசும் தொடர்ந்தால் என்ன ஆவது? அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச ஆங்கில அறிவுகூட இல்லை. அந்த மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவும் இல்லை. தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களைப் படிக்கக் கடுமையாக வேலை செய்ய வேண்டியதுள்ளது. மாணவர்களுக்காக பெற்றோர்களும் சேர்ந்து பாடுபடுகிறார்கள். ஆனால் இறுதியில் மாணவனுக்குத் தமிழும் தெரிவதில்லை, ஆங்கிலமும் தெரிவதில்லை. புரிந்து படிப்பது என்பது இல்லவே இல்லை. எல்லாம் மனப்பாடம் தான். ஆங்கில மோகம் அனைவரையும் பைத்தியமாக்கியுள்ளது. ஆகவே அரசு ஆங்கிலப் பாட நேரங்களை அதிகப்படுத்தி சிறந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க  வேண்டும். இந்த சிறந்த ஆங்கில ஆசிரியர்களைக் கொண்டு, பள்ளிகளில் முன்பே இருக்கும் ஆசிரியர்களுக்கு நல்ல தரமான ஆங்கில இலக்கணப் பயிற்சியை வழங்க வேண்டும். இவைகளின் மூலம் மாணவர்களின் ஆங்கில அறிவை அதிகப்படுத்த முடியும்.
 இர.விஜயகுமார்
MA(இதழியல் மற்றும் தொடர்பியல்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here