அலைபேசியின் பயன்பாடும் அதனால் ஏற்படும் விளைவுகளும் – ஜெயசேகர், கருங்கல்

0
19

முன்பெல்லாம் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் அபரிமிதமான அன்போடும்  ஆக்கப்பூர்வமான கண்டிப்போடும் பிள்ளைகளை வளர்ப்பதில் வெகு நேரத்தை செலவிடுவார்கள். எது சரி எது தவறு என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கூட்டு குடும்பமாகவே வாழ்ந்து வந்தார்கள் அதனால் குறைகள் சில இருந்தாலும் பரஸ்பர மரியாதையை வளர்த்துக்கொண்டார்கள். உண்மையில் சொல்லப்போனால் பெரியவர்களுக்கு கீழ்படிகிறார்களோ இல்லையோ அவர்கள் செல்லும் அறிவுரைகளை செவிகொடுத்துக்கேட்டார்கள். அவர்கள் யதார்த்தமாய் இருந்தார்கள் என்பதே உண்மை…

      இருந்தாலும் நன்றாக எல்லோருக்கும் இணங்கிப்போகும் பிள்ளைகளை  உருவாக்குவதில் பெற்றோரின் பங்கு மட்டுமே உடன்பட்டிருக்கவில்லை, கல்வியாளர்களும்கூட இதில் இன்றியமையாத ஒரு பங்கை வகிக்கின்றனர் என்பதை உணர்ந்திருந்தார்கள். அனுபவமுள்ள ஒரு பள்ளி ஆசிரியர் சொல்கிறார்  “அறிவுரீதியிலும், உடல்ரீதியிலும், உணர்ச்சிரீதியிலும் நன்றாக வளர்ச்சியடைந்துள்ள பொறுப்புள்ள  பிள்ளைகளை உருவாக்குவதில் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்கிறார்.

இருந்தபோதிலும், பெற்றோர்கள் கல்வியாளர்களோடு ஒத்துழைக்க தவறும்போது, பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. உதாரணமாக, சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வியைக் குறித்து முழுமையாக அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். அனால் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்கிறார்களே தவிர தன்பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதே இல்லை. பெரும்பாலான பிள்ளைகளுக்கு பெற்றோரே கைபேசி அதுவும் அதிக மதிப்புள்ள புதுவகையான கைபேசிகளை வாங்கி கொடுக்கிறார்கள்… ஆனால் அந்த பிள்ளைகள் கைபேசியை வைத்து எந்தமாதிரியாக பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பதும் இல்லை. அதனால் பிள்ளைகள் பெருமளவில் கைபேசியை தவறாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது. பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் தவறாக பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இன்று எல்லோருமே கைபேசியோடுதான் அதிக நேரத்தை செலவிடுகிறார்களே தவிர குடும்பத்தோடு அல்ல. இது மிகவும் அபாயகரமானது என்பதை புரிந்து கொள்வதும் இல்லை. Whatsapp, Facebook, Messenger, IMO, Wechat, Tik Tok மற்றும் Instagram போன்ற வலைதளங்களில் Chatting, Video call, தேவையில்லாத Videos மற்றும் Photos Upload செய்வது போன்றவற்றால் சில விசமிகள் பெண்களை குறிவைத்து தங்கள் வலைக்குள் விழவைக்கிறார்கள். இதில் சிறியவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் இதில் மாட்டிக்கொள்கிறார்கள்.

குடும்பத்தில் பல பிரச்சனைகள் வருவதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தை விட்டு பிரிக்கவும் ஏன் தற்கொலைக்கு தூண்டவும் செய்கிறது. அல்லது அடுத்தவர்களுடன் இணங்க மறுப்பதால் கொலை பண்ணவும் தயங்கமாட்டார்கள். அதிக நேரம் கைபேசியில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள், தனிமையில் இருக்கிறார்களா, அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பெற்றோர்கள் கூர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெற்றோர்களே இப்படி இருக்கும்போது எப்படி பிள்ளைகளை கவனிப்பார்கள்? மானுடத்தை மிஞ்சிய அறிவியல் வளர்ச்சி என்பது அழிவைத் தரும் என்பது கைபேசியே ஒரு உதாரணம். எந்த ஒன்றையும் அளவோடு நாம் அதை பயன்படுத்தினால் நல்லதுதான். ஆனால் எப்போது அந்த பொருள் நம்மை ஆளுகிறதோ அல்லது நம் நேரத்தை அது பறித்துக்கொள்கிறதோ அப்போதே பிரட்சனைகள் வர ஆரம்பிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்… தினம் தினம் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை பார்த்தால் அனேகம்பேரின் வாழ்க்கை அழிவதற்கு காரணம் கைபேசி மூலம்தான் என்பது நிரூபணமாகி உள்ளது. குடும்பத்தில் யாருக்கும் மற்றவர்களோடு பேசுவதற்கே இன்று நேரமில்லை… இந்த நேரத்தை இன்று கைபேசி எடுத்துக்கொள்கிறது.

கூட்டுக்குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும் ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்று ஒவ்வொருவரையும் இந்த கைபேசி தனிமைப்படுத்தி உள்ளது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கைதான் அல்லது வளர்ச்சிதான் மன நிறைவை தரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மானுடத்தை மிஞ்சிய அறிவியல் வளர்ச்சி என்பது அழிவையே தரும் என்பதுதான் உண்மை.

இன்றய குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் வரை கைபேசியில் Video Games விளையாடுவதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அதுமட்டுமின்றி அதில் அடிமையாகி விடுகிறார்கள். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் குழந்தை அதிக நேரம் கைபேசியில் இருந்ததால் இப்போது மனவளர்ச்சி குன்றி நினைவிழந்து இருக்கிறது. அந்த குழந்தையால் சரியாக நடப்பதற்கு கூட இன்று முடியவில்லை. குடிபோதையில் எப்படி தள்ளாடுவார்களோ அதேப்போல்தான் இன்று இந்த குழந்தையின் நிலமை. ஆனால் இப்போது அந்த குழந்தைக்கு கைபேசி இல்லையென்றால் மருத்துவர் கூறுகிறார் மிகவும் மனவேதனை அடைந்து விடும். இன்னும் சிலகாலம்தான் உயிரோடு இருக்கும் அதனால் குழந்தை கேட்கும் பொது எல்லாம் கைபேசியை கொடுத்து விடுங்கள் என்று கூறுகிறார். உங்களை தொந்தரவு பண்ணக்கூடாது என்பதற்காக அழகான குழந்தையை அழித்து விட்டீர்களே என்று கவலையுடன் கவலையுடன் கூறுகிறார் குழந்தையின் தாத்தா. இதை கேள்வி பட்ட எனக்கே மிக கவலையாக இருந்தது. அப்படியென்றால் பெற்றோருக்கு எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள் ? பிள்ளைகளை வளர்ப்பதில் இப்போதய பெற்றோர்கள் அக்கறை காட்டுவதை விட தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றே நினைக்கிறார்கள்… பெற்றோர்கள் பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். இறை நம்பிக்கையோடு வாழுங்கள், வாழ கற்றுக் கொடுங்கள். நல்ல மனிதர்களை உருவாக்குங்கள். நாளை அவர்கள் மாமனிதர்களாக உருவெடுப்பார்கள்.

ஜெய சேகர், கருங்கல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here