முதலாளித்துவத்தின் கருவியா அரசு ? மோ.வினோசே.

இதுவரையான வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே சுரண்டுபவன் – சுரண்டப்படுபவன், ஆதிக்கம் செலுத்துபவன் –  அடக்கி ஆள்பவன் என்ற சமூகப் போக்குகளின் வரலாறு என மாமேதை *ஏங்கல்ஸ்* அவர்கள் வரையறுத்துள்ளார். முதலாளிகள் தமது உலகம் தழுவிய  வணிகச் சுரண்டலின் காரணமாக உலகு தழுவிய பன்முக கலப்பு உறவுகளை ஏற்படுத்தி உள்ளது ( *எ.கா*) மதரீதியாக, சாதிரீதியாக, மொழி ரீதியாக,மேலும் நிறம் ரீதியாக மக்களை பிளவுபடுத்தி உள்ளது. இதன் மூலம் ஏற்றத்தாழ்வு மிக்க உலகத்தையே இது நிர்ணயிக்கும். இதனை அரசு எனும் கருவியைக் கொண்டு வழிநடத்தி பயன்படுத்திக்கொள்கிறது 

*மார்க்ஸ்* முதலாளித்துவ வளர்ச்சியைப் பற்றி கூறியவைகள் தற்போது மெய்யாகி வருகின்றன. சீனப்பெருஞ்சுவர்களையும் முதலாளித்துவம் உடைத்து செல்லும். தனது கட்டளைகளை உலக நாடுகள் பணிந்து ஏற்கச் செய்யும் முதலாளித்துவ உற்பத்தி முறையை பின்பற்ற செய்யும் என்பன மெய்யாகியுள்ளது.    முதலாளித்துவம் உலகமயக் கொள்கைகளை செயல் படுத்த அரசுகளை தனக்கு ஏற்ப ஆட்டிவைக்கிறது. உலகமயம் உள்நாட்டு விவசாயத்தை அழித்து விவசாயிகளை தற்கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. உள்ளூர் தயாரிப்புகளை அழித்து முதலாளித்துவம் தனது உற்பத்தி உபரிகளை வணிக நோக்கத்திற்காக இங்கு திணிக்கின்றது. உள்நாட்டு பொருட்கள் தரம் தாழ்ந்தது  எனும் பொய் பிரச்சாரத்தை முதலாளித்துவம் உலக அளவில் விதைத்துள்ளது .

அரசு முதலாளித்துவத்தின் உற்பத்திக்காக தொழிற்சாலைகளை அமைக்கவும் உற்பத்திப் பொருள்களை கொண்டு செல்லவும் விவசாய, விளை நிலங்களை அழித்து முதலாளித்துவத்திற்கு இடவசதியும் போக்குவரத்துச் சாலை வசதியும் அரசு அமைத்துத் தருகின்றது. இதனை எதிர்க்கும் விவசாயிகள்,  மக்கள், சமூக சிந்தனையாளர்கள்  ஆகியோரை முதலாளித்துவத்திற்காக முதலாளித்துவ அடிமை அரசு காவல்துறையின் வன்முறை மூலமாக ஒடுக்குகிறது . மேலும் முதலாளித்துவம்  ஆட்டிவைப்பதற்கு ஏற்ப பல இன்னல்களை அரசு மக்களுக்கு ஏற்படுத்துகிறது ( *எ.கா*)  விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தல், உரம் போன்ற பொருட்களின் மீதான மானியத்தை ரத்து செய்தல் போன்ற செயல்களை அரசு மேற்கொள்கிறது அதற்கு மாற்றாக

முதலாளித்துவம் உற்பத்தி செய்யும் நுகர்வு பொருள்களுக்கும் ஏற்றுமதிக்கும் அரசு மானியம் வழங்குகிறது. நமது வரிப்பணம் வாடிய வயிற்றுக்கு உதவாமல் கொழுத்த வயிறுகளை  கொண்ட முதலாளிகளின் வயிறுகளை நிரப்புகின்றன ( *எ.கா*) பதஞ்சலி, அம்பானி போன்றவர்களின் கடனை அரசு தள்ளுபடி செய்துள்ளது. 

அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக வன்முறையை மக்கள் மீது செலுத்துகிறது. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக திரள்கின்றனர். ( *எ.கா*) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற போராட்டங்கள்.

ஆனால் இவ்வாறான போராட்டங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்காக காவல்துறை உதவியோடு வன்முறை மூலம் மக்கள் போராட்டங்களை, மக்களின் உணர்ச்சிகளை அடக்க முயல்கின்றது.  அரசு முதலாளித்துவத்திற்காக மக்களையும் தொழிலாளர்களையும் சாதி மதம் மொழி போன்ற குழுவாக பிளவுபடுத்தி வைக்கின்றது. மக்களின் போராட்டங்கள் ஆனது சாதி மற்றும் மதங்களுக்கு இடையேயான போராட்டங்களாக அரசு வழி நடத்துகிறது. இதனால் சமத்துவமின்மையும் சமூக ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கான போராட்ட குணங்களை தடம் மாறி பயணிக்கச் செய்கிறது. எனவே மக்கள் தற்போது உள்ள தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் சிறுசிறு போராட்டம் என்றாலும் மக்களும் தொழிலாளர்களும் சேர்ந்து போராட வேண்டும். அப்பொழுதுதான் தேசிய அளவிலான சமூக பொருளாதார மாற்றங்களுக்கான போராட்டத்தில் பங்கு கொள்ள முடியும். அதனை அரசு அதிகாரம் கொண்டு ஒடுக்க முயற்சி செய்யும். அதனையும் தாண்டி மக்களும் தொழிலாளர்களும் ஒன்றிணைய வேண்டும். இந்த இணைப்பு பாலத்தின் மூலம் முற்போக்கு எண்ணம் கொண்ட சிந்தனையாளர்கள் இணைந்து மக்களையும் தொழிலாளர்களையும் வழிநடத்துவார்கள்..