அரசுப் பணிகளில் அதிகளவில் வட இந்தியர்கள்… தமிழர்களால் வெற்றிபெற இயலவில்லையா? – ஒரு பார்வை

தமிழக இளைஞர்கள் பலர் இன்னமும் மாநில, மத்திய அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதிவிட்டு கனவுடன் பெருங்கூட்டமாகக் காத்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கூட்டத்திலிருந்து வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பம் ஆகிக்கொண்டு வருகிறது. அதேசமயம் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் இந்த நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வில் அதிகளவில் வெற்றிபெற்று இந்தியா முழுக்க உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணிக்கு அமர்கிறார்கள்.

‘வட இந்தியர்களைப் போன்று கடுமையாக உழைக்க முடியாது’, ‘வட இந்தியர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்க மாட்டார்கள்’, அவர்களுக்கான ஊதியமும் குறைவு’ போன்ற கருத்தாக்கம் தமிழகத்தில் சமீபகாலமாக வலுப்பெற்றுவிட்டது. அது உண்மை என்கிற பட்சத்தில் கடைநிலை வேலைகளில் வட இந்தியர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதைப் புரிந்துகொண்ட வட இந்தியர்கள், காலப்போக்கில் அதிகளவில் இங்கு வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதனால், தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முன்புபோல வேலைவாய்ப்பு இல்லை.

‘நீ இல்லன்னா இந்திக்காரனுங்க’ என்கிற அலட்சியம் இடைத்தரகர்களிடமும் முதலாளிகளிடமும் ஏற்பட்டுவிட்டது. அடித்தட்டு வேலைகளில் மட்டும்தான் வட இந்தியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர் என்று சொல்வதற்கில்லை. தமிழகத்தில் இயங்கும் அரசு அலுவலங்களிலும் அதிகளவில் அவர்கள் வரத் தொடங்கிவிட்டனர். ரயில்வே துறையில் அவர்களின் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் வட இந்தியர்களாவர். தவிர, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி, பாரத மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அண்மைக்காலமாக அதிகம் உள்ள நிலை உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் 2011-ம் ஆண்டிலிருந்து இதுவரை மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டவர்களில் 99 சதவிகிதத்தினர் வட இந்தியர்கள்தான். வெறும் 0.5 சதவிகிதம்தான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற புள்ளிவிவரம் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.
தமிழக இளைஞர்கள் பலர் மத்திய, மாநில அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதிவிட்டு, வேலை கிடைத்துவிடும் என்ற கனவுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் அரசுப் பணிகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பமாகவே உள்ளது.

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பணிகளுக்கான தேர்வில் அதிகளவில் வெற்றிபெற்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியில் அமர்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம்? திட்டமிட்டு இது அரங்கேற்றப்படுகிறதா என்பன கேள்விகள் எழுகின்றன. 2014 நவம்பரில் குரூப் – டி பணியாளர்களுக்கான தேர்வை தெற்கு ரயில்வே நடத்தியது. தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் விதி (Attestation) நீக்கப்படுகிறது. அதுபோன்ற சான்றொப்பம் பெறத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கில நாளிதழ் விளம்பரங்களில் வெளியிடும்போது, ‘விண்ணப்பிப்போர் அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களை இணைத்திட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. அந்த விளம்பரங்களை நம்பி, சான்றிதழ்களில் அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டன. ஆனால், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்தவர்களுக்குத் தேர்வு நடத்தி டிராக் மேன், போர்ட் மேன், சபாய் வாலா, கலாசி போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானோரைப் பணியில் சேர்த்தனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றியுள்ளன.

தமிழகத்தில் படித்த இளைஞர்கள் சுமார் 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இன்றித் தவிக்கும் நிலையில், வெளிமாநிலங்களிலிருந்து பணியாளர்களைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது”

வைகோவின் இந்த அறிக்கை பேசு பொருளானதைத் தொடர்ந்து, தற்போது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் “மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்னும் அறிவிப்பைச் சேர்த்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி நடத்திய தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சிபெறும் தென்னிந்தியர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு என்பது யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் மூலம் உறுதியாகியுள்ளது. தமிழகத்திலிருந்து யு.பி.எஸ்.சி தேர்வில் இந்தாண்டு வெறும் 35 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கையைவிட இது மிகவும் குறைவு என்று தெரியவந்துள்ளது.

இது தொடரும் பட்சத்தில் மத்திய அரசுப் பணி என்பது வட இந்தியர்களுக்கு மட்டுமே உரிதான ஒன்று என்கிற எண்ணம் தமிழக மாணவர்களிடையே எழுந்துவிடும். நாளடைவில் அரசுத் தேர்வுகளுக்கு முயற்சி செய்வதையே விட்டுவிடுவார்கள். இன்னொருபுறம், எல்லாவிதத்திலும் நம்முடைய இடத்தை வட இந்தியர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள் என்கிற எண்ணம் ஒரு வெறுப்பு உணர்வாக தமிழர்களிடையே எழும். வடஇந்தியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்க அவர்களும் தங்கள் உரிமைகளுக்காக ஒன்றிணைவார்கள். இது ஏதோவொரு புள்ளியில் இனக்கலவரமாக உருமாறும் வாய்ப்பு அதிகம்.

தனியார் அல்லது அரசு எதுவாக இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் அடிமட்ட வேலைகளிலிருந்து உயர்த்த மட்ட வேலைகள் வரை மாநில மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்த உரையாடல் நிகழ வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற கூற்றை ஒரு தரப்பு மட்டும் கேட்டுக்கொண்டிருப்பதாக மாறிவிடக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here