அரசியல் உரிமையை அடையாமல் பெண் விடுதலை சாத்தியமா?- அஸ்வினி கலைச்செல்வன்

பெண் விடுதலைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து பதிவு செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். அதற்கான அவசியமும் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. தினமொரு பெண் பாலியல் வன்முறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுவதை வெளியுலகிற்கு ஊடகங்கள் காட்டிக்கொண்டே தானிருக்கிறது. வெளிவராமல் இன்னும் பல இடங்களில் அரசியல் சாதிய அதிகாரங்களுக்கு உட்பட்டு மறைக்கப்படுகிறது.

‘ஒரு சமுதாயத்தில் பிரபலமான சாதனைப் படைக்கும் மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் அந்த சமுதாயம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்த சமூகமாக இருக்க வேண்டும்’ என்று சமூக விஞ்ஞானி ராபர்ட் இங்கர்சால் கூறுகிறார். இக்காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் சுதந்திரமாக செயல்படுவதோடு,சாதிக்கும் பெண்களாகவும் இருப்பது பெருமை என்றாலும் அவர்களின் பாதுகாப்பு எப்போதும் உறுதி செய்யப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.சமுதாயமென்பது ஆண்கள் ,பெண்கள், மாற்றுப்பாலினத்தவர்கள் என அனைவரும் சேர்ந்த கூட்டமைப்பே. இன்றுவரை இயற்கையின் படைப்பான மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிக்க மறுத்து வருகிற தலைமுறையில்தான் இருக்கிறோம்.பெண்கள் மட்டுமின்றி மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் அவரவர் உரிமைகளையும் அரசியல் அறிவையும் போதிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் இன்னும் ஆணாதிக்க சமுதாயம் தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் கணவர்கள் மனைவிமார்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்களும், ஆண்கள் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதும், ஆண்கள் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், இளம் சிறுமிகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொடுப்பதும், அத்துடன் தேவதாசி முறையும், விதவைத் திருமண மறுப்பும், பலதார மணமும் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆகவே அரசும், அரசியல் இயக்கங்களும் ,அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் மக்களுடைய, அதுவும் குறிப்பாக நலிந்த சமூகத்தினரின் உரிமைகள் என்னன்ன என்பதினை போதிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.பெண்களின் உரிமைகள் என்பது  பாலியல் வன்முறைகளிலிருந்து விடுபடுதல், வாக்குரிமை, பொது நிறுவனங்களில் வேலை செய்தல், குடும்ப உறவில் பெண்களின் உரிமை, சமமான ஊதியம் அல்லது சரியான ஊதியம் பெறுவது, குழந்தை பிறப்பு உரிமைகள், சொத்துரிமை, கல்வி உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.இதில் இந்திய நாட்டின் அரசியல் சட்டம் 1951 பகுதி இரண்டில் பெண்களுக்கான சமத்துவ உரிமையினை உறுதி செய்தது. அதில் சதி தடுப்புச் சட்டம், சீதன ஒழிப்புச் சட்டம், பாலியல் தொழில் ஒழிப்புச் சட்டம் போன்றவை முக்கியமானவை.அரசியல் சட்டம் பகுதி நான்கில் டிரெக்டிவ் ப்ரின்ச்பில் ஆப் ஸ்டேட் பாலிசி ( Directive principles of state policy)என்ற அரசின் கொள்கையினை வழிச் செலுத்தும் நெறிகள் என்ற பகுதியில் வேலையில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம்,கருவுற்ற நேரத்தில் பெண்களுக்கான சலுகைகள், பெண்களை மதிக்கும் விதமான அறிவிப்புகள் மற்றும் பெண்களை அவமதிக்கும் விவகாரங்களிருந்து விலக்கம் போன்ற நடவடிக்கைகள் செயல் படுத்தப்பட்டன.

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்

இரவு நேரத்தில் ஆண்கள் இல்லாத வேளையில் வீடுகளில் சோதனை இடுவது தடுக்கப்பட்டுள்ளது.

பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்வது தடுக்கப் பட்டுள்ளது.

உண்மை இல்லாத கைது போன்ற நடவடிக்கையில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி அளிப்பது

பாலியல் கொடுமை மனித உரிமைக்கு எதிரானக் குற்றம் என்று அறிவித்தல்.

சிறுமியர் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்முறைச் சட்டத்திற்கு வழிவகை செய்தது.

தேசிய மனித உரிமை கமிசன் அமைப்பதற்கு வழி வகுத்தது.

பல்வேறு சட்டத்திட்டங்கள் இருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்பதே முக்கிய பார்வையாக உள்ளது.அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளுக்கும் சட்டங்களை பயன்படுத்த பழக வேண்டும்.

பெண்கள் அரசியலுக்கு வரும் போது குடும்பத்தினர் ஆரம்பித்து சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்து வைக்கும் பார்வை மிக கொடூரமானவை.சில பெண்கள் அரசியல் பின்புலத்தை கொண்டுள்ள குடும்ப பின்னணியில் இருந்து வருகிறார்கள். ஆனால் சாமான்ய பெண்கள் அரசியலில் காலூன்ற முடியுமா என்றால் எட்டாக்கனி தான்.ஒரு சிலரே இயக்க பின்புலத்தில் இருந்து வர முடியும். எல்லா பெண்களுக்கும் எல்லா கட்சிகளுக்கும் இத்தகைய வாய்ப்பு கிடைப்பதில்லை.

பணம் உள்ள குடும்பத்தினர் வீட்டிலிருந்து வரும் பெண்கள் தான் பெரும்பாலும் தேர்தல் அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கிறார்கள்.

சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் கூடங்குளம், நியுட்ரினோ, நெடுவாசல் போன்ற சூழலிய போராட்டங்களாகட்டும், அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் டெல்லியில் விவசாய போராட்டத்தில் அரைநிர்வாணத்தோடு பங்கேற்ற பெண்களாகட்டும், டாஸ்மாக் கடைகளை அகற்ற தமிழகம் முழுவதும் பெண்கள் குதித்துள்ள போராட்டமாகட்டும், காலிகுடங்களுடன் தண்ணீருக்காக சாலை மறியலில் ஈடுபடும் பெண்களாகட்டும் போராட்டகளத்திற்கு வரும் பெண்கள் எத்தனை பேர் அரசியல் மேடைகளில் இருக்கிறார்கள், எத்தனை பேர் சட்டமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்குள்ளும் போகிறார்கள். போராட்டகளத்தோடு பெரும்பாலான பெண்களின் அரசியல் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது. இதை எல்லாம் தாண்டி ஒரு பெண் அரசியல் மேடை ஏறவும், அரியணை ஏறவும் கொடுக்க கூடிய விலை கணக்கிட முடியாத ஒன்று.

அவ்வளவு ஏன் தினமும் தொலைக்காட்சி விவாதங்களை நெறிப்படுத்தும் இடத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் ? தொலைக்காட்சிகளில் தினம் தினம் நடைபெறும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் எத்தனை பெண்கள் கருத்துரையாளர்களாக இடம்பிடிக்கிறார்கள். மகளிர் தினத்தன்று மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியை மட்டும் பெண்களை வைத்து நடத்தும் அளவிற்கு தான் தமிழக தொலைக்காட்சிகளின் நிலைமை இருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் கட்சிகளில் இருந்து பங்கேற்கும் செய்தி தொடர்பாளர்களில் பெண்கள் வெகு குறைவு.

அப்படியே பதவிகளில் இருக்கும் சொற்ப பெண்களின் அதிகாரங்களை ஆண்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை.”பெண்ணுரிமை வரலாற்றின் கலங்கரை விளக்கம்” எனப் போற்றப்படும் மேரி உல்ஸ்டன் கிராப்டின் கனவுகளின் எழுத்து வடிவம்தான் பதின்மூன்று நெடிய (Chapters) பகுதிகளைக் கொண்ட “பெண்கள் உரிமைகளுக்கான நியாயங்கள்” (A Vindication of the Rights ofWomen) என்ற நூல்.இந்நூலை அவசியம் பெண்கள் படிக்கவேண்டும். பெண் விடுதலைப் பெறுவதற்கு அடிப்படை சட்டங்கள் தெரிவதும் அதிகாரத்தை கைப்பற்றுவதும் மிக அவசியமாகிறது. அரசியல் உரிமையை அடையாமல் பெண் விடுதலை என்பது சாத்தியமற்றது.

அஸ்வினி கலைச்செல்வன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here