அய்யாக்கண்ணுவின் அயோக்கியத்தனம்- பிரதீப்.

அன்று (08/04/2017)

அது ஒரு அழகிய காலை. வழக்கம்போல் வெயில் கொளுத்தும் டெல்லியில் , சுவாசிக்க தரமான காற்றின்றி, கோமணத்தை மட்டும் மிச்சம் வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் போராடி கொண்டிருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி , நதிகள் இணைப்பு , விலை நிர்ணயம் என பல்வேறு கோரிக்கைகளை கொண்டு முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. ஏறத்தாழ ஒரு நூறு பேர் கொண்ட அக்கூட்டத்தில் சில ஏழை விவசாயிகள், சில இளைஞர்கள் , பல்வேறு ஊடகத்தை சார்ந்த நிருபர்கள் என அக்கூட்டம் விரிவாகிக்கொண்டே இருந்தது. நடுவண் அரசாங்கத்தை எதிர்த்து அக்கூட்டம் தமிழகத்தில் இருந்து டெல்லி வரவேண்டி இருந்தது. அது முழுமையாக உழவர்களை கொண்ட கூட்டமாக இருந்தது துவக்கத்தில். போராட்டம் துவங்கிய சில நாட்கள் சரியான உணவின்றி , உறக்கமின்றி , புரிதல் உள்ள மொழியின்றி, கேட்க நாதியின்றி அந்த போராட்டம் துவங்கியது. கிட்ட திட்ட 30 நாட்கள் கடந்தபோதும் எந்த ஒரு அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை இவர்களின் கூக்குரலை கேட்டு. அக்கூட்டத்தின் தலைவராக அய்யாக்கண்ணு அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தி வந்ததை நினைவில்கொள்ள வேண்டும். பல்வேறு விதமான வடிவில் போராட்டங்கள் நடத்த பட்டன. ஏன் நிர்வாணமாக கூட போராடினர் பிரதமர் அலுவலகம் அருகே. ஒரு பயனும் இல்லை. ஏராளமான இளைஞர்கள் அவர்களின் பணிகளை கூட விட்டு விட்டு இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். டெல்லி வாழ் தமிழர்களோ தங்களால் என்னென்ன உதவி செய்ய முடியுமோ அத்தனையும் செய்தனர். அந்த சூழலில் கூட நடுவண் அரசை சார்ந்த எந்த ஒரு அமைச்சரும் வந்து குறைகேட்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் ஒரு முறை வந்தார். எதற்கென்றால், போராட்டத்தை நிறுத்திவிடுமாறு கூறுவதற்கு. மோடியின் முகம் போன்று வடிவமைக்கபட்ட முகமூடி அணிந்து ஒரு இளைஞன், போராட்ட களத்தில் நிற்கிறான். அவனை முன்வைத்து போராட்டம் துவங்குகிறது. உலகில் பல கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து இருப்பினும் , உழவர்களின் இந்த போராட்டம் தான் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

எலி கறி உண்ணும் போராட்டம், வளையல் உடைப்பு போராட்டம் , தாலியறுப்பு போராட்டம், மண்சோறு சாப்பிடும் போராட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம். அதில் ஒரு சில போராட்டங்கள் மறக்க இயலாத சிலதாக இருந்தது. விவசாயிகளை மோடி முகமுடி அணிந்த அந்த இளைஞன் சவுக்கால் அடிக்க , ஐயோ எங்களை கொல்லாதே!! மோடி அரசே!! என்றும் , விவசாயி வயிற்றில் அடிக்காதே , விவசாயத்தை அழிக்காதே என்றும் முழக்கங்கள் முழங்கப்பட்டன. அம்முழக்கங்கள் இன்றும் என் காதினில் ஒலித்து கொண்டே இருக்கின்றது. அத்தனை போராட்டங்களுக்கு பின்னரும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றால் போராட்டத்தை முடியுங்கள் நாங்கள் விரைவில் செய்து தருகிறோம் என்ற வாய்மொழியுறுதியை நம்பி அப்போராட்டம் பலமுறை இடைநிறுத்தப்பட்டது. அன்றே வலிமை இழந்த ஒரு போராட்டமாக அது உருமாற துவங்கியது. சரி அதெல்லாம் அன்றைய நிலைமை ., வாருங்கள் இன்றைய நிலைமையை பற்றி கொஞ்சம் உற்று பார்ப்போம்.

 

இன்று (08/04/2019)

வழக்கம் போல் சுட்டெரிக்கும் முதுவேனில் காலம் இது , இதற்கிடையில் தேர்தல் புழுதி நாடெங்கும் பரவி கொண்டிருந்த நாளில், டில்லியில் அய்யாக்கண்ணு பேட்டி கொடுக்கிறார். என்ன பேட்டி என்று அறிவதற்கு முன் என்ன நடந்தது அந்த 2 வருடத்தில் என்று ஒரு சின்ன மேற்பார்வை பார்ப்போம். இந்த இரண்டு வருட இடைவெளியில் பல முறை அய்யாக்கண்ணு அடங்கிய குழு டில்லி, பஞ்சாப், என பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் சென்று ஒரு பெரிய விவசாய கூட்டமைப்பை உருவாக்க துவங்கியது. அக்கூட்டமைப்புடன் சேர்ந்து ஒரு சில போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போராட்டங்கள் மூலம் முன்பு போல் இவர்களால் ஆதரவை திரட்ட இயலவில்லை. அதன் காரணிகள், இவர்கள் போராட்டங்களை அவ்வப்போது கைவிட்டுவிடுவதே காரணம். தேர்தல் நெருங்கிய நேரத்தில் 110 விவசாயிகளுடன் சேர்ந்து அய்யாக்கண்ணு வாரணாசியில் பிச்சை எடுத்து தேர்தலில் மோடியை எதிர்த்து சுயேட்சையாக களம் காண போவதாக கூறி இருந்தார். அச்செய்தி ஆளும் அரசாங்கத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியதை போல் இருந்தது. தற்பொழுது நான் மேற்கொண்டு குறிப்பிட்ட அந்த பேட்டிக்குவருவோம். பாஜக தலைவர் அமித் ஷா வை சந்தித்து விட்டு வெளியே வந்த அய்யாக்கண்ணு திடீர் பல்டி, அந்தர் பல்டி அடித்த கதை தான் இது. ஆம் அவரை சந்தித்து விட்டு அய்யாக்கண்ணு மற்றும் அனைத்து விவசாயிகளும் தேர்தலில் வாரணாசியில் போட்டிஇட போவதில்லை என்று கூச்சல் இடுகிறார். மேற்கொண்டு சொல்கிறார் அமித் ஷா அவர்களை சந்தித்தது மனநிறைவை தருகிறதென்று. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் என்பதை போல் தான் இருந்தது நிருபர்களின் முகங்களும். அன்று டில்லியில் வாய்மொழியாக சொல்வதை ஏற்று போராட்டத்தை கைவிடமுடியாதென்று சொன்ன அந்த அய்யாக்கண்ணு , பாஜக வையும் , அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்த அதே அய்யாக்கண்ணு இன்று அவர்களை சந்தித்த பின் இப்படி கூறுகிறார். அனைவரும் இங்கு நன்றாக உற்று கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் , அன்று (2017) இல் யாரை அன்று எதிர்த்தாரோ , யார் அன்று விவசாயிகளை கொலை செய்கிறார்கள் என்று சொல்லபட்டதோ , அதே மானங்கெட்ட நபர்களுடன் இந்த மானங்கெட்ட அய்யாக்கண்ணு கைகோர்த்து கொண்டது தான். அன்றொரு பேச்சு இன்றொரு பேச்சென்று வழக்கம் போல் உள்ள அரசியல்வாதிகளை போல் அய்யாக்கண்ணுவும் மாறியது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். ஏன் என்றால் 2017 இல் பல தரப்பு மக்களின் ஆதரவை பெற்ற அப்போராட்டம் தவறாக வழிநடத்தப்பட்டு இன்று புதைந்துகொண்டே போவதை எண்ணுகையில். இந்த அய்யாக்கண்ணுவும், பணத்திற்கோ அல்லது ஏதோ ஒரு செயலுக்கு அடிமையாகி போனதை எண்ணி, அனைத்து மக்களும் கடும் கோபத்தில் உள்ளதை விரைவில் அனைவரும் உணரத்துவங்குவார்கள். இதனால் அய்யாக்கண்ணுவின் அறிவுத்திறன் இன்று அய்யாக்கண்ணுவின் அயோக்கியத்தனமாக மாறி விட்டது. முடிவில் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். 2017 இல் மோடி போல் வேடமிட்டு , மோடியை கடுமையாக எதிர்த்த அந்த இளைஞன், இன்று ஆர்.எஸ்.எஸ் இன் கைபொம்மையாக, பாஜக வின் கைக்கூலியாக மாறியதை இங்கு பதிவு செய்ய கடமைபட்டிருக்கிறேன்.. சரி இந்த சில மேற்பார்வை கூற்றுக்களே அய்யாக்கண்ணுவின் அயோக்கியத்தனத்தை தங்களின் புரிதலுக்கு கொண்டு வந்திருக்கும் என்று எண்ணி, இக்கட்டுரையை முடிக்கிறேன்.

டெல்லியில் அய்யாக்கண்ணுவுடன் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட ,அதற்காக தற்போது வேதனையில் இருக்கும்

பிரதீப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here