அயோத்தி…… அய்யோ தீ ! – ராஜகுரு


என்னங்க, நாளைக்கு சனிக்கிழமை ஆபிஸ்
லீவு தானே ?
அட போம்மா,தீபாவளிக்கு அடுத்த நாள்
விட்ட பொது விடுமுறைக்கு பதிலா நாளை சனிக்கிழமை ஆபீஸ் உண்டு.

அப்படியா,அப்ப பேசாம நாளைக்கு
லீவை போடுங்க.. அயோத்தி தீர்ப்பு வருதா… நாடே அல்லோகலப் பட்டுட்டிருக்கு…..

தம்பி,ஸ்கூல்லுக்கு கட்டாயம் நாளைக்கு போனுமா? ஏம்மா,போய் ஆகனும்.
இல்லடா,நாளைக்கு ஏதோ அயோத்தி தீர்ப்பு வருதா. பாத்து போயீட்டு வா… முடிஞ்சா பேசாம லீவை போடு
#
2019,நவம்பர் 8ந் தேதி வெள்ளிக்கிழமை பெரும்பாலன வீடுகளில் பதட்டத்தோடும் பரிதவிப்போடும் நடைபெற்ற சம்பாஷனைகள் இவை.

சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிர தடை.

நாடு முமுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு
4000 மத்திய படை வீரர்கள் அயோத்தியில் குவிப்பு
விடுப்பு ரத்து. பணிக்கு திரும்ப அழைப்பு
பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை

ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு…. என நாடு முமுவதும், திரைப்படத்தின் உச்ச காட்சிக்கு முன் செயற்கையாக உருவாக்கப்படும் பீதி மற்றும் பரிதவிப்பு உருவாக்கப்பட்டது. மக்கள் மத்தியில் வரலாறு காணாத பதட்டம் தொற்றிக்கொள்வது உறுதி செய்யப்பட்டது.

வரலாறு காணாத வகையில், உத்திரபிரதேச மாநில உயரதிகாரிகள் பட்டாளம் டெல்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து பாதுகாப்பு நடவடிக்கைகள்,கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கியது.

“தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை இருதரப்பும் ஏற்க வேண்டும்” என முக்கிய அரசியல் தலைவர்களும் மதத்தலைவர்களும் வரலாறு காணாத விதத்தில் வலியுறுத்தி வந்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சாசன அமர்வு,வரலாறு காணாத விதத்தில் ஒருமித்த கருத்துடன்,வரலாறு காணாத வகையில் ஒரு.சனிக்கிழமை அன்று,(நவம்பர் 10)1045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை எழுதியது.
காலங்காலமாக இந்திய நீதித்துறை தன்முன் வரும் வழக்குகளுக்கு தீர்ப்பை எழுதும் போது சாட்சியங்களின் (சமர்ப்பிக்கப்பட்ட!)அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை எழுதுவதன் மூலம்,ஒரு வழக்காடு மன்ற நடுவரின் தீர்ப்புக்கு ஈடாகவே தீர்ப்பை வழங்கி வந்துள்ளது என்பதும், சட்ட விதிகள் பற்றி கவலைப்பட்ட அளவுக்கு நீதியைப்பற்றி கவலையோ அக்கறையோ பட்டதில்லை என்பதும் தான் வரலாறு. அந்த வகையில் வரலாறு காணாத விதத்தில் முதன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல்,ஆதாரமற்ற நம்பிக்கைகளையும் தெளிவில்லா சான்றுகளின் குளறுபடிகளையும், வரலாற்றின் காலப்பகுதியில் தங்கள் அகவிருப்பத்திற்கு இணக்கமான காலப்பகுதிகளை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கின்ற பாரபட்சமான மனப்பாங்குகளையும் சார்ந்து தீர்ப்பை எழுதியுள்ளது.


“குறிப்பிட்ட இடம் ராமரின் ஜென்ம பூமி என்ற இந்துக்களின் நம்பிக்கையை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்” என்கின்ற இந்த நீதிபதிகள் நடுநிலையோடு தீர்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பது அப்பாவித்தனமாக மட்டுமே இருக்க முடியும். வழக்கம் போல தீர்ப்புக்கு மதச்சார்பற்ற வண்ணம் பூச 5 நீதிபதிகளில் ஒருவராக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் பயண்படுத்தப் பட்டுள்ளார்.
ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கு மற்றும் அயோத்தி தொடர்பான தீர்ப்பு ஆகியவற்றில் உள்ள வரலாற்றுப் பிழைகளை காண்போம்.
1. அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கோவிலில் வைக்கப்பட்டுள்ள”ராம லல்லா விராக்மன்”என்கின்ற குழந்தை ராமர் விக்கிரகம் உரிமையியல் சட்டப்படி சட்டரீதியான நபராக,எடுத்துக் கொள்ளப்பட்டு,அது நிரந்தரமான மைனர் என்பதால்,அதன் சார்பாக ஒரு காப்பாளர் வழக்கு தொடுக்க உரிமை வழங்கப்பட்டது.
காப்பாளர் என்ற முறையில் 1989 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதி மன்றத்தில்,அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தியோகி நந்தன் வழக்கு தொடர்ந்தார்.அவரது மறைவுக்குப்பிறகுப் பிறகு வி.எச்.பி(விஸ்வ ஹிந்து பரிவத்)இன் மூத்த தலைவர் திர்லோகி நாத் பாண்டே. குழந்தை ராமர் விக்கிரத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடினார்.
குழந்தை ராமர் விக்கிரகத்தின் மனுவை மட்டுமே உச்ச நீதிமன்ற ஏற்றுக்கொண்டது.
2.அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லா விராக்மன் மட்டுமே உரிமை கோர முடியும்.வேறுயாருக்கும் உரிமை இல்லை என்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.
3.கடந்த13ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை குறிப்பிட்ட இடம் யாருக்கு சொந்தம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
“காலி நிலத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே இருந்த கட்டுமானத்தின் மீதே மசூதி கட்டப்பட்டடுள்ளது அது நிச்சயமாக இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் கிடையாது”என இந்திய தொல்லியல் துறை 2003ல் தாக்கல் செய்த ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றம் மிக முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
“பாபர் மசூதி இருந்த இடத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் 50 தூண்கள் கண்டெடுக்கப்பட்டன. சில அரசர்கள் காலத்து இடிபாடுகளும் கண்டடுக்கப்பட்டன. அவை பெளத்த,ஜெயின் கோயில்களின் இடிபாடுகளாக இருக்கலாம்”என்ற தொல்லியல் ஆய்வின் பகுதி கருத்தில் கொள்ளப்படவில்லை.
பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த கட்டுமானம் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் கிடையாது என்று மட்டும் கூறியதன் மூலம் தொல்லியல் துறை தனது இந்துமத உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.”பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த கட்டுமானம் இந்து வழிபாட்டுத்தலம் என்பதற்கு யாதொரு ஆதாரமும் இல்லை” என்பதை கூறாமல் மெளனித்ததன் மூலம் விருப்பப்பட்ட தீர்வுக்கு சாதகமாக சான்று வழங்கியுள்ளது.
4.1949 டிசம்பர் 28 நள்ளிரவு அபய் ராம் தாஸ்,ராம் ஷகல் தாஸ்,சுதர்ஷன் தாஸ் உள்ளிட்ட சுமார் 60 பேர் பாபர் மசூதியின் பூட்டை உடைத்து குழந்தை ராமர் சிலையை உள்ளே வைத்தனர்.அத்துமீறி வைக்கப்பட்ட சிலை அப்போதைய மத்திய மாநில காங்கிரசு அரசுகளால் அப்புறப்படுத்தப்படவில்லை. டிசம்பர் 29 இல் பைசாபாத் நகர கூடுதல் மாஜிஸ்த்ரேட்டின் உத்தரவுபடி தனி அதிகாரியாக நியமிக்கப்பட்ட பரியாதத் ராம்,அளித்த அறிக்கையின்படி,ஒரு பூசாரி நியமிக்கப்பட்டு பாபர் மசூதியில் இருந்த ராமர் சிலைக்கு அரசு சார்பில் பூஜைகள் நடத்தப்பட்டன. கிரிமினல் வழக்கு சிவில் வழக்கானது.
ஜனவரி 16,1950 இல் கோபால் சிங் விஷாரத் என்பவர் ராமர் சிலையை நிரந்தரமாக அகற்றக்கூடாது எனவும் அதனிடம் சென்று நாள் தோறும் பூஜை செய்ய எந்த விதமான தடங்கல்களும் தனக்கு இருக்கக்கூடாது.என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு கோரி முதல் சிவில் வழக்கை தொடுத்தார்.அடுத்த 3 வது நாளில் அளிக்கப்பட்ட அனுமதியே இன்று வரை அமலாகி வருகிறது.
பாபர் மசூதிக்குள் அத்துமீறி ராமர் சிலை வைக்கப்பட்ட கிரிமினல் நடவடிக்கை பற்றி அன்று போலவே இன்றும் நீதித்துறை கருத்தில் கொள்ளவும் இல்லை. கவலைப்படவுமில்லை.
5.”கடந்த 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதியை இடித்தது தவறு.(தப்பல்ல).இதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டிருக்கிறது”என்கிறது தீர்ப்பு.
உச்ச நீதிமன்றமாகிய தன்னுடைய உத்தரவை மீறி – இருக்கின்ற நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும். தொடர வேண்டும்.என்ற உத்தரவை மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டது கடைந்தெடுத்த கிரிமினல் செயலாக உச்சநீதி மன்றம் உரைவில்லை. சட்டத்தின் ஆட்சி கேள்விக்குள்ளாகப்பட்டது பற்றியும்அதற்கு எந்தவொரு சங்கட உணர்வும் இல்லை .உச்ச நீதிமன்ற உத்தரவு பாபர் மசூதியின் இடிபாடுகளுக்கு இடையே புழுதியில் வீசப்பட்டது பற்றி கொஞ்சமும் கோபம் கொள்ளவில்லை.
இந்தக் கிரிமினல் செயல்கள் அனைத்தும் ராமஜென்ம பூமி என்பதாக தங்களைப் போலவே மனப்பூர்வமான நம்பிக்கையோடு மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,குற்றம் காணகுற்றம் சொல்ல எதுவுமில்லை என்றே நீதிபதிகள் கருதிக்கொள்கின்றனர் என்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக நுழைக்கப்பட்ட குழந்தை ராமரின் சிலை தொடுத்த வழக்கில்,ராமரின் பக்த கோடிகளான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு, நியாயப்படியானதுமல்ல…. சட்டப்படியானதுமல்ல….பரதனையும் விஞ்சிய ராம பக்தியே!
இந்தக் கண்றாவிகளை பார்க்காத வகைக்கு நீதி தேவதையின் கண்மூடப்பட்டிருப்பது நல்லது தான்!
கண்பார்வையில்லாத கணவண் திருதராஷ்ரன் மீதான பதிபக்தியை உலகுக்குகாட்ட அவன் மனைவி காந்தாரி கண்ணைக்கட்டிக் கொண்டு குருட்டு வாழ்க்கை வாழ்ந்தது போல,நாட்டின் நீதித்துறை மீதான குருட்டுப்பக்தியை இன்னும் எத்தனை நாளுக்கு கட்டிக்கொண்டு அழுவது ?
தீர்ப்புகள் மட்டுமல்ல… தீர்ப்பை எழுதுவோரும் திருத்தப்பட வேண்டும் !

ராஜகுரு ,

நிறுவனர்,சிந்தனைப்பள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here