அயோத்திராமர் மூட்டிய தீயில் புடம் போடப்பட்டது புனிதமல்ல…. ராஜகுரு.


  
நவம்பர்9, இரண்டாம் உலகப் போரின் முடிவில் ரஷ்ய -அமெரிக்க வல்லரசு குரங்குகள் அப்பத்தை பங்குபோட்ட கதையாக ஜெர்மனியை கிழக்கு – மேற்கு என பிரித்து எழுப்பிய பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்டு மீண்டும் ஒன்றாக – ஒரே ஜெர்மனியாக உருவான நாள்.
அது மட்டுமல்ல உலகம் முழுவதும் இசுலாமியர்களால்,இறைத்தூதர் முகம்மது நபியின் பிறந்த நாள் மிலாது நபியாக கொண்டாடப்படும் நாள்.
அதுமட்டுமா,பாபர் மசூதி வழக்காக துவங்கப்பட்டு,சர்ச்சைக்குரிய இட வழக்காக சரிந்து அயோத்தி வழக்காக அவதாரம் எடுத்த ஒர் வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்துப்
பெருமிதத்தோடு தீர்ப்பு எழுதிய நாள்.
      தீர்ப்பு வழங்கப்பட்ட நாளுக்கு முன்பே,நாடு முழுவதும்,எட்டு திக்குகளிலும்,பதட்டமும் பரிதவிப்பும் ஏற்படுத்தப்பட்டது .”தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பெரும்பான்மை வாதிகள் நிச்சயிக்கப்பட்ட நம்பிக்கையோடு போதித்தனர்.சிறுபான்மையினரின் அக்கறை மற்றும் கவலை குறித்து பேசுவது பெரும்பான்மையினருக்கு எதிரானது என்பதான ஜனநாயக மறுப்புணர்வு கோலோச்சிக் கொண்டிருந்தது.

போதாதற்கு,வடக்கே கயிலாயமலை,மேற்கே பட்டேல் சிலை,தெற்கே வள்ளுவன் சிலை என எல்லா திசைகளிலும் உள்ள பிரம்மாண்டங்களில் மோதி,இந்திய துணை கண்டத்தின் காற்று வெளியையும்,கேட்கும் செவிகளையும் ஒர் அசரிரீ எதிரொலித்து நிரப்பிய வண்ணமிருந்தது.

“இந்துப் பெருமிதம் கொண்ட இனியவர்களே , இறுமாப்புடன் இருங்கள்! – அதுவே இந்தியராக இருப்பதற்கு உரிய இலக்கணம்!”

பெரும்பான்மையின் இந்துப்பெருமிதத்திற்கு முன்னால், குறைந்தபட்ச அதிருப்தியின் முனகல் சத்தம் கூட எழாத வண்ணம் மயான அமைதி கட்டமைக்கப்பட்டது.
     
“அயோத்தி தீர்ப்பு” அறிவிக்கப்பட்டவுடன், ஓப்பாரியின் ஓலமோ,அழுகையின் சத்தமோ கேட்காத அளவுக்கு சாகடிக்கப்பட்ட “நீதி – நியாயத்திற்கு”மெளன அஞ்சலி அரங்கேற்றப்பட்டது,அரசியல் சட்டத்திற்கும் அதன் வழிப்பட்ட நீதித்துறைக்கும் அறங்காவலர்களாக அவதாரம் எடுத்துள்ள பல்வேறு அரசியல் தலைவர்களோ,தீர்ப்பு குறித்து”சொல்ல வேண்டுமே என்பதற்காக,சிலர் சிறிதளவு சிராய்ப்பு கூட உருவாக்காத வார்த்தைகளால் விமர்சித்தனர்;பெரும்பான்மையான பலரோ மனதார பாராட்டினர்;ஆனால் அனைவரும் ஓரே குரலில் ‘உருவாக்கப்பட்ட மயான அமைதியை பாதுகாக்க அமைதி காக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
               பெரும்பான்மை இந்துப் பெருமிதம்,தனக்கு எதிரானதாக கருதுகின்ற – எதிராக நிறுத்துகின்ற சிறுபான்மையினரின் நலத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மனித பெருமிதத்தின் சாரமென ஓங்கி ஒலிக்க தயங்கும் ஓட்டாண்டிகள், பெரும்பான்மை இந்துப் பெருமிதத்தின் அகமும் முகமும் கோணாத வகையில் நடந்து கொண்டனர்.

“உண்மையையும் நீதியையும் வெளிப்படுத்திய தீர்ப்பு”என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய போது,”நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பலப்படுத்தும் தீர்ப்பு”என அமித்ஷா கூறிய போது. “வேற்றுமையும் எதிர்மறை எண்ணங்களும் மறைந்த நாள்”என பிரதமர் நரேந்திர மோடி கூறிய போது,அத்வானி கடவுளுக்கு நன்றி கூறிய போது,”அனைத்து தரப்பு மக்களும் மனப்பூர்வமாக ஏற்க வேண்டும்”என மத்திய அமைச்சர் ராஜ் நாத் வேண்டுகோள் விடுத்தபோது.”வரலாற்று சிறப்பு மிக்கது”என முரளி மனோகர் ஜோஷி கருத்துரைத்த போது,உமாபாரதி “அத்வானியை பாராட்டி நினைவுகூற கேட்டுக்கொண்ட போது அவர்களைப் பற்றி தெரிந்தவர் எவருக்கும் ஆச்சரியம் ஏற்படுவதில்லை.
                  அயோத்தி பிரச்சினையில் சமரச தூதுவராக நியமிக்கப்பட்ட வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் “இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பு” என சான்றளித்ததிலும் வியப்பில்லை.
                      
ஆனால் யோகா குரு பாபுராம் தேவ் ,”உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான கொண்டாட்டங்களை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அது மற்றவர்களின் மனதை பாதிக்கும்” உச்ச நீதிமன்ற தீர்ப்பின் உண்மை சொரூபத்தை உணர்ந்து கூறியுள்ளது,வாய்த்தவறி சொன்னதாக இருந்தாலும் உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
                        
வேதனைக்குரிய விசயம் என்ன வென்றால்,பாபாராம் தேவுக்கு தெரிந்த உண்மை கூட பல அரசியல் தலைவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் .உண்மையிலே அவர்களுக்கு தெரியவில்லை -புரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல புரிந்தும் புரியாததுபோல நடிக்கிறார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!
                           
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய(9-11-2019) அதே நாளில் டெல்லியில்  கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நிறைவேற்றிய தீர்மானம்
                   “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற தீர்ப்பை ஏற்கிறோம்.நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடனும் பாரம்பரிய மரபுகளுடனும் நடந்து கொள்ள வேண்டும்….அரசியல் சட்டத்தை மதித்து அனைவரும் நடக்க வேண்டும்”என்கிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார், “இதனை அனைத்து சமூகத்தினரும் ஏற்க வேண்டும்.தனிப்பட்ட முறையில்,இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்”என்கிறார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா. காந்தி,
         ..”அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும்”என வலியுறுத்தியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி,
              “ராம ஜென்ம பூமி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தீர்ப்பை மதிக்கும் அதே வேளையில், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்கள்,சமூக நல்லிணக்கத்துக்கும் நட்புணர்வுக்கும் வித்திடுவதாக அமைய வேண்டும்.இதுவே எனது கோரிக்கை”என தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,
             “ கோர்ட் முடிவுக்கு மதிப்பளிக்கும் வேளையில்,நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும்” என்கிறார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்,
              “ஓவ்வொருவராலும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இந்த தீர்ப்பு சமூக நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும்.இதில் இனிமேல் எந்த சர்ச்சையும் இருக்கக் கூடாது .சுப்ரீம் கோர்ட் ஏகமனதாக தீர்ப்பு அளித்துள்ளது தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதை மதிக்க வேண்டும்”என்று கூறுகிறார்

கேரள முதல்வர் பினராயி விஜயன்,
               “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைத்து தரப்பும் பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும்….. இந்தியர்களாகிய நாம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பணிந்து நடக்க வேண்டும்” என்கிறார் .

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்,
            “தீர்ப்பை வரவேற்கிறோம் பல்லாண்டு கால பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அனைவரும் அமைதியும் ஒற்றுமையும் காக்க வேண்டும்”எனக் கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்,
                  “அயோத்தி தீர்ப்பை வரவேற்கிறேன்.உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நாம் அனைவரும் கட்டுப்படுவது மிகவும் அவசியம்….. தீர்ப்பு குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவிக்காமலும் இருக்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “  விரைவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.அந்த பிரார்த்தனைக்கு ஓராண்டுக்குள் பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கொண்டாடுகிறார்.

இடதுசாரி கட்சிகள்,
             “அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும் பார்க்கக் கூடாது….. உச்ச நீதிமன்றம் நீதித்துறையிலான தீர்வை வழங்கியிருந்தாலும்,தீர்ப்பின் பல பகுதிகள் கேள்விக்குரியவையாக உள்ளன.இருப்பினும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நல்லிணக்கத் தீர்ப்பாக அமைந்துள்ளது”என அறிக்கை வெளியிட்டுள்ளது.
       இந்திய அளவில் பல்வேறு அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் வெளியிட்டதைப் போலவே,தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும்,பெரும்பான்மை இந்துப் பெருமிதத்திற்கு தலைவணங்கியுள்ள தப்புத்தாளங்களை இனி பார்ப்போம்.

முதல்வர் பழனிச்சாமி,
             “அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் மதித்து தமிழகம் அமைதி பூங்காவாக திகழ ஒத்துழைக்க வேண்டும்”என கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
           “உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்கும் பிறகு,அதை எந்தவித விருப்பு வெறுப்புக்கும் உட்படுத்தாமல்,அனைத்து தரப்பினரும்,சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு…..மக்கள் முன்னெடுத்துச் செல்வார்கள்”என்று உறுதியாக நம்புவதாக கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, “நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று சிலரோ.நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சிலரோ. கருதுவதில் எந்தப் பலனும் இல்லை. அவரவர் வணங்கும் கடவுளின் பெயரால் இத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, மகிழ்ச்சியான ஒரு சமுதாயமாக……திகழ வேண்டும்”என்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்,
“இத் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.யாருக்கும் தோல்வியும் அல்ல.இத் தீர்ப்பு…..இரு மதங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான கருவியாகவே பார்க்கப்பட வேண்டும்”என்று கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், “இத்தீர்ப்பு அனைத்து மதத்தினராலும்,அனைவராலும் வரவேற்கக் கூடிய ஒரு தீர்ப்பாக இருக்கிறது..மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இத்தீர்ப்பை நாம் மதிப்போம். வரவேற்போம்”என்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த்,
“அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும்…”என்று கூறியுள்ளார்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலார் இரா. முத்தரசன், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்….அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்….”என்கிறார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
“இத்தீர்ப்பு சட்டம், ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டதாக  அமையவில்லை சாஸ்திரங்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில்,ஒரு சமரச முயற்சியின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாகத்தான் அமைந்திருக்கிறது. எது எப்படியானாலும், சமூக அமைதி முக்கியமானது. ஆகவே அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்”என்று கூறியுள்ளர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ,“அயோத்தி வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்”என்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
  “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்றுக் கொண்டு,தேச ஒற்றுமையைப் பாதுகாப்போம்”என்று கூறியுள்ளார்.

புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம். “உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் இரு தரப்பினருக்கும் நியாயம் கிடைத்துள்ளது”என்கிறார்.

மதுரை ஆதினம்.
“இந்தத் தீர்ப்பை மனதார வரவேற்கிறோம்….. இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதுயாருக்கும் பாதகமான தீர்ப்பும் அல்ல”என்று கூறியுள்ளார்.

அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலர் ஏ.அன்வர் ராஜா.
“தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்க வேண்டும்.நாட்டின் நலனையும் சமுக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு தீர்ப்பை ஏற்க வேண்டியது அவசியம்.அனைவரும் நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும்”என்கிறார்.

கொங்கு மக்கள் தேசிய கட்சி ஈ.ஆர் ஈஸ்வரன்.
“உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளித்து செயல்பட வேண்டும்.இந்தியர் என்ற உணர்வு அனைவரிடத்திலும் மேலோங்கி இருப்பதால் மதநல்லிணக்கம் பேணிக்காக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது”என்று கூறியுள்ளார்.
                 
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம்,SDBI,அகில இந்திய தேசிய லீக்,இந்திய தேசிய லீக்,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா போன்ற முஸ்லீம் கட்சிகளும் அமைப்புகளும்,
  “அயோத்தி தீர்ப்பு ஏமாற்றமும் வேதனையும் அளிக்கிறது இந்தத்தீர்ப்பு நியாயமற்றது. இந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில் சிறுபான்மையினரின் மற்ற வழிபாட்டு தலங்களும் சொத்துகளும் அபகரிக்கப்பட அஸ்திவாரமாக அமைந்து விடும் என அஞ்சுகிறோம்…. சிறுபான்மையினர் நிராயுதபாணிகளாக விடப்பட்டதாக உணர்கிறோம்.” -என தங்களது ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ள போது,அவைகளை நேர்மையான மனிதநேயத்தோடு ஏறிட்டு கூடப்பார்க்காமல்,பெரும்பாலான கட்சிகள் பெரும்பான்மை இந்துப்பெருமிதத்திற்கு முன்மண்டியிட்டு,அயோத்தி தீர்ப்பை வரவேற்றிருப்பது. அரசியல் வெளியில் “இந்து பெருமிதத்திற்கு எதிராக மாபெரும் வெற்றிடம் நிலவுவதையே நிருபிக்கிறது.
                           
மேலும் “அயோத்தி தீர்ப்பை”வரவேற்றுள்ள எந்தவொரு அமைப்பிற்கும், ”பெரும்பான்மை இந்து பெருமிதத்திற்கு “எதிராக மாற்று சக்தியாக எழுவதற்கு தார்மீகத்தகுதி இல்லை என்பதையும் காட்டுகிறது.
                          யாரோ எழுப்பிய சந்தேகத்திற்காக ராமனின் மனைவி சீதை மூட்டப்பட்ட நெருப்பில் இறங்கி தனது புனிதத்தை நிருபித்தது போல,இந்த அரசியல் இயக்கங்கள் “உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு கேடயமாகவும் அவர்களுக்கான உரிமைப் போரில் வாளாகவும் இருப்போம்”என்ற அரசியல் புனிதத்தை நிருபிக்க,”அயோத்தி ராமர்”மூட்டிய தீ பயன்படவில்லை. மாறாக அவர்களின் கையாலாகாத்தனத்தையே புடம் போட்டு காட்டியது.

ராஜகுரு.
நிறுவனர்
சிந்தனைப்பள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here