அம்பேத்கரை அவமதிக்கும் ஆர்.எஸ்.எஸ். – தரவுகளும், மறுப்புகளும்:- வளவன்.

கடந்த ஏப்ரல் 14 அன்று பாபாசாகேப் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளன்று வாழ்த்து செய்தியினை வெளியிட்டதோடு இணைப்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்புகளில் ஒன்றான இந்திரபிரஸ்த விஷ்வ சம்வாத் கேந்திராவின் (இந்திரபிரஸ்த உலக உரையாடல் மையம்) முதன்மை செயல் தலைவர்  திரு. அருண் ஆனந்த்  என்பவர் அம்பேத்கர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் கவரப்பட்டார் எனும் கருத்தினை வெளிப்படுத்தி, அதற்கான சான்றுகளாக, இறுதிவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் முதன்மை பிரச்சாரகராக இருந்து மறைந்த , இந்த ஆண்டு அவருக்கு நூற்றாண்டாக அமைந்து இருக்கும் திரு. தத்தோபந்த் பாபுராவ் தேங்கடி அவர்களின் தன் வாழ்க்கைக் குறிப்பு நூலினை பயன்படுத்தி கட்டுரை ஒன்றினை எழுதினார். அதன் சாரம் பின்வருமாறு:

1940 களில் தொடங்கி தேங்கடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ் க்கும், அம்பேத்கருக்கும் இணைப்புப் பாலமாக திகழ்ந்துள்ளார். அம்பேத்கர் அவரை மகாராஷ்டிராவின் பாந்திரா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கேட்டுக்கொள்ளுமளவுக்கு  இருவருக்குமான நெருக்கம் இருந்தது. தேங்கடி தனது ” டாக்டர். அம்பேத்கர் மற்றும் சமூக புரட்சியின் பயணம் (இந்தி) ” எனும் நூலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் அம்பேத்கரின் சந்திப்புகள் பற்றி விரிவாக கூறியுள்ளார். இந்நூல் தனிப்பட்ட முறையிலான தேங்கடி- அம்பேத்கர் உரையாடல்கள் மற்றும் அவரின் அனுபவ நூலெனக் கொள்ளப் படுகிறது.

தேங்கடி – கள வீரர் :
அம்பேத்கர் தாம் தலைவராக இருந்த பட்டியலின மக்களின் கூட்டமைப்புக்கு தம்மை செயலாளர் ஆக்கியதாகவும், பாந்த்ரா இடைத்தேர்தலில் தான் கள நிர்வாகியாக இருந்த நேரத்தில்  கோல்வால்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ். எஸ் தோழர்கள் சுறுசுறுப்பாக பாபாசாகேப்புக்காக உழைத்துப் பணியாற்றியதாகவும், அதனை அவர் தேர்தல் தோல்வி ஆய்வின் மூலமாக உணர்ந்தார் என்கிறார். ஏனெனில் தொகுதியில் இருந்த பட்டியலின மக்களின் எண்ணிக்கையை விடவும் மிக கணிசமான வாக்குகள் அவரின் வேட்பாளருக்கு கிடைத்திருந்தது. ஆர்.எஸ்.எஸ் ஸின் பெரும்பணியால் மிக அதிக அளவிலான உயர்வகுப்பினரின் வாக்குகள் பெறமுடிந்தது. எனவே அவர் உயர்சாதியினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் இரு குழுக்களாக தொடர்ந்து இல்லாமல் இருக்க முடியுமென உணர்ந்தார். இதன் விளைவாக பட்டியலின மக்களின் கூட்டமைப்பு என்பது ஒரு சாராருக்கான அமைப்பு எனும் படியான சொல் என்பதனால் , அதனை ‘குடியரசு கட்சி’ எனப் பெயர் மாற்றம் செய்தார். (இந்த தேர்தல் முடிவு வந்த சில நாட்களுக்குள் அவர் புத்த சமயத்தை தழுவி ஒழுகலானார்).

ஆர்.எஸ். எஸ். நலவிரும்பி:
1952-ல் முதல் பொதுத்தேர்தலில், மத்திய பிரதேசத்தில் அம்பேத்கரின் கட்சி பாரதிய ஜனசங்கத்துடன் இணைந்து தேர்தலுக்கு முன்பான கூட்டணி அமைத்து பரஸ்பர இணக்கம் பேணின;

1939ல் புனேவில் நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அதன் நிறுவனர் ஹெக்டேவரினை சந்தித்தார். அம்முகாமில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எவ்வித சாதிய பாகுபாடுமின்றி ஒழுக்கத்துடனும், துடிப்புடனும், கட்டுக்கோப்புடனும் இருந்ததால் அம்பேத்கர் கவரப்பட்டார் , நட்பு தொடர்ந்தது; 

காந்தி அவர்களின் கொலைக்கு பிறகு அன்றைய காங்கிரஸ் அரசினால் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் மீதான தடை நீக்கத்திற்கு பிறகு செப்டம்பர் 1949 ல் டெல்லி சென்று கோல்வால்கர், தனிப்பட்ட முறையில் பாபாசாகேப்பிடம்  அவரின் தடைநீக்கப்  பங்களிப்புக்கான நன்றிகளை உரித்தாக்கினார்.

1953 ல் மகாராஷ்டிராவில் மோரோபண்ட் பிங்க்லே மற்றும் பாலசாகிப் சதே  இரு ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அதில் அம்பேத்கர் இப்படி கூறியதாக பதிவு செய்கிறார்கள் : “இந்து சமூகத்தினை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ் தன் கிளைகளை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்கள் நீண்ட காலம் பொறுக்க மாட்டார்கள்; எனவே விரைந்து செயல்படுதல் அவசியம்” என்றாராம்.

தேங்கடி உடனான உரையாடலின் பகுதியாக ஒடுக்கப்பட்ட மக்களினை ஆர்.எஸ்.எஸ் ஒன்றிணைக்காவிட்டால் அவர்கள் இடதுசாரிகளால்  ஈர்க்கப்படுவார்கள்; அது தவிர்க்கப்பட வேண்டும் என்றதாகவும் ஒரு பதிவு செய்து  “பட்டியலின மக்களுக்கும், இடதுசாரி சித்தாந்தத்துக்கும் இடையிலான பெரும் தடையாக அம்பேத்கர் இருந்தார்; அவர் இந்த இணைவை விரும்பவில்லை” என்று முதல் கட்டுரை அம்பேத்கரினை ஆர்.எஸ்.எஸ் நல விரும்பி ஆக உருப்படுத்தியிருக்க, அது உருவகப்படுத்தப் பட்டதென மறுப்புத் தரவு தர்க்கங்களுடன் அம்பேத்கரிஸ்ட்கள் களமிறங்க இது (ஊடக வெளிச்சங்களில் கவனமாக தவிர்க்கப்பட்ட) கருத்தியலாளர்களிடம் விவாதமானது.

23.05.20 அன்று நடந்த தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பா.ஜ.க சார்பாக பங்கேற்ற திருமிகு. வானதி சீனிவாசன் அவர்கள் அன்றைக்கு காங்கிரஸ் எதிர்த்து நின்று தோற்கடித்தது ஆனால், அம்பேத்கருக்கு ஆர்.எஸ்.எஸ் களத்தில் உறுதுணையாக நின்றது எனும் கருத்தினை பதிவு செய்தார். அந்த நாளின் அரசியல் நிகழ்வு மையமென நின்ற விவாதத்தின் இரைச்சலில் இந்த கருத்து மற்ற பங்கேற்பாளர்களால் சரிவர எதிர் கொள்ளப்படாமல் போனது. எனில் ஆர்.எஸ். எஸ்ஸின் அபிமானி தானா அல்லது அபிமானி ஆக்கப்படுகிறாரா அம்பேத்கர்..?

இந்த தரவுகளின் படி வைக்கப்பட்ட கருத்தினை மறுத்து “அம்பேத்கர் : எழுத்துகள் மற்றும் பேச்சுகள் ” தொகுதிகள் 17 முதல் 22 – நூல்களின் தொகுப்பாசிரியர் (மகாராஷ்டிர அரசின் சார்பில் தொகுக்கப்பட்டது)  திருமிகு. ஹரி நார்கே அவர்களின் மறுப்புரை இங்ஙனம் அமைந்துள்ளது:

வாதம் 1:  அம்பேத்கர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஸால் கவரப்பட்டார்.

மறுப்பு: 14/05/1951 அன்று தனது பாராளுமன்ற உரையில் “ஆர்.எஸ்.எஸ் மற்றும் அகாலி தளம் ஆகிய இரண்டும் மிகவும் அபாயகரமான இயக்கங்கள்” என்று குறிப்பிடுகிறார். இது பாராளுமன்ற அவைக் குறிப்பில் உள்ள சான்று. இவை முறையே “அம்பேத்கர் : எழுத்துகள் மற்றும் பேச்சுகள் ” – தொகுதி 15 ; தொகுப்பாசிரியர் : வசந்த் மூன்; பக்கம்: 590 ; வெளியீடு : மகாராஷ்டிர அரசு; எனும் நூலிலும் பாராளுமன்ற விவாதங்கள் : தொகுதி 11 , பிரிவு 2 , பக்கம் 8, 687 – 8, 690 வரை இவ்வுரை முழுமையாக உள்ளது‌. பாபாசாகேப்பின் அந்த கருத்து அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் மீது கொண்டிருந்த பார்வையினை விளக்குவதாகும். இதற்கு மாறாக ஒரு செய்தியை பரப்புவது அவர்களின் அரசியல் தரத்துக்கான சான்றென கொள்க.

வாதம் 2:
1952-ல் முதல் பொதுத்தேர்தலில், மத்திய பிரதேசத்தில் அம்பேத்கரின் கட்சி பாரதிய ஜனசங்கத்துடன் இணைந்து தேர்தலுக்கு முன்பான கூட்டணி அமைத்து பரஸ்பர இணக்கம் பேணின.

மறுப்பு: 1952-ல் மத்திய பிரதேசத்தில் அம்பேத்கரின் பட்டியலின மக்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூட்டணி பற்றிய இடம் இப்படி குறிக்கிறது “நம்முடைய கூட்டணி கொள்கை மிக எளிதில் வரையறுக்கத் தக்கது. நாம் இந்து மகா சபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற (தவறான) எதிர்வினையாற்றும் அமைப்புகளுடன் நிச்சயம் எக்காலத்துக்கும் கூட்டணி அமைக்கப் போவதில்லை.” ( சான்று – “அம்பேத்கர் : எழுத்துகள் மற்றும் பேச்சுகள் ” – தொகுதி 17 – பிரிவு 1; தொகுப்பாசிரியர் : ஹரி நார்கே; பக்கம்: 402 ; வெளியீடு : மகாராஷ்டிர அரசு). ஆக, தேங்கடி சொன்னதாக இப்படி குறிப்பிடுதல் சான்றில்லாத கருத்தாகிறது.

வாதம் 3:
அம்பேத்கர் அவர் தலைவராக இருந்த பட்டியலின மக்களின் கூட்டமைப்புக்கு தேங்கடி அவர்களை செயலாளர் ஆக்கினார்.

மறுப்பு:
முற்றிலும் தவறான ஒரு செய்தி. காரணம்: பட்டியலின மக்களின் கூட்டமைப்பு விதிகளின்படி செயலாளர் பட்டியலினத்தவராக இருத்தல் வேண்டும். எனவே பட்டியலினத்தவராக இல்லாத தேங்கடி அப்பொறுப்பில் அமர்த்தப் பட்டார் என்பது புரட்டு அன்றி வேறு இல்லை.

எனவே, “தேங்கடியை துணைக்கு வைத்து ஒரு அபத்தமான அரசியல் நகர்வினை அருண் ஆனந்த் நிகழ்த்தியுள்ளார். இது அம்பேத்கரை களங்கம் படுத்தும் முயற்சியாகும். அவரின் சித்தாந்தங்களுக்கு மாற்று வண்ணம் தீட்டும் பொருட்டான இதனை  வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தனது ஜனநாயக பூர்வமான தர்க்கங்களுடனான மறுப்பு வெளியிட்டுள்ளார் ஹரி நார்கே.

இன்றைய நாளில் நீண்ட, நெடிய பாரம்பரியமிக்க இயக்கங்கள், கட்சிகள்,    சித்தாந்தம் சார்ந்து இயங்கும் அமைப்புகள் கூட தங்களின் இளைய உறுப்பினர்களுக்கு வரலாற்றினை (குறைந்தது தங்கள் இயக்கம் குறித்ததாவது) முழுமையாக கொண்டு சேர்க்கவோ அல்லது  அவர்கள் அறிந்து கொள்ள உற்சாகமூட்டவோ பெரிய அளவில் மெனக்கிடுகிறார்களா எனும் வினா தொக்கி நிற்கிறது. நாளை இவர்கள் இயக்க முன்னவர்களாகி பொது வெளியில் சொந்த இயக்கம் குறித்த அவதூறுகள் வரும் பொழுது உணர்வுப்பூர்வமாக மறுக்க முற்படுவார்களே அன்றி  தக்க சான்றுகளுடனான மறுப்பு தர்க்கம் புரிதல் செய்யாமல் , ஆளுமை குன்றியவர்களாக நிற்க வேண்டிய நிலையும் வரலாம் என்பது ஒரு சந்ததி எதிர்நோக்கவுள்ள ஆபத்து.

விரல் நுனியின் நகர்த்தலில் செய்திகளைக் கடந்து போகிற சமூக வலை தள தலைமுறையினர் வரலாற்று நூல்களை படித்து, அறிந்து, தமக்கென ஒரு கொள்கையைத் தேர்ந்து , அதன் பயணம் பற்றிய நிகழ்வுகளில் தெளிவுற்று , இத்தகைய ஆழ்ந்த தர்க்கங்களினை நோக்கிய திசையினராய் பயணித்தல் இன்றியமையாததாகிறது. எதிர்காலத்தில் வள்ளுவரையும் அம்பேத்கரையும் காவி விழுங்க விட்டு  வேடிக்கை பார்க்காத தலைமுறையினை வார்த்தல் இந்த வினாடியின் உயிர்வலி தேவை.
அரசியல் பழகுவோம்…
அடுத்த தலைமுறையை பழக்குவோம்…

– வளவன்.