அம்பேத்கரும் மனவேலிகளும்-வேலா சந்திரமெளலி

நகரங்களின் சேரிகளிலும் கிராமங்களின் காலனிகளிலும் கண்டிப்பாக ஒரு அம்பேத்கர் சிலையைக் காண முடியும். சில சமயம் எந்த ஒரு இந்தியத்தலைவருக்கும் கொடுக்காத முழு பாதுகாப்போடு கம்பிகளுக்கு நடுவே சிறை வைக்கப்பட்டும் நமது அம்பேத்கரை காண முடியும். ஏன் சேரிகளிலும் காலனிகளிலும் மட்டும் அண்ணல் அம்பேத்கர் காணப்படுகிறார்? ஏன் மற்ற இடங்களில் அவரது உருவச்சிலையை காண முடிவதில்லை? ஏன் பெரும்பாலும் தலித் மக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டும் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது..? ஏன் சாதி இந்துக்களால் அம்பேத்கரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கேள்விகளை கேட்டுக்கொண்டே போகும் அளவிற்கு இங்கு அம்பேத்கரை அறியாமல் அம்பேத்கரை படிக்காமல் சமூகம் சாதியபற்றினாலும் சமூக அக்கறையின்மையினாலும் ஜனநாயக மனப்பான்மை இல்லாததாலும் ஏற்றத்தாழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டுள்ள மனநோயாளிகளை கொண்டுள்ளது.

பார்ப்பனீயக் கொள்கைகளை பின்பற்றி ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிப்பதே பார்ப்பனீயம். பார்ப்பனீயத்தை பார்ப்பனர் மட்டுமன்றி சாதி இந்துக்களும் மிக அதிகமாக பின்பற்றி வருகின்றனர்.

சட்ட வரைவுக்குழுவில் பங்கேற்ற அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் பார்ப்பனரைத்தவிர அனைத்து பிற்படுத்தபட்ட மக்களுக்கும் தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு அவசியம் எனக்கூறி சட்டத்தை வடிவமைத்துள்ளார். ஆனால் இங்கு அம்பேத்கர் சிலைக்கு பெயிண்ட் ஊற்றுபவர்களும் தலையை உடைப்பவர்களும் பெரும்பாலும் சாதி இந்துக்களே. ஏன் இவர்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என உற்று நோக்கினால் கிடைக்கும் ஒரே பதில் இவர்களின் மனம் சமத்துவத்தை விரும்பாத மனம். சாதிய பற்றுள்ள ஒவ்வொரு சாதி இந்துவும் தனக்கு கீழே ஒரு சாதி உள்ளது என நினைத்து நினைத்து அகமகிழ்வு கொள்கிறான். அவனுள் இருக்கும் ஆதிக்க மனப்பான்மை அவனுக்கு கீழே ஒடுங்கி கிடக்கும் தாழ்த்தப்பட்டு கிடக்கும் மக்கள் சட்டத்தின் உதவியால் வாய்ப்புகளை பெற்று கல்வி கற்று சமத்துவத்தை அடைய செய்யும் முயற்சி அவனுள் ஒரு பதற்றத்தை உருவாக்குகின்றது.

ஆக பார்ப்பனீயத்தின் சக்தியாக அவர்களின் பகடைக்காயாய் சாதி இந்துக்களை செயல்படவைத்து ஒரு சாதரண இந்துவையும் அவர்களின் பார்ப்பனீய பேச்சுக்களால் மத வெறியனாக மாற்றி சாதி வெறியர்களாக மாற்றி மதவாத சாதியவாத அரசியல் செய்து முதலாளிகளை வாழவைக்கும் முதலாளிகளுக்கான நாடாக இந்தியாவை மாற்றி தொழிலாளர்களை சாகடிக்கும் அரசியலாகவே பார்ப்பனீய அரசியல் உள்ளது. அதன் வெளிப்பாடுகள்தான் இந்த சிலை உடைப்புகள் அனைத்தும். அம்பேத்கர் தலித்துகளுக்காக மட்டும் போராடவில்லை சமத்துவ சமுதாயத்திற்காக போராடிய சமத்துவத்தின் மாபெரும் குறியீடு அவர் . அண்ணலின் சிலையை உடைப்பதனாலும் சாணத்தை ஊற்றுவதனாலும் அவருடைய கொள்கைகள் உடைந்து போகப்போவதில்லை இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அவருடைய கொள்கைகள் உரக்கப்பேசும் வல்லமை படைத்தவை.ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் துணை நின்று சமத்துவ சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யும் கொள்கைதான் அம்பேத்கரிய பெரியாரிய கொள்கைகள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்திய துணைக்கண்டத்தின் தலையாய சிறப்பு அதை உடைத்து விட்டு இந்து வெறியை ஊட்டி சாதி வெறியை ஊட்டி ஆட்சியைப்பிடித்து விட எவரையும் இந்திய மக்கள் அனுமதிக்க கூடாது

சாதிவெறியையும் மதவெறியையும் அதிகரித்து சாதி இந்துக்களை பகடைக்காயாக மாற்றி அரசியல் செய்து அதிகாரத்தை பிடிக்கும் பார்ப்பனீய சதியை இந்திய துணைக்கண்டத்தின் குடிகள் வீழ்த்த வேண்டிய தருணமிது… விழித்துக்கொள்ள வேண்டிய தருணமிது.

வேலா சந்திரமெளலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here